Saturday, October 31, 2009

அமெரிக்கத் தீபாவளி - ஹாலோவீன்


அமெரிக்கர்களின் அன்றாட வாழ்க்கையில் சற்று மாறுதலை ஏற்படுத்தும் வகையில் ஒரு வெளிச்ச விழா! இந்த அமெரிக்கத் தீபாவளி. இந்த அமெரிக்கத் தீபாவளிக்குப் பெயர் "ஹாலோவீன்". இறந்தவர்கள் சொர்க்கத்துக்கும் போகாமல் நரகத்துக்கும் போகாமல் ஆவியாக அலைந்து கொண்டிருப்பவர்களை மகிழ்விக்கும் நன்னாள் தான் "ஹாலோவீன்" நாள் என்பது. இப்படிப்பட்ட கெட்ட ஆவிகளை மகிழ்ச்சியடையச் செய்வதன் மூலம் தங்களுக்கு எந்த விதமான பாதிப்புகளும் நேராது என நம்புகிறார்கள் அமெரிக்கர்கள்.

தீபாவளியைப் போலவே ஹாலோவீனுக்கும் வாழ்த்து அட்டைகளிலிருந்து பூங்கொத்துகள், பரிசுக்கூடைகள், ஹாலோவீன் குக்கீஸ், டாய்ஸ், கேண்டி எனப்படும் மிட்டாய் தினுசுகள், ஸ்டிக்கர்கள், பேனா, பென்சில், ஆடியோ விடியோ காசட்டுகள், வித விதமான முகமூடிகள்(மாஸ்க்குகள்) என கடைகளில் அக்டோபர் மாத துவக்கத்திலேயே படுசுறுசுறுப்பாக வியாபாரம் களைகட்டத் துவங்கிவிடுகிறது. இது தவிர 24மணிநேரமும் இயங்கும் உலகளாவிய வலையகக் கடைகளில் (ஆன் லைன் ஷாப்பிங்) வேறு பிசியாக நடக்கிறது.

வினோத அலங்கரிப்புகள்வீட்டுவீட்டுக்கு சோளக்காட்டு பொம்மை போல எதாவது ஒரு பொம்மை உருவம் இருக்கும். வீடு தவறமல், பூசணிக்காய் உள்ளங்கை அளவிலிருந்து, ஒரு ஆள் கட்டிப் பிடிக்க முடியாத ராட்சச பூசணி அளவு வரை இடம் பெற்றிருக்கும். பூசணியை முகம் போல வெட்டி இரவில் வண்ண விளக்குகள் ஒளிர வைத்திருப்பார்கள். பொங்கலுக்கு வீட்டு நுழைவாயிலில் இருபுறமும் தோகையுடன் கூடிய கரும்பு செழித்தெழுந்து நிற்குமே, அது போல காய்ந்த மக்காச் சோளத் தட்டைகளை குவியலாய் நிறுத்தி வைத்திருப்பார்கள். நிலைப்படியில் மரிக்கொழுந்து, மாவிலைத் தோரணம் கட்டியிருப்பதுபோல கலர்கலரான காய்ந்த மக்காச் சோளக் கதிர்கள், காய்ந்த பல்வேறு இலை கொத்துக்களை செருகி வைத்திருப்பார்கள். வீட்டு முகப்பில் சோபாவில் ஒரு எலும்புக்கூடு ஒய்யாரமாக அமர்ந்து கொண்டு புகை பிடித்துக்கொண்டிருக்கும். வீட்டைச் சுற்றியுள்ள மரங்களில் மண்டை ஓடுகள், எலும்புகள் என்று தொங்கிக்கொண்டிருக்கும். இதெல்லாம் எதற்கு?

எல்லாம் நம் இனத்தவர்கள் தான் என்று பேய் பிசாசுகள் விசிட் அடிக்கும் போது தெரிந்து கொள்ளத்தான். இரவு நேரங்களில் இதை அறியாத பயந்த சுபாவம் உள்ளவர்கள் போனால் இருதயம் திடீர் பிரேக் போட்டுவிடும். இதுபோன்று வினோதமான அலங்கரிப்புகளில் அமெரிக்க இல்லங்கள் காட்சி தரும். பூசணிக்காய்ப் பண்ணையில் பூசணி வாங்க மக்கள் கியூவில் நின்றதொருகாலம்!

