Monday, November 30, 2009

ஓட்டவாய் மாரிமுத்து பக்கங்கள் - 01/12/2009

டீல் (ஆர்) நோ டீல்


ஒரு வழியாக “நன்றி தெரிவித்தல் நாள்” முடிந்தது. ஒரு நாளைக்கு முன்னதாகவே நண்பர் ஜெய் வீட்டுக்கு சென்றுவிட்டோம். அன்று இரவு ஜெய் வீட்டிலும், துரை வீட்டிலும் சேர்ந்து சமைத்து பரிமாரினார்கள். அன்பையும் சேர்த்து தான். மறுநாள் யாருக்கெல்லாம் என்ன வாங்கலாம் என்று நீண்ட நேரத்திற்குப் பின் முடிவானது. அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கடைக்குச் சென்று அவர்கள் வாங்க நினைத்தையும், நண்பர்களுக்கு அந்த கடையில் வாங்க நினைத்ததையும் ஒரு முறைக்கு இரு முறை சரிபார்த்துக் கொண்டோம். இரவு கொஞ்சம் நேரம் இருந்ததால் மலைக்கோட்டைப் படம் நான்கு குடும்பமும் ’போஸ்(Bose)’ ஹோம் தியேட்டரில் பார்த்தோம். அதிகாலை நான்கு மணிக்கு முடிவானது, நாலரை மணியானது கிளம்புவதற்கு. முதலில் வால்மார்ட் சென்றோம். எனக்கு நான் எதிர்பார்த்த ஒன்றும் கிடைக்கவில்லை. நண்பர்கள் டீலில் கிடைத்த சில பொருட்களை வாங்கினார்கள். நாங்கள் செல்வதற்கு முன்பே மார்ட் திறந்திருந்தால் நீண்ட வரிசை பில் போடுவதற்காக நின்றுக் கொண்டிருந்தது. அடுத்து சில கடைக்களுக்கு சென்று நோட்டமிட்டோம். சில எலக்ட்ரானிக்ஸ் மற்றும் குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்கள் வாங்கினோம். போன வருடத்தை ஒப்பிடும் போது இந்த வருடம் அவ்வளவாக டீல் இல்லை. காலை உணவுக்கு வாஃபல் ஹவுஸ்(Waffle House) சென்றோம். திவ்யமான காலை உணவு. காபிக் கோப்பையை நிரப்பிக் கொண்டே இருந்தார்கள்.

பிறகு ’பெஸ்ட் பை’(Best Buy) சென்றோம். சாதாரண நாட்களில் இருக்கும் விலையைத் தான் விலை குறைத்து டீல் தருவதாக “ஹைலைட்” கொடுத்து மொத்தமாக குவியலாக வைத்திருந்தார்கள். விவரம் தெரியாதவர்கள் கார்ட்டில்(Cart) அள்ளிக் கொண்டு போனார்கள். எல்.சி.டி (LCD)டீவி போய் எல்.இ.டீ(LED) டீவி மார்க்கெட்டில் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. போன வருடம் புது வரவாக இருந்த ப்ளுரே(Blu-ray)-டிவிடி ப்ளேயர்கள் இந்த வருடம் கணிசமாக விலைக் குறைந்ததை காணமுடிந்தது. டிஜிட்டல் கேமராக்களும், சில எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உண்மையில் விலை குறைந்திருந்தது. அதெல்லாம் மார்க்கெட்டில் அவுட்டேட் ஆகியிருந்ததால் வாங்க ஆளில்லை. இந்த வருடம் குளிரும் மிக குறைவாகவே இருந்தது. அமெரிக்காவில் பெரும்பாலான கம்பெனிகளில் ஆட்குறைப்பு இன்னும் நடந்துக் கொண்டிருப்பதால் மக்களிடம் பணப்புழக்கம் மற்ற ஆண்டுகளை விட இந்த ஆண்டு கொஞ்சம் குறைவு என்பதை ஒவ்வொரு கடையிலும் கூட்டம் குறைந்திருப்பதன் மூலம் பார்க்க முடிந்தது. நம்ம ஊரில் புது படங்களுக்கு பிளாக்கில் டிக்கெட் விற்ப்பது போல் இங்கும் அதிகாலை ஒருமணியளவில் வரிசையில் நின்று முதல் இருபது பேருக்குக் கிடைக்கும் லேப்டாப்களை பிளாக்கில் விற்றார்கள்.

மதியம் ’டி.ஜி.ஐ. ஃபிரைடே’(T.G.I Friday) ஹோட்டலுக்குச் சென்றோம். ஒரு ஆப்ரிக்கன் அமெரிக்கன் பணிப்பெண் அன்புடன் வரவேற்று எங்களை அமர வைத்தார். நம்மூர் போலில்லாமல் தண்ணீரைக் கூட கேட்டுத்தான் பெறவேண்டியிருக்கிறது. மெயின்கோர்ஸ் ஆர்டர் எடுத்துக் கொண்டாள். எல்லோருக்கும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஸ்பைஸியாக வேண்டும் என்று சொன்னோம். சிறிது நேரம் கழித்து உணவைச் சமைக்கும் செஃப்(Chef) எங்கள் டேபிளிற்கு வந்து மண்டியிட்டு உட்கார்ந்து நீங்கள் கொடுத்திருக்கும் ஆர்டர்களில் ஸ்பைஸி சேர்த்தால் அவ்வளவு நன்றாக இருக்காது. உங்களுக்கு ஸ்பைஸியாக வேண்டும் என்றால் மெனுவில் வேறு சில அயிட்டங்களை நீங்கள் தேர்வு செய்யலாம் என்று அன்புடன் கேட்டார். நாங்கள் ஸ்பைஸி இல்லை என்றால் பரவாயில்லை. நாங்கள் தேர்வு செய்த உணவையே உரப்பில்லாமல் கொடுங்கள் என்று கேட்டோம். சுடச்சுட ஆவி பறக்க மதிய உணவு எங்கள் மேசைக்கு வந்தது. அப்பொழுது ஜெய் நிறைய ஹோட்டல்கள் பணப்புழக்கம் இல்லாமல் மூடப்படுவதாக சொன்னார். ஹோட்டல்கள் மூட்ப்படுவதால் வாடிக்கையாளர்களைக் கவர அந்த செஃபே நேரிடயாக வந்து நம்மிடம் பேசுவதாகவும் சொன்னார். நாங்களும் ஆமோதித்தோம். அந்த பனிப்பெண்ணிற்கு 18% டிப்ஸ் கொடுத்துவிட்டு நகர்ந்தோம்.


