Showing posts with label ஓட்டவாய் மாரிமுத்து. Show all posts
Showing posts with label ஓட்டவாய் மாரிமுத்து. Show all posts

Sunday, January 10, 2010

அமெரிக்க அனுபவங்கள் 1 - விட்டில் பூச்சிகள்


இன்று அமெரிக்காவில் நம்பர் ஒன் லாபம் கொழிக்கும் பிஸினஸ் எதுவென்றால் அது டயட் ப்ரோக்கிராம்(Diet Program) தான். எங்கு பார்த்தாலும் டயட் உணவு வகைகள், ஸப்ளிமெண்ட்ஸ்(Supplements) உணவுகள், ஃபிட்னஸ் டூல்கள், டயடிற்க்கென்ற உள்ள எக்ஸர்சைசுகள். கோடிகளைக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள். கோக் மற்றும் பெப்ஸியில் கூட '0' காலோரிகள். அவசரமாக உடலைக் குறைத்துவிட வேண்டும் என்று பணத்தையும், நேரத்தையும் கணக்கில்லாமல் செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லா ஃபிட்னெஸ் சென்டர்களும் மாலை நேரங்களில் நிரம்பித்தான் வழிகிறது. அங்கும் குண்டாக இருப்பவர்களைக் குறி வைத்து சில ப்ரோகிராம்கள் நடத்தி பணம் சம்பாதிக்கிறார்கள். டீவியில் பாதி விளம்பரங்கள் டயட் ப்ரோகிராம் தான். நானும் முறைப்படி வெயிட்லிஃப்ட் கற்றுக் கொள்ளலாம் என்று ஒரு ஃபிட்னஸ் சென்டரில் சேர்ந்தேன். அங்கு கோச்சிங் கொடுப்பவருக்கு மாதம் இவ்வளவு என்று பேசப்பட்டது. வாரத்தில் ஒரு நாள் தான் கோச்சிங். அந்த ஒரு நாளில் ஒரு மணி நேரத்தில் அவர் சொல்லிக் கொடுக்கும் கோச்சிங்கில் அடுத்த ஐந்து நாட்களுக்கு எந்திரிக்க முடியாது. கடுமையான பசி வேற. ஒல்லியாக இருப்பவர்களுக்கு குண்டாகவும், குண்டாக இருப்பவர்கள் ஒல்லியாகவும் தனித்தனி ப்ரோகிராம்கள் வைத்திருக்கிறார்கள். ஆறு மாதம் ட்ரைனிங்கில் எனக்கு ஒரு இம்ப்ரூவ்மண்டும் தெரியவில்லை.. பழையபடி ட்ரட்மில், சைக்கிளிங், .. கார்டியோ ஐட்டங்கள் மட்டுமே இப்பொழுது..


இரண்டாவது சூப்பர் பிஸினஸ் எது என்று பார்த்தால், ஹேர் லாஸ் ட்ரீட்மெண்ட்(Hair Loss Treatment). என்னுடன் வேலை பார்க்கும் ஒருவர் 1200 டாலர்களை செலவழித்து தலையின் வழுக்கையை(பின்னால் ஒரு ஓளிவட்டம்) தனது கல்யாணத்திற்கு முன் சரிசெய்திட இயன்ற அளவு முயற்சி செய்தார். அவர்கள் குடும்பத்தில் எல்லோருக்கும் பரம்பரை வழுக்கை வேறு. அதில் சிறப்பு என்னவென்றால் அந்த ப்ரோகிராமில் குளிக்கும் முன் ஒரு க்ரீம் தலையில் தடவ வேண்டும், குளித்தப் பிறகு ஒரு க்ரீம் தடவிக் கொள்ள வேண்டும். அந்த ப்ரோகிராம் சென்டரில்தான் முடி வெட்டிக் கொள்ளவேண்டும். கிட்டத்தட்ட ஏழெட்டு மாதத்திற்கு அதை முயற்சி செய்து பார்த்துவிட்டு ஒரு சின்ன மாற்றம் கூட இல்லாததைக் கண்டு இப்பொழுது அதெல்லாம் "வேஸ்ட்" என்று மற்றவர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கிறார். சில பேருக்குச் சொல்லித் தெரியுது, சில பேருக்குப் பட்டால் தான் தெரியுது.