தெருக்கூத்துமுகங்களில் கருப்புச் சாயம், கண்களைச் சுற்றிக் கலர்கலராக புள்ளி வைத்து, உதட்டுச்சாயம் பூசி, தலைக்கு விக் வைத்துக் கொண்டு ஆண்களும் பெண்களும் பேய்களாக, பிசாசுகளாக, ஆவிகளாக, சூனியக்கார-காரிகளாகமந்திரக்கோல் போன்று வைத்துக்கொண்டு போக்குவரத்து மிகுந்த இடங்களில், பெரிய பெரிய மால்களில்( பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள்தான்) பொது மைதானங்களில், திடீர்... திடீர் என்று தோன்றி திகில் ஏற்படுத்துவார்கள். இதெல்லாம் ஒரு ஜாலி..ஜாலியான நிகழ்வுகளாகத்தான் அங்கங்கே நிகழும். மின்னல் வேகத்தில் வந்து அந்தப் பகுதியில் ஒரு கலகலப்பை ஏற்படுத்திவிட்டு வந்த சுவடு தெரியாமல் போயும் விடுவார்கள்.

எங்கும் கோலாகலம்ஆவிகளுக்குப் பிடித்த இருட்டுப் பொழுதுகளில் அங்கிங்கெனாதபடி எங்கும் ஆனந்தப் பெருவெள்ளத்தில் மக்கள்ஆழ்ந்துபோகிறார்கள். வாழ்க்கை வாழ்ந்துபடுவதற்கே என்கிற சித்தாந்தத்துக்கு உதாரணமானவர்கள் அமெரிக்கர்கள். ஹாலோவீன் தினத்தை பிரதிபலிக்கிற விதவிதமான வண்ண உடைகளில் இரவுவிடுதிகளை நிறைத்துக் கொண்டு ஆட்டமும் பாட்டமும், கேளிக்கைகளில் தங்களைத் தற்காலிகமாக மறந்து உல்லாசிக்கிறார்கள். ராஜராஜாக்கள், கோமாளிகள் என்ற முகமூடிகளில் அவர்களின் முகவரிகள் மறைந்திருக்கலாம். அகமும் முகமும் ஒருசேரச் சிந்துகிற மகிழ்ச்சிப்பூக்களை எல்லோரிடமும் சிதறவிட மறப்பதில்லை. உற்சாக பானம் அருந்திவிட்டு உளறும் நிலைக்கு யாரும் போய்விடுவதில்லை. உற்சாகமாக இருப்பதற்காக மட்டுமே இதை அருந்துகிறார்கள். நியுமெக்சிக்கோ மற்றும் சில பகுதிகளில் வாழும் அமெரிக்க இண்டியன்கள்(சிவப்பு இந்திய காட்டுவாசிகள்) மட்டுமே போதை தலைக்கேற உருள்வது, பிறழ்வது எல்லாம். இந்த நாளில் அநேகர் "டேட்டிங்" வைத்துக்கொண்டு கவலையின்றி ஆவிகளோடு ஆவிகளாக ஐக்கியமாவது உட்பட கோலாகலமாக கழிக்கின்றனர்.

பள்ளிகளில்மழலையர் பள்ளியிலிருந்து கல்லூரிவரை "ஹாலோவீன்" கொண்டாட்டத்துக்கு குறைவிருக்காது. அதிலும் சின்னஞ் சிறு பிஞ்சுகள் தங்களுக்குப் பிடித்த மிக்கிமவுஸ், எல்மோ, பிக்பேர்டு, லேடி பக், பேட்(வவ்வால்), முயல், கிளி·ப்பர்டு, எமன் வாகனம்போல கொம்புக்காளைமாடு இப்படி எத்தனையோ முகமூடிகளில் வித்தியாசமான காஸ்ட்யூம்களில் ஜொலிப்பதைக் காணக் கண் கோடி வேண்டும். அன்று அந்தந்த வகுப்பு ஆசிரிய அசிரியைகள்கூட கோமாளி போல சூனியக்காரி போல வந்து குழந்தைகளை " TRICK OR TREAT BAGS " கொடுத்து மகிழ்விப்பது குறிப்பிடத் தக்கது. பள்ளி அரங்கில் ஒருநாள் எல்லா வகுப்பு மாணவ மாணவிகளும் இணைந்து பங்கேற்கும் "ஹாலோவீன்" நிகழ்வில் குழந்தைகளின் பெற்றோர்களும் வந்து கலந்து உற்சாகப்படுத்துவார்கள். அக்.31ம் தேதி சிறு குழந்தைகள் கையில் ஒரு கூடையோ பையோ, அதுவும் பூசணிக்காய் போன்ற பிளாஸ்டிக் கூடையை எடுத்துக்கொண்டு வீடுவீடாகக் கிளம்பிவிடுவார்கள். வீட்டிலிருப்போர் குழந்தைகளுக்கு வாழ்த்துச் சொல்லி விதவிதமான கேண்டிகளை (இனிப்பு மிட்டாய்களை ) வழங்குவார்கள். குழந்தைகள் மீண்டும் வீடுதிரும்பும்போது உற்சாகத்தின் உச்சாணிக்கொம்பில் இருப்பார்கள்.

