Monday, February 22, 2010

Pay It Forward(2000) - விமர்சனம்



நான் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் காலங்களில் வீட்டிற்கு சில போஸ்ட் கார்டுகள் வரும். அதில் ஏதாவது கடவுளின் மகிமை பற்றி எழுதி யாரோ அனுப்பியிருப்பார்கள். மேலும் அது போல் சில பேருக்கு(5 முதல் 10 வரை) தபால் அனுப்பவேண்டும் என்றும், இல்லையென்றால் உயிருக்கு ஆபத்து என்றும் அப்படி தபால் அனுப்பினால் வாழ்க்கையில் நன்மைகள் நடக்கும் என்றும் எழுதியிருக்கும்(டைப் செய்யப்பட்டிருக்கும்). அந்த கடிதத்தைப் பார்த்து பயந்தது உண்டு. நான் வேலைக்கு சேர்ந்த புதிதில் நிறைய ஃபார்வேட் மெயில்கள் வரும். அதிலும் இது போன்று இந்த மெயிலை 5 பேருக்கு அனுப்பினால் இந்த நன்மையென்றும், 10 பேருக்கு அனுப்பினால் அந்த நன்மையென்றும் கடைசியில் எழுதியிருப்பார்கள். அந்த மெயிலின் ஆரம்பத்தைப் பார்த்தால் 100 பேரின் மெயிலுக்கு சென்று கடைசியாக நம்மிடம் ஃபார்வேர்டாகி வந்திருக்கும். இன்றும் அதுபோல் சில மெயில்கள் வந்துகொண்டு தான் இருக்கிறது. இதற்கு ”செயின் ரியாக்‌ஷன்”(சங்கிலித் தொடர்) என்று ஆங்கிலத்தில் அர்த்தம். எங்கோ ஒருவர் தொடங்கிய இந்த தபால் அல்லது மெயில் பலபேரைச் சென்றடைகிறது. அதை நமக்கு நல்லது நடக்கும் என்றும், அனுப்பாவிட்டால் ஏதோ தீமைகள் நமக்காகவே காத்திருப்பது போலவும், ஒரு பிரமையை உண்டு பண்ணிவிடுவது தான் இதன் நோக்கம்.

இந்த செயின் ரியாக்‌ஷனில் பலவகை உண்டு. நான் அமெரிக்க அனுபவத்தில் எழுதியது போல் மல்ட்டிலெவெல் மார்க்கெட்டிங் கூட ஒருவகை செயின் ரியாக்‌ஷன் தான். இந்த வகையில் அடுத்தவர்கள் நிர்பந்திக்கப் படுகிறார்கள். ஒருவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் போது அறியவகை ரத்தம் தேவைப் படுகிறது என்றும், குழந்தையின் அறுவை சிகிச்சைக்காக பணம் தேவைப் படுகிறது என்றோ உதவி கேட்டு இது போன்ற செயின் மெயில்கள் வரும். உதவ வேண்டும் என்று நினைப்பவர்கள் உதவுவார்கள் இல்லையேல் உதவும் உள்ளம் கொண்டவர்களுக்கு ஃபார்வேர்ட் செய்துவிடுவார்கள். இது போன்ற உதவி செயின் ரியாக்‌ஷனில் மட்டுமே முடியும். ஒரு மணி நேரத்தில் பல நூறுபேரைச் சென்றடையச் செய்து பயன்பட வைக்கிறது. இது ஒருவகை. ஏன் சிக்கன்குன்யா, H1N1 கூட ஒருவகை செயின் ரியாக்‌ஷன் தான். நாம் இந்த விமர்சனத்தில் பார்க்கப் போகும் படத்திலும் ஒரு செயின் ரியாக்‌ஷன் இருக்கிறது. அதற்காகத்தான் இவ்வளவு முன்னோட்டம்.

கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் வாழ்க்கையில் ஒரு கஷ்டமான சூழ்நிலையில் அல்லது ஒரு பிரச்சனையில் இருக்கிறீர்கள். உங்களுக்கு தெரிந்தவர் ஒருவர் உங்கள் பிரச்சனையில் இருந்து காப்பாற்றுகிறார். அதற்காக அவருக்கு நீங்கள் நன்றிக் கடன் பட்டிருக்கிறீர்கள்(Pay Back). அவர் உங்களிடம் கேட்பதெல்லாம் இதே போல் உண்மையிலே கஷ்டப்படும் மூன்று நபர்களுக்கு எந்த நிபந்தனையும் இல்லாமல் உதவ வேண்டும் (Pay it Forward) என்பது தான். நீங்கள் உதவுவீர்களா?

