Friday, October 9, 2009

தீபத் திருநாள் - தீபாவளி

எல்லோருக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள். அடுத்து எதைப் பற்றி எழுதுவது என்று யோசித்துக் கொண்டிருந்த பொழுது ஏன் தீபாவளியைப் பற்றி எழுதக் கூடாது என்று தோன்றியது. தீபாவளியைப் பற்றி நம்ம என்ன புதுசாகச் சொல்லப் போகிறோம் என்றெல்லாம் தகவல் சேகரித்தபோது நமக்கு தெரிந்ததை புதுமையாகச் சொல்வோம் என்று தோன்றியது. உண்மையில் தீபாவளியை நாம் முறையாகத் தெரிந்து கொண்டாடுகிறோமா? தீபாவளியை பற்றி கொஞ்சம் தெரிந்தும், நிறைய விஷயங்கள் தெரியாமலும் நாம் கொண்டாடுகிறோம். விஷயத்திற்கு வருவோம்.

தீபாவளி ஒரு முன்னோட்டம்.

தீபம் என்றால் ஒளிவிளக்கு, ஆவளி என்றால் வரிசை.வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளிதரும் பண்டிகையே 'தீபாவளி". தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். தீபாவளியைப் பற்றி பல்வேறு கதைகள் கூறப்படுகிறது,

1. கிருஷ்ணர், நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போது, அவன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்க தீபாவளி கொண்டாடுவதாக கூறப்படுகின்றது.

2. இராமாயண இதிகாசத்தில், இராமர், இராவணனை அழித்து விட்டு, தனது வனவாசத்தையும் முடித்து விட்டு, மனைவி சீதையுடனும் சகோதரன் இலட்சுமணனுடனும் அயோத்தி திரும்பிய நாளை, அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நாளே தீபாவளியாக கொண்டாடப் படுவதாக கருதப் படுகிறது.

3. பசு நெய்க்கு மாற்றாக, ஆமணக்கு விதையை விளக்கெறிக்க பெளத்தர்கள் கண்டுகொண்டு அதனை பயன்படுத்த தொடங்கிய நாளே தீபாவளி என்றும் சொல்லுவார்கள்.

4. சமண மதத்தில் கடைசியாக வந்த, 23 ஆம் திருத்தங்கர் "மகாவீரர்" நிர்வானம் (முக்தி) அடைந்த நாளே தீபாவளியாகக் கொண்டாடப் படுவதாக சமணர்கள் கருதுகின்றனர்.

தீபாவளியன்று நீராடுவதை மட்டும் "புனித நீராடல்" என்று சொல்வதற்கு காரணம், அன்றைய தினம்,அதிகாலையில் எல்லா இடங்களிலும், தண்ணீரில் கங்கையும், எண்ணையில் லட்சுமியும், அரப்பில் சரஸ்வதியும்,குங்குமத்தில் கெளரியும், சந்தனத்தில் பூமாதேவியும், புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதேயாகும்.

எல்லா நதிகள்,ஏரிகள்,குளங்கள்,கிணறுகளிலும்,நீர்நிலைகளிலும் "கங்கா தேவி" வியாபித்து இருப்பதாக ஐதீகம்.அந்த நீராடலைத்தான் "கங்கா ஸ்நானம் ஆச்சா? " என்று கேட்கிறோம்.

தீபாவளி - 2009 - சிறப்பு

தீபாவளி என்றாலே "ஐப்பசி" மாதத்தில் தான் வரும். ஆனால் இந்த வருடம், "புரட்டாசி" மாதத்தில் தீபாவளி வருகிறது. இதிலும் சுமார் 300 ஆண்டுகளுக்குப் பிறகு புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையில் வரும் தீபாவளி மிகவும் அபூர்வமானது.

இந்த வருடம், இப்படிப்பட்ட புரட்டாசி மாதத்தின் கடைசி (5வது) சனிக்கிழமையில், அமாவாசை நாளில், தீபாவளிப் பண்டிகை வருகிறது. அபூர்வமான தீபாவளித் திருநாள், 300 வருடங்களுக்குப் பிறகு இந்த வருடத்தில் தான் அமைந்துள்ளது என்பது பஞ்சாங்கக் குறிப்புகள் மூலம் தெரியவந்துள்ளது.

