Monday, October 19, 2009

என்னுடைய பாலாடைக் கட்டியை எடுத்துச் சென்றவர் யார்?

ஒரு புத்தகத்தைப் பற்றி என்னுடைய விமர்சனத்தை எழுதலாம் என்று நினைத்தேன். நாம் எத்தனையோ தன்னம்பிக்கைத் தரும் நூல்களை படிக்கிறோம். படித்த அந்த நொடியோ,அன்றோ, அந்த வாரமோ நமக்கென்று சில திட்டங்களை வகுத்துக்கொண்டு செயல் பட நினைப்போம். ஒரு மாதம் ஆனால், எல்லாம் நாம் அந்த திட்டங்களைத், திட்டங்களாகவே வைத்து விட்டு நாம் பழைய வாழ்க்கைக்கு வந்து விடுவோம். இது ஒரு முறை அல்ல, சில முறை அல்ல,பல முறை நம் வாழ்க்கையில் நடந்திருக்கும். புத்தகங்கள், உண்மையில் நமக்குத் தன்னம்பிக்கை அளிக்கிறதா என்று கேட்டால், சில சமயங்களில் "ஆம்", சில சமயங்களில் "இல்லை". ஏனென்றால், நம் மனம் கடந்த காலம் எனும் இருளில் மூழ்கி உள்ளது. இதற்குக் காரணம், நமது மூளையின் "நியூரல் நெட்வொர்க்" தான் என்றால் மிகையாகாது. நமது எண்ணங்கள், எப்போதும் பழகிய பாதையிலே தான் செல்லும். சரி, இதற்கு வழியே இல்லையா? நாம் புதிய மனிதராக மாற முடியாதா என்று கேட்டால், கண்டிப்பாக முடியும். அந்த சுய முன்னேற்ற நூல்களின் கருத்துக்கள், நம் மனதில் ஆழமாகச் செல்ல வேண்டும்."தவறு நூல்களில் இல்லை நம் மனதில் உள்ளது".

"என்னுடைய பாலாடைக் கட்டியை எடுத்துச் சென்றவர் யார்?", இந்தப் புத்தகத்தை(தமிழில்), சில வருடங்களுக்கு முன்னால் படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதற்குப் பிறகு, பலமுறை படித்திருக்கிறேன்.பல விலையுயர்ந்த, சுயமுன்னேற்ற புத்தகங்கள் தராத நம்பிக்கையை, இந்தப் புத்தகம் தந்திருக்கிறது. புத்தகம் சிறிது என்றாலும், விஷயங்கள் பெரியது. இந்தப் புத்தகம், வாழ்க்கையில் வரும் மாற்றங்களையும், அதை எப்படி எதிர்கொள்கிறோம், என்பதை விரிவாகச் சொல்கிறது.


'மாற்றம்' என்பது மிக முக்கியம். ஒரே மாதிரியான வாழ்க்கை, நம்மை முடக்கிப் போட்டுவிடும். வேலையில் மாற்றம் வரலாம். தொழிலில் மாற்றம் வரலாம். நண்பர்களில் மாற்றம் வரலாம். கடந்து போகிற வாழ்க்கையில், மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும். இப்படி, அவ்வப்போது வருகின்ற மாற்றங்களைத் தயங்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது எட்டாக்கனியாகி விடும்.


இந்த புத்தகத்தில் வரும் கதையை நான் மிக சுருக்கமாக இங்கு தந்துள்ளேன். நீங்கள் இந்த புத்தகத்தை படிக்கும் ஒவ்வருமுறையும் நீங்கள் வாழ்க்கையில் எந்த இடத்தில் தற்பொழுது இருக்கிறீர்கள் என்பதை உணர்வீர்கள்.அது இந்த புத்தகத்தை முழுதாகப் படித்தால் தான் தெரியும். புத்தகத்தை ஆங்கிலத்தில் படிக்கவும். தமிழில் சரியாக மொழிபெயற்க்கவில்லை என்பது என் கருத்து.