கதையின் தொடக்கத்திலே குற்றவாளியைப் பிடிக்க அவசரமாக போகும் காவல்துறையினர், தெரியாமல் ஒரு பத்திரிக்கை நிருபரின் காரை இடித்துவிட்டுச் சென்றுவிடுகின்றனர். காரை எடுக்க முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது, அந்த வழியாக வரும் ஒருவர் தன்னுடைய காரை(ஜாக்குவார் கார்) எடுத்துச் செல்லுமாறு கூறுகிறார். அவனுக்கு ஒரே ஆச்சர்யம். எதை நம்பி எனக்கு கார் தருகிறீர்கள் என்று கேட்கிறான்.அதற்கு அவர், நீ செய்யவேண்டியதெல்லாம் மூன்று பேருக்கு உதவி செய், என்று தன்னுடைய விசிட்டிங் கார்டைக் கொடுத்துவிட்டுச் சென்று விடுகிறார். அவர் இப்படி முன்பின் தெரியாத ஒருவருக்கு உதவ வேண்டும் என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும் என்று, மறுநாள் அவரைத் தேடிப் போகிறான். அவர் இதே போல் எனக்கு ஒரு ஆப்ரிக்கஅமெரிக்கன் உதவி செய்தான் என்றும், அவன் இப்பொழுது ஜெயிலில் இருப்பதாகவும், அவன் தான் தன்னுடைய மகளை உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் பொழுது காப்பாற்றி, என்னை இது போல் மூன்று பேருக்கு உதவுமாறும் கூறினான், என்று கூறுகிறார். அதனால் தான் நான் உனக்கு உதவி செய்தேன் என்று சொல்கிறார்.அவன் ஆப்ரிக்க அமெரிக்கனை தேடி ஜெயிலுகுச் செல்கிறான். இப்படி அவன் ரிஷிமூலத்தைத் தேடுகிறான். கடைசியில் இந்த எண்ணத்தை விதைத்தது ஒரு சிறுவன் என்று தெரியவருகிறது.அவன் தான் ட்ரவர்.(Haley Joel Osment of "The Sixth Sense").

பள்ளியின் முதலாம் நாள், வகுப்பாசிரியர்(Kevin Spacey of "American Beauty") ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடம் உலகத்தையும், சமூகத்தையும் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கிறார். உலகத்திற்கும் உங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன என்று கேட்கிறார். யாரிடமும் பதில் இல்லை. நீங்கள் வளர்ந்த பிறகு இந்த உலகத்தைப் பற்றி தெரியாமல் இருந்தால் உங்களை அது விரக்தியில் கொண்டுபோய் விட்டுவிடும். அதனால் சமூகத்தை மாற்ற சிந்தனை செய்யுங்கள். அந்த சிந்தனை தான் இந்த வருடம் கொடுக்கும் அசைன்மெண்ட்(Think of an Idea to change our world and Put it into action) என்று கூறுகிறார். அவர் கொடுக்கும் அந்த அசைன்மெண்ட் ட்ரவர் மனதில் ஒரு சிந்தனையை தூண்டிவிடுகிறது. காட்சியின் முன்னோட்டம் கீழே.
ட்ரவர் வீட்டிலிருந்து பள்ளிக்கு தன்னுடைய சைக்கிளில் தான் செல்வான்.அவன் போகும் வழியில் வீடில்லாதோர்,உணவில்லாதோரை தினமும் பார்ப்பான்.அவனுக்கு இவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் எப்பொழுதும் உண்டு. அந்த அசைன்மெண்டைக் கேட்டதும் அவனுக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. மறுநாள் தன்னுடைய வகுப்பில் யோசனையை சொல்கிறான். அந்த யோசனையின் பெயர் தான் Pay it Forward. தான் மூன்று பேருக்கு உதவப் போவதாகவும்,அவர்களை அவன் தேர்வு செய்துவிட்டதாகவும் சொல்கிறான்.அவனுடைய யோசனை எல்லோருக்கும் பிடித்துப் போக,அதையே எல்லோரையும் செய்யச் சொல்கிறார் வகுப்பாசிரியர். ட்ரவரின் அம்மாவிற்கு(Helen Hunt) இரண்டு வேலை. இரவில் ஒரு ஸ்ட்ரிப்பராக வேலை செய்கிறார்.பகலில் ஒரு கேசினோவில் செக்யூரிட்டி வேலை. ஆதனால் வீட்டில் பெரும்பாலும் இருக்கமாட்டார். வீட்டில் இருந்தாலும் குடிப்பதால் அவனுக்கும் அவன் அம்மாவிற்கும் அடிக்கடி சண்டை வருவதுண்டு.

