Sunday, June 20, 2010

ரகசியம் (தி சீக்ரெட்) - தொடர்- முன்னுரை

என்னுடைய முன்னுரை

ரகசியம் (தி சீக்ரெட்) இந்தப் புத்தகத்தை முதலில் படிக்கும் முன், எனக்கு இதன் வீடியோ தான் கிடைத்தது. அதை ஐபாட் ஃபார்மட்டிற்கு (mp4)மாற்றிவிட்டு, நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் பார்த்து முடித்தேன். இதை மொழிமாற்றம் செய்து தொடராக எழுதக் காரணம், இந்தப் படத்தை ஒரு தடவை பார்த்தாலோ அல்லது இந்த புத்தகத்தை ஒரு தடவைப் படித்தாலோ எல்லாவற்றையும் எளிதில் ஞாபகம் வைத்துக் கொள்வது கடினம். இதை தொடராக எழுதப் போவதால் உங்களுக்காகவும்,எனக்காகவும் பல தடவை படிக்கப் போகிறேன். இது ஒருவருடைய வாழ்க்கைக் குறிப்போ அல்லது ஒரு சம்பவமோ கிடையாது. பல அறிஞர்கள், விஞ்ஞானிகள், தத்துவமேதைகள் அவர்களின் வாழ்க்கையில் உணர்வுப்பூர்வமாக கண்டுபிடித்ததன் மொத்தத் தொகுப்பு. அவர்கள் கண்டுபிடித்தது நமக்கு ஏன்? அவர்களைப் போலவே நமக்கும் வாழ்க்கையில் நடக்கவா போகிறது? அவர்கள் வாழ்ந்த முறை வேறு, நாம் வாழும் முறை வேறு, நடைமுறையில் இதெல்லாம் சாத்தியமில்லை என்பதைப் போன்ற எதிர்மறை எண்ணங்களை நீங்கள் கொண்டிருப்பீர்களேயானால் இது உங்களுக்கான தொடர் இல்லை. நான் போன பதிவிலே சொன்னது போல் எனது சொந்தக் கருத்தை நான் இதில் கூறப் போவதில்லை. இந்த தொடர் எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தையும் சார்ந்து இருக்காது. ஆனால் அவர்களின் போதனைகள், கருத்துக்கள் மட்டும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும். இந்த புத்தகத்தில் மொத்தம் 10 தலைப்புகள் உள்ளது. நீளம் கருதி ஒரே தலைப்பில் இரண்டு மூன்று பதிவுகளாக எழுதுகிறேன். எழுத்தில் ஏதும் குறையிருந்தால் மன்னிக்கவும்.

ரகசியம் தேடிச் செல்வோமா?

ரோண்டா பைரனின் முன்னுரை


சில வருடங்களுக்கு முன்னால் என்னுடைய வாழ்க்கை ஒரு மிகப் பெரிய குழப்பமான சூழ்நிலையில் இருந்தது. என்னுடயை வேலையில் திருப்தியில்லை. என் தந்தையின் திடீர் மறைவு என்னை நிலைகுலைய செய்தது. என்னுடன் வேலை செய்பவர்கள் மற்றும் நான் விரும்பியவர்கள் எல்லோரும் எனக்கு எதிராக மாறியது போன்ற உணர்வு ஏற்பட்டது. அந்தச் சூழ்நிலையில் ஒரு மிகப் பெரிய பரிசு ஒன்று என் மகள் ஹார்லே மூலம் எனக்கு கிடைத்தது. அது ஒரு அருமையான புத்தகம் (தி சீக்ரெட்). வாழ்க்கையின் ரகசியம் என்ற தலைப்பு. அது நூறு வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்ட புத்தகம். அந்தப் புத்தகத்தை மேலும் ஆராய்ந்த பொழுது தான் எனக்கு தெரிந்தது, இந்த ”ரகசியம்” சிலருக்கு தெரிந்திருக்கிறது. அந்த "ரகசியம்" தெரிந்தவர்கள் எல்லோரும் சரித்திரத்தில் இடம் பெற்றவர்கள் : ப்ளேட்டோ, ஷேக்ஸ்பியர், நியூட்டன், ஹுகோ, பீத்தோவன், லிங்கன், எமர்சன், எடிசன், ஐன்ஸ்டீன் மற்றும் பலர் என்று இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

எனக்குள் எழுந்த கேள்வி இது தான் “ஏன் இதை எல்லோரும் தெரிந்து கொள்ளக் கூடாது?”. நான் அறிந்து கொண்ட இந்த ”ரகசியத்தை” இந்த உலகத்துடன் பகிர்ந்து கொள்ள, இன்று இந்த ரகசியங்களை தெரிந்தவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்று தேடிப் புறப்பட்டேன். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், ஒரு மிகப் பெரிய தத்துவமேதையை சந்தித்தால் அவருடன் முடிந்துவிடாமல் இன்னொருவர், அவரிலிருந்து இன்னொருவர் என்று இது ஒரு சங்கிலித் தொடர் போல இந்த வரிசை நீண்டுக் கொண்டே போகிறது. நான் ஏதாவது வழி தவறி வேறொரு வழியில் சென்றால், ஏதாவதொன்று என் கவனத்தை நேர்வழியில் நடத்திச் செல்கிறது. ஏதாவது ஒரு வழியில் நான் சந்திக்க நினைத்த ஒரு ஆசிரியரை சந்திக்க முடிந்தது மேலும் ஒரு ஆச்சர்யம். சில வாரங்களிலே இன்று நடைமுறையில் அந்த ரகசியங்களை தெரிந்தவர்களைக் கண்டுபிடித்தேன்.

இந்தப் படத்தை எப்படி எடுக்க வேண்டும் என்பதை என் மனத்திரையில் நான் பலமுறை பயிற்சி செய்து கொண்டேன். இந்தப் படத்தை எப்படி எடுக்கவேண்டும் என்ற விவாதம் முடிந்து இரண்டு மாதத்தில் இந்தப் படத்தின் தயாரிப்பில் இருந்த ஒவ்வொரு நபரும் ”ரகசியத்தை” தெரிந்து கொண்டார்கள். என்னுடன் பணிபுரிந்த அத்தனை பேரும் அந்த ”ரகசியத்தை” சில மாதங்களில் புரிந்து கொண்டார்கள். அவர்களுக்கு இந்த ரகசியம் புரியவில்லையென்றால் இப்படி ஒரு அற்புதமான படத்தை நாங்கள் எடுத்திருக்க முடியாது. நாங்கள் பலபேரை இந்தப் படத்தில் பதிவு செய்யவேண்டியிருந்ததால் ஆஸ்திரேலியாவிலிருந்து அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டோம். ஏழு வாரத்திற்குப் பிறகு, என் குழு 25 மிக சிறந்த ஆசிரியர்களை அமெரிக்கா முழுவதும் சென்று 120 மணி நேரம் படம் பிடித்தார்கள். எட்டு மாதத்திற்குப் பிறகு இந்தப் படம் வெளியிடப் பட்டது.

இந்தப் படம் வெளியானதும், பல்வேறு இடங்களில் இருந்து இதன் மகத்துவம் பற்றி தகவல்கள் எங்களுக்கு வந்த வண்ணம் இருந்தது. வலி, மன உளைச்சல், பல வியாதிகளில் இருந்து குணம் பெற்றதாக, இந்த ரகசியத்தை உபயோகித்த ஒவ்வொருத்தரும் எங்களுக்கு கடிதம் மூலமும், இ-மெயில் மூலமும் தெரியப் படுத்தினர். இந்த ரகசியத்தை மருத்துவர்கள் நோயாளிகளுக்கும், ஆசிரியர்கள் மாணவர்களுக்கும், ஹெல்த் க்ளப்கள் தனது வாடிக்கையாளர்களுக்கும், தேவாலயங்கள் பக்தர்களுக்கும் இந்த ரகசியத்தை உபயோகித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறார்கள். நீங்கள் யாராக இருந்தாலும், எந்த நிலையில் இரு்ந்தாலும், எங்கு இருந்தாலும் அது ஒரு பொருட்டே அல்ல, இந்த ரகசியம் உங்களுக்கு வேண்டியதைக் கொடுக்கும்.


Source : The Secret by Rohnda Byrne


Saturday, June 5, 2010

தொலைந்துவிடாத பொறுமை கேட்டேன்


நண்பர்களுக்கு வணக்கம். சில பல வேலைப் பளுக் காரணமாக சில மாதங்களாக பதிவுகள் இடமுடியவில்லை. முதலில் வாரத்திற்கு மூன்று பதிவு என்று ஆரம்பித்து, இரண்டாகி, கடைசியில் வாரத்திற்கு ஒன்று என்று போய்க்கொண்டிருந்தது. சொல்லி வைத்தாற்ப் போல் தொடர்ந்து வேலை. நண்பர்கள் பதிவுக்குச் சென்று படிப்பது, பின்னூட்டம் இடுவது கூட குறைந்து விட்டது.மேலோட்டமாகப் பார்ப்பதோடு சரி. இனிமேல் இவன் எங்க எழுதப் போகிறான் என்று ஃபாலோயர் லிஸ்டிலிந்து இரண்டு மூன்று பேர் கழண்டு கொண்டார்கள்.

உண்மையான காரணங்கள் இரண்டு தான். ஒன்று- நான் நீண்ட வருடங்களாக வாங்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த DSLR(Nikon D90) கேமிரா மூன்று மாதங்களுக்கு முன்னால் வாங்கினேன். அதை அக்குவேறாக, ஆனிவேறாக பிரித்து படித்துக் கொண்டிருந்தேன். இன்னும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்துக் கொண்டு தான் இருக்கிறேன். டிஜிட்டல் காமிராவைப் பற்றியும், நுனுக்கங்களைப் பற்றியும் தமிழில் இந்த வலைப் பதிவில்(http://photography-in-tamil.blogspot.com/)தெரிந்து கொண்டது தான் அதிகம். பழைய பதிவுகளில்(2007-June)இருந்து ஆரம்பித்து இன்று வரை ஒவ்வொரு பதிவும் அற்புதம். யு-டியூபிலும் ஆயிரக் கணக்கில் டிப்ஸ் உள்ளது. இனிமேல் தான் படங்கள் எடுத்து பழக வேண்டும். உங்களுக்குத் தெரிந்த வலைத் தளங்கள் ஏதும் இருந்தால் எனக்கு தெரிவிக்கவும்.

இரண்டாவது காரணம். ஒரே மாதிரியான பதிவுகளை கொடுக்கிறோமோ என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டேன். சினிமாவைப் பற்றி வரும் பதிவிற்குத் தான் நிறைய ஹிட்ஸ் கிடைக்கிறது.அதே மாதிரியான பதிவைத் தான் எழுத தூண்டுகிறது.சினிமாவைப் பற்றி எழுத ஏகப்பட்டபேர் இருப்பதால் ஏதாவது புதுசாக எழுதலாம் என்று நினைத்தேன். ஆங்கிலத்தில் வந்து பிரபல்யமான ஒரு புத்தகத்தை தமிழில் மொழிப் பெயர்த்து தொடராக எழுதலாம் என்று நினைத்தேன். இதனால் ஏதும் சட்டசிக்கல்கள்(Copyrights) வருமா என்று யோசித்து சிலரிடம் யோசனை கேட்டேன். அவர்கள் கொடுத்த தைரியத்தில் எழுதலாம் என்று முடிவெடுத்து விட்டேன்.


பொதுவிஷயங்களைப் பற்றியும்,சினிமாவைப் பற்றியும் எழுதுவேன். தொடர்தான் பிரதானமாக இருக்கும். என்ன எழுதப் போகிறேன் என்று கேட்பது தெரிகிறது..அது ”ரகசியம்”. இது ஒரு தன்னம்பிக்கைத் தொடர்.மொழிமாற்றம் செய்வதில் ஒரு சிக்கல் இருக்கிறது. தனது சொந்தக் கருத்தையும், எழுதுபவர்கள் திணிப்பது. நான் எழுதுவதில் அப்படி இருக்காது. முடிந்தவரை எளிய தமிழில் எழுத முயற்சி பண்ணுகிறேன்.


தொடரில் சந்திப்போம் நண்பர்களே !

Wednesday, May 26, 2010

தூரல் நகரம் - குளு குளு குற்றாலம்

"ஆயிரங் கண் போதாது வண்ணக்கிளியே குற்றால அழகை நாம் காண்பதற்கு வண்ணக் கிளியே"

"குற்றால அருவியில் குளித்தது போல் இருக்குதா?"

"தேனருவித் திரையெழும்பி வானின் வழி ஒழுகும், செங்கதிரோன் தேர்க்காலும் பரிக்காலும் வழுகும்"

அனைத்துமே அனுபவித்து எழுதப் பட்ட வரிகள் என்பது, குற்றாலக் காடுகளையும், அருவிகளையும் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும்.குற்றாலத்தைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் நம் மனசும், உடம்பும் ஒரு புத்துணர்ச்சிப் பெறும். நகரவாசிகளைப் பொருத்தவரை, அவர்களுக்கு இயந்திர வாழ்க்கைதான். காலையில் எழுவது,இரவு காமெடி டைம் பார்த்துவிட்டு படுக்கச்செல்வது வரை தினமும் ஒரே நிலைதான். சென்னை நகரவாசிகள், இது போன்ற இரைச்சல், புகை,தூசு, சாக்கடை நாற்றம், பிளாட்பார பிரியாணி என பழகிவிட்டார்கள். அதை மாற்றிக்கொள்ள முடியாது. ஆனால், சில நாட்களுக்காவ‌து இதிலிருந்து விடுபட்டு, இயற்கை பரந்துவிரிந்த இடங்களுக்குச் சென்று வரலாம். நமக்கென்று இயற்கை சில அதிசய படைப்புகளை செய்திருப்பதை நம்மால் ரசிக்கமுடிவதில்லை அல்லது காலம், பொருளாதாரம் ஒத்துழைப்பது இல்லை. அந்த வகையில் முழுக்க முழுக்க, இயற்கையாக அமைந்த ஒரு சிறந்த சீசன் தளம் தான் குற்றாலம்.