நீண்ட வருடங்களுக்குப் பிறகு,கல்லூரியில் படித்த சில நண்பர்கள் ஓரிடத்தில் கூடுகிறார்கள். ஒவ்வொருத்தரும், அவர்களின் வாழ்க்கை அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அதில் ஒருவன், வாழ்க்கையில், எப்படி மிக அடிமட்டத்தில் இருந்து ஒரு மாபெரும் நிலைக்கு வந்தான் என்பதையும், அதற்க்குக் காரணமாக இருந்தது, ஒரு சின்னக் கதை, என்பதையும் சொன்னான். மற்றவர்களும், உடனே அந்தக் கதையை அவர்களுக்கு சொல்லும்படி கேட்கிறார்கள். அவனும் அந்த கதையை சொல்லுகிறான்.

இந்தக் கதையில் வரும் கதாபாத்திரங்கள்.

  • இரண்டு எலிகள்(Sniff & Scurry)
  • இரண்டு குள்ளமனிதர்கள்(Hem & Haw).
  • பாலாடைக்கட்டி(Cheese) என்பது, ஒரு மனிதனுக்கு எது மகிழ்ச்சியைக் கொடுக்குமோ, அது. அது, வேலை, வெற்றி, சந்தோஷம், இலக்கு என்று எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.
  • சிக்கலான வலைப் பின்னல்(Maze) ஒருவருடைய சூழ்நிலையைக் குறிக்கிறது.


ஒரு ஊரில், ஒரு சிக்கலறை(Maze) இருக்கிறது. அதன் அருகில் வசிக்கும் நான்கு ஜீவன்கள் – இரண்டு எலிகளும், இரண்டு சின்னஞ்சிறு மனிதர்களும். அவர்களுடைய உணவு பாலாடைக்கட்டி. அது அந்த சிக்கலறைக்குள் வைக்கப்பட்டிருக்கிறது. நான்குபேரும் தனித்தனியாக ரொம்பநாட்கள் பாடுபட்டுத்தேடி, ஒருநாள் அந்த பாலாடைக்கட்டி அறையைக் கண்டுபிடித்துவிடுகிறார்கள். அதனுள் ஏராளமான பாலாடைக்கட்டி இருக்கிறது. ரொம்ப சந்தோஷமாக, அங்கேயே, தினந்தோறும் வந்து உண்டு மகிழ்கிறார்கள்.


இப்படியே சிலநாட்கள் கழிகிறது. கொஞ்சம்கொஞ்சமாய், அந்த பாலாடைக்கட்டித் தமக்கே சொந்தம், என்கிற எண்ணமும், கர்வமும், அவர்களுக்கு வந்துவிடுகிறது. அதைக் கஷ்டப்பட்டுத் தேடிப்பிடித்ததெல்லாம் மறந்துபோகிறது. தினமும், அங்கேயே வந்து தின்று கொழுக்கிறார்கள்.ஒருநாள், நால்வரும் அங்கே வந்துபார்க்கும்போது, பாலாடைக்கட்டியைக் காணவில்லை. காலியாக இருக்கிறது அறை !


எலிகள் இரண்டும், இதற்குத் தயாராய் இருந்ததுபோல, மோப்பம் பிடித்துக்கொண்டு, புதிய பாலாடைக்கட்டியைத் தேடி ஓட ஆரம்பித்துவிடுகின்றன.


மனிதர்கள் இருவருக்கும்தான், இதை ஏற்க முடியவில்லை. ‘என்னுடைய பாலாடைக்கட்டியை நகர்த்தியவர் எவர் ?’ என்று அலறுகிறான் ஒருவன். ‘ஏன் இதைச் செய்தார்கள்?' இதில் கொஞ்சமும் நியாயமில்லை, அது நம்முடைய பாலாடைக்கட்டி, அதைக் கொள்ளையடிப்பதற்கு அவர்கள் யார் ?’, என்கிறான் இன்னொருவன்.

