Thursday, December 31, 2009

2010 - புத்தாண்டு வாழ்த்துக்கள்

எல்லோருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.



பூப்போல விரியப்போகும் புத்தாண்டில்

காப்போம் ,வளர்ப்போம், கனிவுடனே

ஒரு க‌ருத்தான‌ வ‌லைப்ப‌திவுத் தோட்டத்தை!

வலிவான எண்ணங்களை க‌னிவான நிறம் தொட்டு

பொலிவான நம் பூந்தோட்டங்களிலே, பூப்பூவாய்

மலர வைப்போம்!

ரோஜாவும்,மல்லிகையும் ,முல்லையும் போல‌

அன்பும், நட்பும் ,புன்னகையையுமே

முன்பாக வைத்து முன்னேறுவோம்.

வலைப்ப்ரிவு அன்பர்கள், நண்பர்கள் நலம் வேண்டி

வையகத்து நலனைத் தரும்படி வணங்குவோம்

வருகின்ற இரண்டாயிரத்து பத்தாம் ஆண்டில்!

Thursday, December 24, 2009

2010ல் செய்யவேண்டியவை

ஆரோக்கியம் / உடல் நலம்

1. தண்ணீர் நிறைய குடியுங்கள்.
2. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும், இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.
3. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.
4. தியானம், யோகா மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.
5. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.
6. 2009விட இந்த வருடம் நிறைய புத்தகம் படியுங்கள்.
7. ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.
8. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.
9. குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

தன்னம்பிக்கை / சுயமுன்னேற்றம்

10. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள். அவர்கள் பயணிக்கும் / மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.
11. எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.
12. உங்களால் முடிந்த அள்வு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.
13. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.
14. நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கணவு காணுங்கள்.
15. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது.
16. கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தை சிதைத்துவிடும்.
17. வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.
18. எப்பொழுதும் மகிழ்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.
19. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
20. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்.

சமூகம்.

21. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும், வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, கடிதம் மூலமாகவோ தொடர்புகொண்டிருங்கள்.
22. மன்னிக்கப் பழகுங்கள்.
23. 70 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.
24. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.
25. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள்.

வாழ்க்கை

26. உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.
27. ஒவ்வொரு நாளும் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.
28. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள்.
29. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, எது அழகை கொடுக்காதோ, நிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கிவிடுங்கள்.
30. எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.

Tuesday, December 22, 2009

கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்

zwani.com myspace graphic comments


இன்றைய துருக்கியில் முன்பொருநாள் ஒரு செல்வந்தன் சொத்தையெல்லாம் இழந்து தெருவில் நின்றான்வறுமையில் வாடிய அவனுக்குத் தன் மகள்களை காப்பாற்றுவதே இறுதி முடிவாயிருந்தது. இதை அறிந்த ஒரு பாதிரியார் அவருக்கு பொருள் உதவி செய்தாராம்.

இந்தப் பின்னணியில் துவங்கியதுதான் கிறிஸ்துமஸ் தாத்தாவென நாம் அழைக்கும் 'சான்டா க்ளாஸின்' கதைஅந்தப் பாதிரியாரின் பெயர் செயின்ட் நிக்கோலாஸ், பின்னர் மருவி சான்டா க்ளாசாக உருப் பெற்றதுசெயின்ட் நிக்கொலாஸ் தனது சொத்து முழுவதையும் தானம் செய்வதில் செலவழித்தவர்.

கிறிஸ்துமஸ் தாத்தா இன்று உலகெங்கும் கிறிஸ்துமசின் அடையாளங்களில் ஒன்றாய் காணப்படுகிறார். வடதுருவம்தான் இவரின் ஊர்ஆண்டு முழுவதும் இவரது இருப்பிடத்தில் பரிசுப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றனஇவருக்கு உதவியாக பல குள்ளர்கள்(எல்வ்ஸ்) வேலை செய்கிறார்கள்கிறீஸ்துமஸ் தினத்தன்று இவர் ஒன்பது மான்கள் இழுத்துச்செல்லும் பறக்கும் பனிரதத்தில் உலகெலாம் சென்று பரிசுகளை வழங்கிவருகிறார்.

