
அமெரிக்கர்களின் அன்றாட வாழ்க்கையில் சற்று மாறுதலை ஏற்படுத்தும் வகையில் ஒரு வெளிச்ச விழா! இந்த அமெரிக்கத் தீபாவளி. இந்த அமெரிக்கத் தீபாவளிக்குப் பெயர் "ஹாலோவீன்". இறந்தவர்கள் சொர்க்கத்துக்கும் போகாமல் நரகத்துக்கும் போகாமல் ஆவியாக அலைந்து கொண்டிருப்பவர்களை மகிழ்விக்கும் நன்னாள் தான் "ஹாலோவீன்" நாள் என்பது. இப்படிப்பட்ட கெட்ட ஆவிகளை மகிழ்ச்சியடையச் செய்வதன் மூலம் தங்களுக்கு எந்த விதமான பாதிப்புகளும் நேராது என நம்புகிறார்கள் அமெரிக்கர்கள்.
தீபாவளியைப் போலவே ஹாலோவீனுக்கும் வாழ்த்து அட்டைகளிலிருந்து பூங்கொத்துகள், பரிசுக்கூடைகள், ஹாலோவீன் குக்கீஸ், டாய்ஸ், கேண்டி எனப்படும் மிட்டாய் தினுசுகள், ஸ்டிக்கர்கள், பேனா, பென்சில், ஆடியோ விடியோ காசட்டுகள், வித விதமான முகமூடிகள்(மாஸ்க்குகள்) என கடைகளில் அக்டோபர் மாத துவக்கத்திலேயே படுசுறுசுறுப்பாக வியாபாரம் களைகட்டத் துவங்கிவிடுகிறது. இது தவிர 24மணிநேரமும் இயங்கும் உலகளாவிய வலையகக் கடைகளில் (ஆன் லைன் ஷாப்பிங்) வேறு பிசியாக நடக்கிறது.
வினோத அலங்கரிப்புகள்

வீட்டுவீட்டுக்கு சோளக்காட்டு பொம்மை போல எதாவது ஒரு பொம்மை உருவம் இருக்கும். வீடு தவறமல், பூசணிக்காய் உள்ளங்கை அளவிலிருந்து, ஒரு ஆள் கட்டிப் பிடிக்க முடியாத ராட்சச பூசணி அளவு வரை இடம் பெற்றிருக்கும். பூசணியை முகம் போல வெட்டி இரவில் வண்ண விளக்குகள் ஒளிர வைத்திருப்பார்கள். பொங்கலுக்கு வீட்டு நுழைவாயிலில் இருபுறமும் தோகையுடன் கூடிய கரும்பு செழித்தெழுந்து நிற்குமே, அது போல காய்ந்த மக்காச் சோளத் தட்டைகளை குவியலாய் நிறுத்தி வைத்திருப்பார்கள். நிலைப்படியில் மரிக்கொழுந்து, மாவிலைத் தோரணம் கட்டியிருப்பதுபோல கலர்கலரான காய்ந்த மக்காச் சோளக் கதிர்கள், காய்ந்த பல்வேறு இலை கொத்துக்களை செருகி வைத்திருப்பார்கள். வீட்டு முகப்பில் சோபாவில் ஒரு எலும்புக்கூடு ஒய்யாரமாக அமர்ந்து கொண்டு புகை பிடித்துக்கொண்டிருக்கும். வீட்டைச் சுற்றியுள்ள மரங்களில் மண்டை ஓடுகள், எலும்புகள் என்று தொங்கிக்கொண்டிருக்கும். இதெல்லாம் எதற்கு?
எல்லாம் நம் இனத்தவர்கள் தான் என்று பேய் பிசாசுகள் விசிட் அடிக்கும் போது தெரிந்து கொள்ளத்தான். இரவு நேரங்களில் இதை அறியாத பயந்த சுபாவம் உள்ளவர்கள் போனால் இருதயம் திடீர் பிரேக் போட்டுவிடும். இதுபோன்று வினோதமான அலங்கரிப்புகளில் அமெரிக்க இல்லங்கள் காட்சி தரும். பூசணிக்காய்ப் பண்ணையில் பூசணி வாங்க மக்கள் கியூவில் நின்றதொருகாலம்!