இந்த ஊரின் சிறப்பு, இந்த ஊர் முழுக்க முழுக்க பசுமையால் சூழப்பட்டுள்ளது தான். சுற்றிலும் பச்சைப்பசேல் என மரங்களும், மலைகளும் கண்கொள்ளாக் காட்சி. சென்னையிலே, சாதாரணமாக மே, ஜூன் மாதங்களில் வெயிலும், அனலும் கொளுத்தும். ஆனால், இங்கே சாரல் அடித்துக் கொண்டிருக்கும். மே மாதம் தொடங்கும் சீசன் ஜூன் மாதத்தில் உச்சமடையும். இந்த ஜூன் மாததில் தான் "சாரல் திருவிழா" இருக்கும். அதாவது, அருவிகளில் தண்ணீரின் வரத்து நன்றாக இருக்கும். ஜூலை மாதங்களில் கொஞ்சம் கொஞ்சமாக மூட்டைகட்டிவிடும் சீசன், ஆகஸ்ட்டில் மொத்தமாக கிளம்பிவிடும்.
குற்றால மலையின் சிறப்பைப் பற்றி குற்றாலக் குறவஞ்சி என்னும் நூலில்

வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழியெறிந்து வானவரை யழைப்பார்
கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார்
தேனருவித் திரையெழும்பி வானின்வழி யொழுகும்
செங்கதிரோன் பரிக்காலுந்த தேர்க்காலும் வழுகும்
கூனலிளம் பிறைமுடித்த வேணியலங் காரர்
குற்றாலத் திரிகூட மலையெங்கள் மலையே

என குற்றால மலையின் சிறப்புகளை, திரிகூட ராசப்பக் கவிராயர் பாடியுள்ளார்.அருவியில் இருந்து வழிந்தோடும் சிற்றாறுகளின் உபயத்தில் பச்சைக் கம்பளம் விரிந்து வயல்வெளிகளாலும், தோப்புகளாலும், தேக்கு, பலா மரங்களாலும் நிறைந்த சமவெளிகள் சூழ்ந்த சிற்றூர்கள் மலையடிவாரத்தில் அமைந்துள்ளன. திருநெல்வேலியில் இருந்து 50கி மீ தொலைவில் உள்ளது. இங்கே மொத்தம் சிறிதும் பெரிதுமாக 9 அருவிகள் உள்ளன. மலையின் மேல் ஓடி வரும் மழைநீர் வெள்ளம், மூலிகைச் சாறுகளுடன் கலந்து, தன்னோடு பல்வேறு கனி மரங்களையும் சேர்த்துக் கொண்டு, மலையின் பல பாகங்கள் வழியே கீழே பாய்கின்றன. பழைய அருவி,பேரருவி,புலியருவி, ஐந்தருவி,சிற்றருவி,புது அருவி,பழத்தோட்ட அருவி என்று ஏழு அருவிகள் மலையைச் சுற்றி மலையடிவாரங்களிலும்,தேனருவி, செண்பகதேவி என்று இரு அருவிகள் என்று மலையின் மேலேயும் அமைந்துள்ளன.
இனி ஒவ்வொரு அருவியும் அதன் தனிச் சிறப்பையும் பார்ப்போம்.

பேரருவி - Main Falls

குற்றாலத்திற்குள்ளே நுழைந்ததும் அதிகபட்சமாக, எல்லோரும் முதலில் செல்வது மெயின் அருவி தான். இது 288 அடி உயரத்தில் இருந்து பொங்குமாங்கடல் என்ற ஆழமான ஒரு துளையில் விழுந்து, பொங்கி, பரந்து விரிந்து கீழே விழுகிறது. மிகப்பிரம்மாண்டமான இரைச்சலுடன், கொட்டிக் குமுறிக் கொண்டிருக்கும் இந்த அருவியில் குளிப்பது மிகமிக ஆனந்தம். இந்த அருவியில் பல நேரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குளிப்பதற்குத் தடை விதிக்கப்படும். அந்த நேரங்களில் இதன் கீழ்பகுதியில் உள்ள ஒரு மிகப்பெரிய நீர் தடாகத்தில் குளித்து விளையாடலாம். ஆனால் சில நேரங்களில் அங்கே நெருங்கக்கூட வாய்ப்பு கிடைக்காது. மெயின் அருவியிலே குளித்தாலே போதும், நம் மக்கள் பலருக்கு, தொந்தரவு தரும் கழுத்து வலி, மூட்டு வலி, உடல்வலி, முதுகு வலி என எல்லா வலிகளும் பறந்தோடிவிடும். அது மட்டுமில்லாமல் எல்லா அருவிகளின் முன்னாலும் மசாஜ் நிலையங்கள் இருக்கின்றன. எண்ணெயை உங்கள் உடலில் ஊற்றி அப்படியே கொத்து பரோட்டா போடுற மாதிரி கொத்திவிட்டு, நரம்புகளை நீவிவிட்டு, சுடக்கெடுத்து விடுவார்கள்.அந்த எண்ணையோடு சென்று அருவியிலே தலைகொடுப்பது, மிக மிக சுகமானது. ஆயில் மசாஜ்க்கென்றே குற்றாலம் செல்வதற்கு ஒரு கூட்டமே இருக்கிறது. அடுத்து குளியல் முடிந்தவுடன் நேரே வெளியே வந்தால் அருவிகளின் ஓரங்களை ஆக்கிரமித்திருக்கும் பஜ்ஜி கடைகள். அதுவும் அங்கே மிளகாய் பஜ்ஜி தான் மிகப்பிரபலம். அதிலே சென்று ஏதாவது ஒன்றை வாயிலே போட்டுவிட்டு, மறுபடியும் குளியலுக்குச் சென்றுவிடலாம். காரணம், அருவியில் குளித்த சில மணித்துளிகளில் பசியெடுக்கத் துவங்கிவிடும். அருவியிலே குளிப்பதில் என்ன ஒரு விசேசம் என்றால், நாம் நம்ம வீட்டு பாத்ரூமில் குளித்துவிட்டு இரண்டு நிமிடம் தலை துவட்டாமல் இருந்தால் ஜல்ப்பு புடிச்சிக்கும். ஆனால் குற்றால அருவியிலே 24 X 7 ஆக குளித்துக்கொண்டே இருக்கலாம். தலை துவட்டவேண்டிய அவசியம் இல்லை. காரணம் மலையின் மேலே இருக்கும் லட்சக்கணக்கான மூலிகைகள் வழி ஓடிவரும் இந்த நீர் நம் உடலுக்கு எந்த வகையிலும் கேடு இல்லை

ஐந்தருவி - Five Falls

குற்றாலம் நகரில் இருந்து கொஞ்சம் தொலைவில் இருப்பது ஐந்தருவி. மெயின் ஃபால்ஸில் இருந்து ஒரு ஐந்து கி மீ தூரத்தில், அழகிய மலைச்சாரல், சிறு சிறு ஆறுகள், பழத்தோட்டங்கள், தங்குமிடங்கள், ஒரு சிறிய ஏரி எல்லாம் தாண்டி வருகிறது ஐந்தருவி. இங்கு அருவி ஐந்து பிரிவாக வந்து விழுவதால்,ஐந்தருவி என்று பெயர். சீசன் இல்லாத பொழுது மூன்று அருவிகள் ஒளிந்து கொண்டு, இரண்டருவியாக விழுந்து கொண்டிருந்தன. அடர்ந்து வளர்ந்து, தன்னுள்ளே பல மர்மங்களை ஒளித்து வைத்துக் கொண்டு அருவியைக் கொட்டுகிறதோ, என்று பிரமிக்க வைக்கிறது அந்த அடர்ந்த கானகங்கள் நிறைந்த மலைத்தொடர். மலையின் மேலே, உயரத்தில் எங்கேயோ, எங்கிருந்தோ பல நூறடிகளுக்கு வெள்ளிக் கம்பியாக ஒரு அருவி விழுந்து மீண்டும் கானகத்திற்குள் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. பழக்கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள பழங்கள் கண்களைக் கவருகின்றன. ஆண்களும், பெண்களும் மீண்டும் வழிய வழிய எண்ணெய் தடவிக் கொண்டிருக்கின்றனர். இதில் பெண்கள் குளிக்க ஒரு அருவி கிளைகளும், ஆண்கள் குழந்தைகளுக்கு 3 கிளைகளும் உள்ளன. இங்கு சபரிமலை சாஸ்தா கோயிலும், முருகன் கோயிலும் உள்ளது.

பழத்தோட்ட அருவி - VIP Falls

ஐந்தருவி போகும் முன்பாக, ஒரு கிளைப் பாதை பிரிந்து, மலையின் மேல் செல்கிறது. கொஞ்ச தூரம் சென்றதும் அரசாங்கத்தின் பழத்தோட்டத் துறை நடத்தும் ஒரு பழப்பண்ணை வருகிறது. அந்த பண்ணையின் உள்ளே நுழைந்தால், மிக அழகிய இரு சின்ன அருவிகள், அருவி நிறைந்து விழும் இடத்தில், ஒரு அற்புதமான தடாகத்துடன் இருக்கின்றன. மிகவும் சுத்தமாக, அந்த அருவிகள் பராமரிக்கப் படுகின்றன. அடர்ந்த வனத்தின் நடுவே இயற்கை எழில் கொஞ்சும் இரு அருவிகள் அங்கே உள்ளன. அதற்குப் பழத்தோட்ட அருவி என்று பெயர். ஆனால் இந்த அருவியில் பொதுமக்கள் குளிக்க முடியாது. வி ஐ பிக்கள் மட்டுமே குளிக்க முடியும். வி ஐ பிக் கள் என்பவர்கள் அதிகாரிகள், அரசியல்வாதிகள், மந்திரிப் பிரதானிகள், அவர்கள் சொந்தங்கள், எம் பி, எம் எல் ஏக்கள், ஆலை அதிபர்கள் போன்ற புதிய மனுதர்மத்தின் உயர்தட்டு மக்களுக்காக மட்டுமே அரசாங்கம் தனியாக ஒரு அருவியை ஒதுக்கி வைத்துள்ளது. அரசாங்கம் பின்பற்றும் இந்த சமூக ஏற்றதாழ்வைக் கேட்பார் இல்லை. சாமானியர்கள் அந்த ஊர்க் காரர்களும் கூட அருகில் நெருங்க முடியாது.

பழைய குற்றாலம் -Old Falls

இங்கும் தண்ணீர்வரத்து ஓரளவிற்கு அதிகமாக இருக்கும். ஆனால் மெயினருவியை ஒப்பிடும் போது இங்கே கம்மிதான். பஸ்ஸில் செல்பவர்களுக்கு குற்றாலம் பஸ் நிலையத்தில் இருந்து பழையகுற்றாலத்திற்கு பஸ்கள் இயக்கப் படுகின்றன

சிற்றருவி

இது நடந்து செல்லும் தூரத்தில் பேரருவிக்கு(Main Falls) மேல் அமைந்துள்ளது. பேரருவியில் கூட்டமாக இருந்தால் மக்கள் இங்கு வந்து குளிப்பர்.

செண்பகாதேவி அருவி

பேரருவியில் இருந்து மலையில் 2 கி.மீ. தூரம் நடைப்பயணத்தில் செண்பகாதேவி அருவியை அடையலாம். இந்த அருவி தேனருவியிலிருந்து இரண்டரை கி.மீ. கீழ்நோக்கி ஆறாக ஓடி வந்து, 30 அடி உயரத்தில் அருவியாக கொட்டுகிறது. அருவிக்கரையில், செண்பகாதேவி அம்மன் கோவில் உள்ளது. சித்ரா பவுர்ணமி நாளில் இந்த கோவிலில் சிறப்பான விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த அருவிகளில் குளிப்பது சற்று ஆபத்தானது. பாதுகாப்பு வளைவுகள் ஏதும் இல்லாத தடாகங்கள் உள்ள அருவிகள். அருவி நீர் நேரே ஒரு தடாகத்தில் விழுந்து, அங்கிருந்து நதியாக கீழே பாய்கிறது. தடாகத்திலும் நீந்திக் குளிக்கலாம். சற்று தவறினாலும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு விடும் அபாயம் நிறைந்த அருவிகள். இருந்தாலும் மலையேறி அந்த அருவிகளில் குளிப்பது ஒரு சாகசம்தான். கூட்டமும் அதிகம் இருக்காது. கீழேயுள்ள அருவிகளில் உள்ள தொல்லைகள் எல்லாம் இல்லாமல் ஏகாந்தமாகக் குளிக்கலாம். அவசியம் தவற விடக்கூடாத அருவிகள்.