இரவோடு இரவாக புகைபோக்கி வழியே நுழைந்து கிறிஸ்மஸ் மரத்தின் அருகே தொங்கவிடப்பட்டிருக்கும் காலுறைகளுக்குள் பரிசுகளை விட்டுப் போவது இவரது வழக்கம்.

பரிசுக்கள் எல்லோருக்கமல்லஆண்டு முழுதும் நல்லவர்களாயிருக்கும் பிள்ளைகளுக்கு மட்டுமே என்பது வருந்தத்தக்க கிளை செய்திகிறிஸ்மஸ்தாத்தா கற்பனையில் புனையப்பட்ட ஒரு பாத்திரம் என உணர்வதற்கு குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 10 வருடம் பிடிக்கிறது.

நம் ஊர்களில் புகைபோக்கிகள் இல்லாததாலோ என்னவோ இங்கே கிறிஸ்மஸ்தாத்தா கொடுப்பவராக இல்லாமல் வாங்குபவராகவே வருகிறார். வீடு வீடாகச் சென்று கிடைக்கும் பண்டங்களை பங்கிடுவதும் காசு பிரிப்பதும் இங்கே கிறிஸ்மஸ்கால கொண்டாட்டங்களில் கலந்துவிட்டிருக்கும் வேடிக்கைகளில் ஒன்று. லாரி ஒன்றை வாடகைக்கமர்த்திக்கொண்டு ஊர் ஊராக பாடல் பாடிக்கொண்டே செல்பவர்களும் உண்டு.

கிறிஸ்மஸ் காலத்திற்கென்றான பாடல்கள் 'காரல்ஸ்' (Carols) என வழங்கப்படுகின்றன. வருடாவருடம் வீடு வீடாகப் போய் இனிய கிறீஸ்து பிறப்பின் பாடல்களைப் பாடி மகிழ்ந்து, மகிழ்விக்கும் பாடற்குளுக்களுக்கும் நன்கொடைகளும் இனிப்புகளும் வழங்கப்படும்.

கிறிஸ்துமஸ் இசை எனக்குப் பிரியம். ஆங்கிலத்தில் உலகப் பிரசித்தி பெற்ற 'Silent night', 'Jingle Bells', 'Hark the herald', 'Joy to the world', 'Away in a Manger', 'Mary's boy child' போன்ற பாடல்கள் எப்போதும் அமெரிக்க வானொலிகளில் இதமாய் ஒலிக்கின்றன .

பனிக்காலத்தில் வரும் கிறிஸ்துமசை எதிர்பார்க்கும் 'I'm dreaming of a white Christmas', 'எப்படியாவது பண்டிகைக்கு வீட்டுக்குவந்துவிடுவேன்' என ஏக்கத்துடன் அறிவிக்கும் 'I will be home for Christmas', கிறிஸ்மஸ்தாத்தாவின் வருகையைச் சொல்லி மகிழும் 'Santa Claus is in town' என எண்ணங்களில் விளையாடும் பாடல்களை இந்தக் காலங்களில் கேட்கமுடிகிறது.

கிறிஸ்துமசை அடுத்து புது வருட பிறப்பு. நல்ல புது பழக்கங்களை பழகவும் சில கெட்டவைகளை களையவும் இது நல்ல தருணம். புதுவருட தீர்மானங்களில் ஒன்றாய் சக மனிதரை மதித்து நடப்பது எனும் உயரிய கோட்பாட்டை எடுக்கலாம். எளிதில் சொல்லிவிட முடிகிறது என்றாலும் எல்லோரும் முயலவேண்டிய ஒன்று. மனித உயிருக்கு, மனிதனுக்கு மதிப்பு குறைந்து வருவதை கண்கூடாஅகப் பார்க்கிறோம். வரும் வருடத்தில் இதைக் களைய நம்மால் ஆனதைச் செய்வோம்.

