Monday, January 25, 2010

குழந்தைகளும் வீடியோ கேம்ஸும்


இன்று வெளியில் விளையாடும் விளையாட்டுக்கள் எல்லாம் வீட்டிற்குள் வந்து விட்டது. குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன் விளையாடினால் கெட்ட பழக்கங்களைக் கற்றுக்கொண்டு விடுவார்கள் என்று விளையாடக் கூட பெற்றோர்கள் அனுமதிப்பதில்லை. அதனால் குழந்தைகளுக்குள் கூடி விளையாடுவது, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து விளையாடுவது எல்லாம் குறைந்து விட்டது. கிராமங்களில் மட்டும் வளரும் குழந்தைகளிடம் கூடி விளையாடும் பழக்கம் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. தெருக்களில் விளையாடும் கோலி, பம்பரம், கில்லி எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வழக்கொழிந்து கொண்டிருக்கிறது. இந்த மூன்று விளையாட்டையும் கிரிக்கெட் ஆக்கிரமித்துக் கொண்டது. அதுவும் வாரத்தில் என்றோ ஒரு நாள். சமீபத்தில் வீடியோ கேம்ஸ் எனப்படும் எக்ஸ்-பாக்ஸ்(XBOX 360), வீ(Wii) மற்றும் பிஎஸ்த்ரீ(PS3) என்று பெரியர்வர்கள்(Adults) விளையாடும் வீடியோ கேமும், வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு பிஎஸ்-நிண்டெண்டோ(PS Nintendo) எனப்படும் கையடக்க வீடியோ கேமும் தான் விளையாட்டு உலகமாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். 7லிருந்து 12 வயது வரையுள்ள குழந்தைகள் இந்த கையடக்க வீடியோ கேமில் விளையாடும் பொழுது இந்த உலகத்தையே மறந்து விடுகிறார்கள். குடும்பதில் இருப்பவர்களிடமோ, அடுத்தவர்களிடமோ பேசுவதை வெகுவாகக் குறைத்துக் கொள்கிறார்கள் என்பதை சில ஆய்வுகள் சொல்கிறது. தனிமை விரும்பிகளாக அவர்கள் மாறிப் போவது காலத்தின் கோலமென்று சொல்லாமல் வேறென்ன சொல்வது.

போன வருடம் ஒரு நண்பர் வீட்டிற்குச் சென்றிருந்த போது, அவர் புதிதாக வீ (Wii)வாங்கியிருந்தார், நான் அப்பொழுது தான் முதன் முதலில் வீ யைப் பார்க்கிறேன். அவரிடம் அதைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தேன். அவர் அதை டீவியில் எப்படி இணைத்துக் கொள்வது, அதில் என்னவெல்லாம் விளையாடலாம் என்று விவரித்துக் கொண்டிருந்தார். என் மகள் இதெல்லாம் ரெம்ப பழசு, நான் இதை பலமுறை நண்பர்கள் வீட்டில் விளையாடியிருக்கிறேன் என்று அதிலுள்ள அத்தனை விளையாட்டுக்களையும் விலாவாரியாக எங்களுக்குச் சொன்னாள். நாங்கள் இருவரும் மலைத்துப் போய் கேட்டுக்கொண்டிருந்தோம். அதோடு மட்டுமில்லாமல் அவர் கோல்ஃப்(Golf) எப்படி விளையாடுவது என்று எனக்கு சொல்லிக் கொடுத்தார். அவர் சொன்ன ஒரே அட்வைஸ் கோல்ஃப் என்பது ஒரு மைண்ட் கண்ட்ரோல் கேம். இதில் டெஸிஷன்(Decision) தான் முக்கியம். நானும் முயன்ற வரை முயற்சி செய்தேன். ஒன்று நான் அழுத்திய(Remote) வேகத்தில் மிகத் தொலைவில் பந்து விழுந்துவிடும் இல்லையேல் வேறு திசை நோக்கிச் சென்றுவிடும். நமக்குத்தான் மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டே ஒத்துவராதே. கடைசியில் என் மகள் கையில் ரிமோட் கண்ட்ரோல் சென்றது. நீங்கள் நம்ப மாட்டீர்கள். 5 நிமிடத்தில் 4 பார்களை(Par) முடித்துவிட்டு போர் அடிக்கிறது என்று கொடுத்து விட்டுச் சென்று விட்டாள். எந்த அளவுக்கு இந்த வீடியோ கேம்கள் குழந்தைகளை ஈர்க்கிறது என்பதை அப்பொழுது தான் தெரிந்துக் கொண்டேன்.