அவசியம் ஹாலோவீன் .....ஏன்?


இறந்தவர்கள் பூமிக்கு நடந்து வரும் தினம் இது என்பது சிலரது நம்பிக்கை ! அதனால்தான் சிறுவர்சிறுமியர் வாலிபர், பெரியவர் என்ற பேதமின்றி பேய்களைப் போல ஆவிகளைப்போல உடையணிந்து வலம் வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். Trick- or- Treat செய்து ஆவிகளைப் பரிசுகளால் மகிழ்விக்கச் செய்வதை தொடர்வோம். யாருடைய நம்பிக்கை எப்படியிருந்தாலும் ஹாலோவீன் இரவு என்பது இறந்துபோன நம்மவர்களுக்காக நாம் செய்யும் மரியாதை! அவர்களைக் கெளரவப்படுத்தும் அந்த நிகழ்வை நாம் கொண்டாடாமல் வேறுயார் கொண்டாடுவது? அது மட்டுமா, அநேகமாக முதல் தடவையாக தங்கள் குழந்தைகள் முகமூடி அணிந்து "Trick-or-Treat" போகும்போது பெற்றோர்களுக்கு புதிய பல அறிமுகங்கள் கிடைக்கும்.


கடைகளில் ஹாலோவீன் அடையாள வில்லைகள், பூசணிக்காய் முகங்கள், விதவிதமான ஹாலோவீன் உடைகள், வகைவகையான ஹாலோவீன் கேண்டிகள், கல்லறைத் தூண்கள், ரத்தம் சொட்டச் சொட்ட உடம்பின் பாகங்கள், வினோத ஒலியெழுப்பும் ஒலி,ஒளி நாடாக்கள், மக்களை திகில் கொள்ளச் செய்யும் ஆயிரக்கணக்கான அலங்கரிப்புப் பொருட்கள் என்று பல பில்லியன் டாலர் புரளுகின்ற ஹாலோவீன் தினம் கொண்டாடப்படுவதன் மூலம் பணப் புழக்கம் இழந்த பொருளாதாரத்தை சற்றேனும் மீட்டெடுக்க உதவும் என்பதில் ஐயமில்லை!


ஹாலோவீன் பலகாரங்கள்ஹாலோவீன் விசேச பலகாரங்கள் இல்லாமல் ஒரு ஹாலோவீனா? பலகாரங்கள் என்னென்ன? பட்டியல் போட்டால் அதுவே ஒரு கட்டுரை போலாகிவிடும்.Black Cat Cookies, Pumpkin Roll with Cream Cheese Filling, Pumpkin Soup, Pumpkin Crunch Dessert, Pumpkin Cupcakes, Cheese Eyeballs, Toxic Tomatoes, Ghoulish Gruel, Gnarled Witch's Fingers, Perfect Popcorn Balls, Brains on the Half Skull, Mystery Punch with Frozen Hand, Candied Apples, Frozen Jack O'Lanterns, Spicy Halloween Ginger Cake, Spider's Nest Dip, Toasted Pumpkin Seeds, Blood Punch, Ice Cream Vampire Bats, Spooky Cookies