மகிழ்ச்சிக் கொண்டாட்டங்கள் மனம் நிறைக்கும் இந்த பண்டிகைக் காலங்களில் அவற்றின் உள் அர்த்தங்களை மறந்துவிட வாய்ப்பிருக்கிறது. கிட்டத்தட்ட எல்லா பண்டிகைகளுமே வியாபாரமயமாக்கப்பட்டுவிட்டன. பண்டிகையென்ன, வாழ்க்கையே வியாபாரமயமாகிவிட்டது.

கிறிஸ்துமஸ் பகிர்தலின் பண்டிகை. நமக்கு கொடுப்பவருக்கே திருப்பிக் கொடுப்பதில் என்ன இருக்கு? இல்லாதவருக்கு அருள்வதே சிறப்பு எனச் சொன்ன இயேசுவின் பிறந்த நாளை எப்படிக் கொண்டாடவேண்டும் என்பதை சொல்லித் தெரிவதில்லை.

கொண்டாட்டங்கள் எல்லாம் கொடுப்பதிலே நிறைவுபெறட்டும்.

அனைவருக்கும் இனிய இயேசு பிறப்பு மற்றும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

நன்றி : தமிழோவியம்

Thursday, December 17, 2009

எல்லாம் தலைவிதி

உங்களுக்கு விதியின் மேல் நம்பிக்கை இருக்கிறதா?


எதையாவது நாம் எதிர்பார்த்துக் காத்திருக்கையில் ‘நமக்கு நடக்கும்னு இருந்தா கண்டிப்பாக நடக்கும்’ என்று பலர் சொல்லிக் கேட்டிருப்போம். நல்லதுக்கும், கெட்டதுக்கும் விதியின் மேல் எத்தனையோ முறை நாம் பழியைப் போட்டிருப்போம். அப்படிப்பட்ட விதியை காரணமாக்கி அதையே படமுமாக்கியிருக்கிறார்கள். மனிதனுக்கு அவ்வப்போது உள்ளுணர்வு(instinct) வரும். அந்தக் காரியத்தைச் செய்யனும்னு நினைச்சேன், ஆனால் கடைசி நேரத்தில் வேண்டாம்னு விட்டுட்டேன். என் மனசில என்னமோ பட்டிச்சு என்றெல்லாம் உள்ளுணர்வைப் பற்றி சமயத்தில் பினாத்தியிருப்போம். அந்த உள்ளுணர்வு தான் இந்த படத்தின் நாயகன்.


’தி ஃபைனல் டெஸ்டினேஷன் 4’ சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. மிரட்டியிருந்தார்கள். கொஞ்ச நாளைக்கு முன்னர் தான் ஃபைனல் டெஸ்டினேஷன் 1, 2, மற்றும் 3 பாகங்களை பார்த்தேன். முதல் பாகத்தில் இருந்த விறுவிறுப்பு என்னை மற்ற மூன்று பாகங்களையும் உடனே பார்க்கத் தூண்டியது. எந்த பாகத்திலும் ஒரு நிமிஷம் கூட தொய்வு கிடையாது. இளகிய மனசு உள்ளவர்கள் இந்தப் படங்களைப் பார்க்க வேண்டாம். கொஞ்சம் மன தைரியம் வேண்டும். இது ஹாரர்(Horror) மூவி கிடையாது. ஆனால் த்ரில்லிங்கிற்கு குறைவிருக்காது. கதையின் பேஸிக் லைன்(Basic Line) என்னவோ எல்லா பாகத்திலும் ஒன்று தான். ஆனால் எடுத்த விதம் மற்றும் அதன் களம் தான் வேறு வேறு.