முதலில் வீடில்லாத ஒருவனை(James Caviezel) வீட்டிற்கு கூட்டிவந்து உணவு கொடுக்கிறான். வீட்டில் உள்ள கராஜில் அம்மாவிற்கு தெரியாமல் தங்க வைக்கிறான். ஒருநாள் அவன் அம்மா தூங்கி கொண்டிருக்கும் பொழுது கராஜில் எதோ சத்தம் கேட்க, திருடன் என்று துப்பாக்கியுடன் சென்று பார்க்கிறாள். அங்கே ட்ரவர் தங்கவைத்த நபர் காரின் அடியில் வேலை செய்து கொண்டிருக்கிறான். அவன் தான் திருட வரவில்லை எனவும், ட்ரவருக்கு அசைன்மெண்டில் உதவ வந்திருப்பதாகவும் சொல்ல, தன்னுடைய மகனின் யோசனையை அவனிடம் கேட்டுத் தெரிந்து கொள்கிறாள். அவன் பல வருடங்களாக ஓடாமல் இருந்த காரை சரி பண்ணிவிட்டதாகவும், இன்னும் இரண்டு பேருக்கு உதவ வேண்டும் எனவும் சொல்லிவிட்டு சென்றுவிடுகிறான். அவன் அம்மாவிற்கு ட்ரவர் மேல் மதிப்பு வருகிறது.
இரண்டாவதாக, தன்னுடைய வகுப்பாசிரியரையும், அம்மாவையும் சந்திக்கவைத்து அவர்களுக்குள் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தி திருமணம் செய்து கொள்ளவைக்க முயற்சி செய்கிறான்(இது அமெரிக்காவில் மட்டுமே சாத்தியம்). வகுப்பாசிரியரோ முதலில் ஏற்க மறுக்கிறார். அவன் அம்மாவிற்கும் ஏது செய்வதென்று தெரியாமல் தவிக்கிறார். டேடிங் எல்லாம் செல்கிறார்கள். எப்படி, எந்த சூழ்நிலையில் சேர்ந்தார்கள் என்பதை டிவீடி பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

மூன்றாவதாக, தன்னுடைய தோழன் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனையிலிருந்து அவனை விடுவிப்பது. தன்னுடைய தோழன் மெக்ஸிகன் மாணவர்களால் அடிக்கடி துன்புறுத்தப்படுகிறான். தடுக்க வந்த ட்ரவரை மிரட்டுகிறார்கள். அதனால் தோழனை அதிலிருந்து விடுவித்து உதவி செய்ய நினைக்கிறான்.

அந்த பத்திரிக்கை நிருபர் கடைசியில் Pay it Forward யோசனையைக் கண்டுபிடித்த ட்ரவரை சந்திக்கிறான். அவனிடம் தொலைக் காட்சிக்காக ஒரு பிரத்யேகப் பேட்டி எடுக்கிறான். அந்த பேட்டியில் எந்தெந்த ஆசைகள் நிறைவேறியது என்பதை விவரிக்கிறான். அந்த பேட்டி முடிந்தததும் வெளியே வரும் பொழுது தன் நண்பன் அதே மெக்ஸிகன் மாணவர்களால் தாக்கப் படுகிறான். இந்த தடவை ட்ரவர் துணிச்சலுடன் சென்று தன் நண்பனைக் காப்பாறப் போகிறான். அதற்குள் ஒரு மெக்ஸிகன் தன் கையிலிருந்த கத்தியால் ட்ரவரைக் குத்திவிடுகிறான். ட்ரவர் இறந்து விடுகிறான். அன்று இரவு ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட மக்கள் கையில் மெழுகுவர்த்தியுடன் ட்ரவரின் வீட்டு முன்னால் அஞ்சலி செலுத்தும் பொழுதுதான் ட்ரவரின் Pay it Forward மக்களை எப்படிச் சென்றடைந்திருக்கிறது என்பதை அவனுடைய அம்மா கண்ணீருடன் மகனை நினைத்துப் பார்க்கிறாள்.



17 comments:

Anonymous said...