பிஸினஸ் பண்ணவேண்டும் என்று யாராவது நினைத்துக் கொண்டிருப்பவர்கள் இந்த இரண்டு பிஸினஸில் ஏதாவதொன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

-------------------------------------------------------------------------------------------------
நான் அமெரிக்கா வந்த புதிதில் டெட்ராய்ட்டில்(Detroit) நம்ம ஊர் மக்களைப் பார்த்தும் முக்கியமாக யாராவது தமிழில் பேசிக் கொண்டிருந்தால் ஆகா நம்மூர் மக்களாச்சேன்னு கொஞ்சம் சிரிச்சா பதிலுக்கு யாரும் சிரிக்கவோ, ஒரு ஹாய் சொல்லவோக் கூட மாட்டார்கள். அது கூட பரவாயில்லை. நம்மளை ஒரு தீண்டத்தகாதவன் போல் ஒரு லுக் விடுவாங்க (ஜெ.ஜெ யில் மாதவன் ஒரு லுக் விடுவாரே அதேமாதிரி கேவலமா). அதத்தான் தாங்க முடியாது. கொஞ்ச நாள் கழித்து ஒரு நண்பனிடம் இது பற்றிக் கேட்டேன். அப்பொழுது தான் அந்த ரகசியம் தெரிந்தது. இங்கு ஆம்வே(Amway), ப்ரிட் வேர்ல்ட் வைடு(BWW), பயோ மேக்னடிக்,கோல்ட் கொஸ்ட் இதுபோன்ற நெட்வொர்க் மார்க்கெட்டிங்(Multi level Marketing) செய்யும் மக்களால் அவர்கள் பாதிக்கப் பட்டவர்கள் என்று. நான் அப்பொழுது கூட முழுதாக நம்பவில்லை. அட்லாண்டா வ்ந்த பிறகு ஒரு நண்பனின் நண்பன் என்னை வீடு தேடி வந்து சந்தித்தார். பாசமழையைப் பொழிந்தார். வெளிநாட்டில் இப்படி ஒரு நல்ல நண்பனா என்று வியக்கும் வகையில் நடந்துக் கொண்டார். ஒரு நாள் (Weekend) வாங்களேன் எங்க ப்ரண்ட்ஸ் எல்லாம் ஒரு கெட் டுகெதர்(Get together) வச்சுருக்காங்க நீங்களும் கலந்துக்குங்கனு கூட்டிக் கொண்டு சென்றார். அவர் நல்லவவவன்னு நம்பி அவர் கூட போனேன். அங்க தான் விதி விளையாடுச்சு.

போற வழியில என்னங்க இன்னும் எத்தனை நாளா இந்த மாதிரி ப்ரோகிராமிங் பண்ணிக்கிட்டே இருக்கப் போறிங்க? அமெரிக்கா வந்து இன்னும் பொழைக்கத் தெரியாம இப்படி வெள்ளந்தியா இருக்கிங்களேன்னு நம்மளை கேட்டார். அப்பக்கூட எனக்குப் புரியல. நாம உண்மையிலே ஒரு தப்பான ஃபீல்ட்க்கு வந்துட்டோமோ? கம்ப்யூட்டர் நம்மளைக் கைவிட்டுருமோ? எட்டு வருடமா குப்பைக் கொட்டிக் கொண்டிருந்த இந்த ஜாவா நம்மளைக் காலை வாரிவிடுமோ? என்று என்னன்னமோ என் மனதில் அந்த நிமிடத்தில் ஓடிக் கொண்டிருந்தது. நண்பர்கள் கூடும் இடம் வந்தது. முதல்ல ஒரு ஜூஸ் ஒன்னக் கொடுத்துட்டு, கோபி இந்த பேப்பர்ஸ்ல கொஞ்சம் சைன் பண்ணிடுங்க. அப்புறம் இந்த ப்ரோகிராமிற்கு ஒரு 300 டாலர்ஸ் கட்டவேண்டியதிருக்கும் என்று சொன்னார்கள். என்னை அழைத்து வந்தவர், நான் வேணும்னா இப்போ கட்டிவிடுகிறேன். நீங்க அப்புறமா ஆன்லைன்ல ட்ரான்ஸ்பர்(Money Transfer) பண்ணிடுங்க என்றார். இதெல்லாம் என்னதுங்க ஒன்னுமே புரியல என்றேன். நான் இதப் பத்தி அப்புறமா சொல்றேன். நீங்க சைன் மட்டும் பண்ணிடுங்கனு சொன்னார். ”சிக்குச்சுடா சிறுத்தை” என்பதற்கு அப்பத்தான் அர்த்தம் புரிஞ்சுது. எனக்கு ஒரு ரெண்டு நாள் டைம் குடுங்க நான் யோசித்து சொல்றேன் என்று சொன்னேன். என்னைக் கூட்டி வந்தவரை அங்கிருந்த எல்லோரும் ஒரு பார்வை பார்த்தார்கள். அந்த பார்வையில் ஒரு உக்கிரம் இருந்தது. என்னைக் கூட்டிக் கொண்டுவரும் பொழுது நிறைய பேசிய நண்பர் என்னை வீட்டில் கொண்டுவந்து விடும் வரை பேசாமலே விட்டுச் சென்றார். மறுநாள் என்னுடன் ரூமில் தங்கியிருந்த நண்பர்கள் எனக்கு கொடுத்த அர்ச்சனைகள் சொல்லி மாளாது.