அடுத்து உடைகள் எடுப்பதற்காக மேஸிஸ் சென்றோம். ஆண்கள் பகுதிக்குச் சென்று தேடினோம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை எந்த டீலும் இல்லை. சாதாரணமாக வார இறுதி நாட்களில் கிடைக்கும் டீல் கூட பிளாக்பிரைடேயில் கிடைக்கவில்லை என்பது இந்த வருட ஆச்சர்யம். மேஸிஸ் சென்று ஒன்றும் எடுக்காமல் வெறும்கையுடன் திரும்பினேன். ஆக மொத்தம் இந்த வருட பிளாக்ஃபிரைடே ‘நோ டீல்’ஆகத்தான் எனக்கு முடிந்தது. ஒரு குட்டித் தூக்கத்திற்குப் பிறகு ‘ஏகன்’ படத்துடன் இரவு உணவு எடுத்துக் கொண்டோம்.



Wednesday, November 25, 2009

டிஜிட்டல் ஒவியங்கள் - -ஹோம் ஸ்வீட் ஹோம்

இன்று முதன் முறையாக என்னுடைய வலைத்தளத்திற்கு அவார்ட் கிடைத்துள்ளது. கொடுத்தவர் மேனகாசத்யா அவர்கள். உண்மையிலே அவர்களுக்கு உயர்ந்த உள்ளம். தான் பெற்ற பரிசை அடுத்தவர்களுக்கும் கொடுத்து அழகு பார்க்கும் மனசு. நன்றி மேனகா. இந்த விருதை நான் மூன்று பேருக்குக் கொடுக்கிறேன்.





நான் ஏற்கனவே சொன்னது போல் ”நன்றி தெரிவித்தல் நாளிற்காக” இங்கு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை. மீண்டும் அடுத்த வாரம் ஒரு நல்ல தலைப்புடன் உங்களை சந்திக்கிறேன்.













Thursday, November 19, 2009

ஓட்டவாய் மாரிமுத்து பக்கங்கள்- 21/11/2009

இதுவரை எழுதிய பதிவுகளில் என் சினிமா விமர்சனதிற்குத் தான் அதிக ஓட்டுகள் கிடைத்துள்ளது. சரி விமர்சனம் மட்டும் இல்லாமல் நிறைய பொதுவான விஷயங்களைப் பற்றியும் எழுதலாம் என்று இந்த தலைப்பை எடுத்துள்ளேன். மாரிமுத்து என்ற பெயரில் யாராவது இதைப் பார்த்தால் மன்னிக்கவும். சும்மா, கேட்சியாக(Catchy) இருக்கட்டும் என்று இந்த பெயரை வைத்தேன். வேறு எந்த உள்குத்தும் கிடையாது. வாரத்திற்கு குறைந்தது மூன்று ஆங்கிலப் படம் பார்க்கும் பழக்கம் இன்னும் இருந்து கொண்டிருக்கிறது.அந்த பழக்கத்தை இன்னும் விட முடியவில்லை.விட முயற்சிக்கவில்லை என்பது தான் உண்மை.எந்த ஒரு மொழிப் படமானாலும் பார்ப்பேன்.எத்தனையோ படங்கள் பார்திருந்தாலும் கடைசியாக பார்த்தப் படத்தைப் பற்றி மட்டும் பார்ப்போம்.
ஃபிளாஷ் ஆப் ஜீனியஸ்


இப்படி ஒரு படம் தமிழிலோ அல்லது இந்திய மொழிகளிலோ எடுக்க முடியுமா என்று யோசித்துப் பார்த்தேன். என் சிறு அறிவிற்கு எட்டியவரையில் முடியாது என்று தான் நினைக்கிறேன். கீதப்பிரியன் மிக அழகாக அவருடைய பதிவில் எழுதியிருந்ததைப் பார்த்தேன். அந்த படத்தைப் பற்றிய சிறு விமர்சனம் மட்டும் பார்க்கலாம். 1953ல் அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணதில்(Detroit) ராபர்ட் கியேர்ன்ஸ்(Robert Kearns) என்ற பேராசிரியர் தன்னுடைய கல்யாண தினத்தன்று குடும்பதுடன் விருந்து சாப்பிடும் போது, ஷேம்பைன் பாட்டில் கார்க் அவர் இடது கண்ணில் பட்டு கண் கலங்கிவிடுகிறது. அந்த வலியுடன் காரில் வரும் போது நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது. அப்பொழுது, அந்த காரின் மழை நீரைத் துடைக்கும் கருவி(வைப்பர்) ஒரே நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒவ்வருமுறையும் இயங்குவதையும், அதில் இப்பொழுது இருப்பது போல் இல்லாமல் அது இயங்கும் இடைவெளியை கூட்டவோ குறைக்கவோ முடியாத நிலையில் இருந்தது. அவர் அதை ஆராய்ந்து, நமது கண் இமைகள் இயங்கும் நேரத்தையும் ஒப்பிட்டு ஒரு புது வைப்பரைக் கண்டு பிடிக்கிறார். முதலில் அதை அவருடைய வீட்டிலுள்ள மீன் தொட்டியில் சோதனை செய்து வீட்டிலுள்ளவர்களை வியப்பில் ஆழ்த்துகிறார்.