போன பாலாடைக்கட்டி வந்துவிடும், என்று நம்புகிறார்கள் இருவரும். தினம் தினம், அதே இடத்திற்கு வந்து, தேடிப்பார்த்துவிட்டு, சோகத்தோடு திரும்புகிறார்கள்.யாரோ இப்படி அநியாயம் செய்துவிட்டார்களே, என்கிற ஆதங்கத்தில், தொடர்ந்து புலம்பிக்கொண்டிருக்கிறார்கள் இருவரும். அது போய்விட்டது, என்கிற உண்மையை ஏற்க மனமில்லாமல் திணறுகிறார்கள்.

இவர்கள் இப்படியிருக்க, புதிய பாலாடைக்கட்டியைத் தேடிப்போன எலிகள் இரண்டும் சிரமப்படுகின்றன. இருண்ட சிக்கலறையில், திசை தெரியாமல்போய், சுவர்களில் முட்டிக்கொள்கின்றன. ஆனால், சீக்கிரமே அவைகளுக்கு, புதிய பொக்கிஷம் கிடைத்துவிடுகிறது., முன்னைவிட பலமடங்கு பெரியதாய், ஒரு பாலாடைக்கட்டி கிடைக்கிறது. அவைகள் சந்தோஷமாய் உண்டு களிக்கின்றன.இருவரில், ஒருவனுக்கு திடீரென்று ஒரு கற்பனை – புதிய பாலாடைக்கட்டியைக் கண்டுபிடித்து, சுவைத்து மகிழ்வதுபோல கனவு காண்கிறான். அந்தக் கனவை, நனவாக்க விரும்பி, ‘நாம் ஏன் வேறு இடங்களில் சென்று தேடிப்பார்க்கக்கூடாது ?’ என்று, தன் நண்பனிடம் கேட்கிறான்.நண்பன் ஒரேயடியாய்த், ‘தேடி என்ன புண்ணியம்?, வேறெங்கும் பாலாடைக்கட்டி கிடைக்காவிட்டால் என்ன செய்வாய் ?’ என்றுசொல்லி, அவனுடைய ஊக்கத்தைப் புதைத்துவிடுகிறான். இருவரும் மீண்டும் வெற்றுப்புலம்பல்களுக்குத் திரும்புகிறார்கள்.


சில நாள் கழித்து, முதலாமவனுக்கு இன்னொரு சிந்தனை, ஏன் இந்த பயம், பயப்படாமல் இருந்தால், நான் என்ன செய்வேன் ? – என்று சிந்திக்கிறான். அவனுக்கு ஒரு உண்மை புரிகிறது. பாலாடைக்கட்டி கிடைக்காவிட்டால், என்ன செய்வது? என்று குழம்பிக்கொண்டிருப்பதைவிடவும், எதுவும் இல்லாமல் இங்கே பட்டினி கிடப்பதைவிடவும், அதைத் தேடிப்போவது எவ்வளவோ மேல், இல்லையா?என்று, தன் நண்பனிடம் மீண்டும் கேட்கிறான். அவன் தொடர்ந்து மறுக்கவும், முதலாமவன் மட்டும், புதியபாலாடைக்கட்டியைத்தேடி, கிளம்பிவிடுகிறான்.