தெருக்கூத்து

முகங்களில் கருப்புச் சாயம், கண்களைச் சுற்றிக் கலர்கலராக புள்ளி வைத்து, உதட்டுச்சாயம் பூசி, தலைக்கு விக் வைத்துக் கொண்டு ஆண்களும் பெண்களும் பேய்களாக, பிசாசுகளாக, ஆவிகளாக, சூனியக்கார-காரிகளாகமந்திரக்கோல் போன்று வைத்துக்கொண்டு போக்குவரத்து மிகுந்த இடங்களில், பெரிய பெரிய மால்களில்( பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள்தான்) பொது மைதானங்களில், திடீர்... திடீர் என்று தோன்றி திகில் ஏற்படுத்துவார்கள். இதெல்லாம் ஒரு ஜாலி..ஜாலியான நிகழ்வுகளாகத்தான் அங்கங்கே நிகழும். மின்னல் வேகத்தில் வந்து அந்தப் பகுதியில் ஒரு கலகலப்பை ஏற்படுத்திவிட்டு வந்த சுவடு தெரியாமல் போயும் விடுவார்கள்.
எங்கும் கோலாகலம்

ஆவிகளுக்குப் பிடித்த இருட்டுப் பொழுதுகளில் அங்கிங்கெனாதபடி எங்கும் ஆனந்தப் பெருவெள்ளத்தில் மக்கள்ஆழ்ந்துபோகிறார்கள். வாழ்க்கை வாழ்ந்துபடுவதற்கே என்கிற சித்தாந்தத்துக்கு உதாரணமானவர்கள் அமெரிக்கர்கள். ஹாலோவீன் தினத்தை பிரதிபலிக்கிற விதவிதமான வண்ண உடைகளில் இரவுவிடுதிகளை நிறைத்துக் கொண்டு ஆட்டமும் பாட்டமும், கேளிக்கைகளில் தங்களைத் தற்காலிகமாக மறந்து உல்லாசிக்கிறார்கள். ராஜராஜாக்கள், கோமாளிகள் என்ற முகமூடிகளில் அவர்களின் முகவரிகள் மறைந்திருக்கலாம். அகமும் முகமும் ஒருசேரச் சிந்துகிற மகிழ்ச்சிப்பூக்களை எல்லோரிடமும் சிதறவிட மறப்பதில்லை. உற்சாக பானம் அருந்திவிட்டு உளறும் நிலைக்கு யாரும் போய்விடுவதில்லை. உற்சாகமாக இருப்பதற்காக மட்டுமே இதை அருந்துகிறார்கள். நியுமெக்சிக்கோ மற்றும் சில பகுதிகளில் வாழும் அமெரிக்க இண்டியன்கள்(சிவப்பு இந்திய காட்டுவாசிகள்) மட்டுமே போதை தலைக்கேற உருள்வது, பிறழ்வது எல்லாம். இந்த நாளில் அநேகர் "டேட்டிங்" வைத்துக்கொண்டு கவலையின்றி ஆவிகளோடு ஆவிகளாக ஐக்கியமாவது உட்பட கோலாகலமாக கழிக்கின்றனர்.
பள்ளிகளில்

மழலையர் பள்ளியிலிருந்து கல்லூரிவரை "ஹாலோவீன்" கொண்டாட்டத்துக்கு குறைவிருக்காது. அதிலும் சின்னஞ் சிறு பிஞ்சுகள் தங்களுக்குப் பிடித்த மிக்கிமவுஸ், எல்மோ, பிக்பேர்டு, லேடி பக், பேட்(வவ்வால்), முயல், கிளி·ப்பர்டு, எமன் வாகனம்போல கொம்புக்காளைமாடு இப்படி எத்தனையோ முகமூடிகளில் வித்தியாசமான காஸ்ட்யூம்களில் ஜொலிப்பதைக் காணக் கண் கோடி வேண்டும். அன்று அந்தந்த வகுப்பு ஆசிரிய அசிரியைகள்கூட கோமாளி போல சூனியக்காரி போல வந்து குழந்தைகளை " TRICK OR TREAT BAGS " கொடுத்து மகிழ்விப்பது குறிப்பிடத் தக்கது. பள்ளி அரங்கில் ஒருநாள் எல்லா வகுப்பு மாணவ மாணவிகளும் இணைந்து பங்கேற்கும் "ஹாலோவீன்" நிகழ்வில் குழந்தைகளின் பெற்றோர்களும் வந்து கலந்து உற்சாகப்படுத்துவார்கள். அக்.31ம் தேதி சிறு குழந்தைகள் கையில் ஒரு கூடையோ பையோ, அதுவும் பூசணிக்காய் போன்ற பிளாஸ்டிக் கூடையை எடுத்துக்கொண்டு வீடுவீடாகக் கிளம்பிவிடுவார்கள். வீட்டிலிருப்போர் குழந்தைகளுக்கு வாழ்த்துச் சொல்லி விதவிதமான கேண்டிகளை (இனிப்பு மிட்டாய்களை ) வழங்குவார்கள். குழந்தைகள் மீண்டும் வீடுதிரும்பும்போது உற்சாகத்தின் உச்சாணிக்கொம்பில் இருப்பார்கள்.
