நாம் எத்தனையோ பாடல்களை அனுதினமும் கேட்கிறோம். சில பாடல்கள் நம் நெஞ்சை வருடுவதோடு மட்டுமில்லாமல் நம்மை நம்முடைய பழைய நினைவுகளுக்குள் கொண்டு செல்லும். அப்படி நான் ரசித்த பாடல் "வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி" என்று வெயில் படத்தில் வந்த பாடல். இதை எழுதியவர் நா.முத்துக்குமார். இயக்கம் வசந்த பாலன். இசை G.V.பிரகாஷ்.
கிராமத்தில் வளர்ந்தவர்க்கும், நகரத்தில் வளர்ந்தவர்க்கும் இந்த வெயில் அனுபவம் தனித்தனியாக இருக்கும். ஆனால் கண்டிப்பாக அந்த இளமை பருவத்தில் வெயில் நண்பனோடு வளர்ந்த அனுபவம் ஒன்றாக தான் இருக்கும். அந்த வெயில் நாம் விளையாடும் ஒவ்வொரு ஆட்டத்திலும் நண்பனாக சேர்த்து விளையாடுவோமே. குழந்தை பருவம் தான் எத்தனை அழகானது. நமக்கு யாரோடும் பகை இல்லை. வெயிலோடும் விளையாடித்தானே வளர்ந்திருக்கிறோம்.
வேப்பங்கொட்டை அடிச்சு வந்த ரத்தம் ரசிச்சோம், வத்திக்குச்சி அடுக்கி கணக்கு பாடம் படிச்சோம், தண்ணியில்லா ஆத்தில் கிட்டிப்புல்லு அடிச்சோம், தண்டவாளம் மேல காசை வச்சு தொலச்சோம்.
இன்றும் எனக்கு நினைவிருக்கிறது, வெப்பங்கொட்டையை ரெண்டாக உடைத்து அதில் ஒரு பாதியை கையின் முட்டியை மடக்கி அதன் மேல் நடுவில் வைக்க நண்பன் அதை ஓங்கி அடிக்க கையை பத்து முறை சுற்றவேண்டும். அப்படி சுற்றினால் பலம் வரும் என்பது குருட்டு நம்பிக்கை. இதை பள்ளி கூடத்தில் பல முறை செய்தது நினைவிருக்கிறது.
அஞ்சு பைசா ஃபிலிமை வாங்கி அப்பாவோட வேட்டியிலே,கண்ணாடி லென்சை வச்சு சினிமா காமிச்சோம்,அண்ணாச்சி கடையில தான் எண்ணெயில தீக்குளிச்ச,பரோட்டாக்கு பாதி சொத்தை நாம அழிச்சோம்
மேலுள்ள வரிகளில் சொல்லியது போல பரோட்டாவுக்கு சொத்தை அழித்ததை விட நெகடிவ்ற்கும்,லென்சுகும் சொத்தை அழித்தது தான் ஜாஸ்தி.
பொட்டல் காட்டில் பொழுதெல்லாம்,ஓட்டம் போட்டு திரிஞ்சோம்,வெயிலத் தவிர வாழ்க்கையில,வேற என்ன அறிஞ்சோம்
தொப்புள்கொடியைப் போலத்தான் இந்த ஊரை உணர்ந்தோம்.
வெயிலைத் தவிர வாழ்க்கையில வேற என்ன அறிஞ்சோம்
இந்த வரிகள் எல்லாம் பழைய நினைவுகளை சிறிது ஞாபகபடுத்திப் போகும்.இன்றும் இளையராஜாவின் பாட்டுக்கள் நம் மனதில் நீங்கா இடம்பெற்றிருக்க காரணம் அந்த பாடல்களோடு நாம் வளர்ந்ததால். பழைய பாடல்கள் கேட்கும் போது நம் நினைவுகளை சிறிது பின்னோக்கி பார்ப்போம். அந்த காலம் நமக்கு மறுபடியும் வாராதா என்ற ஏக்கமும் வந்து போகும்.
மீண்டும் ஒரு நல்ல பாடலுடன் சந்திக்கிறேன். உங்களுக்காக அந்த பாடலின் திரை வடிவத்தை High Definition இல் இங்கே ...
2 comments:
It is really interesting and taking to me in the old days.
Post a Comment