Friday, March 19, 2010

சின்னக் கண்ணம்மா

”சின்னக் கண்ணம்மா” படத்தில் வரும் இந்தப் பாடலை அலுவலகம் விட்டு காரில் வரும் பொழுது கேட்டேன். இவ்வளவு அற்புதமான பாடலைக் கேட்டு எவ்வளவு நாட்களாகி விட்டது. மனதை வருடும் பாடல் இது. வீட்டிற்கு வந்து உடனே யூ-ட்யூபில் இந்தப் பாடலைப் பார்த்தேன். ஆகா.. தலைவர் மேஸ்ட்ரோவின் கொள்ளை கொள்ளும் மெலடி, கார்த்திக்கின் நடிப்பு, பேபி ஷாமிலியின் கொஞ்சல், பாடல் எடுத்தவிதம் அவ்வளவு அருமை.இந்த பாடல் வரிகள் கேட்டால் உங்களுக்கும் இந்த பாடல் பிடிக்கும்.

எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல
பூக்களின் வண்ணம் கொண்டு
பிறந்த மகளே என் மகளே!
நான் வாழ்ந்தது கொஞ்சம்,
அந்த வாசத்தில் வந்துதித்து
உயிரில்கலந்தாய் என் உயிரே!
உன் பூவிழி குறுநகை!
அதில்ஆயிரம் கவிதையே..!

வானம் தாலாட்ட, மேகம் நீராட்ட
வளரும் வெள்ளி நிலவே!
வாழ்வில் நீ காணும் சுகங்கள் நூறாக
வேண்டும் தங்கச் சிலையே!

தாயின் மடிசேரும் கன்று போல
நாளும் வளர்வாய் என் மார்பிலே!


சேய் உன் முகம் பார்க்க துன்பம் தீரும்
காலம் கனியாகும் தேவியே!
சிறுகிளி போல் பேசும் பேச்சில்
எனை மறந்தேன் நானம்மா...!

கனவில் நினைவாக நினைவில் கனவாக
கலந்தால் காதல் தேவி..
உறவின் பலனாக கடலில் அமுதாக
பிறந்தாய் நீயும் கனியே!

காணக் கிடைக்காத பிள்ளை வரமே
கண்ணில் ஜொலிக்கின்ற வைரமே..!
கோடி கொடுத்தாலும் உன்னைப் போல
செல்வம் கிடைக்காது வாழ்விலே

புள்ளி மானே தூங்கும் மயிலே
என்னை மறந்தேன் நானம்மா...
(எந்தன் வாழ்க்கையின்)


படம் : சின்னக் கண்ணம்மா
இசை : இளையராஜா
பாடியவர் : மனோ

காணொளியைக் காண இங்கே சொடுக்கவும்.



Friday, March 12, 2010

எனக்கு பிடித்தப் பத்து பெண்கள்...


என்னை இந்த தொடர்பதிவுக்கு அழைத்த தேனம்மைக்கு நன்றிகள் பல. பெண்களைப் பற்றி எழுதும் பொழுது என் நினைவில் முதலில் வந்த பெண்கள் இவர்கள் தான். ஒரே துறையில் பலபேர் இருந்தாலும் நிபந்தனையில் கூறியிருப்பது போல் ஒருவரை மட்டும் குறிப்பிட்டிருக்கிறேன்.

நிபந்தனைகள் :-

1. உங்களின் சொந்தக்காரர்களாக இருக்க கூடாது.,
2. வரிசை முக்கியம் இல்லை.,
3. ஒரே துறையில் பல பெண்மணிகள் நமக்கு பிடித்தவர்களாக இருக்கும்,
4. இந்த பதிவுக்கு வெவ்வேறு துறையில் உள்ள நபர்களாக இருக்கவேண்டும்



காவல்துறை :கிரண் பேடி

இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி. ஆசியாவின் நோபல் பரிசு பெற்ற முதல் அரசு அதிகாரி. ஆசிய டென்னிஸ் பட்டம் பெற்ற முதல் இந்திய விளையாட்டு வீராங்கனை. 2007ஆம் ஆண்டு விருப்பப்பணி ஓய்வு பெற்றபின் சமூக சேவகியாக நலப்பணிகள் செய்து வருகிறார்.தமது காவல் பணிக்காலத்தில் வகித்த பல்வேறு பதவிகளிலும் சிறப்புற பணியாற்றிப் புகழ் பெற்றவர். தில்லியின் சிறைத்துறை பொது ஆய்வாளராக இருந்தபோது, 10,000 கைதிகளை வைத்திருக்கக்கூடிய உலகின் மிகப்பெரிய சிறைகளில் ஒன்றாகக் கருதப்படும் திகார் சிறையில் அவராற்றிய சீர்திருத்தங்களும், முன்னேற்றங்களும் பலரின் பாராட்டைப் பெற்றதோடன்றி, 1994ஆம் ஆண்டிற்கான மதிப்பு மிக்க ரமன் மகசேசே விருது பெற ஏதுவாய் இருந்தது.