குழந்தைகளுக்கென்றே விதம் விதமாக யோசித்து விளையாட்டுகளைத் தயாரித்து வருகின்றன தகவல் தொழில் நுட்ப வீடியோ கேம் தயாரிப்பு நிறுவனங்கள்.அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வளர்ந்த நாடுகள் மட்டுமல்லாது வளர்ந்து வரும் நாடுகளிலும் இப்போது பல்வேறு வீடியோ கேம்கள், குழந்தைகளின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளன. இந்த வீடியோகேம்களில் உள்ள வன்முறைக் காட்சிகளால் குழந்தைகளிடத்தில் வன்முறை நடத்தை அதிகரிக்கிறது. விளையாட்டுகள் வெறும் பொழுதுபோக்கு என்பது தான் நம் மூளையில் உறைந்திருக்கிறது. அன்போ, நன்றியோ, ஈரமோ, வீரமோ எதுவாக இருந்தாலும் குழந்தைகள் தங்கள் விளையாட்டுகள் மூலமே கற்றுக்கொள்கிறார்கள். ஆடுவதற்குப் பெயர் தான் விளையாட்டு. நாமோ விளையாட்டைப் பார்க்கிற விஷயமாக மாற்றி விட்டோம். ஒரு சாகச நாயகன் பல்வேறு இடையூறுகளைக் கடந்து சென்று தனது இலக்கை எட்டவேண்டும் என்பதாக இருக்கும். இதில் அந்த நாயகன் நடுவில் பலரை வெட்டிச் சாய்த்து முன்னேறிச் செல்லவேண்டும். இந்த வெட்டிச் சாய்த்தல்தான் குழந்தைகளின் பிரதான கவன ஈர்ப்பை பெற்றுள்ளது. மேலும் மேலை நாடுகளில் குழந்தைகளின் படுக்கையறையே மல்டி மீடியா மையமாக மாறியுள்ளது என்று இந்த ஆய்வு கூறுகிறது. 12 வயது முதல் 15 வயது வரை உள்ள சிறுவர் சிறுமியர்களின் படுக்கையறையில் குறைந்தது 5- 6 மீடியா கருவிகளாவது உள்ளதாம்.
ஹாலிவுட்டில் வெளிவரும் ஒரு படம் ஹிட் ஆனால் அந்த படத்தின் டிவீடி வெளிவரும் பொழுது கூடவே அந்த படத்தின் கேரக்டரைக் கொண்டு வீடியோ கேமிற்கான டீவீடியும் வெளிவந்து விடும். வீடியோ லைப்ரரியில் பார்த்தால் அதற்கென்றே ஒரு செக்‌ஷன் தனியாக இருக்கும். அதில் எக்ஸ்-பாக்ஸில் விளையாடுவதற்கு தனி வீடியோ டிவீடியும், பிஎஸ்த்ரியில் விளையடுவதற்கு தனி டிவீடி வேறு. உலகெங்கும் அதிக ரசிகர்களை வைத்திருக்கும் 007 ஜேம்ஸ் பாண்ட், இப்போது வீடியோ மூலமாகவும் கலகலக்க வைத்துக் கொண்டிருக்கிறார். பியர்ஸ் பிராஸ்னன் உருவத்தை வைத்து இந்த வீடியோ கேம்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வகை வீடியோ கேம்ஸ் நிறைய வந்து விட்டது. ஒரிஜினல் பியர்ஸ் குரலுடன், படத்தில் இருப்பதைப் போன்ற ஆக்ஷன், அதிரடிக் காட்சிகளுக்கு இதில் பஞ்சமே இல்லையாம். படத்தில் கூட இடம் பெறாத பல அதிரடி வசனங்களும் இந்த வீடியோ கேம்ஸில் இடம் பெற்றுள்ளதாம். முழு நீளப் படத்தைப் பார்க்கும் அதே திரில், திருப்தி, தில் இந்த வீடியோவிலும் நீக்கமற நிறைந்துள்ளதால் ஹிட் ஆகியுள்ளது.

