Wednesday, May 26, 2010

தூரல் நகரம் - குளு குளு குற்றாலம்

"ஆயிரங் கண் போதாது வண்ணக்கிளியே குற்றால அழகை நாம் காண்பதற்கு வண்ணக் கிளியே"

"குற்றால அருவியில் குளித்தது போல் இருக்குதா?"

"தேனருவித் திரையெழும்பி வானின் வழி ஒழுகும், செங்கதிரோன் தேர்க்காலும் பரிக்காலும் வழுகும்"

அனைத்துமே அனுபவித்து எழுதப் பட்ட வரிகள் என்பது, குற்றாலக் காடுகளையும், அருவிகளையும் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும்.குற்றாலத்தைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் நம் மனசும், உடம்பும் ஒரு புத்துணர்ச்சிப் பெறும். நகரவாசிகளைப் பொருத்தவரை, அவர்களுக்கு இயந்திர வாழ்க்கைதான். காலையில் எழுவது,இரவு காமெடி டைம் பார்த்துவிட்டு படுக்கச்செல்வது வரை தினமும் ஒரே நிலைதான். சென்னை நகரவாசிகள், இது போன்ற இரைச்சல், புகை,தூசு, சாக்கடை நாற்றம், பிளாட்பார பிரியாணி என பழகிவிட்டார்கள். அதை மாற்றிக்கொள்ள முடியாது. ஆனால், சில நாட்களுக்காவ‌து இதிலிருந்து விடுபட்டு, இயற்கை பரந்துவிரிந்த இடங்களுக்குச் சென்று வரலாம். நமக்கென்று இயற்கை சில அதிசய படைப்புகளை செய்திருப்பதை நம்மால் ரசிக்கமுடிவதில்லை அல்லது காலம், பொருளாதாரம் ஒத்துழைப்பது இல்லை. அந்த வகையில் முழுக்க முழுக்க, இயற்கையாக அமைந்த ஒரு சிறந்த சீசன் தளம் தான் குற்றாலம்.

இந்த ஊரின் சிறப்பு, இந்த ஊர் முழுக்க முழுக்க பசுமையால் சூழப்பட்டுள்ளது தான். சுற்றிலும் பச்சைப்பசேல் என மரங்களும், மலைகளும் கண்கொள்ளாக் காட்சி. சென்னையிலே, சாதாரணமாக மே, ஜூன் மாதங்களில் வெயிலும், அனலும் கொளுத்தும். ஆனால், இங்கே சாரல் அடித்துக் கொண்டிருக்கும். மே மாதம் தொடங்கும் சீசன் ஜூன் மாதத்தில் உச்சமடையும். இந்த ஜூன் மாததில் தான் "சாரல் திருவிழா" இருக்கும். அதாவது, அருவிகளில் தண்ணீரின் வரத்து நன்றாக இருக்கும். ஜூலை மாதங்களில் கொஞ்சம் கொஞ்சமாக மூட்டைகட்டிவிடும் சீசன், ஆகஸ்ட்டில் மொத்தமாக கிளம்பிவிடும்.
குற்றால மலையின் சிறப்பைப் பற்றி குற்றாலக் குறவஞ்சி என்னும் நூலில்

வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழியெறிந்து வானவரை யழைப்பார்
கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார்
தேனருவித் திரையெழும்பி வானின்வழி யொழுகும்
செங்கதிரோன் பரிக்காலுந்த தேர்க்காலும் வழுகும்
கூனலிளம் பிறைமுடித்த வேணியலங் காரர்
குற்றாலத் திரிகூட மலையெங்கள் மலையே