மறுபடியும் அந்த நண்பர் தொலைப் பேசியில் தொடர்பு கொண்டு பேச முயன்றார். அவருக்காவே எனது தொலைபேசி நம்பரை மாற்றினேன். நண்பர்களே, வெளிநாட்டில் யாராவது உங்களை கண்டுகொள்ளவில்லையென்றால் தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அவர்கள் இந்த மாதிரி மக்களால் காயம் பட்டவர்கள். நெட்வொர்க் மார்க்கெட்டிங் மக்களின் குறிக்கோளே இந்த மாதிரி மார்கெட்டிங் பிஸினஸ் பற்றி தெரியாத மக்கள் தான். அவர்கள் உங்களை மாதிரி ஆட்களை தேடும் நேரம் சனி, ஞாயிறு தான். அப்பொழுது தான் இந்தியர்கள் எல்லா கடைகளிலும்(Walmart,Kroger,Sams,Costco..etc), மால்களிலும் இருப்பார்கள். முதலில் அவர்கள் தான் யார் என்பதையும், அந்த மார்கெட்டிங்கைப் பற்றியும் சொல்லவே மாட்டார்கள். உங்கள் போன் நம்பரைக் கண்டிப்பாக கேட்பார்கள். அதை உறுதி செய்ய ஒரு மிஸ்டு கால் உங்கள் முன்னாலே உங்களுக்கு கொடுப்பார்கள். நீங்கள் பணம் கட்டினால் போதும் உங்களை மாதிரி ஆட்களை அவர்களே பிடித்து தருவதாக உத்திரவாதமும் தருவார்கள். அவர்கள் அடிக்கடி கூறும் வார்த்தை “ரிடையர்மண்ட்”. அஞ்சு வருசம் நீங்க இந்த ப்ரோகிராமில் இருந்தா போதும் உங்களுக்கு ராயல்டி மாதிரி பணம் வந்து கொண்டே இருக்கும். நீங்கள் இப்பொழுது செய்து வரும் வேலையை விட்டுவிட்டு வீட்டில் இருந்து கொண்டே சம்பாதிக்கலாம் என்று கூறுவார்கள். இந்த வார்த்தையில் தான் மக்கள் விட்டில் பூச்சிகளாய் விழுந்துவிடுகிறார்கள்.

உண்மையிலே இந்த மார்க்கெட்டிங்கில் லாபம் இருக்கிறதா, இந்த மாதிரி பிஸினஸில் ஈடுபட்டால் நம்மால் சம்பாதிக்கமுடியுமா, முயன்று தான் பார்ப்போமே என்று நினைப்பவர்களுக்கு நிறைகுறைகள் இங்கே..

1. உங்களுக்கு எக்கச்சக்க நண்பர்கள் இருந்தால், உங்களுக்கு மார்க்கெட்டிங் திறமை இருப்பதாக நினைத்தால் நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம். நீங்கள் ஒரு கஸ்டமரைப் பிடிப்பதற்குள் தாவு தீர்ந்திரும். வலுக்கட்டாயமாக ஒருவரை இதில் நிர்பந்திக்க வேண்டியதிருக்கும். மார்க்கெட்டிங் செய்பவர்களைப் பார்த்தாலே விபரம் தெரிந்தவர்கள் தலை தெரிக்க ஓடுவதைப் பார்க்கலாம்.

2. உங்களுக்குப் பயிற்சி அளிக்கும் போது இப்பொழுது இதில் சம்பாதித்துக் கொண்டிருப்பவர்களை உங்களுக்கு முன் மாதிரியாக காட்டுவார்கள். அவர்கள் உங்களுக்கு எப்படி சம்பாதிக்க வேண்டும் என்று விளக்கம் சொல்வார்.