மேலும் சில ஆய்வுகள்

1. அமெரிக்காவின் இன்டியானா பல்கலைக் கழகத்தின் ஸ்கூல் ஆஃப் மெடிசன், வன்முறை நிறைந்த வீடியோ கேம்களை விளையாடும் குழந்தைகளின் மூளையை ஸ்கேன் செய்து ஆய்வுக்கு உட்படுத்தியது. ஆய்வுக் குழுவினர் இரண்டு விதமான வீடியோ விளையாட்டுகளை ஆய்விற்கு உட்படுத்தினார்கள். முதல் ஒன்று Need for Speed Underground என்பது. இதில் வேகம் இருக்கும். வன்முறை இருக்காது. அடுத்தது Medal of Honour Frontline . இது வன்முறை நிறைந்தது. ஆய்வுக் குழுவினர் 44 இளம் வயதுப் பிள்ளைகளை இரண்டு பிரிவுகளாகப் பிரித்து ஆய்வில் பயன்படுத்தினார்கள். விளையாடி முடித்ததுமே பிள்ளைகளின் மூளை ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. வன்முறை விளையாட்டை விளையாடிய பிள்ளைகளின் மூளை காட்டிய நெகட்டிவ் விளைவு, மற்றொரு விளையாட்டை விளையாடிய பிள்ளைகளிடம் இல்லை.

2. சமீபத்தில் கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ- 4 (ஜிஏடி- 4) என்ற வீடியோ கேமில் வரும் சாகச நாயகன் கிரிமினல் நிழலுலகத்தினர் பலரை வெட்டிச் சாய்த்து கொள்ளை அடித்துச் செல்வதாக அமைந்துள்ளது. இது 18+ என்ற தரச் சான்றிதழை பெற்றிருந்தாலும், இதில் வன்முறை கொஞ்சம் கூடுதலாகவே இருப்பதாக பெற்றோர்கள் உணர்கின்றனர்.

3. வீடியோ கேம் விளையாட்டில் பைத்தியமாக ஈடுபடுவது குழந்தைகள் மட்டும் தான் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு; அதிக பட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் கணிசமான பேர் வீடியோ கேம் பைத்தியமாகத்தான் உள்ளனர். அதனால் தான் ஒபிசிட்டி, சாப்பிடுவதில் பிரச்னை, தூங்குவதில் சிக்கல் எல்லாம்; ஆனால், குழந்தைகள் மட்டுமின்றி, 35 வயது வரை உள்ளவர்களும் இதற்கு அடிமையாக உள்ளனர். இவர்களுக்கு தான் அதிக உடல் கோளாறு வரும். பெரும்பாலோருக்கு டிப்ரஷன் ஏற்படும்' என்று அமெரிக்க ப்ரிவென்டிவ் மெடிசன் இதழில் கூறப்பட்டுள்ளது.

4. நியூயார்க்: அமெரிக்காவில், பள்ளியில் படிக்கும் மாணவிகள் கருத்தரிப்பு அதிகரிப்பதற்கு "டிவி' நிகழ்ச்சிகள் தான் காரணம்; அதுபோல, குழந்தைகளின் வன் முறை போக்குக்கு, கம்ப்யூட்டர், வீடியோ "கேம்'கள் தான் காரணம்!' அமெரிக்காவில் உள்ள "ரான்ட்' என்ற பிரபல மனிதவள ஆய்வு அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் இந்த திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

5. இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் மருத்துவரும், உளவியல் நிபுணருமான ஜீன் பெக்மேன் மேற்கொண்ட ஆய்வில் வெளியான புள்ளிவிபரங்கள்: சராசரியாக வாரத்திற்கு 28 மணி நேரம் என்ற புள்ளிவிபரத்தின் அடிப்படையில், வன்முறைகளைத் தொடர்ந்து காண்பதால் 8 வயதை நெருங்கி விடும்போது ஒரு சிறாரின் மனப்பக்குவம் ஒரு வாலிபரின் மனோநிலையை எட்டுகிறது. 12 வயதை நெருங்கும் வேளையில் ஒரு சிறுவன் / சிறுமி 8,000 கொலைகளை கண்களால் பார்த்து விடுகிறது. 18 வயதை நெருங்குகையில் இந்த எண்ணிக்கை 200,000 ஆக உயர்கிறது. ஒரு வருடத்தில் ஒரு சிறார் பார்க்கும் விளம்பரங்களில் 30 நொடி அளவுள்ள விளம்பரங்களின் எண்ணிக்கை மட்டும் 20,000.சிறார்கள் தொலைக்காட்சியில் பார்க்கும் வன்முறையும் குரோதங்களும் இயல்பான நிகழ்வை விட ஐந்து மடங்கு கொடூரமாக்கி காட்டப்படுகிறது.

இப்படிப் போனால் குழந்தைகளின்/சிறுவர்களின் எதிர்காலம் என்னாவது? உடல் வலுவிழந்து, மூளைத்திறன் குன்றி, சிந்திக்கும் ஆற்றல் இன்றி, செயலாற்றும் அனைத்து அபார ஆற்றல்களையும் இழந்து பரிதவிக்கும் நிலைக்கு படுவேகமாக அதல பாதாளத்திற்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். இதிலே அலட்சியம் காட்டும் பெற்றோர் எதிர்காலத்தில் ஒளிவீச வேண்டிய தமது ஆற்றல் மிக்க சந்ததிகளை இப்போதே கண்களைக் கட்டி இருட்டிலே விட்டு அவர்களின் வாழ்வைப் பாழாக்குகிறார்கள் என்பது தான் பொருள். உங்கள் குழந்தைகள் ஏற்கனவே இதற்கு பழக்கமாகியிருந்தால் உடனே நிறுத்தாமல் கொஞ்சம் கட்டுப்பாடுடன் விளையாட அனுமதியுங்கள். வீடியோ கேமைப் பார்க்கும் யாருக்கும் அதை விளையாடிப் பார்க்கவே தோன்றும். வீ-யில் உடற்பயிற்சிக்கென சில விளையாட்டுக்கள் உள்ளன. யோகாவும் உள்ளன. அதைப் போன்று உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரக் கூடிய விளையாட்டை அனுமதிக்கலாம். இதிலிருந்து விடுபட அவர்களுக்கு வேறு வகையான ஆர்வத்தை பெற்றோர்கள் தான் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

உங்களுக்காக ஒரு காணொளி.

Tuesday, January 12, 2010

பொங்கல் வாழ்த்துக்கள்

எல்லோருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்





மங்கல அணியும் பொட்டும்
மரகத மணிபோற் கண்ணும்
குங்கும நுதலும் தண்டைக்
குலுங்கிடும் காலும் மஞ்சள்
தங்கிய முகமும் வண்ணத்
தடம்பணைத் தோளும் கொண்ட
மங்கையர் கைபார்த் துண்ண
மலர்கவே பொங்கல் நன்னாள்.

பூச்சிறு மழலை மேனி
புத்துடை நகைகொண் டாட
ஆச்சியர் துணைவர் சேர
ஆனந்தத் தமிழ்ப்பண் பாட
பாற்சுவை வழங்குநன் னாள்
பழந்தமிழ் வளர்த்த பொன் னாள்
போற்சுவை நாளொன் றில்லை
.பொலிகவே இன்பப் பொங்கல்.