அவருடைய நண்பர் உதவியுடன் அதை ஃபோர்ட் கார் கம்பெனியில் தனது ஆராய்ச்சியை முன்னோட்டம் செய்து காண்பிக்கிறார். அதை ஏற்றுக் கொண்ட ஃபோர்ட் நிறுவனம் தங்களிடம் ஃபார்முலாவை நல்ல விலைக்கு கொடுக்குமாறு கேட்கிறது. ராபர்ட் அதை தானே தாயாரித்து தருவதாகக் கூறுகிறார். அதை ஃபோர்டும் ஒத்துக்கொள்ள அவரும் ஒரு கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து தாயாரிக்கும் முயற்சியில் இறங்குகிறார். சிறிது காலம் கழித்து ஃபோர்டிலிந்து எந்த அழைப்பும், தகவலும் வராததால், தற்செயலாக ஃபோர்ட் கன்வென்ஷன் செண்டரில் புதிதாக அந்த வருடம் வெளியிடும் மஸ்தாங்(Mastang) காரில் அவர் ஆராய்சியில் உருவான அந்த வைப்பர் பொருத்தப் பட்டு அதையே மூலக் காரணமாக வைத்து ஃபோர்ட் விளம்பரம் செய்துக் கொண்டிருப்பதையும் பார்க்கிறார். தன்னுடய ஃபார்முலா திருடப் பட்டிருப்பதை கண்டு ஆத்திரம் அடைந்து ஃபோர்ட் நிறுவனத்தின் மேல் வழக்கு தொடர்கிறார். ஃபோர்ட் சில ஆயிரங்களை(டாலர்ஸ்) தருவதாகவும் வழக்கை வாபஸ் வாங்க சொல்கிறார்கள். அவர் அந்த பணத்தை வாங்கி கொள்கிறேன், ஆனால் ஒரு நாளிதழில் அவருடைய பார்முலாவை ஃபோர்ட் திருடியதாக் ஒரு சின்னச் செய்தியைப் போடும்படி கேட்கிறார். ராபர்ட் வழக்கிலிருந்து அவருடைய வக்கில் வெளியேருகிறார். அவருடைய குடும்பமும் அவரை விட்டுப் பிரிகிறது. எந்த வக்கிலும் அவருக்காக வாதாட வரவில்லை. தன்னுடைய பேராசிரியர் பதவியைத் துறந்து தானே வாதாட முடிவெடுத்து 5 வருடம் சட்டம் படிக்கிறார். சட்டம் முடித்த பிறகு ஃபோர்ட் கம்பெனி மேல் அந்த வழக்கை தொடர்கிறார்.

இந்த தடவை 30 மில்லியன் டாலர்ஸ் ஃபோர்ட் தர விரும்புவதாகவும், ஆனால் எந்த மன்னிப்பும் கேட்க முடியாது என்றும் ஃபோர்டின் பிரதிநிதி கூறுகிறார். அதை ராபட் மறுக்கிறார். வாதம் தொடங்குகிறது. ஃபோர்ட் தலைசிறந்த வக்கில்களை வைத்து ராபட்டிற்கு எதிராக வாதடுகிறது. இந்த ஃபார்முலா(Pattern) ஏற்கனவே இருந்ததாகவும் அதைத்தான் ராபர்ட் வேறு முறையில் கொடுக்க நினைத்தார் என்றும் நீதிமன்றத்தை நம்ப வைக்கிறார்கள். ராபர்ட் இதற்கு முன்னால் எந்த பேட்டர்னில் இருந்தது, தான் எந்த பேட்டர்னில் கண்டுபிடித்து என்பதை டெக்னிக்கல் விளக்கத்துடன் கோர்ட்டுக்கு விளக்கம் கொடுக்கிறார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் ராபர்ட்டின் கண்டுபிடிப்பு அவருடையது தான், அதை ஃபோர்ட் திருடியது திட்டவட்டமாகத் தெரிகிறது என்றும், அதனால் 10.1 மில்லியன் டாலர்ஸ் அபராதம் ராபர்ட்டிற்கு ஃபோர்ட் கொடுக்கவேண்டும் என்று தீர்ப்பளிக்கிறது.
சில சுவாரஸ்யங்கள்
  • இந்த கதை ஒரு உண்மைச் சம்பவம். இன்றும் ஃபோர்ட் மேல் இந்த களங்கம் இருக்கிறது. ஆனால் என்ன காரணத்தினாலோ இந்த படம் உண்மை சம்பவத்தை 'தழுவி' எடுக்கப் பட்டது என்று டைட்டில் கார்ட்(Based on True Story) போடுகிறார்கள்.
  • ஃபோர்ட் நிறுவனத்திலே அந்த முன்னோட்டம்(Demonstration)எடுக்கப் பட்டிருக்கிறது. நம்ம ஊரில் ஒரு நிறுவனத்தைத் தாக்கி நேரிடையாக எடுக்க முடியுமா? எடுத்தால் அந்தப் படம் வெளிவருமா? மணிரத்னம் கூட குரு படத்தில் அம்பானி குடும்பத்தை மறைமுகமாத் தான் எடுத்திருப்பார்.
  • ராபர்ட்டிற்கு அழகான குடும்பம். அவருடைய ஆராய்சியை உற்சாகப் படுத்துத்துகிறார்கள். அவருடைய பிடிவாதத்தைக் கண்டு நட்புடன் பிரிந்து செல்கிறார்கள். இறுதியில் அவருடைய மண உறுதியைக் கண்டு அவருடைய பிள்ளைகள் எல்லோரும் அந்த வழக்கிற்கு உதவுகிறார்கள். வழக்கில் வென்ற பிறகு அவருடைய மனைவி மட்டும் நன்றி சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
  • இந்த வழக்கு முடிந்த பிறகு இதே ஃபார்முலாவை க்ரைசலர் கார்ப்பரேசனிற்கு(Chrysler Corporation) விற்று 18.7 மில்லியன் டாலர் பெற்றார்.
  • இந்த படத்தின் நீதிமன்றத்தில் வழக்கு வாதாடும் காட்சி மிக நேர்த்தியாகவும், சுவாரஸ்யமாகவும் எடுத்திருக்கிறார்கள். தீர்ப்பிற்கு முந்தய தினம் ஃபோர்டின் பிரதிநிதி ராபர்ட்டின் வீட்டிற்கு வந்து வழக்கில் இருந்து விலகிக் கொண்டால் 30 மில்லியன் டாலர்ஸ் தருவதாகவும், நாளை தீர்ப்பில் தோற்றால் நீங்கள் வெறும் கையுடன் தான் வீடு திரும்ப வேண்டும் என்று பேரம் பேசுகிறார். ராபர்ட் தன் குழந்தைகளிடம் அவருக்கு என்ன பதில் சொல்லலாம் என்று கேட்கிறார். குழந்தைகளும் ராபட்டிற்கு ஆதரவாகவே நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்கிறார்கள். ஒருவருடைய வெற்றி தோல்வி என்பது நம்மைச் சுற்றிஉள்ளவர்கள் கொடுக்கும் நம்பிக்கையில் தான் பாதி இருக்கிறது என்பதை இது விளக்குகிறது.
  • நம்மிடம் உண்மை / நேர்மை / உறுதி இருந்தால் எத்தனை காலம் ஆனாலும் நீதி நமக்கு கண்டிப்பாக கிடைக்கும் என்பது இந்த படத்தில் நாம் தெரிந்துகொண்டது.

