Sunday, June 20, 2010

ரகசியம் (தி சீக்ரெட்) - தொடர்- முன்னுரை

என்னுடைய முன்னுரை

ரகசியம் (தி சீக்ரெட்) இந்தப் புத்தகத்தை முதலில் படிக்கும் முன், எனக்கு இதன் வீடியோ தான் கிடைத்தது. அதை ஐபாட் ஃபார்மட்டிற்கு (mp4)மாற்றிவிட்டு, நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் பார்த்து முடித்தேன். இதை மொழிமாற்றம் செய்து தொடராக எழுதக் காரணம், இந்தப் படத்தை ஒரு தடவை பார்த்தாலோ அல்லது இந்த புத்தகத்தை ஒரு தடவைப் படித்தாலோ எல்லாவற்றையும் எளிதில் ஞாபகம் வைத்துக் கொள்வது கடினம். இதை தொடராக எழுதப் போவதால் உங்களுக்காகவும்,எனக்காகவும் பல தடவை படிக்கப் போகிறேன். இது ஒருவருடைய வாழ்க்கைக் குறிப்போ அல்லது ஒரு சம்பவமோ கிடையாது. பல அறிஞர்கள், விஞ்ஞானிகள், தத்துவமேதைகள் அவர்களின் வாழ்க்கையில் உணர்வுப்பூர்வமாக கண்டுபிடித்ததன் மொத்தத் தொகுப்பு. அவர்கள் கண்டுபிடித்தது நமக்கு ஏன்? அவர்களைப் போலவே நமக்கும் வாழ்க்கையில் நடக்கவா போகிறது? அவர்கள் வாழ்ந்த முறை வேறு, நாம் வாழும் முறை வேறு, நடைமுறையில் இதெல்லாம் சாத்தியமில்லை என்பதைப் போன்ற எதிர்மறை எண்ணங்களை நீங்கள் கொண்டிருப்பீர்களேயானால் இது உங்களுக்கான தொடர் இல்லை. நான் போன பதிவிலே சொன்னது போல் எனது சொந்தக் கருத்தை நான் இதில் கூறப் போவதில்லை. இந்த தொடர் எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தையும் சார்ந்து இருக்காது. ஆனால் அவர்களின் போதனைகள், கருத்துக்கள் மட்டும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும். இந்த புத்தகத்தில் மொத்தம் 10 தலைப்புகள் உள்ளது. நீளம் கருதி ஒரே தலைப்பில் இரண்டு மூன்று பதிவுகளாக எழுதுகிறேன். எழுத்தில் ஏதும் குறையிருந்தால் மன்னிக்கவும்.

ரகசியம் தேடிச் செல்வோமா?

ரோண்டா பைரனின் முன்னுரை


சில வருடங்களுக்கு முன்னால் என்னுடைய வாழ்க்கை ஒரு மிகப் பெரிய குழப்பமான சூழ்நிலையில் இருந்தது. என்னுடயை வேலையில் திருப்தியில்லை. என் தந்தையின் திடீர் மறைவு என்னை நிலைகுலைய செய்தது. என்னுடன் வேலை செய்பவர்கள் மற்றும் நான் விரும்பியவர்கள் எல்லோரும் எனக்கு எதிராக மாறியது போன்ற உணர்வு ஏற்பட்டது. அந்தச் சூழ்நிலையில் ஒரு மிகப் பெரிய பரிசு ஒன்று என் மகள் ஹார்லே மூலம் எனக்கு கிடைத்தது. அது ஒரு அருமையான புத்தகம் (தி சீக்ரெட்). வாழ்க்கையின் ரகசியம் என்ற தலைப்பு. அது நூறு வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்ட புத்தகம். அந்தப் புத்தகத்தை மேலும் ஆராய்ந்த பொழுது தான் எனக்கு தெரிந்தது, இந்த ”ரகசியம்” சிலருக்கு தெரிந்திருக்கிறது. அந்த "ரகசியம்" தெரிந்தவர்கள் எல்லோரும் சரித்திரத்தில் இடம் பெற்றவர்கள் : ப்ளேட்டோ, ஷேக்ஸ்பியர், நியூட்டன், ஹுகோ, பீத்தோவன், லிங்கன், எமர்சன், எடிசன், ஐன்ஸ்டீன் மற்றும் பலர் என்று இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