முதல் பாகத்தில் நண்பர்கள் ஒரு விமானத்தில் பயணம் மேற்கொள்கிறார்கள். விமானம் கிளம்புவதற்க்கு முன்பே அதில் ஒருவன் வந்த களைப்பில் சிறிது அயர்ந்து தூங்குகிறான். அவனுக்கு அந்த விமானம் கிளம்பிக் கொஞ்ச நேரத்திலே வெடித்து சிதறுகிற மாதிரி ஒரு கணவு(Premonition) வருகிறது. உடனே விமானத்தை விட்டு வெளியே வந்து விடுகிறான். அதில் சில நண்பர்களும் அவனுடன் வேளியே வந்து விடுகிறார்கள். அவன் கனவில் வந்த மாதிரியே டேக் ஆஃப் ஆன அடுத்து சில நொடிகளிலே அவன் கண்முன் வெடித்துச் சிதறுகிறது. ஆனால், விதி வலியது. அவர்கள் அந்த விமானத்தில் இறக்க வேண்டும் என்பது விதி. ஆனால் தப்பித்து விட்டார்கள். வெளியில் அவனுடன் வந்த நால்வரும் எப்படி அடுத்தடுத்து இறக்கிறார்கள்? உயிரோடு இருக்க சாத்தியமே இல்லையா? அவர்கள் எந்த வரிசையில் அடுத்தடுத்து இறக்கவேண்டும் என்பது விதி? என்பதை படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். முதல் பாகத்தைப் பார்க்கிறவர்கள் கண்டிப்பாக மற்ற மூன்று பாகங்களையும் பார்க்காமல் விட மாட்டார்கள்.





இரண்டாம் பாகத்தில், ஒரு ரோட்(Road) ஆக்ஸிடெண்ட் தான் களம். இதுவரை அப்படி ஒரு ஆக்ஸிடெண்டை யாரும் பாத்திருக்க முடியாது. இந்த படத்தில் ஒரு பெண்மணிக்கு அந்தக் கனவு(Premonition) வருகிறது. ஆனால் இந்த தடவை வேறு ஒரு வரிசையில் அடுத்தடுத்து இறக்கிறார்கள். அதில் யார் அடுத்து இறக்கப் போகிறார்கள் என்பது தான் படத்தின் சுவாரஸ்யமே. சாவுக்குப் பயந்து ஒரு பெண்மணி எப்படி ஒளிந்திருந்தாள். அவள் எப்படி வெளியே வந்தாள்? பிறரைக் காப்பாற்ற உதவினாளா? விதிக்கு கருணையே கிடையாதா? என்பதற்கெல்லாம் இந்தப் படத்தின் டிவீடி பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.




மூன்றாம் பாகத்தில், ஒரு ரோலர்கோஸ்டர். நாம் நம்மூரில் ரங்கராட்டினத்தில் ஏறவே பயப்படுவோம்(நான் பயப்படுவேன்). இங்கே ஒரு ஜயண்ட் ரோலர்கோஸ்டர்(Giant Roller Coaster). நண்பர்கள் விடுமுறையை களிப்பதர்காக ஒரு தீம் பார்க் வருகிறார்கள். எல்லோரும் ரோலர்கோஸ்டரில் ஏறிக்கொள்ள கதாநாயகியாக வருபவர் மட்டும் ஏனோ ஏறிக்கொள்ள மறுக்க, அதே போல் உள்ளுணர்வு வந்து நண்பர்களைப் போகவேண்டாம் என்று தடுத்துப் பார்க்கிறார். வழக்கம் போல் நண்பர்கள் அவளைத் திட்டிவிட்டு, அறிவுரை சொல்லிவிட்டு சில நண்பர்கள் மட்டும் ஏற, நடக்கிறது அந்த விபரீதம். இந்த தடவையும் வரிசைகள் மாறுகிறது. யாரெல்லாம் அதை நம்ப மறுக்கிறார்களோ அவர்களுக்கு மரணமே பதிலாக கிடைக்கிறது. இந்த மூன்றாம் பாகம் மட்டும் கொஞ்சம் போர் அடிப்பதாக நண்பர்கள் சொன்னார்கள். எனக்கு ஒன்றும் தெரியவில்லை.