இந்த படத்தின் முன்னோட்டம், புகைப்படங்கள், நடித்தவர்கள் மற்றும் இயக்கியவர்களைப் பற்றி தெரிந்துக் கொள்ள இங்கே சொடுக்கவும்.


நம்முடைய இயக்குனர்களும் கொஞ்சம் மூளையைக் கசக்கினால் இந்த மாதிரி ஒரு தரமான படம் தமிழில் வருவதற்கு சாத்தியங்கள் உண்டு. கமல் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் சொன்னது போல் நல்ல படங்களை வரவேற்க தவறுவதில் ரசிகர்கள் பங்கும் உண்டு என்பது நிதர்சனமான உண்மை.

Wednesday, November 11, 2009

நன்றி தெரிவித்தல் நாள் - தேங்ஸ் கிவ்விங் டே


அமெரிக்கர்களுக்கு அடுத்து திருவிழாக் காலம் தொடங்கி விட்டது. இந்த திருவிழா அமெரிக்காவிலும், கனடாவிலும் முக்கியமாக கொண்டாடப் படுகிறது. எல்லோருக்கும் நான்கு நாட்கள் தொடர்ந்து விடுமுறை கிடைக்கும். ஆரம்பத்தில் இது கிருத்துவ மதத்தின்பேரில் கொண்டாடினாலும் இப்பொழுது மதங்களுக்கு அப்பாற்பட்டு இந்த திருவிழா நடக்கிறது. இந்த நன்றி தெரிவித்தல் நாள் கிட்டத்தட்ட தமிழகத்தில் கொண்டாடப்படும் "பொங்கல்" மற்றும் "உழவர்" திருநாளைப் போலவே அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் நாலாவது வியாழக் கிழமையிலும், கனடாவில் அக்டோபர் மாதம் இரண்டாவது திங்கட் கிழமையிலும் நடைபெறும். இந்த வருடம்(2009)நவம்பர் 26 ஆம் தேதி இங்கு நடைபெறுகிறது.

தோற்றம்

சுமார் 400 வருடங்களுக்கு முன்னால் இந்த திருவிழா ஆரம்பித்ததாக வரலாறு கூறுகிறது. 1620 இல் ஒரு கப்பல் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை இங்கிலாந்திலிருந்து அட்லான்டிக் கடல் மார்க்கமாக ஒரு புனிதப்பயணம் மேற்கொண்டது. அவர்கள் அமெரிக்காவில் மசாசூட் என்ற மாகாணத்தில் வந்து இறங்கினார்கள். அவர்கள் வந்து இறங்கிய நேரம் கடுமையான குளிர் மற்றும் பனியினால் அவதிப்பட்டார்கள். அந்த நேரம் அவர்களால் எதையும் பயிரிட்டு உண்ண முடியாமல் பசியால் வாடினார்கள். கடுமையான நோய்களும் அவர்களைத் தாக்கியது. அதில் சிலர் இறந்தும் போனார்கள். அந்த நேரம் அங்குள்ள சிவப்பிந்தியர்கள்(Red Indians) அவர்களுக்கு உணவு கொடுத்து, அந்த பரிச்சயம் இல்லாத மண்ணில் எப்படி பயிர்களை விளைவிப்பது என்பதையும், மீன் பிடிக்கவும் கற்றுக் கொடுத்தார்கள். 1621 ம் வருடம் அந்த மண்ணில் சோளக்கருது, பீன்ஸ், பார்லி மற்றும் பூசணிக்காய் போன்றவற்றை விளைவித்து அறுவடை செய்தார்கள்.