தேனருவி

செண்பகாதேவி அருவியின் மேல் பகுதியில் உள்ளது. இந்த அருவி அருகே, பல தேன்கூடுகள் அமைந்துள்ளதால் இந்த இடம் அபாயகரமானது. இந்த அருவிக்கு சென்று குளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

குற்றால சீசன் வந்துவிட்டாலே, அங்கு விதவிதமான பழவகைகள் வந்து குவிந்துவிடும். பெயர் தெரியாத எக்கச்சக்க பழவகைகள் அங்கே கிடைக்கின்றன. மலையின் மீது ரங்குஸ்தான், மலை வாழை, டொரியன், பலா, மங்குஸ்தான், சீதா, கொய்யா, சப்போட்டா, மா, நெல்லி, போன்ற எண்ணற்ற பல வகைகள் காய்க்கின்றன. பாக்கும், தெளிதேனும், பாகும், பலாவும் நிறைந்த மலை. கஷ்பான், சொரியா, டாம்டாம், துரியன் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இதிலே துரியன் பழத்தின் மகிமையை யாருமே அறிவதில்லை. துரியன் பழத்தின் அருமை மலேசியர்களுக்குத் தான் தெரியும்.

குற்றாலத்தில் சீசனுக்கென்றே முளைக்கும் கடைகளில் விதவிதமான வித்தியாசமான பொருட்களெல்லாம் கிடைக்கும்.பலவிதமான குழந்தை விளையாட்டுப் பொருட்கள், சிப்பி அலங்கார மாலைகள், எலக்ட்ரானிக் பொருட்கள் என அனைத்துமே கிடைக்கும்.நேந்திர சிப்ஸ், உருளைக்கிழங்கு சிப்ஸ், மரவள்ளி சிப்ஸ் மற்றும் சோளப்பொறி என விதவிதமான அயிட்டங்களும் அங்கு ஃபேமஸ். குற்றாலத்திலே காலையில் கிடைக்கும் குழாய் புட்டு ருசியோ ருசி. நீங்கள் எங்கு புட்டு சாப்பிட்டிருந்தாலும் அது குற்றாலக் குழாய்ப் புட்டுக்கு ஈடாகாது.
குற்றாலத்தின் அருகே, ஒரு ஐந்து கி மீ சுற்றளவில் பல பார்க்க வேண்டிய இடங்கள் உள்ளன. தென்காசி கோவில் அதில் முக்கியமானது. திருமலைக் குமாரசுவாமி கோவில் என்று ஒரு அழகிய குன்றத்துக் குமரன் கோவில் தவற விடக் கூடாத இடமாகும். குன்றின் மேல் உள்ள கோவிலில் நின்று பார்த்தால் சுற்றிப் பச்சைப் பசலேன வயற்பரப்பும், சுற்றிலும் மேகம் கவிழ்ந்த குற்றால மலைத்தொடருமாக, இயற்கை அன்னையின் எழில் உங்கள் கண்களையும் மனதையும் ஒருங்கே கொள்ளை கொள்ளும். அருகில் உள்ள இலஞ்சி என்ற அழகிய கிராமத்தில் ஒரு அழகிய முருகன் கோவில் உள்ளது. குற்றாலத்தை அடுத்துள்ள செங்கோட்டையைத் தாண்டினால் ஆரியங்காவுக் கணவாயும், கேரளாவும், அச்சன் கோவிலும் வந்து விடும். கேரள எல்லையிலும் சில அருவிகள் உள்ளன. ஆளரவமில்லாத, அற்புதமான அருவிகள் அவை. கொஞ்சம் மலையேறலும், காட்டுக்குள் நடையும் தேவைப் படும், இருப்பினும் அங்குள்ள இயற்கை எழிலின் உன்னதத்தைக் காண்கையில் அந்த உழைப்பு வீண் போகாது. இன்னும் கொஞ்சம் தூரம் சென்றால், குற்றாலத்தின் நெரிசலைத் தவிர்த்தப் பச்சைப் பசேல் என்று போர்த்திக் கொண்ட அற்புதமான பாலருவி இருக்கிறது. தமிழ்நாட்டுப் பகுதிகளில் பாபநாசம் அகத்தியர் அருவியும், பாபநாசம் அணையும், பரிசலில் சென்றால் வரும் பாண தீர்த்தத்தையும் கண்டு குளித்து அனுபவிக்கலாம். ஒரு வாரம் தங்கி, கண்டு, ரசித்து அனுவவிக்க எண்ணற்ற இடங்கள் குற்றாலத்தைச் சுற்றி அமைந்துள்ளன.
இது ஒரு மீள்பதிவு

Friday, March 19, 2010

சின்னக் கண்ணம்மா

”சின்னக் கண்ணம்மா” படத்தில் வரும் இந்தப் பாடலை அலுவலகம் விட்டு காரில் வரும் பொழுது கேட்டேன். இவ்வளவு அற்புதமான பாடலைக் கேட்டு எவ்வளவு நாட்களாகி விட்டது. மனதை வருடும் பாடல் இது. வீட்டிற்கு வந்து உடனே யூ-ட்யூபில் இந்தப் பாடலைப் பார்த்தேன். ஆகா.. தலைவர் மேஸ்ட்ரோவின் கொள்ளை கொள்ளும் மெலடி, கார்த்திக்கின் நடிப்பு, பேபி ஷாமிலியின் கொஞ்சல், பாடல் எடுத்தவிதம் அவ்வளவு அருமை.இந்த பாடல் வரிகள் கேட்டால் உங்களுக்கும் இந்த பாடல் பிடிக்கும்.

எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல
பூக்களின் வண்ணம் கொண்டு
பிறந்த மகளே என் மகளே!
நான் வாழ்ந்தது கொஞ்சம்,
அந்த வாசத்தில் வந்துதித்து
உயிரில்கலந்தாய் என் உயிரே!
உன் பூவிழி குறுநகை!
அதில்ஆயிரம் கவிதையே..!

வானம் தாலாட்ட, மேகம் நீராட்ட
வளரும் வெள்ளி நிலவே!
வாழ்வில் நீ காணும் சுகங்கள் நூறாக
வேண்டும் தங்கச் சிலையே!

தாயின் மடிசேரும் கன்று போல
நாளும் வளர்வாய் என் மார்பிலே!


சேய் உன் முகம் பார்க்க துன்பம் தீரும்
காலம் கனியாகும் தேவியே!
சிறுகிளி போல் பேசும் பேச்சில்
எனை மறந்தேன் நானம்மா...!

கனவில் நினைவாக நினைவில் கனவாக
கலந்தால் காதல் தேவி..
உறவின் பலனாக கடலில் அமுதாக
பிறந்தாய் நீயும் கனியே!

காணக் கிடைக்காத பிள்ளை வரமே
கண்ணில் ஜொலிக்கின்ற வைரமே..!
கோடி கொடுத்தாலும் உன்னைப் போல
செல்வம் கிடைக்காது வாழ்விலே

புள்ளி மானே தூங்கும் மயிலே
என்னை மறந்தேன் நானம்மா...
(எந்தன் வாழ்க்கையின்)


படம் : சின்னக் கண்ணம்மா
இசை : இளையராஜா
பாடியவர் : மனோ

காணொளியைக் காண இங்கே சொடுக்கவும்.Friday, March 12, 2010

எனக்கு பிடித்தப் பத்து பெண்கள்...


என்னை இந்த தொடர்பதிவுக்கு அழைத்த தேனம்மைக்கு நன்றிகள் பல. பெண்களைப் பற்றி எழுதும் பொழுது என் நினைவில் முதலில் வந்த பெண்கள் இவர்கள் தான். ஒரே துறையில் பலபேர் இருந்தாலும் நிபந்தனையில் கூறியிருப்பது போல் ஒருவரை மட்டும் குறிப்பிட்டிருக்கிறேன்.

நிபந்தனைகள் :-

1. உங்களின் சொந்தக்காரர்களாக இருக்க கூடாது.,
2. வரிசை முக்கியம் இல்லை.,
3. ஒரே துறையில் பல பெண்மணிகள் நமக்கு பிடித்தவர்களாக இருக்கும்,
4. இந்த பதிவுக்கு வெவ்வேறு துறையில் உள்ள நபர்களாக இருக்கவேண்டும்காவல்துறை :கிரண் பேடி

இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி. ஆசியாவின் நோபல் பரிசு பெற்ற முதல் அரசு அதிகாரி. ஆசிய டென்னிஸ் பட்டம் பெற்ற முதல் இந்திய விளையாட்டு வீராங்கனை. 2007ஆம் ஆண்டு விருப்பப்பணி ஓய்வு பெற்றபின் சமூக சேவகியாக நலப்பணிகள் செய்து வருகிறார்.தமது காவல் பணிக்காலத்தில் வகித்த பல்வேறு பதவிகளிலும் சிறப்புற பணியாற்றிப் புகழ் பெற்றவர். தில்லியின் சிறைத்துறை பொது ஆய்வாளராக இருந்தபோது, 10,000 கைதிகளை வைத்திருக்கக்கூடிய உலகின் மிகப்பெரிய சிறைகளில் ஒன்றாகக் கருதப்படும் திகார் சிறையில் அவராற்றிய சீர்திருத்தங்களும், முன்னேற்றங்களும் பலரின் பாராட்டைப் பெற்றதோடன்றி, 1994ஆம் ஆண்டிற்கான மதிப்பு மிக்க ரமன் மகசேசே விருது பெற ஏதுவாய் இருந்தது.

பாடகி : பி. சுசிலா

இசை உலகில், இன்பம் தரும் குயிலின் குரல் கொண்ட தமிழ் நெஞ்சங்களை இசையில் வாழவைத்துக்கொண்டிருக்கும், என்றும் வற்றாத இன்ப ஊற்று பி . சுசிலா அவர்கள். அவரின் குரலை கேட்டாலே நம்மை மறந்தே விடுவோம் திரை உலகில் ஒரு கலக்கு கலக்கி மக்களை தம் வசமாக்கிய குரல் கொண்டவர் பி .சுசிலா அவர்களே. அவர் பாடிய எத்தனை பாடல்கள் நம்மை இன்பத்தில் கொண்டு சென்றிருக்கிறது. கலைமகள் கைப்பொருளே உன்னை கவனிக்க ஆள் இல்லையோ.. என்ற பாடல் கேட்கும் போது அவரின் குரல் நெஞ்சை வருடிக் கொள்ளும்.

மருத்துவம் : டாக்டர் கமலா செல்வராஜ்

நடிகர் ஜெமினி கணேசனின் மகள். சோதனைக்குழாய் மூலம் குழந்தைகளை உருவாக்குவதில் நிபுணராக விளங்குபவர் டாக்டர் கமலா செல்வராஜ். குழந்தை இல்லாத எத்தனையோ பேருக்கு இவர் சோதனைக்குழாய் மூலம் குழந்தை உருவாக்கி அவர்களின் துயரைத் துடைத்துள்ளார். டாக்டர் கமலா அவர்கள் தன் தந்தையின் புகழை உலகிற்கு எடுத்துரைக்க " காதல் மன்னன் " என்ற பெயரில் 90 நிமிட குறும்படம் எடுக்கிறார். இவர் ஆன்மீக நூல் ஒன்றும் எழுதியிருக்கிறார்.

அரசியல் : இந்திரா காந்தி

இந்திரா காந்தி இந்தியாவின் மூன்றாவது பிரதமர் ஆவார். அவர், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளும் ஆவார். இவர் ஒரு சிறந்த அரசியல் திட்டமிடலாளரும், சிந்தனையாளரும் ஆவார். அரசியல் அதிகாரத்துக்கான அசாதாரண பற்றை அவர் கொண்டிருந்தார். ஆணாதிக்க மனப்பாங்கைக் கொண்ட இந்திய சமுதாயத்தில், ஒரு பெண்ணிடம் எதிர்பார்க்கப்படும் தன்மைகளுக்கு மாறாக வலுவான அதிகார பலத்துடன் மிகவுயர்ந்த பதவியிலிருந்து நாட்டை வழி நடத்தினார்.

பாடலாசிரியர் : கவிஞர் தாமரை

தாமரை ஒரு குறிப்பிடத்தக்க தமிழ் பெண் கவிஞர் மற்றும் திரைப்பட பாடலாசிரியர். ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்" என்ற கவிதைத் தொகுப்பை அளித்துள்ள தாமரை, சிறுகதைகளும் எழுதக் கூடியவர். "சந்திரக் கற்கள்", "என் நாட்குறிப்பின் நடுவிலிருந்து சில பக்கங்கள்" ஆகிய சிறுகதைத் தொகுப்புகளைப் படைத்துள்ளார். இயக்குனர் சீமானின் "இனியவளே" திரைப்படத்திற்காக, தென்றல் எந்தன் நடையைக் கேட்டது என்ற பாடல் மூலம் தமிழ்த் திரையுலகில் முதல் பெண் பாடலாசிரியராக தாமரை அறிமுகமானார். "வசீகரா, அழகிய அசுரா, தவமின்றிக் கிடைத்த வரமே, இஞ்சேருங்கோ... எனப் புகழ்மிக்க பாடல்கள் உள்பட நூற்றுக்கும் மேலான பாடல்களை இயற்றியுள்ளார்.

நடிகை : ஐஸ்வர்யா ராய்

இவரை பற்றி சொல்ல என்ன இருக்கிறது. அழகு என்றால் அது ஐஸ்வர்யா ராய் தான். எல்லோருக்கும் இவரைப் பிடிக்கும். மாடல், உலக அழகி மற்றும் பாலிவுட் நடிகை.