This movie was copied by Murugadass (who also copied Momento into Gajini) in Telugu (name I am not sure "Stalin"?) with Chiranjeeve. Luckily it was not a big hit, so we were saved from this horrilbe remake.

Anonymous said...

I meant to say " we were saved from this horrible remake in Tamil".

அண்ணாமலையான் said...

அப்டி போடு அருவாள

Menaga Sathia said...

பொறுமையாக வந்து படிக்கிரேன் சகோ...

Thenammai Lakshmanan said...

//அனுப்பாவிட்டால் ஏதோ தீமைகள் நமக்காகவே காத்திருப்பது போலவும், ஒரு பிரமையை உண்டு பண்ணிவிடுவது தான் இதன் நோக்கம்./

HAHAAHA superb GOBENATH

Thenammai Lakshmanan said...

பலமுறை ரசித்துப்பார்த்த படம் இது கோபி
இந்த தலைப்பைப் பார்த்ததுமே நீங்கள் முன்பு எம் எல் எம் க்கு எழுதிய இடுகைதான் ஞாபகம் வந்தது அதையும் குறிப்பிட்டு சிறப்பாக எழுதி இருக்கீங்க அது பொருளைத் தலையில் கட்டுவது.. இது உடல் மற்றும் மன ரீதியான உதவி.. ரொம்ப எக்ஸலண்டா இருக்கு விமர்சனம் ..திரும்பப் படம் பார்த்தது போல..

M.S.R. கோபிநாத் said...

@ வாங்க அனானிமஸ். இது தமிழ்ல கூட இருக்கு ரமணா. அது தான் தெலுங்குல ஸ்டாலின்னு எடுத்தாங்க. வருகைக்கு நன்றீ.

@ வாங்க அண்ணாமலை. நன்றி.

@ மேனகா..பொறுமையா படிங்க..ஒன்னும் அவசரமில்லை. நன்றி.

@ வாங்க தேனம்மை. நன்றி. நல்ல படத்தை எத்தனை தடவைனாலும் பார்க்கலாம். பதிவு எழுதுவதற்காகவே மறுபடி பார்த்தேன்.

மரா said...

ரொம்ப அற்புதமான படம். கேள்விப்பட்டிருக்கிறேன் தெலுங்கு ’ஸ்டாலின்’ வெளிவந்த சமயத்தில். ஆனால் நீங்க அதை பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டிவிட்டீர்கள்.நன்றி

அரங்கப்பெருமாள் said...

படம் பார்க்க இப்ப நேரமில்ல கோபி.உங்க விமர்சனத்த பார்த்ததும் பார்க்கத் தோணுது. இந்த வாரம் செஞ்சுடுவோம்.

சூப்பர்.

M.S.R. கோபிநாத் said...

@ வாங்க இராமசாமி. வருகைக்கு நன்றி.

@ நன்றி மயில்ராவணன். வாய்ப்பு கிடைக்கும் பொழுது பாருங்கள்.

@ நன்றி பெருமாள். நேரம் கிடைக்கும் பொழுது பாருங்கள். டாரண்டில் இருக்கிறது. டவ்ன்லோடு செய்து பாருங்கள்.

Prabhu said...

அட, இதை முருகதாஸ் எடுத்து படம் பண்ணியிருக்கிறார் என நினைக்கிறேன்...

Prabhu said...

ரொம்ப சுவாரஸ்யமா டச்சிங்கா எழுதிருகீங்க!

M.S.R. கோபிநாத் said...

@ நன்றி பப்பு. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

M.S.R. கோபிநாத் said...
This comment has been removed by the author.
geethappriyan said...

நண்பரே தாமதமாய் வந்ததாய் நைனைக்க வேண்டாம்
முன்னமே படித்துவிட்டேன்.
பின்னூட்டம் இட முடியவில்லை.
அருமையை எழுதினீர்கள்
இந்தவாரம் இதை பார்ப்பேன்.
கெவின் ஸ்பேஸி என் ஃபேவரிட் நடிகர்.

M.S.R. கோபிநாத் said...

@ நன்றி கார்த்திகேயன். தெரியும் நீங்கள் படித்திருப்பீர்கள் என்று. se7en படம் பார்த்த பிறகு கெவின் ஸ்பேசியை ரசிக்காதவர் இருக்க முடியுமா?

Thenammai Lakshmanan said...

கோபி நாத் உங்களை ஒரு தொடர் இடுகை எழுத அழைத்து இருக்கேன் வந்து என்னோட பதிவைப்பாருங்க