சமீபத்தில்(2009) வந்தது நாலாவது பாகம். அமெரிக்காவில் இந்த படம் சக்கைப் போடு போட்டது. மற்ற மூன்றை விட இந்த பாகம் நன்றாக எடுத்திருப்பதாக விமர்சனங்களில்(Reviews) படித்தேன். கார் ரேஸ் நடக்கும் இடம் தான் இங்கே களம். இங்கே ஒரு சின்ன காரின் பாகம் உதிர்ந்து, கார் ரேஸ் நடக்கும் ரோட்டில் வந்து விழுவதால், விதி எப்படி பல பேர் உயிரைக் குடிக்கிறது என்பதை சொல்லியிருக்கிறார்கள். கிராபிக்ஸில் கலக்கியிருக்கிறார்கள். இசை பிரமாதம். இன்னும் டிவீடி வரவில்லை.




இந்த கதையை சமீபத்தில் இதே மாதிரி எங்கேயோ கேட்டமாதிரி, ஏதோ படத்தில் பார்த்த மாதிரி உங்களுக்கு தோன்றுகிறதா? வேறு எங்கும் இல்லை. சமீபத்தில் தமிழில் எல்லோரும் வித்தியாசமான கதை என்று பார்த்து பாராட்டிய ’ஈரம்’ படம் தான். அப்பட்டமாக காப்பி அடிக்காமல் தமிழுக்கு தகுந்த மாதிரி காப்பி அடித்திருக்கிறார்கள் வழக்கம் போல. இந்த படங்களைக் பார்க்கும்பொழுது தயவுசெய்து குழந்தைகளை வைத்துக் கொண்டுப் பார்க்காதீர்கள்.


நான்காம் பாகத்தின் ட்ரைலரைக் காண இங்கே சொடுக்கவும்.

Wednesday, December 9, 2009

தி கிரேட் டிபேட்டர்ஸ் - The Great Debaters


சில வேலைப் பளுக் காரணமாக ஒரு வாரம் பதிவு எழுத முடியவில்லை. சில தினங்களுக்கு முன் பள்ளியில் எடுத்த பழையப் புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். என் நினைவுகள் கொஞ்சம் பின்னோக்கிச் சென்றன. நம்முடைய வாழ்க்கையில் நாம் தற்பொழுது இருக்கும் நிலைமைக்கு நம்மையும் / நம் சிந்தனையை உயர்த்திவிட்ட ஆசிரியர்களின் பங்கு எவ்வளவு மகத்தானது. பாடங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் உலகத்தையும், பொது அறிவையும் அவர்கள் கண்கள் மூலம் நாம் கண்டது தானே அதிகம். சிறு வயதில் நம்முடைய பெற்றோர்கள் அவர்களுடைய ஆசிரியர்களையும், வகுப்பில் நடந்த குறும்புத் தனங்களையும் பற்றிச் சொல்லும் போதெல்லாம் அவர்கள் மனதிலும், முகத்திலும் எவ்வளவும் சந்தோசம் வரும். அதைப் பார்ப்பத்ற்காகவே அடிக்கடி அந்த அந்த ஆசிரியர்கள் கதையை திரும்பச் சொல்லச் சொல்லிக் கேட்போம். உலகில் நடந்த எல்லா புரட்சிக்குப் பின்னும் ஒரு ஆசிரியர் நேரிடையாகவோ மறைமுகமாகவோ இருந்திருப்பார்கள். இன்று நிலைமையே வேறு. கல்வி வியாபரமாகி விட்டது. அதைப் பற்றி இன்னொரு பதிவில் விரிவாகப் பார்ப்போம். இந்த பதிவில் ஒரு ஆசிரியர், நான்கு மாணவர்கள் அவர்கள் செய்த புரட்சியைப் பற்றிப் பார்ப்போம்.