சமூகச் சேவை : அன்னை தெரசா

அன்னை தெரேசாவை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. கல்கத்தாவில் பிள்ளைகளுக்கு கல்வி அளிப்பதோடு மட்டும் நின்று விடாமல் பிள்ளைகளைக் குளிப்பாட்டுவது, சாக்கடை சுத்தம் செய்வது என பல சேவைகளை மற்ற ஆசிரியர்களோடு இணைந்து செய்ய ஆரம்பித்தார். அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, தெரு தெருவாகப் போய் யாசகம் கேட்டு தனது சேவை மையங்களுக்கு நிதி திரட்டுவது வழக்கம். ஒரு நாள், ஒரு கடைக்கு முன் சென்று நின்று யாசகம் கேட்டுக் கொண்டு இருந்தார். அந்தக் கடைக்காரர் வெற்றிலை பாக்கு போட்டுக் கொண்டு பார்த்தும் பார்க்காதது போல் இருந்தார். கடைக்காரரிடம் இருந்து எதையாவது வாங்கிட வேண்டும் என்று உறுதியுடன் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தார். கடைக்காரர் தெரசாவை கோபமாக பார்த்து விட்டு ‘”தெரசா நீட்டிய கையில் எச்சிலைத் துப்பினார்”. அப்போது சற்றும் மனம் தளராமல் “மிக்க நன்றி! நீங்கள் கொடுத்தது எனக்கு, என் விடுதியில் இருக்கும் அனாதை குழந்தைகளுக்கு ஏதாவது கொடுங்கள் என்று கேட்டார்” அந்தக் கடைக்காரர் “இப்படி ஒரு சகிப்புத்தன்மை உடைய பெண்ணை இப்பொழுதுதான் முதன் முறையாக பார்க்கிறேன்” என்று கூறி விட்டு நொடிப் பொழுதில் கல்லாப்பெட்டியில் இருந்த மொத்த பணத்தையும் எடுத்து அன்னை தெரசா நீட்டிய இரு கைகளிலும் வைத்து விட்டார்..

விளையாட்டு : பி.டி.உஷா

தங்க மங்கை,​​ பயொலி எக்ஸ்பிரஸ் என்ற புனைப் பெயர்களுக்குச் சொந்தக்காரர் இந்திய தடகள வீராங்கனை பி.டி.​ உஷா.​ நீண்ட இடைவெளிக்குப் பிறகு சர்வதேச அரங்கில் தடகளப் போட்டிகளில் இந்தியாவுக்கு பெருமைச் சேர்த்தவர். இவர் தான் பங்கேற்ற சர்வதேச போட்டிகள் மூலம் 101 பதக்கங்களை வென்றுள்ளார். 1983-89 வரையிலான காலத்தில் பல்வேறு போட்டிகள் மூலம் 13 தங்கப் பதக்கங்களை வென்றார். இந்திய அரசு அவரை கவுரவிக்கும் வகையில் அவருக்கு பத்மஸ்ரீ,​​ அர்ஜுனா விருதுகளை வழங்கியதுடன்,​​ ரயில்வே துறையில் அதிகாரி அளவிலான பதவியும் வழங்கி கவுரவித்தது.

நாட்டியம் : பத்மா சுப்ரமண்யம்

இந்திய பாரம்பரிய கலையான பரதநாட்டியத்தில் புகழ் பெற்றவர். நாட்டியம் கற்கும் எல்லோருக்கும் ஒரு ரோல் மாடலாக இருப்பவர். இவரின் பன்முகங்கள் நடன மங்கை, நடன ஆசிரியர், நட்டுவாங்கம் செய்பவர், பாடகி, கலை ஆராய்ச்சியாளர்,ஆசிரியர், எழுத்தாளர் மேலும் பல. இவர் வாங்கிய பட்டங்கள் : டாக்டர், பத்மபூஷன், பத்மஸ்ரீ, சங்கீத நாடக அககாடமி அவார்ட், கலைமாமனி, நாத பிரம்மம் மேலும் பல.


வணிகம் : சுதா நாராயணமூர்த்தி

இன்பாசிஸ் நாராயனமூர்த்தியின் மனைவி தான் சுதாமூர்த்தி. இன்போசிஸ் பவுன்டேஷன் என்னும் அமைப்பை நடத்தி இந்தியாவின் கிராமப்புறங்களில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளைத் திறந்துள்ளார். எளிமையை இவரிடம் இருந்து தான் கற்க வேண்டும். தன்னம்பிக்கை கொடுக்கும் பல புத்தகங்கள் எழுதியுள்ளார். இவரைப் பற்றித் தெரியாதவர்கள் இந்த ஒளியோட்டங்களைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

வாழ்க்கையின் ஆதாரம் - பாகம் -1
வாழ்க்கையின் ஆதாரம் - பாகம் -2

இந்த பதிவை தொடர நான் அழைப்பது :-

கீதப்பிரியன் - கார்த்திக்கேயன்.
ஹாலிவுட் பாலா
அரசூரான்
நாஞ்சில் எக்ஸ்பிரஸ்
ப்ரியமுடன் வசந்த்
வாசகன் - பெருமாள்
Tamil Film Critic

Monday, February 22, 2010

Pay It Forward(2000) - விமர்சனம்நான் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் காலங்களில் வீட்டிற்கு சில போஸ்ட் கார்டுகள் வரும். அதில் ஏதாவது கடவுளின் மகிமை பற்றி எழுதி யாரோ அனுப்பியிருப்பார்கள். மேலும் அது போல் சில பேருக்கு(5 முதல் 10 வரை) தபால் அனுப்பவேண்டும் என்றும், இல்லையென்றால் உயிருக்கு ஆபத்து என்றும் அப்படி தபால் அனுப்பினால் வாழ்க்கையில் நன்மைகள் நடக்கும் என்றும் எழுதியிருக்கும்(டைப் செய்யப்பட்டிருக்கும்). அந்த கடிதத்தைப் பார்த்து பயந்தது உண்டு. நான் வேலைக்கு சேர்ந்த புதிதில் நிறைய ஃபார்வேட் மெயில்கள் வரும். அதிலும் இது போன்று இந்த மெயிலை 5 பேருக்கு அனுப்பினால் இந்த நன்மையென்றும், 10 பேருக்கு அனுப்பினால் அந்த நன்மையென்றும் கடைசியில் எழுதியிருப்பார்கள். அந்த மெயிலின் ஆரம்பத்தைப் பார்த்தால் 100 பேரின் மெயிலுக்கு சென்று கடைசியாக நம்மிடம் ஃபார்வேர்டாகி வந்திருக்கும். இன்றும் அதுபோல் சில மெயில்கள் வந்துகொண்டு தான் இருக்கிறது. இதற்கு ”செயின் ரியாக்‌ஷன்”(சங்கிலித் தொடர்) என்று ஆங்கிலத்தில் அர்த்தம். எங்கோ ஒருவர் தொடங்கிய இந்த தபால் அல்லது மெயில் பலபேரைச் சென்றடைகிறது. அதை நமக்கு நல்லது நடக்கும் என்றும், அனுப்பாவிட்டால் ஏதோ தீமைகள் நமக்காகவே காத்திருப்பது போலவும், ஒரு பிரமையை உண்டு பண்ணிவிடுவது தான் இதன் நோக்கம்.

இந்த செயின் ரியாக்‌ஷனில் பலவகை உண்டு. நான் அமெரிக்க அனுபவத்தில் எழுதியது போல் மல்ட்டிலெவெல் மார்க்கெட்டிங் கூட ஒருவகை செயின் ரியாக்‌ஷன் தான். இந்த வகையில் அடுத்தவர்கள் நிர்பந்திக்கப் படுகிறார்கள். ஒருவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் போது அறியவகை ரத்தம் தேவைப் படுகிறது என்றும், குழந்தையின் அறுவை சிகிச்சைக்காக பணம் தேவைப் படுகிறது என்றோ உதவி கேட்டு இது போன்ற செயின் மெயில்கள் வரும். உதவ வேண்டும் என்று நினைப்பவர்கள் உதவுவார்கள் இல்லையேல் உதவும் உள்ளம் கொண்டவர்களுக்கு ஃபார்வேர்ட் செய்துவிடுவார்கள். இது போன்ற உதவி செயின் ரியாக்‌ஷனில் மட்டுமே முடியும். ஒரு மணி நேரத்தில் பல நூறுபேரைச் சென்றடையச் செய்து பயன்பட வைக்கிறது. இது ஒருவகை. ஏன் சிக்கன்குன்யா, H1N1 கூட ஒருவகை செயின் ரியாக்‌ஷன் தான். நாம் இந்த விமர்சனத்தில் பார்க்கப் போகும் படத்திலும் ஒரு செயின் ரியாக்‌ஷன் இருக்கிறது. அதற்காகத்தான் இவ்வளவு முன்னோட்டம்.

கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் வாழ்க்கையில் ஒரு கஷ்டமான சூழ்நிலையில் அல்லது ஒரு பிரச்சனையில் இருக்கிறீர்கள். உங்களுக்கு தெரிந்தவர் ஒருவர் உங்கள் பிரச்சனையில் இருந்து காப்பாற்றுகிறார். அதற்காக அவருக்கு நீங்கள் நன்றிக் கடன் பட்டிருக்கிறீர்கள்(Pay Back). அவர் உங்களிடம் கேட்பதெல்லாம் இதே போல் உண்மையிலே கஷ்டப்படும் மூன்று நபர்களுக்கு எந்த நிபந்தனையும் இல்லாமல் உதவ வேண்டும் (Pay it Forward) என்பது தான். நீங்கள் உதவுவீர்களா?

கதையின் தொடக்கத்திலே குற்றவாளியைப் பிடிக்க அவசரமாக போகும் காவல்துறையினர், தெரியாமல் ஒரு பத்திரிக்கை நிருபரின் காரை இடித்துவிட்டுச் சென்றுவிடுகின்றனர். காரை எடுக்க முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது, அந்த வழியாக வரும் ஒருவர் தன்னுடைய காரை(ஜாக்குவார் கார்) எடுத்துச் செல்லுமாறு கூறுகிறார். அவனுக்கு ஒரே ஆச்சர்யம். எதை நம்பி எனக்கு கார் தருகிறீர்கள் என்று கேட்கிறான்.அதற்கு அவர், நீ செய்யவேண்டியதெல்லாம் மூன்று பேருக்கு உதவி செய், என்று தன்னுடைய விசிட்டிங் கார்டைக் கொடுத்துவிட்டுச் சென்று விடுகிறார். அவர் இப்படி முன்பின் தெரியாத ஒருவருக்கு உதவ வேண்டும் என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும் என்று, மறுநாள் அவரைத் தேடிப் போகிறான். அவர் இதே போல் எனக்கு ஒரு ஆப்ரிக்கஅமெரிக்கன் உதவி செய்தான் என்றும், அவன் இப்பொழுது ஜெயிலில் இருப்பதாகவும், அவன் தான் தன்னுடைய மகளை உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் பொழுது காப்பாற்றி, என்னை இது போல் மூன்று பேருக்கு உதவுமாறும் கூறினான், என்று கூறுகிறார். அதனால் தான் நான் உனக்கு உதவி செய்தேன் என்று சொல்கிறார்.அவன் ஆப்ரிக்க அமெரிக்கனை தேடி ஜெயிலுகுச் செல்கிறான். இப்படி அவன் ரிஷிமூலத்தைத் தேடுகிறான். கடைசியில் இந்த எண்ணத்தை விதைத்தது ஒரு சிறுவன் என்று தெரியவருகிறது.அவன் தான் ட்ரவர்.(Haley Joel Osment of "The Sixth Sense").

பள்ளியின் முதலாம் நாள், வகுப்பாசிரியர்(Kevin Spacey of "American Beauty") ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடம் உலகத்தையும், சமூகத்தையும் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கிறார். உலகத்திற்கும் உங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன என்று கேட்கிறார். யாரிடமும் பதில் இல்லை. நீங்கள் வளர்ந்த பிறகு இந்த உலகத்தைப் பற்றி தெரியாமல் இருந்தால் உங்களை அது விரக்தியில் கொண்டுபோய் விட்டுவிடும். அதனால் சமூகத்தை மாற்ற சிந்தனை செய்யுங்கள். அந்த சிந்தனை தான் இந்த வருடம் கொடுக்கும் அசைன்மெண்ட்(Think of an Idea to change our world and Put it into action) என்று கூறுகிறார். அவர் கொடுக்கும் அந்த அசைன்மெண்ட் ட்ரவர் மனதில் ஒரு சிந்தனையை தூண்டிவிடுகிறது. காட்சியின் முன்னோட்டம் கீழே.
ட்ரவர் வீட்டிலிருந்து பள்ளிக்கு தன்னுடைய சைக்கிளில் தான் செல்வான்.அவன் போகும் வழியில் வீடில்லாதோர்,உணவில்லாதோரை தினமும் பார்ப்பான்.அவனுக்கு இவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் எப்பொழுதும் உண்டு. அந்த அசைன்மெண்டைக் கேட்டதும் அவனுக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. மறுநாள் தன்னுடைய வகுப்பில் யோசனையை சொல்கிறான். அந்த யோசனையின் பெயர் தான் Pay it Forward. தான் மூன்று பேருக்கு உதவப் போவதாகவும்,அவர்களை அவன் தேர்வு செய்துவிட்டதாகவும் சொல்கிறான்.அவனுடைய யோசனை எல்லோருக்கும் பிடித்துப் போக,அதையே எல்லோரையும் செய்யச் சொல்கிறார் வகுப்பாசிரியர். ட்ரவரின் அம்மாவிற்கு(Helen Hunt) இரண்டு வேலை. இரவில் ஒரு ஸ்ட்ரிப்பராக வேலை செய்கிறார்.பகலில் ஒரு கேசினோவில் செக்யூரிட்டி வேலை. ஆதனால் வீட்டில் பெரும்பாலும் இருக்கமாட்டார். வீட்டில் இருந்தாலும் குடிப்பதால் அவனுக்கும் அவன் அம்மாவிற்கும் அடிக்கடி சண்டை வருவதுண்டு.