ஒரு அறையின் வாசலில், அவனுக்கு நிறைய பாலாடைத்துணுக்குகள் கிடைக்கின்றன. அவனுக்குச் சந்தோஷம் தாள முடியவில்லை. இந்த அறைக்குள், நிச்சயம் பாலாடைக்கட்டி இருக்கவேண்டும் என்று நம்பி, அந்தத் துணுக்குகளை, அவசரஅவசரமாய் உண்கிறான். சிலவற்றைத், தன் நண்பனுக்காகச் சேமித்து வைத்துக்கொள்கிறான். குதூகலித்தபடி, அந்த அறைக்குள் நுழைந்தால் – அதிர்ச்சி, உள்ளே பாலாடைக்கட்டி இல்லை,யாரோ, அவனுக்கு முன்பே, காலி செய்துவிட்டுத் துணுக்குகளை மட்டும் விட்டுப்போயிருக்கிறார்கள்.அவனுக்குச் சோகம் தாளமுடியாததாய் இருக்கிறது. அந்த பழைய அறையில், புலம்பிக்கொண்டிருந்த நேரத்தில் தேட ஆரம்பித்திருந்தால், சீக்கிரமே இங்கே வந்திருந்தால், தவறவிட்ட பாலாடைக்கட்டி அவனுக்குக் கிடைத்திருக்கும்.

கதையின் நீதி

  • வாழ்க்கையில் மாற்றம் வரும்,வந்துகொண்டே இருக்கும்.
  • வாழ்க்கையில் மாற்றத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருங்கள்.
  • வாழ்க்கையில் வரும்/நடக்கும் மாற்றங்களை கவனித்துக்கொண்டிருங்கள்.
  • வாழ்க்கையில் மாற்றம் வந்தால் உடனே ஏற்றுக்கொண்டு மாறிவிடுங்கள்.
  • மாற்றத்துடன் பயனித்துக்கொண்டே இருங்கள்.
  • மாற்றம் வந்தால் உடனே மாறிக்கொண்டு அதை அனுபவிக்க பழகுங்கள்.


இந்த புத்தகத்தை தரவிறக்கம் செய்ய இங்கே க்ளிக் செய்யவும். இப்பொழுது இந்த புத்தகம் ஆடியோ வடிவிலும்(AudioBook-mp3) கிடைக்கிறது. பல டாரன்ட் வலைப்பதிவுகளில் நீங்கள் ஆடியோவை(AudioBook-mp3) தரவிறக்கம் செய்யலாம்.
7 comments:

ஹேமா said...

யதார்த்தமான உண்மை கோபி.வாழ்வில் மாற்றங்கள்தாம் சுவாரஸ்யமே.சில மாற்றங்களை ஏற்றுக்கொண்டு முன்னேற மனம் பயப்படுகிறது.
முன்னேறி நடக்கத் தொடங்கிவிட்டோமானால் மனம் பழகிவிடும்.பக்குவப்பட்டும் விடும்.அருமையான தேர்வு உங்கள் இந்தப் புத்தகம்.சின்னக் குழந்தைகளுக்குச் சொல்வதுபோல பாலாடைக்கட்டியை வைத்துக் கதையை நகர்த்தியிருக்கிறார்களே !

விக்னேஷ்வரி said...

நல்ல அறிமுகம். கதையும் நல்லா இருக்கு. ஆனால், எனக்கு சுய முன்னேற்ற நூல்கள் படிப்பதில் ஈடுபாடில்லை. நம் மனதில் தடைகள் இல்லையெனில் எங்குமில்லை. நூல்கள் என்ன செய்யும்...

M.S.R. கோபிநாத் said...

நன்றி ஹேமா.

M.S.R. கோபிநாத் said...

நீங்கள் சொல்வது உண்மைதான் விக்னேஷ்வரி. எல்லாம் நம் மனதில் தான் உள்ளது. நன்றி.

Cm urmeni said...

GOBI ,Ashoks father CM says very good story each and every should try to follow this.very good approach.

அன்புடன் அருணா said...

ஆங்கிலத்தில் படித்திருக்கிறேன்.......எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது....அழகாக சுருக்கி எழுதியிருக்கிறீர்கள்!

M.S.R. கோபிநாத் said...

@ நன்றி CM சார். வருகைக்கும், உங்கள் வாழ்த்துக்கும் நன்றி.

@ நன்றி அருணா. வருகைக்கும், உங்கள் வாழ்த்துக்கும் நன்றி.