Sunday, January 10, 2010

அமெரிக்க அனுபவங்கள் 1 - விட்டில் பூச்சிகள்


இன்று அமெரிக்காவில் நம்பர் ஒன் லாபம் கொழிக்கும் பிஸினஸ் எதுவென்றால் அது டயட் ப்ரோக்கிராம்(Diet Program) தான். எங்கு பார்த்தாலும் டயட் உணவு வகைகள், ஸப்ளிமெண்ட்ஸ்(Supplements) உணவுகள், ஃபிட்னஸ் டூல்கள், டயடிற்க்கென்ற உள்ள எக்ஸர்சைசுகள். கோடிகளைக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள். கோக் மற்றும் பெப்ஸியில் கூட '0' காலோரிகள். அவசரமாக உடலைக் குறைத்துவிட வேண்டும் என்று பணத்தையும், நேரத்தையும் கணக்கில்லாமல் செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லா ஃபிட்னெஸ் சென்டர்களும் மாலை நேரங்களில் நிரம்பித்தான் வழிகிறது. அங்கும் குண்டாக இருப்பவர்களைக் குறி வைத்து சில ப்ரோகிராம்கள் நடத்தி பணம் சம்பாதிக்கிறார்கள். டீவியில் பாதி விளம்பரங்கள் டயட் ப்ரோகிராம் தான். நானும் முறைப்படி வெயிட்லிஃப்ட் கற்றுக் கொள்ளலாம் என்று ஒரு ஃபிட்னஸ் சென்டரில் சேர்ந்தேன். அங்கு கோச்சிங் கொடுப்பவருக்கு மாதம் இவ்வளவு என்று பேசப்பட்டது. வாரத்தில் ஒரு நாள் தான் கோச்சிங். அந்த ஒரு நாளில் ஒரு மணி நேரத்தில் அவர் சொல்லிக் கொடுக்கும் கோச்சிங்கில் அடுத்த ஐந்து நாட்களுக்கு எந்திரிக்க முடியாது. கடுமையான பசி வேற. ஒல்லியாக இருப்பவர்களுக்கு குண்டாகவும், குண்டாக இருப்பவர்கள் ஒல்லியாகவும் தனித்தனி ப்ரோகிராம்கள் வைத்திருக்கிறார்கள். ஆறு மாதம் ட்ரைனிங்கில் எனக்கு ஒரு இம்ப்ரூவ்மண்டும் தெரியவில்லை.. பழையபடி ட்ரட்மில், சைக்கிளிங், .. கார்டியோ ஐட்டங்கள் மட்டுமே இப்பொழுது..


இரண்டாவது சூப்பர் பிஸினஸ் எது என்று பார்த்தால், ஹேர் லாஸ் ட்ரீட்மெண்ட்(Hair Loss Treatment). என்னுடன் வேலை பார்க்கும் ஒருவர் 1200 டாலர்களை செலவழித்து தலையின் வழுக்கையை(பின்னால் ஒரு ஓளிவட்டம்) தனது கல்யாணத்திற்கு முன் சரிசெய்திட இயன்ற அளவு முயற்சி செய்தார். அவர்கள் குடும்பத்தில் எல்லோருக்கும் பரம்பரை வழுக்கை வேறு. அதில் சிறப்பு என்னவென்றால் அந்த ப்ரோகிராமில் குளிக்கும் முன் ஒரு க்ரீம் தலையில் தடவ வேண்டும், குளித்தப் பிறகு ஒரு க்ரீம் தடவிக் கொள்ள வேண்டும். அந்த ப்ரோகிராம் சென்டரில்தான் முடி வெட்டிக் கொள்ளவேண்டும். கிட்டத்தட்ட ஏழெட்டு மாதத்திற்கு அதை முயற்சி செய்து பார்த்துவிட்டு ஒரு சின்ன மாற்றம் கூட இல்லாததைக் கண்டு இப்பொழுது அதெல்லாம் "வேஸ்ட்" என்று மற்றவர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கிறார். சில பேருக்குச் சொல்லித் தெரியுது, சில பேருக்குப் பட்டால் தான் தெரியுது.