3. பெரிய, பெரிய ஹோட்டலில் தான் மீட்டிங் நடக்கும். நீங்கள் ஒரு தடவை அந்த மீட்டிங் அட்டண்ட் பண்ணினால் உங்களுக்கும் ஆசை வரும்.

4. உங்களுக்கு நிறைய நண்பர்கள் அறிமுகமாவார்கள். நீங்கள் ஒருமுகப் படுத்தப் படுவீர்கள். இந்த பிஸினசைத் தவிர உங்கள் புத்தியில் எதுவும் ஏறாது. நீங்கள் பார்க்கும் எல்லோரும் உங்களுக்கு கஸ்டமராகவே தெரிவர். தயவு தாட்சண்யமே கிடையாது. லைஃபே பிஸினஸாகிவிடும்.சில நல்ல நண்பர்களை இழக்க நேரிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

5. இதில் சம்பாதிக்கிறவர்கள் சம்பாதித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஏமாறுபவர்கள் ஏமாறிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

6. மார்க்கெட்டில் இருக்கும் எல்லா புக்குகளும் இவர்களுக்காகவே எழுதியதாக கூறுவார்கள் உ..தா..(Rich Dad Poor Dad, Who Moved My Cheese ..etc). நான் இந்த புத்தகங்களை தன்னம்பிக்கைக்காக(Self Development) படித்தவை அதனால் தான் என்னுடைய பிளாக்கில் புத்தக அலமாரியில் இருக்கிறது. வேறு எந்த உள்குத்தும் இல்லை.

7. அடுத்த பிரிவுக்கு(Next Stage) போகும் போது ப்ரமோஷன், அவார்ட்(Silver,Gold, Diamond), மெடல்ஸ் எல்லாம் கொடுத்து ஊக்குவிப்பார்கள்.

என்னடா, இவன் தான் இதிலே சேரவே இல்லையே இதப் பற்றி இவ்வளவு சொல்றானேன்னு யோசிக்கிறீங்க. அந்த நிகழ்சிக்குப்(Get Together) பிறகு இந்த மூன்று வருடத்தில் நிறைய பேரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் 1990களில் இங்கு வந்து இந்த மாதிரி பிஸினஸில் சேர்ந்து பல லட்சம் டாலர்களை இழந்தவர்களையும், ஆசையில் இதில் இறங்கிவிட்டு, தொடர முடியாமல் விட்டுவிட்ட அப்பாவிகளையும் சந்தித்த போது அவர்கள் வருத்தப்பட்டு புலம்பியது தான் இந்த பதிவு.

டிஸ்கி : இந்த பதிவில் நான் எழுதியிருப்பவை எல்லாம் என் அனுபவத்தில் தெரிந்துகொண்டது. இது யாரையும், யார் மனதையும் காயப்படுத்தும் நோக்கத்தோடு எழுதியவை அல்ல. ஏன்னா நான் அவன் இல்லை.

இது சம்பந்தமாக ஒரு ஒளியோட்டம்


Monday, November 30, 2009

ஓட்டவாய் மாரிமுத்து பக்கங்கள் - 01/12/2009

டீல் (ஆர்) நோ டீல்


ஒரு வழியாக “நன்றி தெரிவித்தல் நாள்” முடிந்தது. ஒரு நாளைக்கு முன்னதாகவே நண்பர் ஜெய் வீட்டுக்கு சென்றுவிட்டோம். அன்று இரவு ஜெய் வீட்டிலும், துரை வீட்டிலும் சேர்ந்து சமைத்து பரிமாரினார்கள். அன்பையும் சேர்த்து தான். மறுநாள் யாருக்கெல்லாம் என்ன வாங்கலாம் என்று நீண்ட நேரத்திற்குப் பின் முடிவானது. அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கடைக்குச் சென்று அவர்கள் வாங்க நினைத்தையும், நண்பர்களுக்கு அந்த கடையில் வாங்க நினைத்ததையும் ஒரு முறைக்கு இரு முறை சரிபார்த்துக் கொண்டோம். இரவு கொஞ்சம் நேரம் இருந்ததால் மலைக்கோட்டைப் படம் நான்கு குடும்பமும் ’போஸ்(Bose)’ ஹோம் தியேட்டரில் பார்த்தோம். அதிகாலை நான்கு மணிக்கு முடிவானது, நாலரை மணியானது கிளம்புவதற்கு. முதலில் வால்மார்ட் சென்றோம். எனக்கு நான் எதிர்பார்த்த ஒன்றும் கிடைக்கவில்லை. நண்பர்கள் டீலில் கிடைத்த சில பொருட்களை வாங்கினார்கள். நாங்கள் செல்வதற்கு முன்பே மார்ட் திறந்திருந்தால் நீண்ட வரிசை பில் போடுவதற்காக நின்றுக் கொண்டிருந்தது. அடுத்து சில கடைக்களுக்கு சென்று நோட்டமிட்டோம். சில எலக்ட்ரானிக்ஸ் மற்றும் குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்கள் வாங்கினோம். போன வருடத்தை ஒப்பிடும் போது இந்த வருடம் அவ்வளவாக டீல் இல்லை. காலை உணவுக்கு வாஃபல் ஹவுஸ்(Waffle House) சென்றோம். திவ்யமான காலை உணவு. காபிக் கோப்பையை நிரப்பிக் கொண்டே இருந்தார்கள்.