அவசியம் ஹாலோவீன் .....ஏன்?
இறந்தவர்கள் பூமிக்கு நடந்து வரும் தினம் இது என்பது சிலரது நம்பிக்கை ! அதனால்தான் சிறுவர்சிறுமியர் வாலிபர், பெரியவர் என்ற பேதமின்றி பேய்களைப் போல ஆவிகளைப்போல உடையணிந்து வலம் வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். Trick- or- Treat செய்து ஆவிகளைப் பரிசுகளால் மகிழ்விக்கச் செய்வதை தொடர்வோம். யாருடைய நம்பிக்கை எப்படியிருந்தாலும் ஹாலோவீன் இரவு என்பது இறந்துபோன நம்மவர்களுக்காக நாம் செய்யும் மரியாதை! அவர்களைக் கெளரவப்படுத்தும் அந்த நிகழ்வை நாம் கொண்டாடாமல் வேறுயார் கொண்டாடுவது? அது மட்டுமா, அநேகமாக முதல் தடவையாக தங்கள் குழந்தைகள் முகமூடி அணிந்து "Trick-or-Treat" போகும்போது பெற்றோர்களுக்கு புதிய பல அறிமுகங்கள் கிடைக்கும்.
கடைகளில் ஹாலோவீன் அடையாள வில்லைகள், பூசணிக்காய் முகங்கள், விதவிதமான ஹாலோவீன் உடைகள், வகைவகையான ஹாலோவீன் கேண்டிகள், கல்லறைத் தூண்கள், ரத்தம் சொட்டச் சொட்ட உடம்பின் பாகங்கள், வினோத ஒலியெழுப்பும் ஒலி,ஒளி நாடாக்கள், மக்களை திகில் கொள்ளச் செய்யும் ஆயிரக்கணக்கான அலங்கரிப்புப் பொருட்கள் என்று பல பில்லியன் டாலர் புரளுகின்ற ஹாலோவீன் தினம் கொண்டாடப்படுவதன் மூலம் பணப் புழக்கம் இழந்த பொருளாதாரத்தை சற்றேனும் மீட்டெடுக்க உதவும் என்பதில் ஐயமில்லை!