கேட்டதில் தெரிந்துகொண்டது
1. அந்த காலத்தில் ஒரு வாரத்திற்கு முன்பே பலகாரங்களுக்காக எல்லா பொருட்களையும் வாங்கி வைத்து நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும் இனிப்புகளை தயார் செய்ய ஆரம்பித்து விடுவார்களாம்.

2. தீபாவளிக்கு முந்திய இரவு விடிய விடிய எண்ணைய்ப் பதார்த்தங்களை தயார்செய்துவிட்டு, அதே அடுப்பில்(விறகு) நல்லெண்ணையில் சீரகமும், வெந்தயமும் போட்டு காய்ச்சி(குளிக்க), அதே அடுப்பில் எல்லோரும் குளிக்க சுடுதண்ணீரும் வைப்பார்களாம்.


3. தீபாவளி அன்று இரவில் ஏற்றப்படும் விளக்கு,ஒவ்வருநாளும் இரவில் தொடர்ந்து வீட்டு வாசலில் சிறிய விளக்கேற்றி கார்த்திகை மாதம் திருவண்ணமலையில் தீபம் ஏற்றப்படும் நாள்வரை தொடர்ந்து ஏற்றிவருவார்கள். இது இப்போது வழக்கத்தில் இல்லை .

4. ஆடிக்கழிவிலே வீட்டில் எல்லோருக்கும் புத்தாடைகள் எடுக்கப்படும்.

5. தீபாவளியன்று இரவு உணவில் இஞ்சிப் பச்சடி கண்டிப்பாக இருக்கும். இது பகலில் சாப்பிட்ட எண்ணைப் பலகாரங்கள் செரிப்பதற்க்குக் கொடுக்கப்படுகிறது.

இனிப்பு - பலகாரம்

தீபாவளி என்றாலே இனிப்புத் தான் ஞாபகம் வரும். நம் வீட்டில் செய்யப்பட்ட இனிப்பு, காரங்களை நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிர்ந்தளித்துக் கொடுக்கும் பண்பாடு நம்முடையது. இன்றைக்கு பெரும்பாலும் இனிப்புகளையும், காரங்களையும் கடையில் வாங்கிக்கொள்கிறார்கள். எல்லாமே ReadyMade உலகமாகிவிட்டது.

காலை உணவில் இட்லியும், வடையும் பிரதானமாக இருக்கும். இனிப்புக்களும் பரிமாரப்படும்.வடையில் அவரவர் விருப்பத்திற்க்கு தகுந்தவாறு உளுந்தவடையோ அல்லது பருப்புவடையோ செய்வார்கள்.
அடுத்து கிராமபுறங்களில் விரும்பி உண்ணும் இனிப்பு அதிரசம். இந்த அதிரசம் சர்க்கரையில்(வெல்லம்) செய்யப்படும். இதன் ருசியே தனி தான்.சீனியில் செய்யப்படும் அதிரசம் அவ்வளவு ருசிப்பதில்லை. அந்த காலத்தில் கருப்பட்டியில் (பனை வெல்லம்) அதிரசம் செய்வார்களாம். அதே வரிசையில் அடுத்து நெய்-அப்பம்,லட்டு,ரவா லட்டு,தேங்காய் மிட்டாய்..etc

காரவகையில் முதலிடம் பிடிப்பது "முறுக்கு". அப்புறம் சீடை, தட்டை, தேன்குழல், மிக்சர், காரபூந்தி, ஓமப்பொடி..etc.
பட்டாசு

பட்டாசு இல்லாமல் தீபாவளியா?.இந்த நாளிற்க்காகவே குழந்தைகளும்,சிறுவர்களும் மாதக்கணக்கில் காத்திருப்பர். மத்தாப்புக்களில் தான் எத்தனை வகைகள். பட்டாசு வெடிக்கும் போது பெரியவர்களும் சிறியவர்களாக மாறும் மாயஜாலம் இந்த நாளில் நடக்கும்.