முதலில் வீடில்லாத ஒருவனை(James Caviezel) வீட்டிற்கு கூட்டிவந்து உணவு கொடுக்கிறான். வீட்டில் உள்ள கராஜில் அம்மாவிற்கு தெரியாமல் தங்க வைக்கிறான். ஒருநாள் அவன் அம்மா தூங்கி கொண்டிருக்கும் பொழுது கராஜில் எதோ சத்தம் கேட்க, திருடன் என்று துப்பாக்கியுடன் சென்று பார்க்கிறாள். அங்கே ட்ரவர் தங்கவைத்த நபர் காரின் அடியில் வேலை செய்து கொண்டிருக்கிறான். அவன் தான் திருட வரவில்லை எனவும், ட்ரவருக்கு அசைன்மெண்டில் உதவ வந்திருப்பதாகவும் சொல்ல, தன்னுடைய மகனின் யோசனையை அவனிடம் கேட்டுத் தெரிந்து கொள்கிறாள். அவன் பல வருடங்களாக ஓடாமல் இருந்த காரை சரி பண்ணிவிட்டதாகவும், இன்னும் இரண்டு பேருக்கு உதவ வேண்டும் எனவும் சொல்லிவிட்டு சென்றுவிடுகிறான். அவன் அம்மாவிற்கு ட்ரவர் மேல் மதிப்பு வருகிறது.
இரண்டாவதாக, தன்னுடைய வகுப்பாசிரியரையும், அம்மாவையும் சந்திக்கவைத்து அவர்களுக்குள் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தி திருமணம் செய்து கொள்ளவைக்க முயற்சி செய்கிறான்(இது அமெரிக்காவில் மட்டுமே சாத்தியம்). வகுப்பாசிரியரோ முதலில் ஏற்க மறுக்கிறார். அவன் அம்மாவிற்கும் ஏது செய்வதென்று தெரியாமல் தவிக்கிறார். டேடிங் எல்லாம் செல்கிறார்கள். எப்படி, எந்த சூழ்நிலையில் சேர்ந்தார்கள் என்பதை டிவீடி பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

மூன்றாவதாக, தன்னுடைய தோழன் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனையிலிருந்து அவனை விடுவிப்பது. தன்னுடைய தோழன் மெக்ஸிகன் மாணவர்களால் அடிக்கடி துன்புறுத்தப்படுகிறான். தடுக்க வந்த ட்ரவரை மிரட்டுகிறார்கள். அதனால் தோழனை அதிலிருந்து விடுவித்து உதவி செய்ய நினைக்கிறான்.

அந்த பத்திரிக்கை நிருபர் கடைசியில் Pay it Forward யோசனையைக் கண்டுபிடித்த ட்ரவரை சந்திக்கிறான். அவனிடம் தொலைக் காட்சிக்காக ஒரு பிரத்யேகப் பேட்டி எடுக்கிறான். அந்த பேட்டியில் எந்தெந்த ஆசைகள் நிறைவேறியது என்பதை விவரிக்கிறான். அந்த பேட்டி முடிந்தததும் வெளியே வரும் பொழுது தன் நண்பன் அதே மெக்ஸிகன் மாணவர்களால் தாக்கப் படுகிறான். இந்த தடவை ட்ரவர் துணிச்சலுடன் சென்று தன் நண்பனைக் காப்பாறப் போகிறான். அதற்குள் ஒரு மெக்ஸிகன் தன் கையிலிருந்த கத்தியால் ட்ரவரைக் குத்திவிடுகிறான். ட்ரவர் இறந்து விடுகிறான். அன்று இரவு ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட மக்கள் கையில் மெழுகுவர்த்தியுடன் ட்ரவரின் வீட்டு முன்னால் அஞ்சலி செலுத்தும் பொழுதுதான் ட்ரவரின் Pay it Forward மக்களை எப்படிச் சென்றடைந்திருக்கிறது என்பதை அவனுடைய அம்மா கண்ணீருடன் மகனை நினைத்துப் பார்க்கிறாள்.Wednesday, February 3, 2010

கீதையும் பேக்கர் வான்ஸும் :விமர்சனம்

தி லெஜண்ட் ஆஃப் பேக்கர் வான்ஸ்உலகத்தில் உள்ள எல்லாக் கதைகளுமே நம்முடைய இதிகாசங்களான ராமாயணம், மகாபாரத்தில் அடங்கிவிடும் என்று எதிலோ படித்த ஞாபகம்.பகவத் கீதையில், அர்ஜுனனுக்கு கண்ணன் சாரதியாக இருந்து போருக்கு வழிநடத்தினான். வித்தை தெரிந்த ஒருவனுக்கு போரில் தக்க சமயத்தில் உபதேசம் செய்து வியூகங்களைச் சொல்லிக் கொடுத்தான். அதனால் தான் அர்ஜுனனால் வெல்ல முடிந்தது. உபதேசம் என்பது நாம் முடிவெடுக்க தடுமாறும் நேரத்தில், குழப்பமாக சோர்வுற்று இருக்கும் நேரத்தில் நமக்குத் தேவைப் படுகிறது. நமக்கும் வாழ்க்கையில் யாராவது வழிநடத்திச் சென்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்?. நமக்கு வாழ்க்கையில் அப்படி யாரும் கிடைப்பதில்லை. குடும்பத்தில் இருப்பவர்கள், புத்தகங்களும், நண்பர்களும், சூழ்நிலையும் தான் நமக்கு வழிகாட்டிகள். வாழ்க்கைக்கே இப்படியென்றால் விளையாட்டில் ஊக்கப் படுத்துவதற்கு கண்டிப்பாக வழிகாட்டி அதாவது பயிற்சியாளரின் பங்கு மிக மிக முக்கியம். ஏனென்றால் விளையாட்டு தனி மனிதன், தெரு ,ஊர், நாடு கவுரவம்(Prestige) சம்பத்தப்பட்டது. தோல்வியென்பதை யார் தான் விரும்புவார்கள்?. இந்த படத்தில் கோல்ஃப் பேக்கை தூக்கும் கேடி(Caddy) ஒரு சாரதியாக வருகிறான். சரி பீடிகை போதும். விஷயத்திற்கு வருவோம்.

நல்ல படங்கள் சில காரணங்களினால் தோற்பதுண்டு. தமிழ் படங்களில் இதற்கு உதாரணம் பல உண்டு. ’இருவர்’ படம் எல்லோராலும் இன்றும் ரசிக்கும் படம். எம்.ஜி.ஆர், கருணாநிதி நட்பை இதை விட அழகாகவும், ஆழமாகவும் அதே சமயம் நாசூக்காவும் எப்படி சொல்லமுடியும். ஆனால் அந்த படம் வேண்டும் என்றே தோற்கடிக்கப் பட்டப் படம். குணாவும் அதே போல தான். ஹாலிவுட்டிலும் சில நல்ல படங்கள் கண்டு கொள்ளப் படாமலே வந்ததும் தெரியாமல், போனதும் தெரியாமல் சென்று விடும். அப்படி பட்ட படங்களில் ஒன்று தான் இந்த “தி லெஜண்ட் ஆஃப் பேக்கர் வான்ஸ்”. இந்த படத்தை அமெரிக்கத் தொலைக் காட்சியில் சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. இந்த படத்தின் சிறப்பு என்னவென்றால் இன்று ஹாலிவுட்டில் சூப்பர் ஸ்டார்களாய் இருக்கும் வில்-ஸ்மித்தும், மேட்-டேமனும் நடித்திருக்கிறார்கள். ஸ்டார்(கள்) வேல்யூ உள்ள படம். கதை மிக நேர்த்தியாக சொல்லப் பட்டிருக்கிறது. இருந்தும் ஏனோ இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் இடம் பெறவில்லை. பாக்ஸ் ஆபிஸில் தான் இடம் பெறவில்லையே படம் நன்றாக இருக்குமோ இல்லையோ என்று நினைக்க வேண்டாம். பாக்ஸ் ஆபிஸ் என்பது வசூலை வைத்து தான் முடிவெடுக்கப் படுகிறது.

இந்த படத்தின் விமர்சனத்திற்கு போவதற்கு முன்னால் கோல்ஃப்(Golf) பற்றி ஒரு சின்ன முன்னோட்டம். இந்த விளையாட்டைப் பற்றி எனக்கும் அவ்வளவாகத் தெரியாது. கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டது தான். நான் போன பதிவில் சொன்னது போல இப்பொழுதெல்லாம் இது பணக்காரர்கள் மட்டுமே விளையாடும் விளையாட்டல்ல. வீடியோ கேம்ஸ் மூலம் நம் வீட்டிற்கே வந்துவிட்டது. கோல்ஃப் பற்றி தமிழில் சுருக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.

இந்தக் கதை, ஹார்டி க்ரீவ்ஸ்(ஜேக் லெம்மான்) அவனது ஊர் சவான்னா(Savannah)-ஜார்ஜியாவில் சிறுவயதில் பார்த்த சம்பவத்தை அவனுடைய வயதான காலத்தில் நினைத்துப் பார்த்துச் சொல்வது போல் எடுக்கப் பட்டிருக்கிறது. சவான்னாவின் பணக்காரர்களில் ஒருவர், ஒரு கோல்ஃப் விளையாட்டு மைதானம் கட்டுகிறார். அந்த நேரம் இரண்டாம் உலகப் போர் நடக்கிறது. அதனால் அவருடைய ஹோட்டலுக்கும், விளையாட்டு மைதானத்திற்கும் யாரும் வராததால் பெரும் நஷ்டம் ஏற்பட்டு தற்கொலை பண்ணிக் கொள்கிறார். கடன் கொடுத்தவர்கள் அவருடைய மகள் ஆடேலிடம்( சார்லைஸ் தியோரன்) அந்த விளையாட்டு மைதானத்தை விலை பேச, அடேலோ தானே அதை நடத்தப் போவதாகவும் கடனை கோல்ஃப் விளையாட்டுப் போட்டி ஒன்றை வைத்து அதில் வரும் தொகையை அவர்களுக்கு திருப்பிக் கொடுப்பதாகவும் சொல்கிறாள். அந்த போட்டியில் ஜெயித்தால் 10,000 டாலர்கள் தருவதாகவும் அறிவிக்கிறாள். போட்டிக்கு இரண்டு பெரிய வீரர்களை அவள் தேர்ந்தெடுக்கிறாள். முதலாவதாக பாபி-ஜோன்ஸ்(ஜோயல் - க்ரெட்ஷ்), அடுத்ததாக வால்ட்டர் ஹேகன் (ப்ரூஸ்-மெக்கில்). இருவரும் அமெரிக்காவில் பல முறை சாம்பியன் கோல்ஃப் விளையாட்டில் பட்டங்கள் வாங்கியவர்கள். சவான்னா மக்களோ அந்த ஊர் சார்பாக இன்னொருவரை விளையாட அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள். அதில் யாரை விளையாட வைப்பது என்பதில் பலத்த குழப்பதிற்கு பிறகு ருனால்ஃப் ஜுனுவை(மேட்-டேமன்) தேர்ந்தெடுக்கிறார்கள்.

ஜுனு அடேலின் முன்னாள் காதலன். ஜுனு அவனது 16வது வயதிலே சவான்னா சார்பாக பல போட்டிகளில் விளையாடில் கோல்ஃபில் சாம்பியன் பட்டம் பெற்றவன். இரண்டாம் உலகப் போருக்காக அவனுக்கு ராணுவத்திலிருந்து அழைப்பு வந்து அவனும் ஐரோப்பாவிற்கு எதிராக போரிட சென்றான். சென்ற இடத்தில் அவனுடன் சென்ற அத்தனை வீரர்களும் இறந்துவிட அவன் மட்டும் தப்பிவிடுகிறான். தான் தோற்றுப் போனதால் சொந்த ஊருக்குச் செல்லாமல் பல வருடம் தலைமறைவாக இருந்துவிட்டு சவான்னாவிற்கு வருகிறான். அடேலும் ஜுனுவுக்காக பல வருடம் காத்திருந்து விட்டு அவனை மறந்துவிட்டாள்.அவன் கோல்ஃபை மறந்து மது அருந்துவதிலும், சீட்டாட்டத்திலும் அவனது வாழ்நாளைக் கழிக்கிறான்.சவான்னாவின் பெரியவர்கள் ஜுனுவிடம் ஊர் சார்பாக அந்த போட்டியில் கலந்துக் கொள்ள வற்புறுத்துகிறார்கள். அவன் முதலில் மறுத்துவிடுகிறான். அடேலும் அவள் சார்பாக வந்து போட்டியில் கலந்து கொள்ள கெஞ்சுகிறாள். பலரின் வற்புறுத்தல் காரணமாக விளையாடிப் பார்க்கலாமா என்ற ஆசை அவனுள் எழுகிறது. தானே மறந்த ஒரு விஷயத்தை, இன்றும் ஞாபகம் வைத்து, தன் மேல் நம்பிக்கை வைத்து எல்லோரும் கேட்கும் போது விளையாடலாம் என்று முடிவு பண்ணுகிறான். அன்றிரவே அவனது கோல்ஃப் கம்பிகளை(Clubs) எடுத்து தன்னிடம் பழைய திறமை இருக்கிறதா என்று சோதனை செய்கிறான். அந்த நேரம் எங்கிருந்தோ பேக்கர் வான்ஸ்(வில்-ஸ்மித்) வருகிறான். தான் அவனுக்கு கேடி(Caddy) வேலைப் பார்ப்பதற்கு தயாராக இருப்பதாகவும்,அவனுக்கு ஒரு நாளைக்கு 5டாலர் சம்பளம் பொதும் என்றும் ஜுனுவிடம் கேட்கிறான். ஜுனு தான் எப்படி விளையாடப் போகிறேனோ என்று நம்பிக்கை இல்லாமல், தான் தோற்றால் தன்னால் எதுவும் கொடுக்க முடியாது என்றும் நம்பிக்கை இல்லாமல் சொல்கிறான். அதற்கு வான்ஸ் நீங்கள் உங்களுக்கான வீச்சை(Swing) மறந்து விட்டீர்கள் அதை தேடிக் கண்டு பிடித்துவிட்டால் நீங்கள் ஜெயித்துவிடலாம் என்று நம்பிக்கை கொடுக்கிறான். மறுநாள் போட்டி தொடங்குகிறது.