பிறகு ’பெஸ்ட் பை’(Best Buy) சென்றோம். சாதாரண நாட்களில் இருக்கும் விலையைத் தான் விலை குறைத்து டீல் தருவதாக “ஹைலைட்” கொடுத்து மொத்தமாக குவியலாக வைத்திருந்தார்கள். விவரம் தெரியாதவர்கள் கார்ட்டில்(Cart) அள்ளிக் கொண்டு போனார்கள். எல்.சி.டி (LCD)டீவி போய் எல்.இ.டீ(LED) டீவி மார்க்கெட்டில் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. போன வருடம் புது வரவாக இருந்த ப்ளுரே(Blu-ray)-டிவிடி ப்ளேயர்கள் இந்த வருடம் கணிசமாக விலைக் குறைந்ததை காணமுடிந்தது. டிஜிட்டல் கேமராக்களும், சில எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உண்மையில் விலை குறைந்திருந்தது. அதெல்லாம் மார்க்கெட்டில் அவுட்டேட் ஆகியிருந்ததால் வாங்க ஆளில்லை. இந்த வருடம் குளிரும் மிக குறைவாகவே இருந்தது. அமெரிக்காவில் பெரும்பாலான கம்பெனிகளில் ஆட்குறைப்பு இன்னும் நடந்துக் கொண்டிருப்பதால் மக்களிடம் பணப்புழக்கம் மற்ற ஆண்டுகளை விட இந்த ஆண்டு கொஞ்சம் குறைவு என்பதை ஒவ்வொரு கடையிலும் கூட்டம் குறைந்திருப்பதன் மூலம் பார்க்க முடிந்தது. நம்ம ஊரில் புது படங்களுக்கு பிளாக்கில் டிக்கெட் விற்ப்பது போல் இங்கும் அதிகாலை ஒருமணியளவில் வரிசையில் நின்று முதல் இருபது பேருக்குக் கிடைக்கும் லேப்டாப்களை பிளாக்கில் விற்றார்கள்.

மதியம் ’டி.ஜி.ஐ. ஃபிரைடே’(T.G.I Friday) ஹோட்டலுக்குச் சென்றோம். ஒரு ஆப்ரிக்கன் அமெரிக்கன் பணிப்பெண் அன்புடன் வரவேற்று எங்களை அமர வைத்தார். நம்மூர் போலில்லாமல் தண்ணீரைக் கூட கேட்டுத்தான் பெறவேண்டியிருக்கிறது. மெயின்கோர்ஸ் ஆர்டர் எடுத்துக் கொண்டாள். எல்லோருக்கும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஸ்பைஸியாக வேண்டும் என்று சொன்னோம். சிறிது நேரம் கழித்து உணவைச் சமைக்கும் செஃப்(Chef) எங்கள் டேபிளிற்கு வந்து மண்டியிட்டு உட்கார்ந்து நீங்கள் கொடுத்திருக்கும் ஆர்டர்களில் ஸ்பைஸி சேர்த்தால் அவ்வளவு நன்றாக இருக்காது. உங்களுக்கு ஸ்பைஸியாக வேண்டும் என்றால் மெனுவில் வேறு சில அயிட்டங்களை நீங்கள் தேர்வு செய்யலாம் என்று அன்புடன் கேட்டார். நாங்கள் ஸ்பைஸி இல்லை என்றால் பரவாயில்லை. நாங்கள் தேர்வு செய்த உணவையே உரப்பில்லாமல் கொடுங்கள் என்று கேட்டோம். சுடச்சுட ஆவி பறக்க மதிய உணவு எங்கள் மேசைக்கு வந்தது. அப்பொழுது ஜெய் நிறைய ஹோட்டல்கள் பணப்புழக்கம் இல்லாமல் மூடப்படுவதாக சொன்னார். ஹோட்டல்கள் மூட்ப்படுவதால் வாடிக்கையாளர்களைக் கவர அந்த செஃபே நேரிடயாக வந்து நம்மிடம் பேசுவதாகவும் சொன்னார். நாங்களும் ஆமோதித்தோம். அந்த பனிப்பெண்ணிற்கு 18% டிப்ஸ் கொடுத்துவிட்டு நகர்ந்தோம்.