என குற்றால மலையின் சிறப்புகளை, திரிகூட ராசப்பக் கவிராயர் பாடியுள்ளார்.அருவியில் இருந்து வழிந்தோடும் சிற்றாறுகளின் உபயத்தில் பச்சைக் கம்பளம் விரிந்து வயல்வெளிகளாலும், தோப்புகளாலும், தேக்கு, பலா மரங்களாலும் நிறைந்த சமவெளிகள் சூழ்ந்த சிற்றூர்கள் மலையடிவாரத்தில் அமைந்துள்ளன. திருநெல்வேலியில் இருந்து 50கி மீ தொலைவில் உள்ளது. இங்கே மொத்தம் சிறிதும் பெரிதுமாக 9 அருவிகள் உள்ளன. மலையின் மேல் ஓடி வரும் மழைநீர் வெள்ளம், மூலிகைச் சாறுகளுடன் கலந்து, தன்னோடு பல்வேறு கனி மரங்களையும் சேர்த்துக் கொண்டு, மலையின் பல பாகங்கள் வழியே கீழே பாய்கின்றன. பழைய அருவி,பேரருவி,புலியருவி, ஐந்தருவி,சிற்றருவி,புது அருவி,பழத்தோட்ட அருவி என்று ஏழு அருவிகள் மலையைச் சுற்றி மலையடிவாரங்களிலும்,தேனருவி, செண்பகதேவி என்று இரு அருவிகள் என்று மலையின் மேலேயும் அமைந்துள்ளன.
இனி ஒவ்வொரு அருவியும் அதன் தனிச் சிறப்பையும் பார்ப்போம்.

பேரருவி - Main Falls

குற்றாலத்திற்குள்ளே நுழைந்ததும் அதிகபட்சமாக, எல்லோரும் முதலில் செல்வது மெயின் அருவி தான். இது 288 அடி உயரத்தில் இருந்து பொங்குமாங்கடல் என்ற ஆழமான ஒரு துளையில் விழுந்து, பொங்கி, பரந்து விரிந்து கீழே விழுகிறது. மிகப்பிரம்மாண்டமான இரைச்சலுடன், கொட்டிக் குமுறிக் கொண்டிருக்கும் இந்த அருவியில் குளிப்பது மிகமிக ஆனந்தம். இந்த அருவியில் பல நேரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குளிப்பதற்குத் தடை விதிக்கப்படும். அந்த நேரங்களில் இதன் கீழ்பகுதியில் உள்ள ஒரு மிகப்பெரிய நீர் தடாகத்தில் குளித்து விளையாடலாம். ஆனால் சில நேரங்களில் அங்கே நெருங்கக்கூட வாய்ப்பு கிடைக்காது. மெயின் அருவியிலே குளித்தாலே போதும், நம் மக்கள் பலருக்கு, தொந்தரவு தரும் கழுத்து வலி, மூட்டு வலி, உடல்வலி, முதுகு வலி என எல்லா வலிகளும் பறந்தோடிவிடும். அது மட்டுமில்லாமல் எல்லா அருவிகளின் முன்னாலும் மசாஜ் நிலையங்கள் இருக்கின்றன. எண்ணெயை உங்கள் உடலில் ஊற்றி அப்படியே கொத்து பரோட்டா போடுற மாதிரி கொத்திவிட்டு, நரம்புகளை நீவிவிட்டு, சுடக்கெடுத்து விடுவார்கள்.அந்த எண்ணையோடு சென்று அருவியிலே தலைகொடுப்பது, மிக மிக சுகமானது. ஆயில் மசாஜ்க்கென்றே குற்றாலம் செல்வதற்கு ஒரு கூட்டமே இருக்கிறது. அடுத்து குளியல் முடிந்தவுடன் நேரே வெளியே வந்தால் அருவிகளின் ஓரங்களை ஆக்கிரமித்திருக்கும் பஜ்ஜி கடைகள். அதுவும் அங்கே மிளகாய் பஜ்ஜி தான் மிகப்பிரபலம். அதிலே சென்று ஏதாவது ஒன்றை வாயிலே போட்டுவிட்டு, மறுபடியும் குளியலுக்குச் சென்றுவிடலாம். காரணம், அருவியில் குளித்த சில மணித்துளிகளில் பசியெடுக்கத் துவங்கிவிடும். அருவியிலே குளிப்பதில் என்ன ஒரு விசேசம் என்றால், நாம் நம்ம வீட்டு பாத்ரூமில் குளித்துவிட்டு இரண்டு நிமிடம் தலை துவட்டாமல் இருந்தால் ஜல்ப்பு புடிச்சிக்கும். ஆனால் குற்றால அருவியிலே 24 X 7 ஆக குளித்துக்கொண்டே இருக்கலாம். தலை துவட்டவேண்டிய அவசியம் இல்லை. காரணம் மலையின் மேலே இருக்கும் லட்சக்கணக்கான மூலிகைகள் வழி ஓடிவரும் இந்த நீர் நம் உடலுக்கு எந்த வகையிலும் கேடு இல்லை