Vance: I hear you lost your swing. I guess we got to go find it.
Junuh: What'd you say?...
Vance: Well you lost your swing... We got to go find it... Now it's somewhere... in the harmony... of all that is... All that was... All that will be...

முதல் நாள் ஆட்டம். போட்டியைக் காண மக்கள் பல்வேறு இடங்களில் இருந்து வந்து அடேலின் ஹோட்டலில் நாட்கணக்கில் தங்குகிறார்கள். இரு ஜாம்பவான்களும்(பாபி, வால்ட்டர்), ஜுனுவும் களத்தில் இறங்குகிறார்கள். போட்டி மூன்று நாட்கள் நடக்கிறது. போட்டியின் விதி முறைகள் மூவருக்கும் விளக்கப் படுகிறது. முதல் ரவுண்டில் ஜுனு மனம் போன போக்கில் பந்தை விளாசுகிறான். பந்து அங்கும், இங்கும் சென்று மணலில் புதைந்து, எடுக்க முடியாமல் தவித்து தன் மேலிருந்த கொஞ்ச நம்பிக்கையும் இழக்கிறான். பாபியும், வால்டரும் மிக நேர்த்தியாகவும், லாவகமாகவும் அடித்து சமமாக முன்னோக்கிப் போகிறார்கள். முதல் ரவுண்டின் முடிவில் மிகவும் பின் தங்கிய நிலையில் ஜுனு இருக்கிறான். அப்பொழுது தான் வான்ஸ் எந்தெந்த இடத்தில், எப்படியெல்லாம் ஜுனு தவறு செய்தான் என்பதை அவனுக்குச் சொல்கிறான். முதலில் ஏற்க மறுக்கும் ஜுனு பின்னால் தன் தவறை ஏற்றுக் கொள்கிறான். அன்றிரவு வான்ஸ் கூறும் அறிவுரை ஒன்றே ஒன்று தான்.

Vance: Yeah, I always felt a man's grip on his club just like a man's grip on his world...

இரண்டாம் நாள் ஆட்டம்.முதலில் வால்ட்டர் விளையாடுகிறார். அப்பொழுது ஜுனு வான்ஸிடம் இவ்வளவு தொலைவில் இருக்கும் டார்க்கெட்டை எப்படி அடைவது என்று கேட்கிறான். உடனே, அவன் இப்பொழுது பாபியைக் கவனி, அவன் பந்தை மைதானத்தில் வைத்துவிட்டு, டார்க்கெட்டை எப்படி எதிர் நோக்குகிறான் என்று கவனி. இப்பொழுது அவனது பார்வையில் டார்கெட்டைத் தவிர எதுவும் இல்லை. அவனது கையிலிருக்கும் ஸ்டிக்கினால் அவன் சில முறை ஒத்திகைப் பார்க்கிறான்.அதில் அவனது ஸ்விங்கைத் தேர்ந்தெடுத்து விட்டான். அது தான் அவனது தனிவீச்சு(Authentic Swing). அவன் தேர்ந்தெடுத்த ஸ்விங்கை இப்பொழுது உபயோகித்து டார்க்கெட்டை அடைய முயற்சி செய்வான் என்று கூறுகிறான். அவன் சொன்னது போலவே பாபி செய்கிறான். அதே முறையை ஜுனுவை உபயோகிக்க சொல்கிறான் வான்ஸ். இப்பொழுது ஜுனு கண்ணில் டார்கெட்டைத் தவிர வேறெதுவும் இல்லை(அர்ஜுனனுக்கு மரத்தின் மேலிருந்த கிளியைப் போல). இதன் ஆங்கில உரையாடலும்,ஒளியோட்டமும் பதிவின் கீழே இருக்கிறது.
மூன்றாம் நாள் ஆட்டம். சவான்னா மக்களுக்கு ஜுனு விளையாட்டின் மீது நம்பிக்கை பிறக்கிறது. வால்டருக்கும், பாபிக்கும் லேசாக பயம் தொற்றிக் கொள்கிறது. இடைவேளையின் போது வால்ட்டர் ஜுனுவிடம் பேரம் பேசுகிறார். தன்னை ஜெயிக்கவிட்டால் பரிசுத் தொகையில் 20% தரத் தயாராக இருப்பதாக கூறுகிறார். அதற்கு ஜுனு மறுத்து விடுகிறான். கொஞ்சம் நம்பிக்கை வந்தாலும் மனதில் போரில் தோற்ற நினைவுகள் வந்து அவனை சஞ்சலம் அடையச் செய்கிறது. மறுபடியும் வான்ஸ் அவனுக்கு உண்மை நிலையை எடுத்துச் சொல்கிறான். விளையாட்டில் ஈடுபட்டால் ஒரே மனதுடன் விளையாடும் படியாகவும், மனதில் ஜெயிப்பதில் மட்டுமே குறியாக இருக்கவேண்டும் என்றும், ஒவ்வொரு கட்டத்திலும் அவனது தனிவீச்சைப்(Authentic Swing)பயன்படுத்துமாறு வேண்டுகிறான். இதன் ஆங்கில உரையாடலும், ஒளியோட்டமும் பதிவின் கீழே இருக்கிறது.

நான்காம் நாள் ஆட்டம்: பாபி தான் விளையாடும் கடைசி விளையாட்டு என்றும், இதற்கு பிறகு வியாபாரத்தையும், குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு இருக்கப் போவதாகவும் ஜுனுவிடம் ட்ரெஸ்ஸிங் அரையில் தன் மேல் இரக்கம் கொள்ளவேண்டும் என்பதற்காக சொல்கிறான். அதற்கு ஜுனு விளையாட்டு என்று வந்த பிறகு இதெல்லாம் தான் பார்ப்பதில்லை என்று பதில் கூறுகிறான். கடைசியில் வான்ஸின் வியூகங்களை ஜுனு பிடிவாதமாக புறக்கணித்ததால், வான்ஸ் கேடி பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறான். ஜுனு போட்டியில் வென்றானா? அடேலின் காதலை ஏற்றுக் கொண்டானா? போட்டியின் முடிவில் அவனுக்கு என்ன சிக்கல் வந்தது? என்பதை டிவீடி பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

உரையாடல்களும், ஒளியோட்டங்களும்

Bagger Vance: Put your eyes on Bobby Jones... Look at his practice swing, almost like he's searchin for something... Then he finds it... Watch how he settle himself right into the middle of it, feel that focus... He got a lot of shots he could choose from... Duffs and tops and skulls, there's only ONE shot that's in perfect harmony with the field... One shot that's his, authentic shot, and that shot is gonna choose him... There's a perfect shot out there tryin' to find each and every one of us... All we got to do is get ourselves out of its way, to let it choose us... Can't see that flag as some dragon you got to slay... You got to look with soft eyes... See the place where the tides and the seasons and the turnin' of the Earth, all come together... where everything that is, becomes one... You got to seek that place with your soul Junuh... Seek it with your hands don't think about it... Feel it... Your hands is wiser than your head ever gonna be... Now I can't take you there Junuh... Just hopes I can help you find a way... Just you... that ball... that flag... and all you are...


Bagger Vance: You got a choice... You can stop... Or you can start...
Rannulph Junuh: Start?
Rannulph Junuh: Where?
Bagger Vance: Right back to wehre you always been... and then stand there... Still... real still... And remember...
Rannulph Junuh: It's too long ago...
Bagger Vance: Oh no sir it was just a moment ago... Time for you to come on out the shadows Junuh... Time for you to choose...
Rannulph Junuh: I can't...
Bagger Vance: Yes you can... but you ain't alone... I"m right here with ya... I've been here all along... Now play the game... Your game... The one that only you was meant to play... Then one that was given to you when you come into this world... You ready?... Stike that ball Junuh don't hold nothin back give it everything... Now's the time... Let yourself remember... Remember YOUR swing... That's right Junuh, settle yourself... Let's go... Now is the time, Junuh...


Vance: Yep... Inside each and every one of us is one true authentic swing... Somethin' we was born with... Somethin' that's ours and ours alone... Somethin' that can't be taught to ya or learned... Somethin' that got to be remembered... Over time the world can, rob us of that swing... It get buried inside us under all our wouldas and couldas and shouldas... Some folk even forget what their swing was like...

Vance: Yeah the rythm of the game just like the rythm of life...

Monday, January 25, 2010

குழந்தைகளும் வீடியோ கேம்ஸும்


இன்று வெளியில் விளையாடும் விளையாட்டுக்கள் எல்லாம் வீட்டிற்குள் வந்து விட்டது. குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன் விளையாடினால் கெட்ட பழக்கங்களைக் கற்றுக்கொண்டு விடுவார்கள் என்று விளையாடக் கூட பெற்றோர்கள் அனுமதிப்பதில்லை. அதனால் குழந்தைகளுக்குள் கூடி விளையாடுவது, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து விளையாடுவது எல்லாம் குறைந்து விட்டது. கிராமங்களில் மட்டும் வளரும் குழந்தைகளிடம் கூடி விளையாடும் பழக்கம் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. தெருக்களில் விளையாடும் கோலி, பம்பரம், கில்லி எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வழக்கொழிந்து கொண்டிருக்கிறது. இந்த மூன்று விளையாட்டையும் கிரிக்கெட் ஆக்கிரமித்துக் கொண்டது. அதுவும் வாரத்தில் என்றோ ஒரு நாள். சமீபத்தில் வீடியோ கேம்ஸ் எனப்படும் எக்ஸ்-பாக்ஸ்(XBOX 360), வீ(Wii) மற்றும் பிஎஸ்த்ரீ(PS3) என்று பெரியர்வர்கள்(Adults) விளையாடும் வீடியோ கேமும், வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு பிஎஸ்-நிண்டெண்டோ(PS Nintendo) எனப்படும் கையடக்க வீடியோ கேமும் தான் விளையாட்டு உலகமாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். 7லிருந்து 12 வயது வரையுள்ள குழந்தைகள் இந்த கையடக்க வீடியோ கேமில் விளையாடும் பொழுது இந்த உலகத்தையே மறந்து விடுகிறார்கள். குடும்பதில் இருப்பவர்களிடமோ, அடுத்தவர்களிடமோ பேசுவதை வெகுவாகக் குறைத்துக் கொள்கிறார்கள் என்பதை சில ஆய்வுகள் சொல்கிறது. தனிமை விரும்பிகளாக அவர்கள் மாறிப் போவது காலத்தின் கோலமென்று சொல்லாமல் வேறென்ன சொல்வது.

போன வருடம் ஒரு நண்பர் வீட்டிற்குச் சென்றிருந்த போது, அவர் புதிதாக வீ (Wii)வாங்கியிருந்தார், நான் அப்பொழுது தான் முதன் முதலில் வீ யைப் பார்க்கிறேன். அவரிடம் அதைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தேன். அவர் அதை டீவியில் எப்படி இணைத்துக் கொள்வது, அதில் என்னவெல்லாம் விளையாடலாம் என்று விவரித்துக் கொண்டிருந்தார். என் மகள் இதெல்லாம் ரெம்ப பழசு, நான் இதை பலமுறை நண்பர்கள் வீட்டில் விளையாடியிருக்கிறேன் என்று அதிலுள்ள அத்தனை விளையாட்டுக்களையும் விலாவாரியாக எங்களுக்குச் சொன்னாள். நாங்கள் இருவரும் மலைத்துப் போய் கேட்டுக்கொண்டிருந்தோம். அதோடு மட்டுமில்லாமல் அவர் கோல்ஃப்(Golf) எப்படி விளையாடுவது என்று எனக்கு சொல்லிக் கொடுத்தார். அவர் சொன்ன ஒரே அட்வைஸ் கோல்ஃப் என்பது ஒரு மைண்ட் கண்ட்ரோல் கேம். இதில் டெஸிஷன்(Decision) தான் முக்கியம். நானும் முயன்ற வரை முயற்சி செய்தேன். ஒன்று நான் அழுத்திய(Remote) வேகத்தில் மிகத் தொலைவில் பந்து விழுந்துவிடும் இல்லையேல் வேறு திசை நோக்கிச் சென்றுவிடும். நமக்குத்தான் மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டே ஒத்துவராதே. கடைசியில் என் மகள் கையில் ரிமோட் கண்ட்ரோல் சென்றது. நீங்கள் நம்ப மாட்டீர்கள். 5 நிமிடத்தில் 4 பார்களை(Par) முடித்துவிட்டு போர் அடிக்கிறது என்று கொடுத்து விட்டுச் சென்று விட்டாள். எந்த அளவுக்கு இந்த வீடியோ கேம்கள் குழந்தைகளை ஈர்க்கிறது என்பதை அப்பொழுது தான் தெரிந்துக் கொண்டேன்.