அடுத்து உடைகள் எடுப்பதற்காக மேஸிஸ் சென்றோம். ஆண்கள் பகுதிக்குச் சென்று தேடினோம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை எந்த டீலும் இல்லை. சாதாரணமாக வார இறுதி நாட்களில் கிடைக்கும் டீல் கூட பிளாக்பிரைடேயில் கிடைக்கவில்லை என்பது இந்த வருட ஆச்சர்யம். மேஸிஸ் சென்று ஒன்றும் எடுக்காமல் வெறும்கையுடன் திரும்பினேன். ஆக மொத்தம் இந்த வருட பிளாக்ஃபிரைடே ‘நோ டீல்’ஆகத்தான் எனக்கு முடிந்தது. ஒரு குட்டித் தூக்கத்திற்குப் பிறகு ‘ஏகன்’ படத்துடன் இரவு உணவு எடுத்துக் கொண்டோம்.



Thursday, November 19, 2009

ஓட்டவாய் மாரிமுத்து பக்கங்கள்- 21/11/2009

இதுவரை எழுதிய பதிவுகளில் என் சினிமா விமர்சனதிற்குத் தான் அதிக ஓட்டுகள் கிடைத்துள்ளது. சரி விமர்சனம் மட்டும் இல்லாமல் நிறைய பொதுவான விஷயங்களைப் பற்றியும் எழுதலாம் என்று இந்த தலைப்பை எடுத்துள்ளேன். மாரிமுத்து என்ற பெயரில் யாராவது இதைப் பார்த்தால் மன்னிக்கவும். சும்மா, கேட்சியாக(Catchy) இருக்கட்டும் என்று இந்த பெயரை வைத்தேன். வேறு எந்த உள்குத்தும் கிடையாது. வாரத்திற்கு குறைந்தது மூன்று ஆங்கிலப் படம் பார்க்கும் பழக்கம் இன்னும் இருந்து கொண்டிருக்கிறது.அந்த பழக்கத்தை இன்னும் விட முடியவில்லை.விட முயற்சிக்கவில்லை என்பது தான் உண்மை.எந்த ஒரு மொழிப் படமானாலும் பார்ப்பேன்.எத்தனையோ படங்கள் பார்திருந்தாலும் கடைசியாக பார்த்தப் படத்தைப் பற்றி மட்டும் பார்ப்போம்.
ஃபிளாஷ் ஆப் ஜீனியஸ்


இப்படி ஒரு படம் தமிழிலோ அல்லது இந்திய மொழிகளிலோ எடுக்க முடியுமா என்று யோசித்துப் பார்த்தேன். என் சிறு அறிவிற்கு எட்டியவரையில் முடியாது என்று தான் நினைக்கிறேன். கீதப்பிரியன் மிக அழகாக அவருடைய பதிவில் எழுதியிருந்ததைப் பார்த்தேன். அந்த படத்தைப் பற்றிய சிறு விமர்சனம் மட்டும் பார்க்கலாம். 1953ல் அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணதில்(Detroit) ராபர்ட் கியேர்ன்ஸ்(Robert Kearns) என்ற பேராசிரியர் தன்னுடைய கல்யாண தினத்தன்று குடும்பதுடன் விருந்து சாப்பிடும் போது, ஷேம்பைன் பாட்டில் கார்க் அவர் இடது கண்ணில் பட்டு கண் கலங்கிவிடுகிறது. அந்த வலியுடன் காரில் வரும் போது நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது. அப்பொழுது, அந்த காரின் மழை நீரைத் துடைக்கும் கருவி(வைப்பர்) ஒரே நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒவ்வருமுறையும் இயங்குவதையும், அதில் இப்பொழுது இருப்பது போல் இல்லாமல் அது இயங்கும் இடைவெளியை கூட்டவோ குறைக்கவோ முடியாத நிலையில் இருந்தது. அவர் அதை ஆராய்ந்து, நமது கண் இமைகள் இயங்கும் நேரத்தையும் ஒப்பிட்டு ஒரு புது வைப்பரைக் கண்டு பிடிக்கிறார். முதலில் அதை அவருடைய வீட்டிலுள்ள மீன் தொட்டியில் சோதனை செய்து வீட்டிலுள்ளவர்களை வியப்பில் ஆழ்த்துகிறார்.