தக்க சமயத்தில் தங்களைக் காப்பாற்றியதற்காகவும், உணவுகொடுத்து ஆதரித்தமைக்காகவும் நன்றி செலுத்தும் விதமாக அமெரிக்கர்களுக்கு ஒரு விருந்து கொடுத்தார்கள். அந்த விருந்தில் வான்கோழி முக்கிய உணவாகப் பரிமாறப்பட்டது. விருந்து முடிந்ததும் சில விளையாட்டுக்களையும் அமெரிக்கர்களுக்கு சொல்லிக் கொடுத்தார்கள். இதைத் தான் இன்றுவரை நன்றி தெரிவித்தல் நாளாக அமெரிக்கர்கள் கொண்டாடுகிறார்கள்.


அதிலிருந்து அமெரிக்கா வந்த காலனிக்காரர்கள் ஒவ்வருவருடமும் அறுவடை முடிந்ததும் நன்றி தெரிவிக்கும் நாளை விருந்துடன் கொண்டாட ஆரம்பித்தார்கள். அமெரிக்கா தனிநாடாக அறிவிக்கப் பட்டதும், காங்கிரஸ் கூட்டத்தில் ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து அதை நன்றி தெரிவித்தல் நாளாகவும், விடுமுறை நாளாகவும் அறிவித்தார்கள். ஜார்ஜ் வாஷிங்டன் நவம்பர் 26ம் தேதியை தேங்ஸ்கிவ்விங் டே என்று திட்டவட்டமாக அறிவித்தார். 1863ம் ஆண்டு ஆப்ரகாம் லிங்கன் நவம்பர் நாலாவது வியாழக் கிழமையை தேங்ஸ்கிவ்விங் டே என்று மாற்றினார். அதிலிருந்து நவம்பர் நாலாவது வியாழக் கிழமையை இன்றுவரை அமெரிக்கர்கள் பின்பற்றி வருகிறார்கள்.

வழக்கம்

நன்றி தெரிவித்தல் நாளை அதே கலாச்சாரத்துடன் பழமை மாறாமல் ஒவ்வருவருடமும் வழக்கமாக கொண்டாடி வருகிறார்கள்.பெற்றோரை விட்டு வெகு தூரத்தில் இருப்பவர்கள், உறவினரைப் பிரிந்தவர்கள் எல்லோரும் அந்த குடும்பத்தில் மூத்தவர் வீட்டில் அன்று கூடுவார்கள்.அன்று ஒருவருக்கொருவர் பரிசுகளைப் பரிமாறிக் கொள்வர். ஏழைகள் மற்றும் வீடு இல்லாதவர்களை தொண்டு நிறுவனங்கள் உணவு, உடை கொடுத்து பரிசுப் பொருட்களையும் கொடுத்து அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பது வழக்கம்.

விருந்து

வியாழன் அன்று இரவு நன்றி தெரிவித்தல் நாள் விருந்து நடைபெறும். அன்று முக்கிய உணவாக வான்கோழி(Turkey), மக்காச்சோளம்(Corn), பூசணிக்காய் மற்றும் கிரேன்பெர்ரி(Cranberry) வகைப் பழங்கள் இருக்கும். வான்கோழியில் சில மசாலாக்களை வைத்து அடுப்பில் நீண்ட நேரம் அதை வறுத்து சுடச்சுட பரிமாறப்படும். கிரேன்பெர்ரியில் சில நோய்களைத் தீர்க்கும் மருந்து இருப்பதால் அதை பழமாகவோ, ஜூஸாகவோ பரிமாறப்படும்.
மற்ற நாடுகளில்