குழந்தைகளுக்கென்றே விதம் விதமாக யோசித்து விளையாட்டுகளைத் தயாரித்து வருகின்றன தகவல் தொழில் நுட்ப வீடியோ கேம் தயாரிப்பு நிறுவனங்கள்.அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வளர்ந்த நாடுகள் மட்டுமல்லாது வளர்ந்து வரும் நாடுகளிலும் இப்போது பல்வேறு வீடியோ கேம்கள், குழந்தைகளின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளன. இந்த வீடியோகேம்களில் உள்ள வன்முறைக் காட்சிகளால் குழந்தைகளிடத்தில் வன்முறை நடத்தை அதிகரிக்கிறது. விளையாட்டுகள் வெறும் பொழுதுபோக்கு என்பது தான் நம் மூளையில் உறைந்திருக்கிறது. அன்போ, நன்றியோ, ஈரமோ, வீரமோ எதுவாக இருந்தாலும் குழந்தைகள் தங்கள் விளையாட்டுகள் மூலமே கற்றுக்கொள்கிறார்கள். ஆடுவதற்குப் பெயர் தான் விளையாட்டு. நாமோ விளையாட்டைப் பார்க்கிற விஷயமாக மாற்றி விட்டோம். ஒரு சாகச நாயகன் பல்வேறு இடையூறுகளைக் கடந்து சென்று தனது இலக்கை எட்டவேண்டும் என்பதாக இருக்கும். இதில் அந்த நாயகன் நடுவில் பலரை வெட்டிச் சாய்த்து முன்னேறிச் செல்லவேண்டும். இந்த வெட்டிச் சாய்த்தல்தான் குழந்தைகளின் பிரதான கவன ஈர்ப்பை பெற்றுள்ளது. மேலும் மேலை நாடுகளில் குழந்தைகளின் படுக்கையறையே மல்டி மீடியா மையமாக மாறியுள்ளது என்று இந்த ஆய்வு கூறுகிறது. 12 வயது முதல் 15 வயது வரை உள்ள சிறுவர் சிறுமியர்களின் படுக்கையறையில் குறைந்தது 5- 6 மீடியா கருவிகளாவது உள்ளதாம்.
ஹாலிவுட்டில் வெளிவரும் ஒரு படம் ஹிட் ஆனால் அந்த படத்தின் டிவீடி வெளிவரும் பொழுது கூடவே அந்த படத்தின் கேரக்டரைக் கொண்டு வீடியோ கேமிற்கான டீவீடியும் வெளிவந்து விடும். வீடியோ லைப்ரரியில் பார்த்தால் அதற்கென்றே ஒரு செக்‌ஷன் தனியாக இருக்கும். அதில் எக்ஸ்-பாக்ஸில் விளையாடுவதற்கு தனி வீடியோ டிவீடியும், பிஎஸ்த்ரியில் விளையடுவதற்கு தனி டிவீடி வேறு. உலகெங்கும் அதிக ரசிகர்களை வைத்திருக்கும் 007 ஜேம்ஸ் பாண்ட், இப்போது வீடியோ மூலமாகவும் கலகலக்க வைத்துக் கொண்டிருக்கிறார். பியர்ஸ் பிராஸ்னன் உருவத்தை வைத்து இந்த வீடியோ கேம்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வகை வீடியோ கேம்ஸ் நிறைய வந்து விட்டது. ஒரிஜினல் பியர்ஸ் குரலுடன், படத்தில் இருப்பதைப் போன்ற ஆக்ஷன், அதிரடிக் காட்சிகளுக்கு இதில் பஞ்சமே இல்லையாம். படத்தில் கூட இடம் பெறாத பல அதிரடி வசனங்களும் இந்த வீடியோ கேம்ஸில் இடம் பெற்றுள்ளதாம். முழு நீளப் படத்தைப் பார்க்கும் அதே திரில், திருப்தி, தில் இந்த வீடியோவிலும் நீக்கமற நிறைந்துள்ளதால் ஹிட் ஆகியுள்ளது.

மேலும் சில ஆய்வுகள்

1. அமெரிக்காவின் இன்டியானா பல்கலைக் கழகத்தின் ஸ்கூல் ஆஃப் மெடிசன், வன்முறை நிறைந்த வீடியோ கேம்களை விளையாடும் குழந்தைகளின் மூளையை ஸ்கேன் செய்து ஆய்வுக்கு உட்படுத்தியது. ஆய்வுக் குழுவினர் இரண்டு விதமான வீடியோ விளையாட்டுகளை ஆய்விற்கு உட்படுத்தினார்கள். முதல் ஒன்று Need for Speed Underground என்பது. இதில் வேகம் இருக்கும். வன்முறை இருக்காது. அடுத்தது Medal of Honour Frontline . இது வன்முறை நிறைந்தது. ஆய்வுக் குழுவினர் 44 இளம் வயதுப் பிள்ளைகளை இரண்டு பிரிவுகளாகப் பிரித்து ஆய்வில் பயன்படுத்தினார்கள். விளையாடி முடித்ததுமே பிள்ளைகளின் மூளை ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. வன்முறை விளையாட்டை விளையாடிய பிள்ளைகளின் மூளை காட்டிய நெகட்டிவ் விளைவு, மற்றொரு விளையாட்டை விளையாடிய பிள்ளைகளிடம் இல்லை.

2. சமீபத்தில் கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ- 4 (ஜிஏடி- 4) என்ற வீடியோ கேமில் வரும் சாகச நாயகன் கிரிமினல் நிழலுலகத்தினர் பலரை வெட்டிச் சாய்த்து கொள்ளை அடித்துச் செல்வதாக அமைந்துள்ளது. இது 18+ என்ற தரச் சான்றிதழை பெற்றிருந்தாலும், இதில் வன்முறை கொஞ்சம் கூடுதலாகவே இருப்பதாக பெற்றோர்கள் உணர்கின்றனர்.

3. வீடியோ கேம் விளையாட்டில் பைத்தியமாக ஈடுபடுவது குழந்தைகள் மட்டும் தான் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு; அதிக பட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் கணிசமான பேர் வீடியோ கேம் பைத்தியமாகத்தான் உள்ளனர். அதனால் தான் ஒபிசிட்டி, சாப்பிடுவதில் பிரச்னை, தூங்குவதில் சிக்கல் எல்லாம்; ஆனால், குழந்தைகள் மட்டுமின்றி, 35 வயது வரை உள்ளவர்களும் இதற்கு அடிமையாக உள்ளனர். இவர்களுக்கு தான் அதிக உடல் கோளாறு வரும். பெரும்பாலோருக்கு டிப்ரஷன் ஏற்படும்' என்று அமெரிக்க ப்ரிவென்டிவ் மெடிசன் இதழில் கூறப்பட்டுள்ளது.

4. நியூயார்க்: அமெரிக்காவில், பள்ளியில் படிக்கும் மாணவிகள் கருத்தரிப்பு அதிகரிப்பதற்கு "டிவி' நிகழ்ச்சிகள் தான் காரணம்; அதுபோல, குழந்தைகளின் வன் முறை போக்குக்கு, கம்ப்யூட்டர், வீடியோ "கேம்'கள் தான் காரணம்!' அமெரிக்காவில் உள்ள "ரான்ட்' என்ற பிரபல மனிதவள ஆய்வு அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் இந்த திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

5. இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் மருத்துவரும், உளவியல் நிபுணருமான ஜீன் பெக்மேன் மேற்கொண்ட ஆய்வில் வெளியான புள்ளிவிபரங்கள்: சராசரியாக வாரத்திற்கு 28 மணி நேரம் என்ற புள்ளிவிபரத்தின் அடிப்படையில், வன்முறைகளைத் தொடர்ந்து காண்பதால் 8 வயதை நெருங்கி விடும்போது ஒரு சிறாரின் மனப்பக்குவம் ஒரு வாலிபரின் மனோநிலையை எட்டுகிறது. 12 வயதை நெருங்கும் வேளையில் ஒரு சிறுவன் / சிறுமி 8,000 கொலைகளை கண்களால் பார்த்து விடுகிறது. 18 வயதை நெருங்குகையில் இந்த எண்ணிக்கை 200,000 ஆக உயர்கிறது. ஒரு வருடத்தில் ஒரு சிறார் பார்க்கும் விளம்பரங்களில் 30 நொடி அளவுள்ள விளம்பரங்களின் எண்ணிக்கை மட்டும் 20,000.சிறார்கள் தொலைக்காட்சியில் பார்க்கும் வன்முறையும் குரோதங்களும் இயல்பான நிகழ்வை விட ஐந்து மடங்கு கொடூரமாக்கி காட்டப்படுகிறது.

இப்படிப் போனால் குழந்தைகளின்/சிறுவர்களின் எதிர்காலம் என்னாவது? உடல் வலுவிழந்து, மூளைத்திறன் குன்றி, சிந்திக்கும் ஆற்றல் இன்றி, செயலாற்றும் அனைத்து அபார ஆற்றல்களையும் இழந்து பரிதவிக்கும் நிலைக்கு படுவேகமாக அதல பாதாளத்திற்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். இதிலே அலட்சியம் காட்டும் பெற்றோர் எதிர்காலத்தில் ஒளிவீச வேண்டிய தமது ஆற்றல் மிக்க சந்ததிகளை இப்போதே கண்களைக் கட்டி இருட்டிலே விட்டு அவர்களின் வாழ்வைப் பாழாக்குகிறார்கள் என்பது தான் பொருள். உங்கள் குழந்தைகள் ஏற்கனவே இதற்கு பழக்கமாகியிருந்தால் உடனே நிறுத்தாமல் கொஞ்சம் கட்டுப்பாடுடன் விளையாட அனுமதியுங்கள். வீடியோ கேமைப் பார்க்கும் யாருக்கும் அதை விளையாடிப் பார்க்கவே தோன்றும். வீ-யில் உடற்பயிற்சிக்கென சில விளையாட்டுக்கள் உள்ளன. யோகாவும் உள்ளன. அதைப் போன்று உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரக் கூடிய விளையாட்டை அனுமதிக்கலாம். இதிலிருந்து விடுபட அவர்களுக்கு வேறு வகையான ஆர்வத்தை பெற்றோர்கள் தான் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

உங்களுக்காக ஒரு காணொளி.

Tuesday, January 12, 2010

பொங்கல் வாழ்த்துக்கள்

எல்லோருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்

மங்கல அணியும் பொட்டும்
மரகத மணிபோற் கண்ணும்
குங்கும நுதலும் தண்டைக்
குலுங்கிடும் காலும் மஞ்சள்
தங்கிய முகமும் வண்ணத்
தடம்பணைத் தோளும் கொண்ட
மங்கையர் கைபார்த் துண்ண
மலர்கவே பொங்கல் நன்னாள்.

பூச்சிறு மழலை மேனி
புத்துடை நகைகொண் டாட
ஆச்சியர் துணைவர் சேர
ஆனந்தத் தமிழ்ப்பண் பாட
பாற்சுவை வழங்குநன் னாள்
பழந்தமிழ் வளர்த்த பொன் னாள்
போற்சுவை நாளொன் றில்லை
.பொலிகவே இன்பப் பொங்கல்.

Sunday, January 10, 2010

அமெரிக்க அனுபவங்கள் 1 - விட்டில் பூச்சிகள்


இன்று அமெரிக்காவில் நம்பர் ஒன் லாபம் கொழிக்கும் பிஸினஸ் எதுவென்றால் அது டயட் ப்ரோக்கிராம்(Diet Program) தான். எங்கு பார்த்தாலும் டயட் உணவு வகைகள், ஸப்ளிமெண்ட்ஸ்(Supplements) உணவுகள், ஃபிட்னஸ் டூல்கள், டயடிற்க்கென்ற உள்ள எக்ஸர்சைசுகள். கோடிகளைக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள். கோக் மற்றும் பெப்ஸியில் கூட '0' காலோரிகள். அவசரமாக உடலைக் குறைத்துவிட வேண்டும் என்று பணத்தையும், நேரத்தையும் கணக்கில்லாமல் செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லா ஃபிட்னெஸ் சென்டர்களும் மாலை நேரங்களில் நிரம்பித்தான் வழிகிறது. அங்கும் குண்டாக இருப்பவர்களைக் குறி வைத்து சில ப்ரோகிராம்கள் நடத்தி பணம் சம்பாதிக்கிறார்கள். டீவியில் பாதி விளம்பரங்கள் டயட் ப்ரோகிராம் தான். நானும் முறைப்படி வெயிட்லிஃப்ட் கற்றுக் கொள்ளலாம் என்று ஒரு ஃபிட்னஸ் சென்டரில் சேர்ந்தேன். அங்கு கோச்சிங் கொடுப்பவருக்கு மாதம் இவ்வளவு என்று பேசப்பட்டது. வாரத்தில் ஒரு நாள் தான் கோச்சிங். அந்த ஒரு நாளில் ஒரு மணி நேரத்தில் அவர் சொல்லிக் கொடுக்கும் கோச்சிங்கில் அடுத்த ஐந்து நாட்களுக்கு எந்திரிக்க முடியாது. கடுமையான பசி வேற. ஒல்லியாக இருப்பவர்களுக்கு குண்டாகவும், குண்டாக இருப்பவர்கள் ஒல்லியாகவும் தனித்தனி ப்ரோகிராம்கள் வைத்திருக்கிறார்கள். ஆறு மாதம் ட்ரைனிங்கில் எனக்கு ஒரு இம்ப்ரூவ்மண்டும் தெரியவில்லை.. பழையபடி ட்ரட்மில், சைக்கிளிங், .. கார்டியோ ஐட்டங்கள் மட்டுமே இப்பொழுது..