அவருடைய நண்பர் உதவியுடன் அதை ஃபோர்ட் கார் கம்பெனியில் தனது ஆராய்ச்சியை முன்னோட்டம் செய்து காண்பிக்கிறார். அதை ஏற்றுக் கொண்ட ஃபோர்ட் நிறுவனம் தங்களிடம் ஃபார்முலாவை நல்ல விலைக்கு கொடுக்குமாறு கேட்கிறது. ராபர்ட் அதை தானே தாயாரித்து தருவதாகக் கூறுகிறார். அதை ஃபோர்டும் ஒத்துக்கொள்ள அவரும் ஒரு கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து தாயாரிக்கும் முயற்சியில் இறங்குகிறார். சிறிது காலம் கழித்து ஃபோர்டிலிந்து எந்த அழைப்பும், தகவலும் வராததால், தற்செயலாக ஃபோர்ட் கன்வென்ஷன் செண்டரில் புதிதாக அந்த வருடம் வெளியிடும் மஸ்தாங்(Mastang) காரில் அவர் ஆராய்சியில் உருவான அந்த வைப்பர் பொருத்தப் பட்டு அதையே மூலக் காரணமாக வைத்து ஃபோர்ட் விளம்பரம் செய்துக் கொண்டிருப்பதையும் பார்க்கிறார். தன்னுடய ஃபார்முலா திருடப் பட்டிருப்பதை கண்டு ஆத்திரம் அடைந்து ஃபோர்ட் நிறுவனத்தின் மேல் வழக்கு தொடர்கிறார். ஃபோர்ட் சில ஆயிரங்களை(டாலர்ஸ்) தருவதாகவும் வழக்கை வாபஸ் வாங்க சொல்கிறார்கள். அவர் அந்த பணத்தை வாங்கி கொள்கிறேன், ஆனால் ஒரு நாளிதழில் அவருடைய பார்முலாவை ஃபோர்ட் திருடியதாக் ஒரு சின்னச் செய்தியைப் போடும்படி கேட்கிறார். ராபர்ட் வழக்கிலிருந்து அவருடைய வக்கில் வெளியேருகிறார். அவருடைய குடும்பமும் அவரை விட்டுப் பிரிகிறது. எந்த வக்கிலும் அவருக்காக வாதாட வரவில்லை. தன்னுடைய பேராசிரியர் பதவியைத் துறந்து தானே வாதாட முடிவெடுத்து 5 வருடம் சட்டம் படிக்கிறார். சட்டம் முடித்த பிறகு ஃபோர்ட் கம்பெனி மேல் அந்த வழக்கை தொடர்கிறார்.