பிஸினஸ் பண்ணவேண்டும் என்று யாராவது நினைத்துக் கொண்டிருப்பவர்கள் இந்த இரண்டு பிஸினஸில் ஏதாவதொன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

-------------------------------------------------------------------------------------------------
நான் அமெரிக்கா வந்த புதிதில் டெட்ராய்ட்டில்(Detroit) நம்ம ஊர் மக்களைப் பார்த்தும் முக்கியமாக யாராவது தமிழில் பேசிக் கொண்டிருந்தால் ஆகா நம்மூர் மக்களாச்சேன்னு கொஞ்சம் சிரிச்சா பதிலுக்கு யாரும் சிரிக்கவோ, ஒரு ஹாய் சொல்லவோக் கூட மாட்டார்கள். அது கூட பரவாயில்லை. நம்மளை ஒரு தீண்டத்தகாதவன் போல் ஒரு லுக் விடுவாங்க (ஜெ.ஜெ யில் மாதவன் ஒரு லுக் விடுவாரே அதேமாதிரி கேவலமா). அதத்தான் தாங்க முடியாது. கொஞ்ச நாள் கழித்து ஒரு நண்பனிடம் இது பற்றிக் கேட்டேன். அப்பொழுது தான் அந்த ரகசியம் தெரிந்தது. இங்கு ஆம்வே(Amway), ப்ரிட் வேர்ல்ட் வைடு(BWW), பயோ மேக்னடிக்,கோல்ட் கொஸ்ட் இதுபோன்ற நெட்வொர்க் மார்க்கெட்டிங்(Multi level Marketing) செய்யும் மக்களால் அவர்கள் பாதிக்கப் பட்டவர்கள் என்று. நான் அப்பொழுது கூட முழுதாக நம்பவில்லை. அட்லாண்டா வ்ந்த பிறகு ஒரு நண்பனின் நண்பன் என்னை வீடு தேடி வந்து சந்தித்தார். பாசமழையைப் பொழிந்தார். வெளிநாட்டில் இப்படி ஒரு நல்ல நண்பனா என்று வியக்கும் வகையில் நடந்துக் கொண்டார். ஒரு நாள் (Weekend) வாங்களேன் எங்க ப்ரண்ட்ஸ் எல்லாம் ஒரு கெட் டுகெதர்(Get together) வச்சுருக்காங்க நீங்களும் கலந்துக்குங்கனு கூட்டிக் கொண்டு சென்றார். அவர் நல்லவவவன்னு நம்பி அவர் கூட போனேன். அங்க தான் விதி விளையாடுச்சு.

போற வழியில என்னங்க இன்னும் எத்தனை நாளா இந்த மாதிரி ப்ரோகிராமிங் பண்ணிக்கிட்டே இருக்கப் போறிங்க? அமெரிக்கா வந்து இன்னும் பொழைக்கத் தெரியாம இப்படி வெள்ளந்தியா இருக்கிங்களேன்னு நம்மளை கேட்டார். அப்பக்கூட எனக்குப் புரியல. நாம உண்மையிலே ஒரு தப்பான ஃபீல்ட்க்கு வந்துட்டோமோ? கம்ப்யூட்டர் நம்மளைக் கைவிட்டுருமோ? எட்டு வருடமா குப்பைக் கொட்டிக் கொண்டிருந்த இந்த ஜாவா நம்மளைக் காலை வாரிவிடுமோ? என்று என்னன்னமோ என் மனதில் அந்த நிமிடத்தில் ஓடிக் கொண்டிருந்தது. நண்பர்கள் கூடும் இடம் வந்தது. முதல்ல ஒரு ஜூஸ் ஒன்னக் கொடுத்துட்டு, கோபி இந்த பேப்பர்ஸ்ல கொஞ்சம் சைன் பண்ணிடுங்க. அப்புறம் இந்த ப்ரோகிராமிற்கு ஒரு 300 டாலர்ஸ் கட்டவேண்டியதிருக்கும் என்று சொன்னார்கள். என்னை அழைத்து வந்தவர், நான் வேணும்னா இப்போ கட்டிவிடுகிறேன். நீங்க அப்புறமா ஆன்லைன்ல ட்ரான்ஸ்பர்(Money Transfer) பண்ணிடுங்க என்றார். இதெல்லாம் என்னதுங்க ஒன்னுமே புரியல என்றேன். நான் இதப் பத்தி அப்புறமா சொல்றேன். நீங்க சைன் மட்டும் பண்ணிடுங்கனு சொன்னார். ”சிக்குச்சுடா சிறுத்தை” என்பதற்கு அப்பத்தான் அர்த்தம் புரிஞ்சுது. எனக்கு ஒரு ரெண்டு நாள் டைம் குடுங்க நான் யோசித்து சொல்றேன் என்று சொன்னேன். என்னைக் கூட்டி வந்தவரை அங்கிருந்த எல்லோரும் ஒரு பார்வை பார்த்தார்கள். அந்த பார்வையில் ஒரு உக்கிரம் இருந்தது. என்னைக் கூட்டிக் கொண்டுவரும் பொழுது நிறைய பேசிய நண்பர் என்னை வீட்டில் கொண்டுவந்து விடும் வரை பேசாமலே விட்டுச் சென்றார். மறுநாள் என்னுடன் ரூமில் தங்கியிருந்த நண்பர்கள் எனக்கு கொடுத்த அர்ச்சனைகள் சொல்லி மாளாது.