தி கிரேட் டிபேட்டர்ஸ்.
இந்த படம் ஒரு வரலாற்று நிகழ்ச்சி. ஒரு படிப்பினை. கருப்பர்கள் அமெரிக்காவில் அவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமைகளை எப்படி போராடிப் பெற்றார்கள் என்பதற்கு ஒரு சான்று. ஒரு ஆசிரியர் மாணவர்களுக்கு எப்படிப் பட்ட நம்பிக்கையை ஊட்ட வேண்டும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. ஆங்கிலத்தில் ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் இது ஒரு இன்ஸ்பிரேஷன்(Inspiration). ஒரு நல்ல படத்தைப் பார்த்த திருப்தி எனக்கு இருந்தது. உங்களுக்கும் கிடைக்கும். இந்த படத்தைப் பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் பேராசிரியர் மெல்வின்.பி.டால்சன்(டென்சல் வாஷிங்டன்) அமெரிக்காவில் டெக்ஸாஸ்(Texas) மாநிலத்தில் வைலி(Wiley) கல்லூரியில் 1935ம் ஆண்டு வாதாடும் குழுவிற்கு(Debate Team) பொறுப்பாசிரியராக பணியாற்றி வந்தார். வைலிக் கல்லூரி கருப்பர்கள்(African Americans) மட்டுமே படிக்கும் ஒரு கல்லூரி. அவர் எப்படி நான்கு மாணவர்களை தேர்ந்தெடுத்து வெள்ளைக்காரர்கள் மட்டுமே படிக்கும் ஹார்வேர்ட்(Harvard) பல்கலைக் கழகத்தில், அவர்களை வாதாட வைத்து கருப்பர்களுக்கும், மற்றவர்களுக்கும் சமயுரிமை பெறச் செய்தார் என்பதை உள்ளதை உள்ளபடியே சொன்ன படமாகும்.


ஒரு கருத்தரங்கில் நான் கேள்விப்பட்டது, ஒரு ஆராய்ச்சியில் மனிதனுக்கு வாழ்க்கையில் எத்தனை பயங்கள் உண்டு என்பதை ஒரு குழு பட்டியலிட்டது. அதில் முதன்மையானது மரண பயம். அடுத்து என்ன தெரியுமா? .... மேடைப் பேச்சு. மேடைப் பேச்சு அவ்வளவு சுலபமில்லை. அதற்கு தேவை பயிற்சி பயிற்சி பயிற்சி. இந்த படத்தில் மேடையில் பேசி வாதாடுவதற்கு டால்சன் தனது வகுப்பில் திறமையான நான்கு பேரைத் தேர்வு செய்கிறார். சில தலைப்புக்களை வகுப்பில் கொடுத்து(Spot Topics) பேச வைக்கிறார். அதில் யாரெல்லாம் சரியாகவும், உண்மையாகவும் பேசுகிறார்கள் என்று, கடுமையான தேர்வுக்குப் பின்னர் ஹென்றி(நெட் பார்க்கர்), சமந்தா(ஜுர்ணி ஸ்மாலட்), ஜேம்ஸ் ஜுனியர்(டென்சல் விட்டேகர்), ஹேமில்டன்(ஜெர்மைன் வில்லியம்ஸ்) ஆகியோரை தேர்வு செய்கிறார். இதில் மேடையில் பேச ஹென்றியையும், சமந்தாவையும், இவர்களுக்கு அளிக்கப்படும் தலைப்பில் வாதாடுவதற்கு பாயிண்டுகளை தேர்வுசெய்து கொடுப்பதற்கு ஜேம்ஸ் மற்றும் ஹேமில்டனை நியமிக்கிறார்.


டால்சன் : யார் உங்கள் நீதிபதி ?
மாணவர்கள் : கடவுள் தான் எங்கள் நீதிபதி.
டால்சன் : ஏன் கடவுள் உங்களுக்கு நீதிபதி?
மாணவர்கள் : அவர் தான் எங்கள் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறார். எங்கள் எதிராளி இல்லை.
டால்சன் : யார் உங்கள் எதிராளி ?
மாணவர்கள் : அப்படி ஒருத்தன் இல்லவே இல்லை.
டால்சன் : ஏன் இல்லை ?
மாணவர்கள் :ஏனென்றால் அப்படி ஒருத்தன் இருந்தால் அவன் உண்மைக்குப் புறம்பாகவும்,உண்மையை எதிர்த்துப் பேசுபவனாக இருப்பான்.