ஹாலோவீன் Flash Back


நான்காம் நூற்றாண்டில் ரோமச் சக்கரவர்த்தியாக இருந்த கான்ஸ்டண்டைன் காலத்தில் இறந்தவர்களின் நினைவாக அக்டோபர் மாதம் 31ம் தேதியை மரித்தோர் தினம் என்று கொண்டாடத் தலைப்பட்டனர். ஏழாம் நூற்றாண்டில் மே மாதத்தில் அனைத்துப் புனிதர்கள் நாள் (ALL SAINT'S DAY ) என்று கொண்டாடினர். 9ம் நூற்றாண்டில் இந்த நாள் நவம்பர் 1ம்தேதியாக மாறியது. அப்போது வாழ்ந்த பாகான் என்றழைக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் அற்ப ஆயுளில் இறந்தவர்கள் ஆவியாக, பேயாக அக்டோபர் 31ம் தேதி வருவதாக நம்பி அந்த நாளை அனைத்து ஆவிகள் தினமாக( ALL HALLOW'S EVEN) என வழிபட்டனர். 10ம் நூற்றாண்டில் கிறிஸ்தவ ஆலயங்களில் நவம்பர் 2ம் தேதியை "அனைத்து ஆத்மாக்கள் தினம்" (ALL SOULS' DAY ) என இறந்து போன அனைத்து ஆத்மாக்களுக்காக ஏற்படுத்தினர். இந்த மூன்று தினங்களும் அடுத்தடுத்து வந்ததால் சில நாடுகளில் இதை ஒருங்கிணைத்து ஒன்றாக்கினர். ஹாலோவீன் என்பதின் அடையாளச் சின்னமாக சூனியக்காரி உருவத்தை படு விகாரமாக ஏற்படுத்திக் கொண்டனர்.


இங்கிலாந்தில் இந்த நாளில் துடைப்பக் குச்சியில் ஒருவிதமான களிம்பை தடவி வீட்டுக்கு வெளியே வைத்து விடுவார்களாம். பேயாக உலவும் ஆவிகள் இந்த துடைப்பக் குச்சியை எடுக்கும்போது அதிலுள்ள களிம்பு ஒட்டிக் கொள்வதால் கால்கள் தரையில் பாவாமல் வெகுவேகமாக நிலத்துக்கும் கடலுக்கும் மேல் பறந்து போய் விடுவதாக(!) நம்பி இப்படிச் செய்து வந்திருக்கின்றனர். இதனால் வீட்டுக்கு வந்தது விளக்குமாற்றோடு போச்சு என்று சொல்லிக் கொள்வார்களாம்.


ஸ்காட்டிஷ் குழந்தைகள் இன்றும் இதனை நினைவு கொள்ளும் வகையில் டர்னிப்பை வெட்டி மெழுகுவர்த்திகளை ஏற்றிவைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இங்கிலாந்தின் ஒரு பகுதியில் இன்றும் பெரிய பெரிய பீட்ரூட்டைப் பயன்படுத்துகின்றனர். ஸ்காட்டிஷ், ஐரிஷ் இனத்தவர்கள் அமெரிக்காவில் வந்து குடியேறியபோது டர்னிப், பீட் ரூட்,உருளைக்கிழங்குக்குப் பதிலாக பூசனிக்காயை அலங்காரப் பொருளாக வெவ்வேறு வடிவங்களில் வெட்டி வீடுதோறும் வைக்கும் வழக்கம் ஏற்பட்டது.ஐரோப்பியர்கள் இந்த அக்டோபர் மாதத்தை மிகவும் கடினமானதாகக் கருதுவார்கள். இங்கிலாந்தின் ஒரு பகுதியில், ஹாலோவீன் தினத்தில், வீடுவீடாகப் போய் பாட்டுப் பாடி பிச்சை எடுப்பார்கள். கேக்குகள், பணம் என்று அளிப்பதை இன்றும் காணலாம். ஸ்பானியர்கள், கல்லறைக்குச் சென்று கேக்குகளையும் பருப்பு வகைகளையும் வைத்து ஆவிகளை மகிழச் செய்வார்கள். இப்படியாகத்தானே ஆதியிலிருந்து இன்றுவரை ஹாலோவீன்..... நடந்தது... நடந்து கொண்டிருக்கிறது.

ஓவியங்கள் - Landscape


Monday, October 19, 2009

என்னுடைய பாலாடைக் கட்டியை எடுத்துச் சென்றவர் யார்?