மறுபடியும் அந்த நண்பர் தொலைப் பேசியில் தொடர்பு கொண்டு பேச முயன்றார். அவருக்காவே எனது தொலைபேசி நம்பரை மாற்றினேன். நண்பர்களே, வெளிநாட்டில் யாராவது உங்களை கண்டுகொள்ளவில்லையென்றால் தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அவர்கள் இந்த மாதிரி மக்களால் காயம் பட்டவர்கள். நெட்வொர்க் மார்க்கெட்டிங் மக்களின் குறிக்கோளே இந்த மாதிரி மார்கெட்டிங் பிஸினஸ் பற்றி தெரியாத மக்கள் தான். அவர்கள் உங்களை மாதிரி ஆட்களை தேடும் நேரம் சனி, ஞாயிறு தான். அப்பொழுது தான் இந்தியர்கள் எல்லா கடைகளிலும்(Walmart,Kroger,Sams,Costco..etc), மால்களிலும் இருப்பார்கள். முதலில் அவர்கள் தான் யார் என்பதையும், அந்த மார்கெட்டிங்கைப் பற்றியும் சொல்லவே மாட்டார்கள். உங்கள் போன் நம்பரைக் கண்டிப்பாக கேட்பார்கள். அதை உறுதி செய்ய ஒரு மிஸ்டு கால் உங்கள் முன்னாலே உங்களுக்கு கொடுப்பார்கள். நீங்கள் பணம் கட்டினால் போதும் உங்களை மாதிரி ஆட்களை அவர்களே பிடித்து தருவதாக உத்திரவாதமும் தருவார்கள். அவர்கள் அடிக்கடி கூறும் வார்த்தை “ரிடையர்மண்ட்”. அஞ்சு வருசம் நீங்க இந்த ப்ரோகிராமில் இருந்தா போதும் உங்களுக்கு ராயல்டி மாதிரி பணம் வந்து கொண்டே இருக்கும். நீங்கள் இப்பொழுது செய்து வரும் வேலையை விட்டுவிட்டு வீட்டில் இருந்து கொண்டே சம்பாதிக்கலாம் என்று கூறுவார்கள். இந்த வார்த்தையில் தான் மக்கள் விட்டில் பூச்சிகளாய் விழுந்துவிடுகிறார்கள்.

உண்மையிலே இந்த மார்க்கெட்டிங்கில் லாபம் இருக்கிறதா, இந்த மாதிரி பிஸினஸில் ஈடுபட்டால் நம்மால் சம்பாதிக்கமுடியுமா, முயன்று தான் பார்ப்போமே என்று நினைப்பவர்களுக்கு நிறைகுறைகள் இங்கே..