இது தான் டால்சன் மாணவர்களுக்கு தினமும் சொல்லிக் கொடுக்கும் மந்திரம். முதலில் மாணவர்களுக்கு அவர் தன்னம்பிக்கை தருகிறார். மாணவர்களை உருவாக்குவதோடு இல்லாமல் அங்குள்ள விவசாயிகளின் இடையே இருக்கும் நிறவெறியை போக்குவதற்காக இரவு நேரங்களில் ரகசிய கூட்டமும் போடுகிறார். நிறவெறியால் பாதிக்கப் பட்டோரை ஒன்று திரட்டுகிறார்.இதனால் கைது செய்யப் படுகிறார். அவரை விடுவிக்கக் கோரி விவசாயிகள் ஒன்றுகூடி காவல் நிலையம் முன் போராட்டம் நடத்துகிறார்கள்.ஜேம்ஸின் தந்தை டாக்டர் ஜேம்ஸ் ஃபார்மர் உதவியுடன், சிறையிலிருந்து வெளியே வருகிறார். இதனால் ஹேமில்டன் பெற்றோர்கள் டால்சனை ஒரு போராளி மற்றும் கம்யூனிஸ்ட் என்று கூறி அவரை நால்வர் குழுவிலிருந்து விலகச் சொல்கிறார்கள். ஹேமில்டனும் விலகுகிறார்.



முதலில் அருகில் உள்ள கல்லூரிகளிலும்,பொது இடங்களில் நடைபெறும் வாதங்களில் கலந்துக் கொண்டு தங்கள் திறமையை மேலும் வளர்த்துக் கொள்கிறார்கள். கருப்பர்களுக்கு எதிராக நிறவெறியை தூண்டும் விதத்தில் சில சம்பவங்கள் நடைபெறுகிறது. ஜேம்ஸ் தனது குடும்பத்துடன் காரில் ஒரு இடத்தைக் கடந்து செல்லும் பொழுது வெள்ளையர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள சிறுவர்கள் இவர்கள் வருவதைக் கண்டு ஒரு ஆட்டை அவர்கள் காரின் முன் விரட்டி அதை கொல்கின்றனர். அங்குள்ள வெள்ளைக்கார நிற வெறியர்கள் ஜேம்ஸ் வேண்டுமென்றே ஆட்டின் மேல் மோதியதாக கூறி துப்பாக்கியுடன் மிரட்டிப் பணம் பறிக்கிறார்கள். அந்த சம்பவம் ஜேம்ஸின் மனதை மிகவும் பாதிக்கிறது.


மற்றொரு நாள் விவாத்தில் பங்கேற்க ஒரு ஊரை கடந்து செல்லும் பொழுது,ஒரு கருப்பரை வெள்ளைகாரர்கள் ஒரு மரத்தில் தூக்கிலிட்டு உயிரோடு எரிக்கும் காட்சியை டால்சனுடன் சேர்ந்து மூவரும் பார்த்து மணமுடைந்து போகிறார்கள்.


ஒரு நாள் இந்த மூவரின் திறமையைப் பார்த்து, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில், இவர்களுக்கு விவாதத்தில் பங்கேற்க அழைப்பு வருகிறது. எல்லோரும் தயாராகிறார்கள். ஹென்றியும், சமந்தாவும் மேடையில் பேசுவதாகவும், ஜேம்ஸ் அவர்களுக்கு பாயிண்டுகளை எடுத்துக் கொடுப்பதற்காகவும் டால்சன் அவர்களை தயார்படுத்தி, ரயில் நிலையத்தில் தான் அவர்களுடன் வரமுடியாது என்றும், தான் ஏற்கனவே கைதாகி ஜாமீனில் இருப்பதால், போலிஸ் அவரைக் கண்காணித்துக் கொண்டிருப்பதால் அவர் அந்த ஊரை விட்டு வெளியேற முடியாது என்றும் சொல்லி வர மறுத்துவிடுகிறார்.