ஒரு புத்தகத்தைப் பற்றி என்னுடைய விமர்சனத்தை எழுதலாம் என்று நினைத்தேன். நாம் எத்தனையோ தன்னம்பிக்கைத் தரும் நூல்களை படிக்கிறோம். படித்த அந்த நொடியோ,அன்றோ, அந்த வாரமோ நமக்கென்று சில திட்டங்களை வகுத்துக்கொண்டு செயல் பட நினைப்போம். ஒரு மாதம் ஆனால், எல்லாம் நாம் அந்த திட்டங்களைத், திட்டங்களாகவே வைத்து விட்டு நாம் பழைய வாழ்க்கைக்கு வந்து விடுவோம். இது ஒரு முறை அல்ல, சில முறை அல்ல,பல முறை நம் வாழ்க்கையில் நடந்திருக்கும். புத்தகங்கள், உண்மையில் நமக்குத் தன்னம்பிக்கை அளிக்கிறதா என்று கேட்டால், சில சமயங்களில் "ஆம்", சில சமயங்களில் "இல்லை". ஏனென்றால், நம் மனம் கடந்த காலம் எனும் இருளில் மூழ்கி உள்ளது. இதற்குக் காரணம், நமது மூளையின் "நியூரல் நெட்வொர்க்" தான் என்றால் மிகையாகாது. நமது எண்ணங்கள், எப்போதும் பழகிய பாதையிலே தான் செல்லும். சரி, இதற்கு வழியே இல்லையா? நாம் புதிய மனிதராக மாற முடியாதா என்று கேட்டால், கண்டிப்பாக முடியும். அந்த சுய முன்னேற்ற நூல்களின் கருத்துக்கள், நம் மனதில் ஆழமாகச் செல்ல வேண்டும்."தவறு நூல்களில் இல்லை நம் மனதில் உள்ளது".

"என்னுடைய பாலாடைக் கட்டியை எடுத்துச் சென்றவர் யார்?", இந்தப் புத்தகத்தை(தமிழில்), சில வருடங்களுக்கு முன்னால் படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதற்குப் பிறகு, பலமுறை படித்திருக்கிறேன்.பல விலையுயர்ந்த, சுயமுன்னேற்ற புத்தகங்கள் தராத நம்பிக்கையை, இந்தப் புத்தகம் தந்திருக்கிறது. புத்தகம் சிறிது என்றாலும், விஷயங்கள் பெரியது. இந்தப் புத்தகம், வாழ்க்கையில் வரும் மாற்றங்களையும், அதை எப்படி எதிர்கொள்கிறோம், என்பதை விரிவாகச் சொல்கிறது.


'மாற்றம்' என்பது மிக முக்கியம். ஒரே மாதிரியான வாழ்க்கை, நம்மை முடக்கிப் போட்டுவிடும். வேலையில் மாற்றம் வரலாம். தொழிலில் மாற்றம் வரலாம். நண்பர்களில் மாற்றம் வரலாம். கடந்து போகிற வாழ்க்கையில், மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும். இப்படி, அவ்வப்போது வருகின்ற மாற்றங்களைத் தயங்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது எட்டாக்கனியாகி விடும்.


இந்த புத்தகத்தில் வரும் கதையை நான் மிக சுருக்கமாக இங்கு தந்துள்ளேன். நீங்கள் இந்த புத்தகத்தை படிக்கும் ஒவ்வருமுறையும் நீங்கள் வாழ்க்கையில் எந்த இடத்தில் தற்பொழுது இருக்கிறீர்கள் என்பதை உணர்வீர்கள்.அது இந்த புத்தகத்தை முழுதாகப் படித்தால் தான் தெரியும். புத்தகத்தை ஆங்கிலத்தில் படிக்கவும். தமிழில் சரியாக மொழிபெயற்க்கவில்லை என்பது என் கருத்து.


நீண்ட வருடங்களுக்குப் பிறகு,கல்லூரியில் படித்த சில நண்பர்கள் ஓரிடத்தில் கூடுகிறார்கள். ஒவ்வொருத்தரும், அவர்களின் வாழ்க்கை அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அதில் ஒருவன், வாழ்க்கையில், எப்படி மிக அடிமட்டத்தில் இருந்து ஒரு மாபெரும் நிலைக்கு வந்தான் என்பதையும், அதற்க்குக் காரணமாக இருந்தது, ஒரு சின்னக் கதை, என்பதையும் சொன்னான். மற்றவர்களும், உடனே அந்தக் கதையை அவர்களுக்கு சொல்லும்படி கேட்கிறார்கள். அவனும் அந்த கதையை சொல்லுகிறான்.

இந்தக் கதையில் வரும் கதாபாத்திரங்கள்.