Sunday, January 10, 2010

அமெரிக்க அனுபவங்கள் 1 - விட்டில் பூச்சிகள்


இன்று அமெரிக்காவில் நம்பர் ஒன் லாபம் கொழிக்கும் பிஸினஸ் எதுவென்றால் அது டயட் ப்ரோக்கிராம்(Diet Program) தான். எங்கு பார்த்தாலும் டயட் உணவு வகைகள், ஸப்ளிமெண்ட்ஸ்(Supplements) உணவுகள், ஃபிட்னஸ் டூல்கள், டயடிற்க்கென்ற உள்ள எக்ஸர்சைசுகள். கோடிகளைக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள். கோக் மற்றும் பெப்ஸியில் கூட '0' காலோரிகள். அவசரமாக உடலைக் குறைத்துவிட வேண்டும் என்று பணத்தையும், நேரத்தையும் கணக்கில்லாமல் செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லா ஃபிட்னெஸ் சென்டர்களும் மாலை நேரங்களில் நிரம்பித்தான் வழிகிறது. அங்கும் குண்டாக இருப்பவர்களைக் குறி வைத்து சில ப்ரோகிராம்கள் நடத்தி பணம் சம்பாதிக்கிறார்கள். டீவியில் பாதி விளம்பரங்கள் டயட் ப்ரோகிராம் தான். நானும் முறைப்படி வெயிட்லிஃப்ட் கற்றுக் கொள்ளலாம் என்று ஒரு ஃபிட்னஸ் சென்டரில் சேர்ந்தேன். அங்கு கோச்சிங் கொடுப்பவருக்கு மாதம் இவ்வளவு என்று பேசப்பட்டது. வாரத்தில் ஒரு நாள் தான் கோச்சிங். அந்த ஒரு நாளில் ஒரு மணி நேரத்தில் அவர் சொல்லிக் கொடுக்கும் கோச்சிங்கில் அடுத்த ஐந்து நாட்களுக்கு எந்திரிக்க முடியாது. கடுமையான பசி வேற. ஒல்லியாக இருப்பவர்களுக்கு குண்டாகவும், குண்டாக இருப்பவர்கள் ஒல்லியாகவும் தனித்தனி ப்ரோகிராம்கள் வைத்திருக்கிறார்கள். ஆறு மாதம் ட்ரைனிங்கில் எனக்கு ஒரு இம்ப்ரூவ்மண்டும் தெரியவில்லை.. பழையபடி ட்ரட்மில், சைக்கிளிங், .. கார்டியோ ஐட்டங்கள் மட்டுமே இப்பொழுது..


இரண்டாவது சூப்பர் பிஸினஸ் எது என்று பார்த்தால், ஹேர் லாஸ் ட்ரீட்மெண்ட்(Hair Loss Treatment). என்னுடன் வேலை பார்க்கும் ஒருவர் 1200 டாலர்களை செலவழித்து தலையின் வழுக்கையை(பின்னால் ஒரு ஓளிவட்டம்) தனது கல்யாணத்திற்கு முன் சரிசெய்திட இயன்ற அளவு முயற்சி செய்தார். அவர்கள் குடும்பத்தில் எல்லோருக்கும் பரம்பரை வழுக்கை வேறு. அதில் சிறப்பு என்னவென்றால் அந்த ப்ரோகிராமில் குளிக்கும் முன் ஒரு க்ரீம் தலையில் தடவ வேண்டும், குளித்தப் பிறகு ஒரு க்ரீம் தடவிக் கொள்ள வேண்டும். அந்த ப்ரோகிராம் சென்டரில்தான் முடி வெட்டிக் கொள்ளவேண்டும். கிட்டத்தட்ட ஏழெட்டு மாதத்திற்கு அதை முயற்சி செய்து பார்த்துவிட்டு ஒரு சின்ன மாற்றம் கூட இல்லாததைக் கண்டு இப்பொழுது அதெல்லாம் "வேஸ்ட்" என்று மற்றவர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கிறார். சில பேருக்குச் சொல்லித் தெரியுது, சில பேருக்குப் பட்டால் தான் தெரியுது.