பாடகி : பி. சுசிலா

இசை உலகில், இன்பம் தரும் குயிலின் குரல் கொண்ட தமிழ் நெஞ்சங்களை இசையில் வாழவைத்துக்கொண்டிருக்கும், என்றும் வற்றாத இன்ப ஊற்று பி . சுசிலா அவர்கள். அவரின் குரலை கேட்டாலே நம்மை மறந்தே விடுவோம் திரை உலகில் ஒரு கலக்கு கலக்கி மக்களை தம் வசமாக்கிய குரல் கொண்டவர் பி .சுசிலா அவர்களே. அவர் பாடிய எத்தனை பாடல்கள் நம்மை இன்பத்தில் கொண்டு சென்றிருக்கிறது. கலைமகள் கைப்பொருளே உன்னை கவனிக்க ஆள் இல்லையோ.. என்ற பாடல் கேட்கும் போது அவரின் குரல் நெஞ்சை வருடிக் கொள்ளும்.

மருத்துவம் : டாக்டர் கமலா செல்வராஜ்

நடிகர் ஜெமினி கணேசனின் மகள். சோதனைக்குழாய் மூலம் குழந்தைகளை உருவாக்குவதில் நிபுணராக விளங்குபவர் டாக்டர் கமலா செல்வராஜ். குழந்தை இல்லாத எத்தனையோ பேருக்கு இவர் சோதனைக்குழாய் மூலம் குழந்தை உருவாக்கி அவர்களின் துயரைத் துடைத்துள்ளார். டாக்டர் கமலா அவர்கள் தன் தந்தையின் புகழை உலகிற்கு எடுத்துரைக்க " காதல் மன்னன் " என்ற பெயரில் 90 நிமிட குறும்படம் எடுக்கிறார். இவர் ஆன்மீக நூல் ஒன்றும் எழுதியிருக்கிறார்.

அரசியல் : இந்திரா காந்தி

இந்திரா காந்தி இந்தியாவின் மூன்றாவது பிரதமர் ஆவார். அவர், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளும் ஆவார். இவர் ஒரு சிறந்த அரசியல் திட்டமிடலாளரும், சிந்தனையாளரும் ஆவார். அரசியல் அதிகாரத்துக்கான அசாதாரண பற்றை அவர் கொண்டிருந்தார். ஆணாதிக்க மனப்பாங்கைக் கொண்ட இந்திய சமுதாயத்தில், ஒரு பெண்ணிடம் எதிர்பார்க்கப்படும் தன்மைகளுக்கு மாறாக வலுவான அதிகார பலத்துடன் மிகவுயர்ந்த பதவியிலிருந்து நாட்டை வழி நடத்தினார்.

பாடலாசிரியர் : கவிஞர் தாமரை

தாமரை ஒரு குறிப்பிடத்தக்க தமிழ் பெண் கவிஞர் மற்றும் திரைப்பட பாடலாசிரியர். ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்" என்ற கவிதைத் தொகுப்பை அளித்துள்ள தாமரை, சிறுகதைகளும் எழுதக் கூடியவர். "சந்திரக் கற்கள்", "என் நாட்குறிப்பின் நடுவிலிருந்து சில பக்கங்கள்" ஆகிய சிறுகதைத் தொகுப்புகளைப் படைத்துள்ளார். இயக்குனர் சீமானின் "இனியவளே" திரைப்படத்திற்காக, தென்றல் எந்தன் நடையைக் கேட்டது என்ற பாடல் மூலம் தமிழ்த் திரையுலகில் முதல் பெண் பாடலாசிரியராக தாமரை அறிமுகமானார். "வசீகரா, அழகிய அசுரா, தவமின்றிக் கிடைத்த வரமே, இஞ்சேருங்கோ... எனப் புகழ்மிக்க பாடல்கள் உள்பட நூற்றுக்கும் மேலான பாடல்களை இயற்றியுள்ளார்.

நடிகை : ஐஸ்வர்யா ராய்

இவரை பற்றி சொல்ல என்ன இருக்கிறது. அழகு என்றால் அது ஐஸ்வர்யா ராய் தான். எல்லோருக்கும் இவரைப் பிடிக்கும். மாடல், உலக அழகி மற்றும் பாலிவுட் நடிகை.