ஐந்தருவி - Five Falls

குற்றாலம் நகரில் இருந்து கொஞ்சம் தொலைவில் இருப்பது ஐந்தருவி. மெயின் ஃபால்ஸில் இருந்து ஒரு ஐந்து கி மீ தூரத்தில், அழகிய மலைச்சாரல், சிறு சிறு ஆறுகள், பழத்தோட்டங்கள், தங்குமிடங்கள், ஒரு சிறிய ஏரி எல்லாம் தாண்டி வருகிறது ஐந்தருவி. இங்கு அருவி ஐந்து பிரிவாக வந்து விழுவதால்,ஐந்தருவி என்று பெயர். சீசன் இல்லாத பொழுது மூன்று அருவிகள் ஒளிந்து கொண்டு, இரண்டருவியாக விழுந்து கொண்டிருந்தன. அடர்ந்து வளர்ந்து, தன்னுள்ளே பல மர்மங்களை ஒளித்து வைத்துக் கொண்டு அருவியைக் கொட்டுகிறதோ, என்று பிரமிக்க வைக்கிறது அந்த அடர்ந்த கானகங்கள் நிறைந்த மலைத்தொடர். மலையின் மேலே, உயரத்தில் எங்கேயோ, எங்கிருந்தோ பல நூறடிகளுக்கு வெள்ளிக் கம்பியாக ஒரு அருவி விழுந்து மீண்டும் கானகத்திற்குள் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. பழக்கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள பழங்கள் கண்களைக் கவருகின்றன. ஆண்களும், பெண்களும் மீண்டும் வழிய வழிய எண்ணெய் தடவிக் கொண்டிருக்கின்றனர். இதில் பெண்கள் குளிக்க ஒரு அருவி கிளைகளும், ஆண்கள் குழந்தைகளுக்கு 3 கிளைகளும் உள்ளன. இங்கு சபரிமலை சாஸ்தா கோயிலும், முருகன் கோயிலும் உள்ளது.

பழத்தோட்ட அருவி - VIP Falls

ஐந்தருவி போகும் முன்பாக, ஒரு கிளைப் பாதை பிரிந்து, மலையின் மேல் செல்கிறது. கொஞ்ச தூரம் சென்றதும் அரசாங்கத்தின் பழத்தோட்டத் துறை நடத்தும் ஒரு பழப்பண்ணை வருகிறது. அந்த பண்ணையின் உள்ளே நுழைந்தால், மிக அழகிய இரு சின்ன அருவிகள், அருவி நிறைந்து விழும் இடத்தில், ஒரு அற்புதமான தடாகத்துடன் இருக்கின்றன. மிகவும் சுத்தமாக, அந்த அருவிகள் பராமரிக்கப் படுகின்றன. அடர்ந்த வனத்தின் நடுவே இயற்கை எழில் கொஞ்சும் இரு அருவிகள் அங்கே உள்ளன. அதற்குப் பழத்தோட்ட அருவி என்று பெயர். ஆனால் இந்த அருவியில் பொதுமக்கள் குளிக்க முடியாது. வி ஐ பிக்கள் மட்டுமே குளிக்க முடியும். வி ஐ பிக் கள் என்பவர்கள் அதிகாரிகள், அரசியல்வாதிகள், மந்திரிப் பிரதானிகள், அவர்கள் சொந்தங்கள், எம் பி, எம் எல் ஏக்கள், ஆலை அதிபர்கள் போன்ற புதிய மனுதர்மத்தின் உயர்தட்டு மக்களுக்காக மட்டுமே அரசாங்கம் தனியாக ஒரு அருவியை ஒதுக்கி வைத்துள்ளது. அரசாங்கம் பின்பற்றும் இந்த சமூக ஏற்றதாழ்வைக் கேட்பார் இல்லை. சாமானியர்கள் அந்த ஊர்க் காரர்களும் கூட அருகில் நெருங்க முடியாது.