பிஸினஸ் பண்ணவேண்டும் என்று யாராவது நினைத்துக் கொண்டிருப்பவர்கள் இந்த இரண்டு பிஸினஸில் ஏதாவதொன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

-------------------------------------------------------------------------------------------------
நான் அமெரிக்கா வந்த புதிதில் டெட்ராய்ட்டில்(Detroit) நம்ம ஊர் மக்களைப் பார்த்தும் முக்கியமாக யாராவது தமிழில் பேசிக் கொண்டிருந்தால் ஆகா நம்மூர் மக்களாச்சேன்னு கொஞ்சம் சிரிச்சா பதிலுக்கு யாரும் சிரிக்கவோ, ஒரு ஹாய் சொல்லவோக் கூட மாட்டார்கள். அது கூட பரவாயில்லை. நம்மளை ஒரு தீண்டத்தகாதவன் போல் ஒரு லுக் விடுவாங்க (ஜெ.ஜெ யில் மாதவன் ஒரு லுக் விடுவாரே அதேமாதிரி கேவலமா). அதத்தான் தாங்க முடியாது. கொஞ்ச நாள் கழித்து ஒரு நண்பனிடம் இது பற்றிக் கேட்டேன். அப்பொழுது தான் அந்த ரகசியம் தெரிந்தது. இங்கு ஆம்வே(Amway), ப்ரிட் வேர்ல்ட் வைடு(BWW), பயோ மேக்னடிக்,கோல்ட் கொஸ்ட் இதுபோன்ற நெட்வொர்க் மார்க்கெட்டிங்(Multi level Marketing) செய்யும் மக்களால் அவர்கள் பாதிக்கப் பட்டவர்கள் என்று. நான் அப்பொழுது கூட முழுதாக நம்பவில்லை. அட்லாண்டா வ்ந்த பிறகு ஒரு நண்பனின் நண்பன் என்னை வீடு தேடி வந்து சந்தித்தார். பாசமழையைப் பொழிந்தார். வெளிநாட்டில் இப்படி ஒரு நல்ல நண்பனா என்று வியக்கும் வகையில் நடந்துக் கொண்டார். ஒரு நாள் (Weekend) வாங்களேன் எங்க ப்ரண்ட்ஸ் எல்லாம் ஒரு கெட் டுகெதர்(Get together) வச்சுருக்காங்க நீங்களும் கலந்துக்குங்கனு கூட்டிக் கொண்டு சென்றார். அவர் நல்லவவவன்னு நம்பி அவர் கூட போனேன். அங்க தான் விதி விளையாடுச்சு.

போற வழியில என்னங்க இன்னும் எத்தனை நாளா இந்த மாதிரி ப்ரோகிராமிங் பண்ணிக்கிட்டே இருக்கப் போறிங்க? அமெரிக்கா வந்து இன்னும் பொழைக்கத் தெரியாம இப்படி வெள்ளந்தியா இருக்கிங்களேன்னு நம்மளை கேட்டார். அப்பக்கூட எனக்குப் புரியல. நாம உண்மையிலே ஒரு தப்பான ஃபீல்ட்க்கு வந்துட்டோமோ? கம்ப்யூட்டர் நம்மளைக் கைவிட்டுருமோ? எட்டு வருடமா குப்பைக் கொட்டிக் கொண்டிருந்த இந்த ஜாவா நம்மளைக் காலை வாரிவிடுமோ? என்று என்னன்னமோ என் மனதில் அந்த நிமிடத்தில் ஓடிக் கொண்டிருந்தது. நண்பர்கள் கூடும் இடம் வந்தது. முதல்ல ஒரு ஜூஸ் ஒன்னக் கொடுத்துட்டு, கோபி இந்த பேப்பர்ஸ்ல கொஞ்சம் சைன் பண்ணிடுங்க. அப்புறம் இந்த ப்ரோகிராமிற்கு ஒரு 300 டாலர்ஸ் கட்டவேண்டியதிருக்கும் என்று சொன்னார்கள். என்னை அழைத்து வந்தவர், நான் வேணும்னா இப்போ கட்டிவிடுகிறேன். நீங்க அப்புறமா ஆன்லைன்ல ட்ரான்ஸ்பர்(Money Transfer) பண்ணிடுங்க என்றார். இதெல்லாம் என்னதுங்க ஒன்னுமே புரியல என்றேன். நான் இதப் பத்தி அப்புறமா சொல்றேன். நீங்க சைன் மட்டும் பண்ணிடுங்கனு சொன்னார். ”சிக்குச்சுடா சிறுத்தை” என்பதற்கு அப்பத்தான் அர்த்தம் புரிஞ்சுது. எனக்கு ஒரு ரெண்டு நாள் டைம் குடுங்க நான் யோசித்து சொல்றேன் என்று சொன்னேன். என்னைக் கூட்டி வந்தவரை அங்கிருந்த எல்லோரும் ஒரு பார்வை பார்த்தார்கள். அந்த பார்வையில் ஒரு உக்கிரம் இருந்தது. என்னைக் கூட்டிக் கொண்டுவரும் பொழுது நிறைய பேசிய நண்பர் என்னை வீட்டில் கொண்டுவந்து விடும் வரை பேசாமலே விட்டுச் சென்றார். மறுநாள் என்னுடன் ரூமில் தங்கியிருந்த நண்பர்கள் எனக்கு கொடுத்த அர்ச்சனைகள் சொல்லி மாளாது.