  • இரண்டு எலிகள்(Sniff & Scurry)
  • இரண்டு குள்ளமனிதர்கள்(Hem & Haw).
  • பாலாடைக்கட்டி(Cheese) என்பது, ஒரு மனிதனுக்கு எது மகிழ்ச்சியைக் கொடுக்குமோ, அது. அது, வேலை, வெற்றி, சந்தோஷம், இலக்கு என்று எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.
  • சிக்கலான வலைப் பின்னல்(Maze) ஒருவருடைய சூழ்நிலையைக் குறிக்கிறது.


ஒரு ஊரில், ஒரு சிக்கலறை(Maze) இருக்கிறது. அதன் அருகில் வசிக்கும் நான்கு ஜீவன்கள் – இரண்டு எலிகளும், இரண்டு சின்னஞ்சிறு மனிதர்களும். அவர்களுடைய உணவு பாலாடைக்கட்டி. அது அந்த சிக்கலறைக்குள் வைக்கப்பட்டிருக்கிறது. நான்குபேரும் தனித்தனியாக ரொம்பநாட்கள் பாடுபட்டுத்தேடி, ஒருநாள் அந்த பாலாடைக்கட்டி அறையைக் கண்டுபிடித்துவிடுகிறார்கள். அதனுள் ஏராளமான பாலாடைக்கட்டி இருக்கிறது. ரொம்ப சந்தோஷமாக, அங்கேயே, தினந்தோறும் வந்து உண்டு மகிழ்கிறார்கள்.


இப்படியே சிலநாட்கள் கழிகிறது. கொஞ்சம்கொஞ்சமாய், அந்த பாலாடைக்கட்டித் தமக்கே சொந்தம், என்கிற எண்ணமும், கர்வமும், அவர்களுக்கு வந்துவிடுகிறது. அதைக் கஷ்டப்பட்டுத் தேடிப்பிடித்ததெல்லாம் மறந்துபோகிறது. தினமும், அங்கேயே வந்து தின்று கொழுக்கிறார்கள்.ஒருநாள், நால்வரும் அங்கே வந்துபார்க்கும்போது, பாலாடைக்கட்டியைக் காணவில்லை. காலியாக இருக்கிறது அறை !


எலிகள் இரண்டும், இதற்குத் தயாராய் இருந்ததுபோல, மோப்பம் பிடித்துக்கொண்டு, புதிய பாலாடைக்கட்டியைத் தேடி ஓட ஆரம்பித்துவிடுகின்றன.


மனிதர்கள் இருவருக்கும்தான், இதை ஏற்க முடியவில்லை. ‘என்னுடைய பாலாடைக்கட்டியை நகர்த்தியவர் எவர் ?’ என்று அலறுகிறான் ஒருவன். ‘ஏன் இதைச் செய்தார்கள்?' இதில் கொஞ்சமும் நியாயமில்லை, அது நம்முடைய பாலாடைக்கட்டி, அதைக் கொள்ளையடிப்பதற்கு அவர்கள் யார் ?’, என்கிறான் இன்னொருவன்.

போன பாலாடைக்கட்டி வந்துவிடும், என்று நம்புகிறார்கள் இருவரும். தினம் தினம், அதே இடத்திற்கு வந்து, தேடிப்பார்த்துவிட்டு, சோகத்தோடு திரும்புகிறார்கள்.யாரோ இப்படி அநியாயம் செய்துவிட்டார்களே, என்கிற ஆதங்கத்தில், தொடர்ந்து புலம்பிக்கொண்டிருக்கிறார்கள் இருவரும். அது போய்விட்டது, என்கிற உண்மையை ஏற்க மனமில்லாமல் திணறுகிறார்கள்.

இவர்கள் இப்படியிருக்க, புதிய பாலாடைக்கட்டியைத் தேடிப்போன எலிகள் இரண்டும் சிரமப்படுகின்றன. இருண்ட சிக்கலறையில், திசை தெரியாமல்போய், சுவர்களில் முட்டிக்கொள்கின்றன. ஆனால், சீக்கிரமே அவைகளுக்கு, புதிய பொக்கிஷம் கிடைத்துவிடுகிறது., முன்னைவிட பலமடங்கு பெரியதாய், ஒரு பாலாடைக்கட்டி கிடைக்கிறது. அவைகள் சந்தோஷமாய் உண்டு களிக்கின்றன.இருவரில், ஒருவனுக்கு திடீரென்று ஒரு கற்பனை – புதிய பாலாடைக்கட்டியைக் கண்டுபிடித்து, சுவைத்து மகிழ்வதுபோல கனவு காண்கிறான். அந்தக் கனவை, நனவாக்க விரும்பி, ‘நாம் ஏன் வேறு இடங்களில் சென்று தேடிப்பார்க்கக்கூடாது ?’ என்று, தன் நண்பனிடம் கேட்கிறான்.நண்பன் ஒரேயடியாய்த், ‘தேடி என்ன புண்ணியம்?, வேறெங்கும் பாலாடைக்கட்டி கிடைக்காவிட்டால் என்ன செய்வாய் ?’ என்றுசொல்லி, அவனுடைய ஊக்கத்தைப் புதைத்துவிடுகிறான். இருவரும் மீண்டும் வெற்றுப்புலம்பல்களுக்குத் திரும்புகிறார்கள்.