கிரேக்க, ரோம, எகிப்திய, எபிரேயக் கலாச்சாரங்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறுவடை விழா கொண்டாடியிருக்கின்றன.
  • கொரியாவில் அறுவடை விழா சூசாக் என்னும் பெயரில் கொண்டாடப்படுகிறது. செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கொண்டாடப்படும் இந்த விழா நன்றி விழாவாக கொரிய மக்களால் கொண்டாடப்படுகிறது.
  • ஜப்பானியர்கள் நவம்பர் மாதத்தில் டோரி-னோ-இச்சி என்னும் பெயரில் அறுவடை விழா கொண்டாடுகிறார்கள். இரவு முழுதும் ஆட்டம் பாட்டமாய் இந்த விழா குதூகலமூட்டுகிறது.
  • சைனாவில் மக்கள் ஆகஸ்ட் நிலா விழா கொண்டாடுகிறார்கள். இந்த விழாவின் முக்கிய உணவான மூன்கேக்குகளை மக்கள் பகிர்ந்து, பரிசளித்து மகிழ்கிறார்கள்.
  • வியட்நாமில் – தெட் திரங் து என்னும் பெயரில் எட்டாவது லூனார் மாதத்தின் பதினைந்தாம் நாளில் கொண்டாடப்படுகிறது. பெற்றோர் தங்கள் விவசாய காலம் முடிந்து குழந்தைகளுடன் ஆனந்தமாய் ஒன்றித்திருக்கும் விழாவாக இந்த விழா அமைந்து குழந்தைகளை மையப்படுத்துகிறது.
  • இஸ்ரேலில் எபிரேய மாதமான திஸ்ரியின் பதினைந்தாவது நாள் சுக்கோத் விழா கொண்டாடப்படுகிறது. அறுவடை விழாவான இது நன்றி தெரிவித்தல் விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. சுமார் மூவாயிரம் ஆண்டுகளாக யூதர்கள் இந்த அறுவடை விழாவைக் கொண்டாடி வருகிறார்கள். இந்த விழா இன்று கிறிஸ்தவர்களாலும் கொண்டாடப்படுகிறது.
  • ஆப்பிரிக்காவில் யாம் என்னும் பெயருடன் இந்த விழா நடைபெறுகிறது. இந்த விழா ஆப்பிரிக்காவில் சில பகுதிகளில் மூன்று நாட்கள் நடக்கிறது. இறந்து போன உறவினர்களை நினைவு கூரும் நிகழ்வுடன் ஆரம்பிக்கும் இந்த விழா நல்ல விளைச்சலைத் தந்த இறைவனுக்கு, இயற்கைக்கும் நன்றி செலுத்துகிறது. இரட்டையர்கள், மூவர் முதலானோர் இறைவனின் சிறப்புப் பரிசுகளாகக் கருதப்பட்டு இந்த விழாவில் பெருமைப்படுத்தப் படுவதுண்டு.
  • ஆஸ்திரேலியாவிலும் ஏப்ரல் மாத கடைசியில் திராட்சை அறுவடை விழாவும், ஜனவரி மாதத்தில் லாவண்டர் மலர் அறுவடை விழாவும், மார்ச் மாதத்தில் ஆப்பிள் அறுவடை விழாவும், டிசம்பர் – ஜனவரி காலத்தில் கோதுமை அறுவடை விழாவும் கொண்டாடப்படுவது பல இடங்களில் வழக்கத்தில் உள்ளது.
  • ஜெர்மனியில் அறுவடை விழா அக்டோ பர்விழா என்று அழைக்கப்படுகிறது. இந்த விழா திராட்சை அறுவடையின் கடைசியில் கொண்டாடப்படுகிறது. அக்டோ பர் மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமை இந்த விழா கொண்டாடப்படுகிறது. வண்ண மயமான பேரணிகளும், நடனங்களும் இந்த விழாவில் முக்கிய இடம் பிடிக்கின்றன.
  • இங்கிலாந்தில் அறுவடைவீடு என்னும் பெயரில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் மாதம் கொண்டாடப்படும் இந்த விழாவில் பழங்களையும், காய்கறிகளையும் இறைவனுக்குப் படைக்கும் விழாவாகவும், நன்றி செலுத்தும் விழாவாகவும் இது கொண்டாடப்படுகிறது. ஆலயங்களை எல்லாம் அலங்கரித்து மக்கள் அறுவடை செழிக்கவேண்டுமென்று இறைவனை வேண்டுகிறார்கள்.
  • மலேஷியாவில் ஜூன் மாதம் இரண்டாம் நாள் அறுவடை விழா கொண்டாடப்படுகிறது. அரிசி விளைச்சலுக்காக கடவுளுக்கு நன்றி செலுத்தும் விழாவாக இந்த விழா கொண்டாடப்படுகிறது. புதிய அரிவாள்களுடன் அறுவடை செய்து, வயல்வெளிகளில் கூடி இந்த விழாவை இவர்கள் கொண்டாடுகிறார்கள்.

எந்த ஒரு விழாவும் வெறும் அடையாளத்தை மட்டும் அணிந்து கொண்டு அதன் அர்த்தத்தை இழந்து விடுமெனில் பயனற்றதாகி விடுகிறது. விழாக்கள் அதன் அர்த்தங்களை அறிந்து கொள்ள அழைப்பு விடுக்கின்றன. மனிதனோடும், இயற்கையோடும், இறைவனோடும் கொண்டுள்ள உறவை உறுதிப்படுத்தவும், சீரமைக்கவும் இந்த விழாக்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன.


கருப்பு வெள்ளி - பிளாக் ஃபிரைடே நன்றி தெரிவித்தல் நாளுக்கு அடுத்த நாள் வருவது பிளாக் ஃபிரைடே. இந்த நாளுக்காக வருடம் முழுவதும் காத்திருப்பவர்கள் உண்டு. இன்றிலிருந்து ஆரம்பித்து கிறிஸ்துமஸுக்கு முந்தின நாள் வரை பரிசு வாங்கும் படலம் தொடரும். இந்தப் பரிசு வாங்கும் காலத்தில்தான் அமெரிக்க சில்லறை வியாபார சங்கிலித் தொடர் கடைகளும் வணிக நிறுவனங்களும் அந்த வருடத்திய லாபத்தில் நாற்பது சதவிகிதத்தைச் சம்பாதிக்கின்றனவாம். அந்த லாபத்தில் பதினைந்து சதவிகிதத்தை இந்த வெள்ளிக் கிழமையும் அதை அடுத்து வரும் சனி, ஞாயிற்றுக்கிழமையும் சம்பாதிக்கின்றனவாம். கருப்பு வெள்ளிக்கிழமை என்றால் சோகமான வெள்ளிக்கிழமை என்று அர்த்தமல்ல. நஷ்டம் ஏற்பட்டால் வியாபாரிகள் சிவப்பு எழுத்தில் அதைக் குறிப்பிடுவார்களாம். அதனால் லாபத்தைக் குறிப்பிட கருப்பு எழுத்தில் எழுதுவார்களாம். அதீத லாபம் கொடுக்கும் இந்த நாளை கருப்பு வெள்ளி என்கிறார்கள்.

வியாழக்கிழமை இரவிலிருந்தே வாடிக்கையாளர்கள் அந்தக் கடைக்கு முன்னால் வரிசையில் நிற்பார்கள். இந்த தினம் நவம்பர் மாதம் கடைசியில் வருமாதலால் ஓரளவிற்குக் குளிர் இருக்கும். நன்றி தெரிவிக்கும் பண்டிகையன்று உறவினர்களோடும் நண்பர்களோடும் பெரிய விருந்து உண்டு பிறகு அந்தக் குளிரில் வரிசையில் நின்று பரிசுப் பொருட்களை வாங்குவார்கள்.

Sunday, November 8, 2009

பிடித்தவர், பிடிக்காதவர் 10

இத்தொடரை எழுத அழைத்த தோழி மேனகாவிற்க்கு என் மனமார்ந்த நன்றி!!