பழைய குற்றாலம் -Old Falls

இங்கும் தண்ணீர்வரத்து ஓரளவிற்கு அதிகமாக இருக்கும். ஆனால் மெயினருவியை ஒப்பிடும் போது இங்கே கம்மிதான். பஸ்ஸில் செல்பவர்களுக்கு குற்றாலம் பஸ் நிலையத்தில் இருந்து பழையகுற்றாலத்திற்கு பஸ்கள் இயக்கப் படுகின்றன

சிற்றருவி

இது நடந்து செல்லும் தூரத்தில் பேரருவிக்கு(Main Falls) மேல் அமைந்துள்ளது. பேரருவியில் கூட்டமாக இருந்தால் மக்கள் இங்கு வந்து குளிப்பர்.

செண்பகாதேவி அருவி

பேரருவியில் இருந்து மலையில் 2 கி.மீ. தூரம் நடைப்பயணத்தில் செண்பகாதேவி அருவியை அடையலாம். இந்த அருவி தேனருவியிலிருந்து இரண்டரை கி.மீ. கீழ்நோக்கி ஆறாக ஓடி வந்து, 30 அடி உயரத்தில் அருவியாக கொட்டுகிறது. அருவிக்கரையில், செண்பகாதேவி அம்மன் கோவில் உள்ளது. சித்ரா பவுர்ணமி நாளில் இந்த கோவிலில் சிறப்பான விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த அருவிகளில் குளிப்பது சற்று ஆபத்தானது. பாதுகாப்பு வளைவுகள் ஏதும் இல்லாத தடாகங்கள் உள்ள அருவிகள். அருவி நீர் நேரே ஒரு தடாகத்தில் விழுந்து, அங்கிருந்து நதியாக கீழே பாய்கிறது. தடாகத்திலும் நீந்திக் குளிக்கலாம். சற்று தவறினாலும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு விடும் அபாயம் நிறைந்த அருவிகள். இருந்தாலும் மலையேறி அந்த அருவிகளில் குளிப்பது ஒரு சாகசம்தான். கூட்டமும் அதிகம் இருக்காது. கீழேயுள்ள அருவிகளில் உள்ள தொல்லைகள் எல்லாம் இல்லாமல் ஏகாந்தமாகக் குளிக்கலாம். அவசியம் தவற விடக்கூடாத அருவிகள்.

தேனருவி

செண்பகாதேவி அருவியின் மேல் பகுதியில் உள்ளது. இந்த அருவி அருகே, பல தேன்கூடுகள் அமைந்துள்ளதால் இந்த இடம் அபாயகரமானது. இந்த அருவிக்கு சென்று குளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

குற்றால சீசன் வந்துவிட்டாலே, அங்கு விதவிதமான பழவகைகள் வந்து குவிந்துவிடும். பெயர் தெரியாத எக்கச்சக்க பழவகைகள் அங்கே கிடைக்கின்றன. மலையின் மீது ரங்குஸ்தான், மலை வாழை, டொரியன், பலா, மங்குஸ்தான், சீதா, கொய்யா, சப்போட்டா, மா, நெல்லி, போன்ற எண்ணற்ற பல வகைகள் காய்க்கின்றன. பாக்கும், தெளிதேனும், பாகும், பலாவும் நிறைந்த மலை. கஷ்பான், சொரியா, டாம்டாம், துரியன் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இதிலே துரியன் பழத்தின் மகிமையை யாருமே அறிவதில்லை. துரியன் பழத்தின் அருமை மலேசியர்களுக்குத் தான் தெரியும்.