மறுபடியும் அந்த நண்பர் தொலைப் பேசியில் தொடர்பு கொண்டு பேச முயன்றார். அவருக்காவே எனது தொலைபேசி நம்பரை மாற்றினேன். நண்பர்களே, வெளிநாட்டில் யாராவது உங்களை கண்டுகொள்ளவில்லையென்றால் தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அவர்கள் இந்த மாதிரி மக்களால் காயம் பட்டவர்கள். நெட்வொர்க் மார்க்கெட்டிங் மக்களின் குறிக்கோளே இந்த மாதிரி மார்கெட்டிங் பிஸினஸ் பற்றி தெரியாத மக்கள் தான். அவர்கள் உங்களை மாதிரி ஆட்களை தேடும் நேரம் சனி, ஞாயிறு தான். அப்பொழுது தான் இந்தியர்கள் எல்லா கடைகளிலும்(Walmart,Kroger,Sams,Costco..etc), மால்களிலும் இருப்பார்கள். முதலில் அவர்கள் தான் யார் என்பதையும், அந்த மார்கெட்டிங்கைப் பற்றியும் சொல்லவே மாட்டார்கள். உங்கள் போன் நம்பரைக் கண்டிப்பாக கேட்பார்கள். அதை உறுதி செய்ய ஒரு மிஸ்டு கால் உங்கள் முன்னாலே உங்களுக்கு கொடுப்பார்கள். நீங்கள் பணம் கட்டினால் போதும் உங்களை மாதிரி ஆட்களை அவர்களே பிடித்து தருவதாக உத்திரவாதமும் தருவார்கள். அவர்கள் அடிக்கடி கூறும் வார்த்தை “ரிடையர்மண்ட்”. அஞ்சு வருசம் நீங்க இந்த ப்ரோகிராமில் இருந்தா போதும் உங்களுக்கு ராயல்டி மாதிரி பணம் வந்து கொண்டே இருக்கும். நீங்கள் இப்பொழுது செய்து வரும் வேலையை விட்டுவிட்டு வீட்டில் இருந்து கொண்டே சம்பாதிக்கலாம் என்று கூறுவார்கள். இந்த வார்த்தையில் தான் மக்கள் விட்டில் பூச்சிகளாய் விழுந்துவிடுகிறார்கள்.

உண்மையிலே இந்த மார்க்கெட்டிங்கில் லாபம் இருக்கிறதா, இந்த மாதிரி பிஸினஸில் ஈடுபட்டால் நம்மால் சம்பாதிக்கமுடியுமா, முயன்று தான் பார்ப்போமே என்று நினைப்பவர்களுக்கு நிறைகுறைகள் இங்கே..