1. உங்களுக்கு எக்கச்சக்க நண்பர்கள் இருந்தால், உங்களுக்கு மார்க்கெட்டிங் திறமை இருப்பதாக நினைத்தால் நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம். நீங்கள் ஒரு கஸ்டமரைப் பிடிப்பதற்குள் தாவு தீர்ந்திரும். வலுக்கட்டாயமாக ஒருவரை இதில் நிர்பந்திக்க வேண்டியதிருக்கும். மார்க்கெட்டிங் செய்பவர்களைப் பார்த்தாலே விபரம் தெரிந்தவர்கள் தலை தெரிக்க ஓடுவதைப் பார்க்கலாம்.

2. உங்களுக்குப் பயிற்சி அளிக்கும் போது இப்பொழுது இதில் சம்பாதித்துக் கொண்டிருப்பவர்களை உங்களுக்கு முன் மாதிரியாக காட்டுவார்கள். அவர்கள் உங்களுக்கு எப்படி சம்பாதிக்க வேண்டும் என்று விளக்கம் சொல்வார்.

3. பெரிய, பெரிய ஹோட்டலில் தான் மீட்டிங் நடக்கும். நீங்கள் ஒரு தடவை அந்த மீட்டிங் அட்டண்ட் பண்ணினால் உங்களுக்கும் ஆசை வரும்.

4. உங்களுக்கு நிறைய நண்பர்கள் அறிமுகமாவார்கள். நீங்கள் ஒருமுகப் படுத்தப் படுவீர்கள். இந்த பிஸினசைத் தவிர உங்கள் புத்தியில் எதுவும் ஏறாது. நீங்கள் பார்க்கும் எல்லோரும் உங்களுக்கு கஸ்டமராகவே தெரிவர். தயவு தாட்சண்யமே கிடையாது. லைஃபே பிஸினஸாகிவிடும்.சில நல்ல நண்பர்களை இழக்க நேரிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

5. இதில் சம்பாதிக்கிறவர்கள் சம்பாதித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஏமாறுபவர்கள் ஏமாறிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

6. மார்க்கெட்டில் இருக்கும் எல்லா புக்குகளும் இவர்களுக்காகவே எழுதியதாக கூறுவார்கள் உ..தா..(Rich Dad Poor Dad, Who Moved My Cheese ..etc). நான் இந்த புத்தகங்களை தன்னம்பிக்கைக்காக(Self Development) படித்தவை அதனால் தான் என்னுடைய பிளாக்கில் புத்தக அலமாரியில் இருக்கிறது. வேறு எந்த உள்குத்தும் இல்லை.

7. அடுத்த பிரிவுக்கு(Next Stage) போகும் போது ப்ரமோஷன், அவார்ட்(Silver,Gold, Diamond), மெடல்ஸ் எல்லாம் கொடுத்து ஊக்குவிப்பார்கள்.

என்னடா, இவன் தான் இதிலே சேரவே இல்லையே இதப் பற்றி இவ்வளவு சொல்றானேன்னு யோசிக்கிறீங்க. அந்த நிகழ்சிக்குப்(Get Together) பிறகு இந்த மூன்று வருடத்தில் நிறைய பேரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் 1990களில் இங்கு வந்து இந்த மாதிரி பிஸினஸில் சேர்ந்து பல லட்சம் டாலர்களை இழந்தவர்களையும், ஆசையில் இதில் இறங்கிவிட்டு, தொடர முடியாமல் விட்டுவிட்ட அப்பாவிகளையும் சந்தித்த போது அவர்கள் வருத்தப்பட்டு புலம்பியது தான் இந்த பதிவு.

டிஸ்கி : இந்த பதிவில் நான் எழுதியிருப்பவை எல்லாம் என் அனுபவத்தில் தெரிந்துகொண்டது. இது யாரையும், யார் மனதையும் காயப்படுத்தும் நோக்கத்தோடு எழுதியவை அல்ல. ஏன்னா நான் அவன் இல்லை.

இது சம்பந்தமாக ஒரு ஒளியோட்டம்


25 comments:

Anonymous said...

I really enjoyed reading this post. Excellent advice. Buyers beware.