மூவரும் ஹார்வர்ட் செல்கிறார்கள். தலைப்பு மேடையில் தான் கொடுக்கப்படும் என்றும், இந்த விவாதம் அமெரிக்கா முழுதும் வானொலியில் ஒலிபரப்படும் என்றும் அவர்களை வரவேற்றவன் சொல்கிறான். முதல் நாள் இரவு ஹென்றி தான் நாளைக்குப் பேசப் போவதில்லை எனவும், தனக்குப் பதிலாக ஜேம்ஸ் பேசட்டும் என்றும் கடைசி நேரத்தில் விலகிக் கொள்கிறான். எதற்காக ஹென்றி விலகினான்? ஜேம்ஸ் மற்றும் சமந்தா விவாதத்திற்கு சென்றார்களா? எந்த தலைப்பு அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது? எப்படி விவாதத்தில் வென்றார்கள் என்பதை டி.வீ.டியில் பார்த்துத் தெரிந்துக் கொள்ளுங்கள்.

சுவாரஸ்யங்கள்


  • இந்த படத்தை டால்சனாக நடித்த ”டென்சல் வாஷிங்டனே” இயக்கி நடித்திருக்கிறார். இது இவருக்கு இரண்டாவது இயக்கம்(Direction). டென்சல் ஒரு தலைசிறந்த நடிகர். ஆஸ்கார் வாங்கியவர். உட்கார்ந்த இடத்தில் இருந்தே நடிக்க முடியும் என்பதை “தி போன் கலெக்டர்” என்ற த்ரில்லர் படத்தில் நிருபித்திருப்பார்.

  • இந்த படத்தை தயாரித்தவர் “ஓப்ரா வின்ஃப்ரி”. இவர் அமெரிக்காவில் சின்னத் திரையில் பிரபலம். நீண்ட காலமாக ’டாக்‌ ஷோ’ நடத்திக் கொண்டிருக்கிறார்.

  • சிறந்த படத்திற்கான ”கோல்டன் க்ளோப்” விருது வாங்கியிருக்கிறது.

  • ஹார்வர்டில் வென்ற பிறகு, வைலி கல்லூரி விவாதக் குழு(Debate Team) தொடர்ந்து 10 ஆண்டுகள் முதலிடத்தில் இருந்திருக்கிறது.

  • இந்த படத்தின் க்ளைமாக்ஸ் எப்படி வாதிட்டார்கள் என்பதை தெரிந்துக் கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். முக்கியமாக காந்தியின் அஹிம்சையைப் பற்றி எப்படி விவாதிக்கிறார்கள் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

  • இந்த படத்தின் முன்னோட்டம் மற்றும் நடித்தவர்களை பற்றித் தெரிந்து கொள்ள இங்கேசொடுக்கவும்.

கீழே உள்ள படத்தில் இருப்பவர்கள் தான் உண்மையான டிபேட்டர்ஸ். நிற்பவர்களில் நடுவில் இருப்பவர் தான் உண்மையான டால்சன்.


இந்த விமர்சனம் உங்களுக்குப் பிடித்திருந்தால் மறக்காமல் எனக்கு பின்னூட்டம் இடுங்கள். பிடிக்காவிட்டாலும் பின்னூட்டம் இடுங்கள்(திருத்திக்கொள்ள).உங்கள் நண்பர்களுக்கு இந்த பதிவைப் பற்றி தெரிவியுங்கள். மீண்டும் இது போல் ஒரு நல்ல படத்தின் விமர்சனதுடன் உங்களை சந்திக்கிறேன்.

Monday, December 7, 2009

டிஜிட்டல் பறவை ஓவியங்கள்

படங்களைக் க்ளிக் செய்து பெரிதாகப் பார்க்கவும்