இந்த தடவை 30 மில்லியன் டாலர்ஸ் ஃபோர்ட் தர விரும்புவதாகவும், ஆனால் எந்த மன்னிப்பும் கேட்க முடியாது என்றும் ஃபோர்டின் பிரதிநிதி கூறுகிறார். அதை ராபட் மறுக்கிறார். வாதம் தொடங்குகிறது. ஃபோர்ட் தலைசிறந்த வக்கில்களை வைத்து ராபட்டிற்கு எதிராக வாதடுகிறது. இந்த ஃபார்முலா(Pattern) ஏற்கனவே இருந்ததாகவும் அதைத்தான் ராபர்ட் வேறு முறையில் கொடுக்க நினைத்தார் என்றும் நீதிமன்றத்தை நம்ப வைக்கிறார்கள். ராபர்ட் இதற்கு முன்னால் எந்த பேட்டர்னில் இருந்தது, தான் எந்த பேட்டர்னில் கண்டுபிடித்து என்பதை டெக்னிக்கல் விளக்கத்துடன் கோர்ட்டுக்கு விளக்கம் கொடுக்கிறார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் ராபர்ட்டின் கண்டுபிடிப்பு அவருடையது தான், அதை ஃபோர்ட் திருடியது திட்டவட்டமாகத் தெரிகிறது என்றும், அதனால் 10.1 மில்லியன் டாலர்ஸ் அபராதம் ராபர்ட்டிற்கு ஃபோர்ட் கொடுக்கவேண்டும் என்று தீர்ப்பளிக்கிறது.
சில சுவாரஸ்யங்கள்
  • இந்த கதை ஒரு உண்மைச் சம்பவம். இன்றும் ஃபோர்ட் மேல் இந்த களங்கம் இருக்கிறது. ஆனால் என்ன காரணத்தினாலோ இந்த படம் உண்மை சம்பவத்தை 'தழுவி' எடுக்கப் பட்டது என்று டைட்டில் கார்ட்(Based on True Story) போடுகிறார்கள்.
  • ஃபோர்ட் நிறுவனத்திலே அந்த முன்னோட்டம்(Demonstration)எடுக்கப் பட்டிருக்கிறது. நம்ம ஊரில் ஒரு நிறுவனத்தைத் தாக்கி நேரிடையாக எடுக்க முடியுமா? எடுத்தால் அந்தப் படம் வெளிவருமா? மணிரத்னம் கூட குரு படத்தில் அம்பானி குடும்பத்தை மறைமுகமாத் தான் எடுத்திருப்பார்.
  • ராபர்ட்டிற்கு அழகான குடும்பம். அவருடைய ஆராய்சியை உற்சாகப் படுத்துத்துகிறார்கள். அவருடைய பிடிவாதத்தைக் கண்டு நட்புடன் பிரிந்து செல்கிறார்கள். இறுதியில் அவருடைய மண உறுதியைக் கண்டு அவருடைய பிள்ளைகள் எல்லோரும் அந்த வழக்கிற்கு உதவுகிறார்கள். வழக்கில் வென்ற பிறகு அவருடைய மனைவி மட்டும் நன்றி சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
  • இந்த வழக்கு முடிந்த பிறகு இதே ஃபார்முலாவை க்ரைசலர் கார்ப்பரேசனிற்கு(Chrysler Corporation) விற்று 18.7 மில்லியன் டாலர் பெற்றார்.
  • இந்த படத்தின் நீதிமன்றத்தில் வழக்கு வாதாடும் காட்சி மிக நேர்த்தியாகவும், சுவாரஸ்யமாகவும் எடுத்திருக்கிறார்கள். தீர்ப்பிற்கு முந்தய தினம் ஃபோர்டின் பிரதிநிதி ராபர்ட்டின் வீட்டிற்கு வந்து வழக்கில் இருந்து விலகிக் கொண்டால் 30 மில்லியன் டாலர்ஸ் தருவதாகவும், நாளை தீர்ப்பில் தோற்றால் நீங்கள் வெறும் கையுடன் தான் வீடு திரும்ப வேண்டும் என்று பேரம் பேசுகிறார். ராபர்ட் தன் குழந்தைகளிடம் அவருக்கு என்ன பதில் சொல்லலாம் என்று கேட்கிறார். குழந்தைகளும் ராபட்டிற்கு ஆதரவாகவே நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்கிறார்கள். ஒருவருடைய வெற்றி தோல்வி என்பது நம்மைச் சுற்றிஉள்ளவர்கள் கொடுக்கும் நம்பிக்கையில் தான் பாதி இருக்கிறது என்பதை இது விளக்குகிறது.
  • நம்மிடம் உண்மை / நேர்மை / உறுதி இருந்தால் எத்தனை காலம் ஆனாலும் நீதி நமக்கு கண்டிப்பாக கிடைக்கும் என்பது இந்த படத்தில் நாம் தெரிந்துகொண்டது.

இந்த படத்தின் முன்னோட்டம், புகைப்படங்கள், நடித்தவர்கள் மற்றும் இயக்கியவர்களைப் பற்றி தெரிந்துக் கொள்ள இங்கே சொடுக்கவும்.


நம்முடைய இயக்குனர்களும் கொஞ்சம் மூளையைக் கசக்கினால் இந்த மாதிரி ஒரு தரமான படம் தமிழில் வருவதற்கு சாத்தியங்கள் உண்டு. கமல் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் சொன்னது போல் நல்ல படங்களை வரவேற்க தவறுவதில் ரசிகர்கள் பங்கும் உண்டு என்பது நிதர்சனமான உண்மை.