இத் தொடர் இடுகையின் விதிகள்:

1. நமக்கு பிடித்தவர், பிடிக்காதவர் பட்டியலில் வருபவர் தமிழகத்தைச் சார்ந்த, பிரபலமாக இருக்க வேண்டும்
2. இதைத் தொடர இரண்டு முதல் ஐந்து பதிவர்களை அழைக்க வேண்டும்
3. ஏழு முதல் பத்துக் கேள்விகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

எனக்கு எல்லாத் துறையிலும் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களைப் பிடிக்கும்/பிடிக்காது என்பதால் ஒன்றோடு நிறுத்திக் கொள்ளாமல் எல்லோரையும் குறிப்பிட்டுள்ளேன்.

கவிஞர்

பிடித்தவர் – வைரமுத்து, வாலி, பா.விஜய், அப்துல் ரகுமான், மு.மேத்தா.

பிடிக்காதவர்- எல்லாக் கவிஞர்களும் தமிழை வளர்ப்பதால் பிடிக்காதவர் என்று யாரும் கிடையாது.

பூ

பிடித்தது - ரோஜா,மல்லிகைப்பூ, தாமரை

பிடிக்காதது- எல்லாப் பூக்களுமே இறைவனின் கொடை.


இயக்குனர்

பிடித்தவர்- மகேந்திரன், தங்கர் பச்சான், கே.விஸ்வநாத், பாலா, மணிரத்னம்

பிடிக்காதவர்- ஷங்கர், பேரரசு,

அரசியல்வாதி

பிடித்தவர்- கலைஞர்(ஈழத் தமிழர் விஷயத்தில் ஏமாற்றியதைத் தவிர),வை கோ, தயாநிதி மாறன்,

பிடிக்காதவர்- ஜெயலலிதா, ராமதாஸ்(டம்மி பீசு),விஜயகாந்த்(பாடி ஸ்ட்ராங்கு, பேஸ்மென்டு வீக்கு)

விளையாட்டு

பிடித்தது - கிரிக்கெட், டென்னிஸ், கில்லி, பம்பரம்

பிடிக்காதது - எல்லா விளையாட்டுமே உடம்பிற்கும் மனதிற்க்கும் எதோர் வகையில் உதவுகிறது.

நடிகை

பிடித்தவர் - ஜோதிகா, அனுஷ்க்கா

பிடிக்காதவர் - ஸ்ரேயா(யாராவது தயவுசெய்து நடிப்புன்னா என்னனு சொல்லிக் குடுங்கப்பா)

நடிகர்

பிடித்தவர்- கமல், ரஜினி, விக்ரம், பிரகாஷ் ராஜ்.

பிடிக்காதவர்- எஸ்.ஜே.சூர்யா, லாரன்ஸ் ராகவேந்திரா,

பேச்சாளர்

பிடித்தவர்- சு.கி. சிவம், சாலமன் பாப்பையா

பிடிக்காதர்-விஜய டிராஜேந்தர்

எழுத்தாளர்

பிடித்தவர்- ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், பாலகுமாரன்,சுஜாதா,ஞாநி

பிடிக்காதவர்- சாருநிவேதா.


இசையமைப்பாளர்

பிடித்தவர் - என்றும் இளையராஜா

பிடிக்காதவர்- சபேஷ் முரளி,இமான்

நான் அழைக்கும் பதிவர்கள்

1. எண்ணங்கள்

2. Tamil Film Critic

3. தமிழ்க்குடில்

4. வானம் வெளித்த பின்னும்

5. என் சமையல் அறையில்

Thursday, November 5, 2009

தூங்காமல் உழைப்பவரா ?

தூங்காமல் உழைப்பவரா ? போச்சு ., தூங்கி கொண்டே இருப்பவரா போச்சு., போச்சு., எப்படித்தான் தூங்குவது ?



மனிதர்கள் தூங்குவதிலும் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் இல்லையேல் அது மனித உயிருக்கு பெரும் கேடு விளைவிக்கும் என அமெரிக்க இணையதளத்தில் ஒரு ஆராய்ச்சிக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அன்றாட வாழ்வில் மனிதன் கடுமையாக உழைத்து நன்றாக தூங்குவது இயல்பான வாழக்கை . சிலர் தூங்குவதையே வாழ்க்கையாக கொண்டுள்ளனர், ஒரு சிலர் தூக்கம் வராமல் சிரமப்படுவர். ஒரு சிலர் நன்றாக தூங்க வேண்டும் என மது அருந்தி விட்டு ஓய்வு எடுப்பதாக சொல்லி தங்களை தாங்களே சமரசம் செய்து கொள்வர். சிலர் தூக்கம் பெரிதல்ல உழைப்பே பெரிது என்ற இலட்சிய வாழ்க்கை வாழ்பவரும் உண்டு. பலவாறான தூக்கத்திற்கு பயன்கள் என்ன ? தீமைகள் என்ன ? இவ்வாறு தூக்கத்தின் சந்தேகங்கள் பலவாறு இருக்கிறது.



தூக்கம் குறித்து யாருக்கும் உறுதியான நிலை தெரிந்தபாடில்லை. இந்நிலையில் அனைவருக்கும் உதவும் வகையில் அமெரிக்காவில் உள்ள சி.என்.என்., இணையதளத்தில் பலரிடம் நடத்திய ஆய்வின் அடிப்படையிலும் , டாக்டர்கள் கூறும் அறிவுரைகளையும் தொகுத்து தளத்தின் முதல்பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.