அமெரிக்காவில் தீபாவளி

அமெரிக்காவில் நம் இந்தியப் பண்டிகைகள் கொண்டாடுவது சனி, ஞாயிறுகளில் தான். உதாரணமாய் தீபாவளிப் பண்டிகை திங்கள் முதல் வெள்ளி வரை உள்ள எந்தக் கிழமைகளில் வந்தாலும், அதுக்கு முன்னர் உள்ள சனி, ஞாயிறோ அல்லது வியாழன், வெள்ளிகளில் வந்தால் அடுத்து வரும் சனி, ஞாயிறுகளையோ பண்டிகை கொண்டாடிக் கொள்கிறார்கள். தீபாவளிக்கு வீடுகளில் பட்டாசோ அல்லது மத்தாப்போ கொளுத்த அரசாங்கம் அனுமதிப்பது இல்லை. அமெரிக்கர்களின் சுதந்திர நாள் மட்டும் விதிவிலக்கு. மற்ற நாட்களில் இந்த மாதிரியான வாணவேடிக்கைக் கொண்டாட்டங்களை அனுமதிப்பதில்லை. ஆனால் சில இந்தியக் கோயில்களில் ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பெரிய குழியாகச் செய்து, சுற்றிலும் தடுப்புப் போட்டு வைக்கின்றனர். தீபாவளிக் கொண்டாட்டத்தின் போது, கோவிலிலேயே பட்டாசு, மத்தாப்பு விற்கின்றனர். அனுமதி பெற்றவர்கள் மட்டுமே விற்பனை செய்வார்கள். நாம் நமக்குப் பிடித்தமான பட்டாசு, மத்தாப்பு வாங்கிக் குறிப்பிட்ட இடத்தில், குறித்த நேரத்தில் மட்டுமே வெடிக்கலாம். அநேகமாய் இரவு 7 மணி முதல் 8 அல்லது 8-30 மணிக்குள்ளாக வெடிக்கும் விளையாட்டு முடிந்து விடும்.

இப்பொழுதெல்லாம், நாம் எல்லோரும் காலையிலிருந்து இரவு வரை நமது பண்டிகைகளெல்லாம், சின்னத் திரை முன்னால் கழித்துவிடுகிறோம். மொத்தத்தில், பண்டிகைகளுக்கும், சினிமா கலைஞர்களுக்கும் என்ன தொடர்பு என்று எனக்கு புரியவில்லை. இப்படியே சென்றால் வார விடுமுறைகளையும், விளம்பரங்களுக்கும், சினிமா கலைஞர்களுக்கும் தாரை வார்த்து, விளம்பரங்களுக்கிடையே சிறிது நேரம் நிகழ்ச்சி ஒளிபரப்பும் நிலை வந்தாலும் வரலாம்.

6 comments:

kanagu said...

nalla ubayogamaana thagavalgalnga.. :)

sila vishayangala naan innum padikkala.. apram vandhu padikiren :) :)

ungalukku enadhu deepavali valvazthukkal :)

ஹேமா said...

பலகாரங்களைப் பார்க்கவே ஆசையாயிருக்கு.ஊரில் இருக்கும்வரைதான் பொங்கலும் தீபாவளியும்.இங்கு எப்போ வருது போகுதுன்னே தெரில.இன்றுதான் அறிந்தேன் வருகிற சனியன்றாம் தீபாவளி.

வாழ்த்துக்கள் பிருந்தாவனம்.

பிருந்தாவனம் said...

கனகு உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

பிருந்தாவனம் said...

ஹேமா, வணக்கம். உங்கள் வலைப்பதிவை எனக்கு அறிமுகப் படுத்தியது அரங்கபெருமாள். உங்கள் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி.

Ashok Muthiah said...

Diwali etharkaka kondaduromkurathu namakku therinchathellam first point mattum thaan...aana mathethellam puthusu...athoda americavla diwali eppadi kondadurangaannu chollirukkenga..good..mathathu ellam therincha visayama irunthaalum indiavla illama engaiyo irunthu athellam miss panrathu kastama thaan irukku...recenta americavla Obama Diwali celebrate panninathu ulgathula non-indians mathiyla diwali pathi theriyurathukku oru nalla chancea amaanchathu..for eg chinese colleagues in my office know abt Diwali and wishing us for Diwali ..

M.S.R. கோபிநாத் said...

உண்மை தான் அசோக். என்னுடைய அலுவலகத்தில் கூட அன்று அமெரிக்கர்கள் தீபாவளி பற்றி விசாரித்து தெரிந்துக் கொண்டார்கள். தீபாவளியை கொண்டாடிய ஒபாமாவிற்க்கு நன்றி சொல்வோம்.