குற்றாலத்தில் சீசனுக்கென்றே முளைக்கும் கடைகளில் விதவிதமான வித்தியாசமான பொருட்களெல்லாம் கிடைக்கும்.பலவிதமான குழந்தை விளையாட்டுப் பொருட்கள், சிப்பி அலங்கார மாலைகள், எலக்ட்ரானிக் பொருட்கள் என அனைத்துமே கிடைக்கும்.நேந்திர சிப்ஸ், உருளைக்கிழங்கு சிப்ஸ், மரவள்ளி சிப்ஸ் மற்றும் சோளப்பொறி என விதவிதமான அயிட்டங்களும் அங்கு ஃபேமஸ். குற்றாலத்திலே காலையில் கிடைக்கும் குழாய் புட்டு ருசியோ ருசி. நீங்கள் எங்கு புட்டு சாப்பிட்டிருந்தாலும் அது குற்றாலக் குழாய்ப் புட்டுக்கு ஈடாகாது.
குற்றாலத்தின் அருகே, ஒரு ஐந்து கி மீ சுற்றளவில் பல பார்க்க வேண்டிய இடங்கள் உள்ளன. தென்காசி கோவில் அதில் முக்கியமானது. திருமலைக் குமாரசுவாமி கோவில் என்று ஒரு அழகிய குன்றத்துக் குமரன் கோவில் தவற விடக் கூடாத இடமாகும். குன்றின் மேல் உள்ள கோவிலில் நின்று பார்த்தால் சுற்றிப் பச்சைப் பசலேன வயற்பரப்பும், சுற்றிலும் மேகம் கவிழ்ந்த குற்றால மலைத்தொடருமாக, இயற்கை அன்னையின் எழில் உங்கள் கண்களையும் மனதையும் ஒருங்கே கொள்ளை கொள்ளும். அருகில் உள்ள இலஞ்சி என்ற அழகிய கிராமத்தில் ஒரு அழகிய முருகன் கோவில் உள்ளது. குற்றாலத்தை அடுத்துள்ள செங்கோட்டையைத் தாண்டினால் ஆரியங்காவுக் கணவாயும், கேரளாவும், அச்சன் கோவிலும் வந்து விடும். கேரள எல்லையிலும் சில அருவிகள் உள்ளன. ஆளரவமில்லாத, அற்புதமான அருவிகள் அவை. கொஞ்சம் மலையேறலும், காட்டுக்குள் நடையும் தேவைப் படும், இருப்பினும் அங்குள்ள இயற்கை எழிலின் உன்னதத்தைக் காண்கையில் அந்த உழைப்பு வீண் போகாது. இன்னும் கொஞ்சம் தூரம் சென்றால், குற்றாலத்தின் நெரிசலைத் தவிர்த்தப் பச்சைப் பசேல் என்று போர்த்திக் கொண்ட அற்புதமான பாலருவி இருக்கிறது. தமிழ்நாட்டுப் பகுதிகளில் பாபநாசம் அகத்தியர் அருவியும், பாபநாசம் அணையும், பரிசலில் சென்றால் வரும் பாண தீர்த்தத்தையும் கண்டு குளித்து அனுபவிக்கலாம். ஒரு வாரம் தங்கி, கண்டு, ரசித்து அனுவவிக்க எண்ணற்ற இடங்கள் குற்றாலத்தைச் சுற்றி அமைந்துள்ளன.
இது ஒரு மீள்பதிவு