இரண்டாவது சூப்பர் பிஸினஸ் எது என்று பார்த்தால், ஹேர் லாஸ் ட்ரீட்மெண்ட்(Hair Loss Treatment). என்னுடன் வேலை பார்க்கும் ஒருவர் 1200 டாலர்களை செலவழித்து தலையின் வழுக்கையை(பின்னால் ஒரு ஓளிவட்டம்) தனது கல்யாணத்திற்கு முன் சரிசெய்திட இயன்ற அளவு முயற்சி செய்தார். அவர்கள் குடும்பத்தில் எல்லோருக்கும் பரம்பரை வழுக்கை வேறு. அதில் சிறப்பு என்னவென்றால் அந்த ப்ரோகிராமில் குளிக்கும் முன் ஒரு க்ரீம் தலையில் தடவ வேண்டும், குளித்தப் பிறகு ஒரு க்ரீம் தடவிக் கொள்ள வேண்டும். அந்த ப்ரோகிராம் சென்டரில்தான் முடி வெட்டிக் கொள்ளவேண்டும். கிட்டத்தட்ட ஏழெட்டு மாதத்திற்கு அதை முயற்சி செய்து பார்த்துவிட்டு ஒரு சின்ன மாற்றம் கூட இல்லாததைக் கண்டு இப்பொழுது அதெல்லாம் "வேஸ்ட்" என்று மற்றவர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கிறார். சில பேருக்குச் சொல்லித் தெரியுது, சில பேருக்குப் பட்டால் தான் தெரியுது.

பிஸினஸ் பண்ணவேண்டும் என்று யாராவது நினைத்துக் கொண்டிருப்பவர்கள் இந்த இரண்டு பிஸினஸில் ஏதாவதொன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

-------------------------------------------------------------------------------------------------
நான் அமெரிக்கா வந்த புதிதில் டெட்ராய்ட்டில்(Detroit) நம்ம ஊர் மக்களைப் பார்த்தும் முக்கியமாக யாராவது தமிழில் பேசிக் கொண்டிருந்தால் ஆகா நம்மூர் மக்களாச்சேன்னு கொஞ்சம் சிரிச்சா பதிலுக்கு யாரும் சிரிக்கவோ, ஒரு ஹாய் சொல்லவோக் கூட மாட்டார்கள். அது கூட பரவாயில்லை. நம்மளை ஒரு தீண்டத்தகாதவன் போல் ஒரு லுக் விடுவாங்க (ஜெ.ஜெ யில் மாதவன் ஒரு லுக் விடுவாரே அதேமாதிரி கேவலமா). அதத்தான் தாங்க முடியாது. கொஞ்ச நாள் கழித்து ஒரு நண்பனிடம் இது பற்றிக் கேட்டேன். அப்பொழுது தான் அந்த ரகசியம் தெரிந்தது. இங்கு ஆம்வே(Amway), ப்ரிட் வேர்ல்ட் வைடு(BWW), பயோ மேக்னடிக்,கோல்ட் கொஸ்ட் இதுபோன்ற நெட்வொர்க் மார்க்கெட்டிங்(Multi level Marketing) செய்யும் மக்களால் அவர்கள் பாதிக்கப் பட்டவர்கள் என்று. நான் அப்பொழுது கூட முழுதாக நம்பவில்லை. அட்லாண்டா வ்ந்த பிறகு ஒரு நண்பனின் நண்பன் என்னை வீடு தேடி வந்து சந்தித்தார். பாசமழையைப் பொழிந்தார். வெளிநாட்டில் இப்படி ஒரு நல்ல நண்பனா என்று வியக்கும் வகையில் நடந்துக் கொண்டார். ஒரு நாள் (Weekend) வாங்களேன் எங்க ப்ரண்ட்ஸ் எல்லாம் ஒரு கெட் டுகெதர்(Get together) வச்சுருக்காங்க நீங்களும் கலந்துக்குங்கனு கூட்டிக் கொண்டு சென்றார். அவர் நல்லவவவன்னு நம்பி அவர் கூட போனேன். அங்க தான் விதி விளையாடுச்சு.

போற வழியில என்னங்க இன்னும் எத்தனை நாளா இந்த மாதிரி ப்ரோகிராமிங் பண்ணிக்கிட்டே இருக்கப் போறிங்க? அமெரிக்கா வந்து இன்னும் பொழைக்கத் தெரியாம இப்படி வெள்ளந்தியா இருக்கிங்களேன்னு நம்மளை கேட்டார். அப்பக்கூட எனக்குப் புரியல. நாம உண்மையிலே ஒரு தப்பான ஃபீல்ட்க்கு வந்துட்டோமோ? கம்ப்யூட்டர் நம்மளைக் கைவிட்டுருமோ? எட்டு வருடமா குப்பைக் கொட்டிக் கொண்டிருந்த இந்த ஜாவா நம்மளைக் காலை வாரிவிடுமோ? என்று என்னன்னமோ என் மனதில் அந்த நிமிடத்தில் ஓடிக் கொண்டிருந்தது. நண்பர்கள் கூடும் இடம் வந்தது. முதல்ல ஒரு ஜூஸ் ஒன்னக் கொடுத்துட்டு, கோபி இந்த பேப்பர்ஸ்ல கொஞ்சம் சைன் பண்ணிடுங்க. அப்புறம் இந்த ப்ரோகிராமிற்கு ஒரு 300 டாலர்ஸ் கட்டவேண்டியதிருக்கும் என்று சொன்னார்கள். என்னை அழைத்து வந்தவர், நான் வேணும்னா இப்போ கட்டிவிடுகிறேன். நீங்க அப்புறமா ஆன்லைன்ல ட்ரான்ஸ்பர்(Money Transfer) பண்ணிடுங்க என்றார். இதெல்லாம் என்னதுங்க ஒன்னுமே புரியல என்றேன். நான் இதப் பத்தி அப்புறமா சொல்றேன். நீங்க சைன் மட்டும் பண்ணிடுங்கனு சொன்னார். ”சிக்குச்சுடா சிறுத்தை” என்பதற்கு அப்பத்தான் அர்த்தம் புரிஞ்சுது. எனக்கு ஒரு ரெண்டு நாள் டைம் குடுங்க நான் யோசித்து சொல்றேன் என்று சொன்னேன். என்னைக் கூட்டி வந்தவரை அங்கிருந்த எல்லோரும் ஒரு பார்வை பார்த்தார்கள். அந்த பார்வையில் ஒரு உக்கிரம் இருந்தது. என்னைக் கூட்டிக் கொண்டுவரும் பொழுது நிறைய பேசிய நண்பர் என்னை வீட்டில் கொண்டுவந்து விடும் வரை பேசாமலே விட்டுச் சென்றார். மறுநாள் என்னுடன் ரூமில் தங்கியிருந்த நண்பர்கள் எனக்கு கொடுத்த அர்ச்சனைகள் சொல்லி மாளாது.

மறுபடியும் அந்த நண்பர் தொலைப் பேசியில் தொடர்பு கொண்டு பேச முயன்றார். அவருக்காவே எனது தொலைபேசி நம்பரை மாற்றினேன். நண்பர்களே, வெளிநாட்டில் யாராவது உங்களை கண்டுகொள்ளவில்லையென்றால் தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அவர்கள் இந்த மாதிரி மக்களால் காயம் பட்டவர்கள். நெட்வொர்க் மார்க்கெட்டிங் மக்களின் குறிக்கோளே இந்த மாதிரி மார்கெட்டிங் பிஸினஸ் பற்றி தெரியாத மக்கள் தான். அவர்கள் உங்களை மாதிரி ஆட்களை தேடும் நேரம் சனி, ஞாயிறு தான். அப்பொழுது தான் இந்தியர்கள் எல்லா கடைகளிலும்(Walmart,Kroger,Sams,Costco..etc), மால்களிலும் இருப்பார்கள். முதலில் அவர்கள் தான் யார் என்பதையும், அந்த மார்கெட்டிங்கைப் பற்றியும் சொல்லவே மாட்டார்கள். உங்கள் போன் நம்பரைக் கண்டிப்பாக கேட்பார்கள். அதை உறுதி செய்ய ஒரு மிஸ்டு கால் உங்கள் முன்னாலே உங்களுக்கு கொடுப்பார்கள். நீங்கள் பணம் கட்டினால் போதும் உங்களை மாதிரி ஆட்களை அவர்களே பிடித்து தருவதாக உத்திரவாதமும் தருவார்கள். அவர்கள் அடிக்கடி கூறும் வார்த்தை “ரிடையர்மண்ட்”. அஞ்சு வருசம் நீங்க இந்த ப்ரோகிராமில் இருந்தா போதும் உங்களுக்கு ராயல்டி மாதிரி பணம் வந்து கொண்டே இருக்கும். நீங்கள் இப்பொழுது செய்து வரும் வேலையை விட்டுவிட்டு வீட்டில் இருந்து கொண்டே சம்பாதிக்கலாம் என்று கூறுவார்கள். இந்த வார்த்தையில் தான் மக்கள் விட்டில் பூச்சிகளாய் விழுந்துவிடுகிறார்கள்.

உண்மையிலே இந்த மார்க்கெட்டிங்கில் லாபம் இருக்கிறதா, இந்த மாதிரி பிஸினஸில் ஈடுபட்டால் நம்மால் சம்பாதிக்கமுடியுமா, முயன்று தான் பார்ப்போமே என்று நினைப்பவர்களுக்கு நிறைகுறைகள் இங்கே..

1. உங்களுக்கு எக்கச்சக்க நண்பர்கள் இருந்தால், உங்களுக்கு மார்க்கெட்டிங் திறமை இருப்பதாக நினைத்தால் நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம். நீங்கள் ஒரு கஸ்டமரைப் பிடிப்பதற்குள் தாவு தீர்ந்திரும். வலுக்கட்டாயமாக ஒருவரை இதில் நிர்பந்திக்க வேண்டியதிருக்கும். மார்க்கெட்டிங் செய்பவர்களைப் பார்த்தாலே விபரம் தெரிந்தவர்கள் தலை தெரிக்க ஓடுவதைப் பார்க்கலாம்.

2. உங்களுக்குப் பயிற்சி அளிக்கும் போது இப்பொழுது இதில் சம்பாதித்துக் கொண்டிருப்பவர்களை உங்களுக்கு முன் மாதிரியாக காட்டுவார்கள். அவர்கள் உங்களுக்கு எப்படி சம்பாதிக்க வேண்டும் என்று விளக்கம் சொல்வார்.

3. பெரிய, பெரிய ஹோட்டலில் தான் மீட்டிங் நடக்கும். நீங்கள் ஒரு தடவை அந்த மீட்டிங் அட்டண்ட் பண்ணினால் உங்களுக்கும் ஆசை வரும்.

4. உங்களுக்கு நிறைய நண்பர்கள் அறிமுகமாவார்கள். நீங்கள் ஒருமுகப் படுத்தப் படுவீர்கள். இந்த பிஸினசைத் தவிர உங்கள் புத்தியில் எதுவும் ஏறாது. நீங்கள் பார்க்கும் எல்லோரும் உங்களுக்கு கஸ்டமராகவே தெரிவர். தயவு தாட்சண்யமே கிடையாது. லைஃபே பிஸினஸாகிவிடும்.சில நல்ல நண்பர்களை இழக்க நேரிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

5. இதில் சம்பாதிக்கிறவர்கள் சம்பாதித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஏமாறுபவர்கள் ஏமாறிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

6. மார்க்கெட்டில் இருக்கும் எல்லா புக்குகளும் இவர்களுக்காகவே எழுதியதாக கூறுவார்கள் உ..தா..(Rich Dad Poor Dad, Who Moved My Cheese ..etc). நான் இந்த புத்தகங்களை தன்னம்பிக்கைக்காக(Self Development) படித்தவை அதனால் தான் என்னுடைய பிளாக்கில் புத்தக அலமாரியில் இருக்கிறது. வேறு எந்த உள்குத்தும் இல்லை.

7. அடுத்த பிரிவுக்கு(Next Stage) போகும் போது ப்ரமோஷன், அவார்ட்(Silver,Gold, Diamond), மெடல்ஸ் எல்லாம் கொடுத்து ஊக்குவிப்பார்கள்.

என்னடா, இவன் தான் இதிலே சேரவே இல்லையே இதப் பற்றி இவ்வளவு சொல்றானேன்னு யோசிக்கிறீங்க. அந்த நிகழ்சிக்குப்(Get Together) பிறகு இந்த மூன்று வருடத்தில் நிறைய பேரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் 1990களில் இங்கு வந்து இந்த மாதிரி பிஸினஸில் சேர்ந்து பல லட்சம் டாலர்களை இழந்தவர்களையும், ஆசையில் இதில் இறங்கிவிட்டு, தொடர முடியாமல் விட்டுவிட்ட அப்பாவிகளையும் சந்தித்த போது அவர்கள் வருத்தப்பட்டு புலம்பியது தான் இந்த பதிவு.

டிஸ்கி : இந்த பதிவில் நான் எழுதியிருப்பவை எல்லாம் என் அனுபவத்தில் தெரிந்துகொண்டது. இது யாரையும், யார் மனதையும் காயப்படுத்தும் நோக்கத்தோடு எழுதியவை அல்ல. ஏன்னா நான் அவன் இல்லை.

இது சம்பந்தமாக ஒரு ஒளியோட்டம்