சில நாள் கழித்து, முதலாமவனுக்கு இன்னொரு சிந்தனை, ஏன் இந்த பயம், பயப்படாமல் இருந்தால், நான் என்ன செய்வேன் ? – என்று சிந்திக்கிறான். அவனுக்கு ஒரு உண்மை புரிகிறது. பாலாடைக்கட்டி கிடைக்காவிட்டால், என்ன செய்வது? என்று குழம்பிக்கொண்டிருப்பதைவிடவும், எதுவும் இல்லாமல் இங்கே பட்டினி கிடப்பதைவிடவும், அதைத் தேடிப்போவது எவ்வளவோ மேல், இல்லையா?என்று, தன் நண்பனிடம் மீண்டும் கேட்கிறான். அவன் தொடர்ந்து மறுக்கவும், முதலாமவன் மட்டும், புதியபாலாடைக்கட்டியைத்தேடி, கிளம்பிவிடுகிறான்.

ஒரு அறையின் வாசலில், அவனுக்கு நிறைய பாலாடைத்துணுக்குகள் கிடைக்கின்றன. அவனுக்குச் சந்தோஷம் தாள முடியவில்லை. இந்த அறைக்குள், நிச்சயம் பாலாடைக்கட்டி இருக்கவேண்டும் என்று நம்பி, அந்தத் துணுக்குகளை, அவசரஅவசரமாய் உண்கிறான். சிலவற்றைத், தன் நண்பனுக்காகச் சேமித்து வைத்துக்கொள்கிறான். குதூகலித்தபடி, அந்த அறைக்குள் நுழைந்தால் – அதிர்ச்சி, உள்ளே பாலாடைக்கட்டி இல்லை,யாரோ, அவனுக்கு முன்பே, காலி செய்துவிட்டுத் துணுக்குகளை மட்டும் விட்டுப்போயிருக்கிறார்கள்.அவனுக்குச் சோகம் தாளமுடியாததாய் இருக்கிறது. அந்த பழைய அறையில், புலம்பிக்கொண்டிருந்த நேரத்தில் தேட ஆரம்பித்திருந்தால், சீக்கிரமே இங்கே வந்திருந்தால், தவறவிட்ட பாலாடைக்கட்டி அவனுக்குக் கிடைத்திருக்கும்.

கதையின் நீதி

  • வாழ்க்கையில் மாற்றம் வரும்,வந்துகொண்டே இருக்கும்.
  • வாழ்க்கையில் மாற்றத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருங்கள்.
  • வாழ்க்கையில் வரும்/நடக்கும் மாற்றங்களை கவனித்துக்கொண்டிருங்கள்.
  • வாழ்க்கையில் மாற்றம் வந்தால் உடனே ஏற்றுக்கொண்டு மாறிவிடுங்கள்.
  • மாற்றத்துடன் பயனித்துக்கொண்டே இருங்கள்.
  • மாற்றம் வந்தால் உடனே மாறிக்கொண்டு அதை அனுபவிக்க பழகுங்கள்.


இந்த புத்தகத்தை தரவிறக்கம் செய்ய இங்கே க்ளிக் செய்யவும். இப்பொழுது இந்த புத்தகம் ஆடியோ வடிவிலும்(AudioBook-mp3) கிடைக்கிறது. பல டாரன்ட் வலைப்பதிவுகளில் நீங்கள் ஆடியோவை(AudioBook-mp3) தரவிறக்கம் செய்யலாம்.
Saturday, October 17, 2009

ஜப்பானிய ஓவியங்கள்

ஓவியங்களை க்ளிக் செய்து பெரிதாகப் பார்க்கலாம்.