Thursday, October 1, 2009

தூரல் நகரம் - தென்காசி

குற்றாலம் தேவை இல்லை நீ சிரிச்சா சாரல் வரும்..
தென்காசி தேவை இல்ல நீ இருந்தா தூரல் வரும்..


இந்த வரிகள் ஒரு திரைப்பட பாடலில் காதலன் காதலியை வர்ணிப்பது போல் வரும். இந்த பதிவு ஒரு பயணம். நான் பிறந்து, வாழ்ந்த மண்ணைப் பற்றி கொஞ்ச நேரம் உங்களுக்கு தெரிந்த தெரியாத விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகிறேன். நீங்கள் எப்பொழுதாவது இந்த இடத்திற்குச் சென்றால் உங்களை வந்துத் தழுவும் இந்த பொதிகை மலை தென்றலையும், குற்றலாச் சாரலையும், தென்காசித் தூரலையும் ஒருமுறை நன்கு அனுபவித்துவிட்டு வாருங்கள்.


"தென்காசி" இந்த ஊரை பற்றி நான் மதுரையில் படித்தக் காலத்திலும், சென்னையில் வேலை பார்த்தக் காலத்திலும் நிறைய பேரிடம் கேட்டிருக்கிறேன். அந்த ஊருக்கெல்லாம் வந்தது இல்லைங்க, குற்றாலம் பக்கத்துல இருக்கு என்று தெரியும் என்றும், குற்றாலம் கூட வந்தது இல்லைங்க என்று சொல்லக் கேட்டும் ஆச்சர்யப்பட்டிருக்கிறேன். அவர்களுக்கெல்லாம் இந்த பதிவு கொஞ்சம் சுவையாக இருக்கும் என்று நம்புகிறேன்.

(எல்லா படங்களையும் Click செய்து பெரிதாக பார்க்கலாம்)
இந்த ஊருக்கு வரும் எல்லோரும் முதலில் கவனிக்கும் விஷயம் ராஜ கோபுரம். இந்த கோபுரம் ஊரின் மத்தியில் இருப்பதால் பல கிலோமீட்டருக்கு முன்னாலே தெரிய ஆரம்பித்துவிடும். எனக்கு தெரிந்து இது தென்னிந்தியாவில் ஸ்ரீரங்கந்திற்கு அடுத்து இரண்டாவது ராஜ கோபுரம். இந்த கோபுரத்திற்கு நிறைய வரலாறுகள் உண்டு.தென்காசி என்பது தக்ஷின காசி என்று பெயர் பெற்ற ஸ்தலம்.வடக்கே வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் போல தெற்க்கே உள்ளது தென்காசியில் உள்ள இந்த காசி விஸ்வநாதர் கோவில் சுவாமியின் திருநாமம் காசி விஸ்வநாதர் ,அம்மன் உலகம்மை .பராகிரம பாண்டியரால் எழுப்பப்பட்ட ஆலயம்.சிவ பக்தரான மன்னர், காசியில் உள்ளது போலவே இங்கும் ஒரு கோவில் வேண்டும் என்று எண்ணி எழுப்பிய கோவில் தான் இது.

இந்த கோவிலின் புராதன ராஜகோபுரம் பழுதாகி 1990 ஆம் ஆண்டு மீண்டும் ராஜகோபுரம் எழுப்பப்பட்டது.கோபுரத்திற்கு வெளியில் காற்று ஒரு திசையிலும் கோபுரத்திற்கு உள்புறம் காற்று எதிர் திசையிலும் அடிக்கும் அதிசயத்தை இங்கு காணலாம்.ஆங்கிலத்தில் crosswind draft என்று கூறுவார்களே அந்த முறையில் கோபுரம் அமைந்துள்ளது.வெளி பிரகாரத்தில் காசிக் கிணறு உள்ளது.சுவாமிக்கு அபிஷேகம் செய்ய இந்த நீர் பயன்படுகிறது.விக்கிரகம் இல்லாமல் இரண்டு பீட சந்நதிகளையும் இந்த கோவிலில் காணலாம்.ஓன்று ஆலோசகர் சன்னதி.இந்த கோவில் எழுப்பப்பட்டபோது சிவனே அடியாராக வந்து ஆலோசனைகள் வழங்கியதாக வரலாறு.ஆலோகசகர் சன்னதியில் பீடம் மட்டும் உள்ளது.இன்னொன்று பராசக்தி பீடம்.


மேலும் இந்த கோவிலின் சிறப்பைச் சொல்லவேண்டும் என்றால் இங்கு உள்ள சிலைகள் ஒரே கல்லில் செதுக்கப்பட்டவைகள். இங்கேயுள்ள துர்க்கை மேற்கு நோக்கி அமைந்துள்ளது. இந்த கோவிலை கட்டிய பராகிரம பாண்டியன் கிமு 1505 இல், இந்த கோவில் பின்னொரு நாளில் இடிந்து விழும் சூழ்நிலை வந்து, அதை மறுபடியும் கட்டுபவர்கள் பாதத்தை என் சிரசில் தாங்குவேன் என்று கூறியதாக கல்வெட்டில் உள்ளது. 1990 இல், மறுபடியும் திரு.சிவந்தி ஆதித்தனார் அவர்கள் தலைமையில் புதுப்பிக்கப் பட்டது. இன்று 180 அடி உயரமும், 9 அடுக்கு கோபுரமகாக் காட்சி அளிக்கிறது.
குற்றாலத்தில் இருந்து வரும் "சிற்றாறு" தென்காசி வழியாக முக்கூடலில் கலக்கிறது. இந்த ஆறு தான் இந்த ஊருக்கும், சுற்றுப்புற கிராமங்களுக்கும், விவசாயத்திற்கும், குடிநீருக்கும் உதவுகிறது. இங்கு மாசி மகத் திருவிழா 10 நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படும். இன்னும் இந்த ஊரில் பழமை மாறாமல் சில தெருக்கள் உள்ளன. இங்குள்ள பெரிய தெப்பக் குளத்தில் வருடம் தோறும் தெப்போற்சவத் திருவிழா நடக்கும்.
தென்காசியை பற்றி மேலும் விரிவாக அறிய இங்கே Click பண்ணவும் . இதன் சுற்றுபுறத்தில் உள்ள குற்றாலம் மற்றும் திருமலைக் கோவில் பற்றி அடுத்த பதிவில் விரிவாக எழுதுகிறேன். தென்காசி கோவிலைப் பற்றி வீடியோ பதிவை இங்கே உங்களுக்காக கொடுத்துள்ளேன்.


3 comments:

அரங்கப்பெருமாள் said...

நல்ல ஊருதான்..

Ashok Muthiah said...

Collecting various info from different sources and publishing it in a single place makes the reading easier and gives lot of info in one page..

Many Non-Tenkasi people need to visit Tenkasi, Courtallam and surrounding areas such as babanasam and enjoy the beauty resides over here.. Those who can't make immediately, can read this blog to have a feel of it..

su.marudha said...

"இன்னும் இந்த ஊரில் பழமை மாறாமல் சில தெருக்கள் உள்ளன." உண்மை ......அதை பார்த்து ரசித்திருக்கிறேன்...வருடம் தவறாமல் நானும் எனது நண்பர்களும் செல்லும் ஊர் குற்றாலமும் ,தென்காசியும்...கோபுரவாசலின் காற்றை அனுபவிக்க கொடுத்துவைத்திருக்க வேண்டும் ...