Ravi

Sri said...

Nice post and really useful piece of information :)

Srini

Zorro said...

Nice... Very useful for new comers...

geethappriyan said...

அருமை நண்பர் கோபிநாத்,
மிக அருமையான பதிவு,
சேம் ப்ளட்.சமீபத்தில் சென்னை சென்றிருந்த போது எனக்கும் ஆம்வேயில் புதிதாய் சேர்க்கப்பட்டிருந்த என் மனைவி என்னிடம் 7000ரூபாய்க்கு பொருட்களை தலையில் கட்டிவிட்டார், பொருட்கள் ஒர்த்ட் தான்,ஆனால் விலை அதிகம், அன்றாட வீட்டு உபயோகப் பொருட்கள் தரமாய் இருப்பதால் நாங்கள் மட்டும் தீர தீர வாங்கிக்கொள்கிறோம்.
===========
மற்றபடி ஒருவரை நிர்பந்திப்பதும்,எதுவும் சொல்லாமல் பேராசை மட்டும் காட்டுவதும், இப்போது பணம் கட்டுகிறேன் அப்புறம் தாங்கள் என சொல்லுவதும் அநியாயம்.
===========
இப்போது 30களில் இருக்கும் அனைத்து குடும்பஸ்தர்களும் உடல் எடையை குறைக்க மருந்து தின்கின்றனர்,இது எங்கே போய் முடியுமோ?ஏஹோ ப்ரோடீனாம், அது குடிக்கனுமாம்,மாததுக்கு 5000ரூபாயாம்,

Unknown said...

nalla sonneega friend; because of this i lost some friends but i am not a member of any mlm business,

M.S.R. கோபிநாத் said...

@ நன்றி அனானிமஸ். வருகைக்கும் நன்றி.

@ நன்றி ஸ்ரீ. வருகைக்கும் நன்றி.

@ நன்றி ராம்.

@ கார்த்திக்கேயன், பதிவுல சொல்ல மறந்துட்டேன். இங்க கணவன் மனைவியாகத் தான் நிறைய பேர் இந்த பிஸினஸ் பண்றாங்க. இதில ரெம்ப வருஷமா இருக்கிறவங்க, கணவன் மனைவியாத் தான் சேரச் சொல்றாங்க. கணவன் வேலைக்குப் போனாக் கூட மனைவி புதுசா சேருகிறவங்கள ஃபாலோ பண்ணனுமாம். நீங்க பணத்தை உங்க மனைவிக்கு குடுத்ததாக நினைத்துக் கொள்ளுங்கள். இங்க டயட்னு சொல்லிக்கிட்டு வெறும் மீல் பார்( 5 ஸ்டார் சாக்லேட் மாதிரி இருக்கும்) அதைத் தான் பகலில் சாப்பிடுகிறார்கள். அதனால் வரும் சைட் எபக்ட் பற்றி கவலைப் படுவதில்லை யாரும். நன்றி கார்த்திக்கேயன்.

@ நன்றி எஸ்.டபிள்யு.எஸ். வருகைக்கும் நன்றி.

Thekkikattan|தெகா said...

கொடுமையா சிக்கி வெளியே வந்திருக்கீங்க, திகிலா இருக்கில்ல :) . எனக்கும் 97களின் முதல் பாகத்தில இது மாதிரியான ஒரு அனுபவமுண்டு. உடனே வெளியே வந்தாச்சு. சேதாராம் ரொம்ப இல்லை.

ஆமா, நீங்க இன்னும் அட்லாண்டாவிலயா இருக்கீங்க?

dondu(#11168674346665545885) said...

சமீபத்தில் 1956ல் என் அன்னையின் தோழி ஒருவர் இம்மாதிரி ஒரு திட்டத்தில் தான் சேர்ந்து கொண்டு அவரையும் சேருமாறு படுத்தினார். என் தந்தை அதெல்லாம் நடக்காத காரியம் என்று விரட்டி விட்டார். பிறகு ஒரு நாள் என்னுடன் இது பற்றிப் பேசுகையில் தான் ஏன் அவ்வாறு நடந்து கொண்டார் என்பதை விளக்கினார்.