தூக்கத்திற்கென கலிபோர்னியாவில் உருவாக்கப்பட்டுள்ள கிளினிக் சென்டர் கோ. ஆர்டினேட்டர் டாக்டர் . டேனியல் கிரிப்க் கூறுகையில் ; பலர் வீக்எண்ட் நாளில் அதிகம் தூங்க வேண்டும் என நினைக்கின்றனர். இதன்படி தூங்கி எழுந்தவர்கள் பலர் இன்று மிகவும் அசவுகரியமாக இருப்பதாக கூறுகின்றனர். நன்றாக இருந்தது என யாரும் ஒத்துக்கொள்ளவில்லை. கடந்த காலங்களில் டாக்டர்கள் பலர் மருத்துவ துறையில் பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்கின்றனர். ஆனால் இந்த தூக்க பாதிப்பை யாராலும் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. இதற்கு யாரும் முன்விழைவதில்லை. நீண்ட நேரம் தூங்குவதால் அவரது பழக்கவழக்கமே மாறிவிடுகிறது.நீண்ட தூக்கத்திற்கு பின்னர் எழுந்ததும் தூக்க நிலையே நீடிப்பதாக உணரப்படுகிறார்கள்.



சிக்காகோ நகர்ப்புற 25 வயது இளைஞர் ஒருவர் தூக்கம் குறித்து கூறுகையில் தான் சரியான அளவு தூங்கி எழுந்தால் அந்த நாள் முழுவதும் மிகவும் சுறு, சுறுப்பாக இருக்கிறது. அதிகமாக தூங்கி எழுந்தால் அந்தநாள் முழுவதும் படு சோம்பேறியாக இருக்கிறது என கூறியுள்ளார்.



அமெரிக்காவில் பணியில் இருக்கும் போது டே லைட் சிஸ்டம் படி வரும்போது சிலர் கூடுதலாக தூங்க வேண்டியுள்ளது. இந்நேரத்தில் 5 முறை அலாரம் அடித்தாலும் எழுந்திருக்க முடியவில்லை என்கிறார் ஒரு அமெரிக்கவாசி. இதனால் எவ்வித பலனும் கிடைப்பதில்லை. வார நாட்களில் 5 மணி நேரம் தூங்கி விட்டு வார இறுதி நாளில் 12 மணி நேரம் தூங்குவதாக சிலர் சொல்கின்றனர். இவ்வாறு 12 மணி நேரம் தூங்கியதால் நன்றாக இருந்தது என்று கூறமுடியாது என்கின்றனர் .



இது குறித்து இல்லினாய்ஸ் நகர டாக்டர் . லிசாஷிவ்ஸ் கூறுகையில்; அதாவது சிலர் தூக்க வியாதி (தூக்க போதை ) கொண்டவர்களாக இருக்கின்றனர். எந்த நேரமும் தூங்கி கொண்டே இருக்க விரும்புவர். விழித்திருந்தாலும் தூங்கும் மன நிலையில் இருப்பர். இது மிக மோசமானது எப்போது என்ன செய்வான் என்றே தெரியாது.



கை, கால்., செயல் இழக்கும் (ஸ்டரோக் ) : அளவுக்கதிகமான தூக்கம் உடல் நலத்திற்கு பல்வேறு பிரச்னைகளை உருவாக்கும். இது ஆயுள் நாளையும் குறைத்து விடும். இது குறித்து ஆய்வாளர் மைக்கேல் பிரேயூ கூறுகையில் ; சில ஆய்வுகள் மூலம் இதுதொடர்பான உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன . அதாவது நாள் ஒன்றுக்கு 5 மணி நேரத்திற்கு குறைவாக தூங்குபவர்களும், 10 மணிநேரம் தூங்குபவர்களும் உயிரிழக்கும் அபாயத்திற்குள்ளாவர். இதனையே பிரிட்டிஷ் ஆய்வும் தெரிவிக்கிறது. மற்றொரு ஆய்வில் 8 மணி நேரத்திற்கும் அதிகமாக தூங்குவதை வழக்கமாக கொண்டிருப்பவர்களுக்கு ஏனையோரை தவிர கை, கால்., செயல் இழக்கும் (ஸ்டரோக் ) என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இவர்களுக்கு ஹைபர்சோமியா என்ற நோய் ஏற்படுகிறது. நீண்டநாள் வாழ்வதும், தூக்கம் என்பதும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.



குறைவான தூக்கம் எப்படி இருக்கும்: ஒருவருக்கு குறைவான தூக்கம் இருந்திருந்தால் , தூக்கத்திற்கு பின்னரும் அவர்கள் களைப்பாகவே இருப்பர். எனவே மருத்துவர்கள் ஆலோசனைப்படி அவர்களுக்குரிய தூக்கநேரத்தை சரியாக செலவழிக்க வேண்டும். குறைவான தூக்கம் குறித்து ஒருவர் கூறுகையில் குவானிட்டி ஆப் ஸ்லீப் , குவாலிட்டி ஆப் ஸ்லீப் என்கிறார். இதுதான் அழகான தூக்கம் என்கிறார்.



90 நிமிடம் தூங்கினால் அது ஒரு நல்ல தூக்க நிலையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இது ஓரு சைக்கிளாக எடுத்துக்கொள்ளப்படும் இதன்படி ஒரு மனிதர் 4 சைக்கிள் தூங்கினாலே போதுமானது. 360 நிமிடம் ( 6 மணி நேரம் ) மொத்தத்தில் 6 மணி நேரத்திற்கு குறைவில்லாமலும், 9 மணி நேரத்திற்கு அதிகமாக தூங்காமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். மரபு வழி பண்பியல் காரணமாகவும் இந்த பிரச்னை சிலருக்கு வரலாம். தூக்கம் இல்லாமல் சிரமப்படுபவர்களும், அதிகம் தூங்குபவர்களும் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நலம். அதிகம் தூங்காதே., குறைவாகவும் தூங்காதே ., தூங்கு ., உறக்கத்திற்கும் இருக்குது விதி.


நன்றி: தினமலர்