1. உங்களுக்கு எக்கச்சக்க நண்பர்கள் இருந்தால், உங்களுக்கு மார்க்கெட்டிங் திறமை இருப்பதாக நினைத்தால் நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம். நீங்கள் ஒரு கஸ்டமரைப் பிடிப்பதற்குள் தாவு தீர்ந்திரும். வலுக்கட்டாயமாக ஒருவரை இதில் நிர்பந்திக்க வேண்டியதிருக்கும். மார்க்கெட்டிங் செய்பவர்களைப் பார்த்தாலே விபரம் தெரிந்தவர்கள் தலை தெரிக்க ஓடுவதைப் பார்க்கலாம்.

2. உங்களுக்குப் பயிற்சி அளிக்கும் போது இப்பொழுது இதில் சம்பாதித்துக் கொண்டிருப்பவர்களை உங்களுக்கு முன் மாதிரியாக காட்டுவார்கள். அவர்கள் உங்களுக்கு எப்படி சம்பாதிக்க வேண்டும் என்று விளக்கம் சொல்வார்.

3. பெரிய, பெரிய ஹோட்டலில் தான் மீட்டிங் நடக்கும். நீங்கள் ஒரு தடவை அந்த மீட்டிங் அட்டண்ட் பண்ணினால் உங்களுக்கும் ஆசை வரும்.

4. உங்களுக்கு நிறைய நண்பர்கள் அறிமுகமாவார்கள். நீங்கள் ஒருமுகப் படுத்தப் படுவீர்கள். இந்த பிஸினசைத் தவிர உங்கள் புத்தியில் எதுவும் ஏறாது. நீங்கள் பார்க்கும் எல்லோரும் உங்களுக்கு கஸ்டமராகவே தெரிவர். தயவு தாட்சண்யமே கிடையாது. லைஃபே பிஸினஸாகிவிடும்.சில நல்ல நண்பர்களை இழக்க நேரிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

5. இதில் சம்பாதிக்கிறவர்கள் சம்பாதித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஏமாறுபவர்கள் ஏமாறிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

6. மார்க்கெட்டில் இருக்கும் எல்லா புக்குகளும் இவர்களுக்காகவே எழுதியதாக கூறுவார்கள் உ..தா..(Rich Dad Poor Dad, Who Moved My Cheese ..etc). நான் இந்த புத்தகங்களை தன்னம்பிக்கைக்காக(Self Development) படித்தவை அதனால் தான் என்னுடைய பிளாக்கில் புத்தக அலமாரியில் இருக்கிறது. வேறு எந்த உள்குத்தும் இல்லை.

7. அடுத்த பிரிவுக்கு(Next Stage) போகும் போது ப்ரமோஷன், அவார்ட்(Silver,Gold, Diamond), மெடல்ஸ் எல்லாம் கொடுத்து ஊக்குவிப்பார்கள்.

என்னடா, இவன் தான் இதிலே சேரவே இல்லையே இதப் பற்றி இவ்வளவு சொல்றானேன்னு யோசிக்கிறீங்க. அந்த நிகழ்சிக்குப்(Get Together) பிறகு இந்த மூன்று வருடத்தில் நிறைய பேரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் 1990களில் இங்கு வந்து இந்த மாதிரி பிஸினஸில் சேர்ந்து பல லட்சம் டாலர்களை இழந்தவர்களையும், ஆசையில் இதில் இறங்கிவிட்டு, தொடர முடியாமல் விட்டுவிட்ட அப்பாவிகளையும் சந்தித்த போது அவர்கள் வருத்தப்பட்டு புலம்பியது தான் இந்த பதிவு.

டிஸ்கி : இந்த பதிவில் நான் எழுதியிருப்பவை எல்லாம் என் அனுபவத்தில் தெரிந்துகொண்டது. இது யாரையும், யார் மனதையும் காயப்படுத்தும் நோக்கத்தோடு எழுதியவை அல்ல. ஏன்னா நான் அவன் இல்லை.

இது சம்பந்தமாக ஒரு ஒளியோட்டம்