ஆனால் நீங்கள் சொல்வது போல கணக்கெல்லாம் போட்டு அல்ல. அவர் சிந்தனை தெளிவாக இருந்தது. இம்மாதிரி திட்டங்கள் பலவற்றை அவர் தன் சிறுவயதிலிருந்தே பார்த்து வந்திருக்கிறார். அதில் வெகு சிலரே லாபம் அடைந்தனர் பலர் நஷ்டப்பட்டனர். அவருக்கு இரண்டில் எந்தக் குழுவிலும் இருக்க விருப்பமில்லை அவ்வளவே.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் எனக்கு மிகவும் பரிச்சயமான, ஆனால் நான் இதுவரை நேரில் சந்திக்காத ஒருவர் இந்தத் திட்டத்தில் ஒரு பணமும் போடாமல் ஆறே மணி நேரத்தில் 3600 ரூபாய் சம்பாதித்தார். எப்படி?

ஒரு பெரிய மல்டி லெவல் மார்க்கெட்டிங் கம்பெனிக்கு அமெரிக்கர் ஒருவர் ப்ரசெண்டேஷனுக்கு வந்த போது நான் குறிப்பிட்ட நபர் தேவைப்பட்டார். அவர்தான் மொழிபெயர்ப்பாளர் டோண்டு ராகவன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

மன்னிக்க வேண்டும் எனது பின்னூட்டம் இதே பொருள் பற்றி செல்வன் அவர்கள் எழுதிய பதிவுக்கு போட்டது.

எதற்கும் எனது இப்பதிவையும் பார்த்து விடுங்கள், http://dondu.blogspot.com/2008/05/blog-post_07.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

அரங்கப்பெருமாள் said...

//அவசரமாக உடலைக் குறைத்துவிட வேண்டும்//

அப்பிடின்னா? நமக்கு அப்பிடி ஒரு ஆசையே வரக்கூடாது கோபி.



//கொஞ்சம் சிரிச்சா பதிலுக்கு யாரும் சிரிக்கவோ, ஒரு ஹாய் சொல்லவோக் கூட மாட்டார்கள். அது கூட பரவாயில்லை. நம்மளை ஒரு தீண்டத்தகாதவன் போல் ஒரு லுக் விடுவாங்க//


போச்சு... மாட்டினீங்களா நீங்களும்!
வால்-மார்ட் -ல பெர்ஃபுயூம்(perufume) பக்கம் போனா போதும், வருவாங்க.. இத try பண்ணுங்க. Can you suggest the good one - அப்பின்னு வருவாங்க.
அப்பறம் நீங்க citigroup or GE கேப்பாங்க. GE-ன்னு சொன்னா, இவர தெரியுமா அவரத் தெரியுமா.. இப்பிடிக் கேட்டு பின், consultant யாரு ஒரு கேள்வி. அய்யோ தாங்க முடியல சாமி.


நல்லாத்தான் மாட்டி,இப்ப நல்லா எழுதியிருக்கீங்க...

Anonymous said...

இந்த வகை பயிற்சிகளில் அவன் இவ்வளவு சம்பாதித்தான், இவன் இவ்வளவு சம்பாதித்தான். என் மனைவி கேட்டதை வாங்கி கொடுக்க முடியல அப்படி இப்படி என்று மத்திய தர குடும்பத்தின் அத்தனை சின்ன சின்ன ஆசைகளையும் அள்ளிவிடுவார்களே பார்க்க வேண்டும். அற்புதமாக இருக்கும், ஒரு இரண்டு மணி நேரமாவது நம்மோடு நன்றாக மகிழும் விதமாக பேசுவார்கள். ஆனால் மருந்துக்கு கூட இப்படி தான் பணம் வரும், அதில் உனக்கு இவ்வளவு என்று சொல்லவே மாட்டார்கள்.

பனிமலர்.

Unknown said...

Hi gobi,
same blood..avvvvv...they came to my house at night 11 o'clock and looking for raja, he didn't came out of the room and I told he is out of town for a week....OMG..