ஹாலோவீன் பலகாரங்கள்

ஹாலோவீன் விசேச பலகாரங்கள் இல்லாமல் ஒரு ஹாலோவீனா? பலகாரங்கள் என்னென்ன? பட்டியல் போட்டால் அதுவே ஒரு கட்டுரை போலாகிவிடும்.Black Cat Cookies, Pumpkin Roll with Cream Cheese Filling, Pumpkin Soup, Pumpkin Crunch Dessert, Pumpkin Cupcakes, Cheese Eyeballs, Toxic Tomatoes, Ghoulish Gruel, Gnarled Witch's Fingers, Perfect Popcorn Balls, Brains on the Half Skull, Mystery Punch with Frozen Hand, Candied Apples, Frozen Jack O'Lanterns, Spicy Halloween Ginger Cake, Spider's Nest Dip, Toasted Pumpkin Seeds, Blood Punch, Ice Cream Vampire Bats, Spooky Cookies
ஹாலோவீன் Flash Back
நான்காம் நூற்றாண்டில் ரோமச் சக்கரவர்த்தியாக இருந்த கான்ஸ்டண்டைன் காலத்தில் இறந்தவர்களின் நினைவாக அக்டோபர் மாதம் 31ம் தேதியை மரித்தோர் தினம் என்று கொண்டாடத் தலைப்பட்டனர். ஏழாம் நூற்றாண்டில் மே மாதத்தில் அனைத்துப் புனிதர்கள் நாள் (ALL SAINT'S DAY ) என்று கொண்டாடினர். 9ம் நூற்றாண்டில் இந்த நாள் நவம்பர் 1ம்தேதியாக மாறியது. அப்போது வாழ்ந்த பாகான் என்றழைக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் அற்ப ஆயுளில் இறந்தவர்கள் ஆவியாக, பேயாக அக்டோபர் 31ம் தேதி வருவதாக நம்பி அந்த நாளை அனைத்து ஆவிகள் தினமாக( ALL HALLOW'S EVEN) என வழிபட்டனர். 10ம் நூற்றாண்டில் கிறிஸ்தவ ஆலயங்களில் நவம்பர் 2ம் தேதியை "அனைத்து ஆத்மாக்கள் தினம்" (ALL SOULS' DAY ) என இறந்து போன அனைத்து ஆத்மாக்களுக்காக ஏற்படுத்தினர். இந்த மூன்று தினங்களும் அடுத்தடுத்து வந்ததால் சில நாடுகளில் இதை ஒருங்கிணைத்து ஒன்றாக்கினர். ஹாலோவீன் என்பதின் அடையாளச் சின்னமாக சூனியக்காரி உருவத்தை படு விகாரமாக ஏற்படுத்திக் கொண்டனர்.
இங்கிலாந்தில் இந்த நாளில் துடைப்பக் குச்சியில் ஒருவிதமான களிம்பை தடவி வீட்டுக்கு வெளியே வைத்து விடுவார்களாம். பேயாக உலவும் ஆவிகள் இந்த துடைப்பக் குச்சியை எடுக்கும்போது அதிலுள்ள களிம்பு ஒட்டிக் கொள்வதால் கால்கள் தரையில் பாவாமல் வெகுவேகமாக நிலத்துக்கும் கடலுக்கும் மேல் பறந்து போய் விடுவதாக(!) நம்பி இப்படிச் செய்து வந்திருக்கின்றனர். இதனால் வீட்டுக்கு வந்தது விளக்குமாற்றோடு போச்சு என்று சொல்லிக் கொள்வார்களாம்.
ஸ்காட்டிஷ் குழந்தைகள் இன்றும் இதனை நினைவு கொள்ளும் வகையில் டர்னிப்பை வெட்டி மெழுகுவர்த்திகளை ஏற்றிவைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இங்கிலாந்தின் ஒரு பகுதியில் இன்றும் பெரிய பெரிய பீட்ரூட்டைப் பயன்படுத்துகின்றனர். ஸ்காட்டிஷ், ஐரிஷ் இனத்தவர்கள் அமெரிக்காவில் வந்து குடியேறியபோது டர்னிப், பீட் ரூட்,உருளைக்கிழங்குக்குப் பதிலாக பூசனிக்காயை அலங்காரப் பொருளாக வெவ்வேறு வடிவங்களில் வெட்டி வீடுதோறும் வைக்கும் வழக்கம் ஏற்பட்டது.ஐரோப்பியர்கள் இந்த அக்டோபர் மாதத்தை மிகவும் கடினமானதாகக் கருதுவார்கள். இங்கிலாந்தின் ஒரு பகுதியில், ஹாலோவீன் தினத்தில், வீடுவீடாகப் போய் பாட்டுப் பாடி பிச்சை எடுப்பார்கள். கேக்குகள், பணம் என்று அளிப்பதை இன்றும் காணலாம். ஸ்பானியர்கள், கல்லறைக்குச் சென்று கேக்குகளையும் பருப்பு வகைகளையும் வைத்து ஆவிகளை மகிழச் செய்வார்கள். இப்படியாகத்தானே ஆதியிலிருந்து இன்றுவரை ஹாலோவீன்..... நடந்தது... நடந்து கொண்டிருக்கிறது.