சமூகச் சேவை : அன்னை தெரசா

அன்னை தெரேசாவை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. கல்கத்தாவில் பிள்ளைகளுக்கு கல்வி அளிப்பதோடு மட்டும் நின்று விடாமல் பிள்ளைகளைக் குளிப்பாட்டுவது, சாக்கடை சுத்தம் செய்வது என பல சேவைகளை மற்ற ஆசிரியர்களோடு இணைந்து செய்ய ஆரம்பித்தார். அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, தெரு தெருவாகப் போய் யாசகம் கேட்டு தனது சேவை மையங்களுக்கு நிதி திரட்டுவது வழக்கம். ஒரு நாள், ஒரு கடைக்கு முன் சென்று நின்று யாசகம் கேட்டுக் கொண்டு இருந்தார். அந்தக் கடைக்காரர் வெற்றிலை பாக்கு போட்டுக் கொண்டு பார்த்தும் பார்க்காதது போல் இருந்தார். கடைக்காரரிடம் இருந்து எதையாவது வாங்கிட வேண்டும் என்று உறுதியுடன் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தார். கடைக்காரர் தெரசாவை கோபமாக பார்த்து விட்டு ‘”தெரசா நீட்டிய கையில் எச்சிலைத் துப்பினார்”. அப்போது சற்றும் மனம் தளராமல் “மிக்க நன்றி! நீங்கள் கொடுத்தது எனக்கு, என் விடுதியில் இருக்கும் அனாதை குழந்தைகளுக்கு ஏதாவது கொடுங்கள் என்று கேட்டார்” அந்தக் கடைக்காரர் “இப்படி ஒரு சகிப்புத்தன்மை உடைய பெண்ணை இப்பொழுதுதான் முதன் முறையாக பார்க்கிறேன்” என்று கூறி விட்டு நொடிப் பொழுதில் கல்லாப்பெட்டியில் இருந்த மொத்த பணத்தையும் எடுத்து அன்னை தெரசா நீட்டிய இரு கைகளிலும் வைத்து விட்டார்..

விளையாட்டு : பி.டி.உஷா

தங்க மங்கை,​​ பயொலி எக்ஸ்பிரஸ் என்ற புனைப் பெயர்களுக்குச் சொந்தக்காரர் இந்திய தடகள வீராங்கனை பி.டி.​ உஷா.​ நீண்ட இடைவெளிக்குப் பிறகு சர்வதேச அரங்கில் தடகளப் போட்டிகளில் இந்தியாவுக்கு பெருமைச் சேர்த்தவர். இவர் தான் பங்கேற்ற சர்வதேச போட்டிகள் மூலம் 101 பதக்கங்களை வென்றுள்ளார். 1983-89 வரையிலான காலத்தில் பல்வேறு போட்டிகள் மூலம் 13 தங்கப் பதக்கங்களை வென்றார். இந்திய அரசு அவரை கவுரவிக்கும் வகையில் அவருக்கு பத்மஸ்ரீ,​​ அர்ஜுனா விருதுகளை வழங்கியதுடன்,​​ ரயில்வே துறையில் அதிகாரி அளவிலான பதவியும் வழங்கி கவுரவித்தது.

நாட்டியம் : பத்மா சுப்ரமண்யம்

இந்திய பாரம்பரிய கலையான பரதநாட்டியத்தில் புகழ் பெற்றவர். நாட்டியம் கற்கும் எல்லோருக்கும் ஒரு ரோல் மாடலாக இருப்பவர். இவரின் பன்முகங்கள் நடன மங்கை, நடன ஆசிரியர், நட்டுவாங்கம் செய்பவர், பாடகி, கலை ஆராய்ச்சியாளர்,ஆசிரியர், எழுத்தாளர் மேலும் பல. இவர் வாங்கிய பட்டங்கள் : டாக்டர், பத்மபூஷன், பத்மஸ்ரீ, சங்கீத நாடக அககாடமி அவார்ட், கலைமாமனி, நாத பிரம்மம் மேலும் பல.


வணிகம் : சுதா நாராயணமூர்த்தி

இன்பாசிஸ் நாராயனமூர்த்தியின் மனைவி தான் சுதாமூர்த்தி. இன்போசிஸ் பவுன்டேஷன் என்னும் அமைப்பை நடத்தி இந்தியாவின் கிராமப்புறங்களில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளைத் திறந்துள்ளார். எளிமையை இவரிடம் இருந்து தான் கற்க வேண்டும். தன்னம்பிக்கை கொடுக்கும் பல புத்தகங்கள் எழுதியுள்ளார். இவரைப் பற்றித் தெரியாதவர்கள் இந்த ஒளியோட்டங்களைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

வாழ்க்கையின் ஆதாரம் - பாகம் -1
வாழ்க்கையின் ஆதாரம் - பாகம் -2

இந்த பதிவை தொடர நான் அழைப்பது :-

கீதப்பிரியன் - கார்த்திக்கேயன்.
ஹாலிவுட் பாலா
அரசூரான்
நாஞ்சில் எக்ஸ்பிரஸ்
ப்ரியமுடன் வசந்த்
வாசகன் - பெருமாள்
Tamil Film Critic