M.S.R. கோபிநாத் said...

@ வாங்க தெக்கிட்டான். உண்மையிலே பயங்கர அனுபவம் தான். ஆமா இன்னும் அட்லாண்டாவில் தான் இருக்கிறேன். ஏன் கேட்கிறிங்க? வருகைக்கு நன்றி.

@ வாங்க ராகவன். நான் முதல் பின்னூட்டத்தை பார்த்ததும் கொஞ்சம் குழம்பிப் போனேன். அடுத்து வந்த பதிவைப் பார்த்துத் தான் புரிந்தது. நீங்கள் கொடுத்த லிங்கை பார்த்தேன். இந்த பிஸினஸ் காலகாலமாக நடந்துகொண்டு தான் இருக்கிறது. என்னத்த சொல்ல? வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி.

@ பெருமாள், ஆசை யார விட்டது. சும்மா ட்ரைப் பண்ணிப் பார்க்கலாம்னு ஜிம்மிற்கு போனேன். நல்ல வேளை கம்ப்ளீட்டா மாட்டல. நன்றி பெருமாள்.

@ வாங்க பனிமலர். மூன்றாம் சந்திப்பில் தான் உண்மையை சொல்லுவார்கள். அதுவரை அவன்/அவள் உங்கள் எதிரி என்றே தெரியாது. அப்படித்தான் கோச்சிங் கொடுத்திருப்பார்கள்.

@ சுஜா, பார்த்துக் கவணமாக இருங்க. கொஞ்சம் இடம் கொடுத்தாலும் நீங்க அவுட். வருகைக்கு நன்றி.

Thenammai Lakshmanan said...

கோபி ஹெல்த் சென்டர் பற்றியும் மல்டி லெவெல் மார்க்கெட்டிங் பறியும் அருமையாய் சொல்லி இருக்கீங்க
பகிர்வுக்கு நன்றி
போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பதை நினைவில் கொண்டால் வாழ்வில் எல்லாம் நலமே

M.S.R. கோபிநாத் said...

@ கரெக்டா சொன்னீங்க தேனம்மை. வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி.

Padma said...

Hi gopi anna.,
The article was really interesting.,We too had this MLM experience.correct ah sonnenga...,

M.S.R. கோபிநாத் said...

@ வாங்க பத்மா, அமெரிக்கால எல்லோருக்கும் இந்த அனுபவம் கிடைத்திருக்கும். விபரம் தெரியாதவன் மாட்டிக் கொள்கிறான். வருகைக்கு நன்றி.

முக்கோணம் said...

//பிஸினஸ் பண்ணவேண்டும் என்று யாராவது நினைத்துக் கொண்டிருப்பவர்கள் இந்த இரண்டு பிஸினஸில் ஏதாவதொன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.//

அழகான நடை..விரும்பிப் படித்தேன்..

498ஏ அப்பாவி said...

இது​போல ​தொந்தரவுகள் இங்​கே​யும் உண்டு... இது​போல ​கோல்டுவிக்கே​றேன்னு பல ​பேரு பணத்​தை ஆட்​டைய ​போட்ட கூட்டத்​தைபற்றி ​செய்திதாளில் அறிந்திருப்பிர்கள் என்று நி​னைக்கின்​றேன்

M.S.R. கோபிநாத் said...

@ நன்றி முக்கோணம்.

@ இந்த தொந்தரவு உலகம் முழுக்க பரவியிருக்கு. கோல்ட் கொஸ்ட் பத்தி நானும் கேள்விப் பட்டேன். வருகைக்கு நன்றி.

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யமான பதிவு. நல்ல எழுத்து நடையில் எழுதி உள்ளீர்கள். ரசித்துப் படித்தேன்

M.S.R. கோபிநாத் said...

@ நன்றி ஸ்ரீராம். வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

அறிவிலி said...

நேரமிருக்கும்போது இதையும் பாருங்களேன்

http://kirukkugiren.blogspot.com/2009/04/blog-post_07.html

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

அருமையான இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_21.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Asiya Omar said...

பகிர்வுக்கு நன்றி.இன்று வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.