எனக்குள் எழுந்த கேள்வி இது தான் “ஏன் இதை எல்லோரும் தெரிந்து கொள்ளக் கூடாது?”. நான் அறிந்து கொண்ட இந்த ”ரகசியத்தை” இந்த உலகத்துடன் பகிர்ந்து கொள்ள, இன்று இந்த ரகசியங்களை தெரிந்தவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்று தேடிப் புறப்பட்டேன். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், ஒரு மிகப் பெரிய தத்துவமேதையை சந்தித்தால் அவருடன் முடிந்துவிடாமல் இன்னொருவர், அவரிலிருந்து இன்னொருவர் என்று இது ஒரு சங்கிலித் தொடர் போல இந்த வரிசை நீண்டுக் கொண்டே போகிறது. நான் ஏதாவது வழி தவறி வேறொரு வழியில் சென்றால், ஏதாவதொன்று என் கவனத்தை நேர்வழியில் நடத்திச் செல்கிறது. ஏதாவது ஒரு வழியில் நான் சந்திக்க நினைத்த ஒரு ஆசிரியரை சந்திக்க முடிந்தது மேலும் ஒரு ஆச்சர்யம். சில வாரங்களிலே இன்று நடைமுறையில் அந்த ரகசியங்களை தெரிந்தவர்களைக் கண்டுபிடித்தேன்.

இந்தப் படத்தை எப்படி எடுக்க வேண்டும் என்பதை என் மனத்திரையில் நான் பலமுறை பயிற்சி செய்து கொண்டேன். இந்தப் படத்தை எப்படி எடுக்கவேண்டும் என்ற விவாதம் முடிந்து இரண்டு மாதத்தில் இந்தப் படத்தின் தயாரிப்பில் இருந்த ஒவ்வொரு நபரும் ”ரகசியத்தை” தெரிந்து கொண்டார்கள். என்னுடன் பணிபுரிந்த அத்தனை பேரும் அந்த ”ரகசியத்தை” சில மாதங்களில் புரிந்து கொண்டார்கள். அவர்களுக்கு இந்த ரகசியம் புரியவில்லையென்றால் இப்படி ஒரு அற்புதமான படத்தை நாங்கள் எடுத்திருக்க முடியாது. நாங்கள் பலபேரை இந்தப் படத்தில் பதிவு செய்யவேண்டியிருந்ததால் ஆஸ்திரேலியாவிலிருந்து அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டோம். ஏழு வாரத்திற்குப் பிறகு, என் குழு 25 மிக சிறந்த ஆசிரியர்களை அமெரிக்கா முழுவதும் சென்று 120 மணி நேரம் படம் பிடித்தார்கள். எட்டு மாதத்திற்குப் பிறகு இந்தப் படம் வெளியிடப் பட்டது.

இந்தப் படம் வெளியானதும், பல்வேறு இடங்களில் இருந்து இதன் மகத்துவம் பற்றி தகவல்கள் எங்களுக்கு வந்த வண்ணம் இருந்தது. வலி, மன உளைச்சல், பல வியாதிகளில் இருந்து குணம் பெற்றதாக, இந்த ரகசியத்தை உபயோகித்த ஒவ்வொருத்தரும் எங்களுக்கு கடிதம் மூலமும், இ-மெயில் மூலமும் தெரியப் படுத்தினர். இந்த ரகசியத்தை மருத்துவர்கள் நோயாளிகளுக்கும், ஆசிரியர்கள் மாணவர்களுக்கும், ஹெல்த் க்ளப்கள் தனது வாடிக்கையாளர்களுக்கும், தேவாலயங்கள் பக்தர்களுக்கும் இந்த ரகசியத்தை உபயோகித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறார்கள். நீங்கள் யாராக இருந்தாலும், எந்த நிலையில் இரு்ந்தாலும், எங்கு இருந்தாலும் அது ஒரு பொருட்டே அல்ல, இந்த ரகசியம் உங்களுக்கு வேண்டியதைக் கொடுக்கும்.


Source : The Secret by Rohnda Byrne