Wednesday, November 11, 2009

நன்றி தெரிவித்தல் நாள் - தேங்ஸ் கிவ்விங் டே


அமெரிக்கர்களுக்கு அடுத்து திருவிழாக் காலம் தொடங்கி விட்டது. இந்த திருவிழா அமெரிக்காவிலும், கனடாவிலும் முக்கியமாக கொண்டாடப் படுகிறது. எல்லோருக்கும் நான்கு நாட்கள் தொடர்ந்து விடுமுறை கிடைக்கும். ஆரம்பத்தில் இது கிருத்துவ மதத்தின்பேரில் கொண்டாடினாலும் இப்பொழுது மதங்களுக்கு அப்பாற்பட்டு இந்த திருவிழா நடக்கிறது. இந்த நன்றி தெரிவித்தல் நாள் கிட்டத்தட்ட தமிழகத்தில் கொண்டாடப்படும் "பொங்கல்" மற்றும் "உழவர்" திருநாளைப் போலவே அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் நாலாவது வியாழக் கிழமையிலும், கனடாவில் அக்டோபர் மாதம் இரண்டாவது திங்கட் கிழமையிலும் நடைபெறும். இந்த வருடம்(2009)நவம்பர் 26 ஆம் தேதி இங்கு நடைபெறுகிறது.

தோற்றம்

சுமார் 400 வருடங்களுக்கு முன்னால் இந்த திருவிழா ஆரம்பித்ததாக வரலாறு கூறுகிறது. 1620 இல் ஒரு கப்பல் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை இங்கிலாந்திலிருந்து அட்லான்டிக் கடல் மார்க்கமாக ஒரு புனிதப்பயணம் மேற்கொண்டது. அவர்கள் அமெரிக்காவில் மசாசூட் என்ற மாகாணத்தில் வந்து இறங்கினார்கள். அவர்கள் வந்து இறங்கிய நேரம் கடுமையான குளிர் மற்றும் பனியினால் அவதிப்பட்டார்கள். அந்த நேரம் அவர்களால் எதையும் பயிரிட்டு உண்ண முடியாமல் பசியால் வாடினார்கள். கடுமையான நோய்களும் அவர்களைத் தாக்கியது. அதில் சிலர் இறந்தும் போனார்கள். அந்த நேரம் அங்குள்ள சிவப்பிந்தியர்கள்(Red Indians) அவர்களுக்கு உணவு கொடுத்து, அந்த பரிச்சயம் இல்லாத மண்ணில் எப்படி பயிர்களை விளைவிப்பது என்பதையும், மீன் பிடிக்கவும் கற்றுக் கொடுத்தார்கள். 1621 ம் வருடம் அந்த மண்ணில் சோளக்கருது, பீன்ஸ், பார்லி மற்றும் பூசணிக்காய் போன்றவற்றை விளைவித்து அறுவடை செய்தார்கள்.


தக்க சமயத்தில் தங்களைக் காப்பாற்றியதற்காகவும், உணவுகொடுத்து ஆதரித்தமைக்காகவும் நன்றி செலுத்தும் விதமாக அமெரிக்கர்களுக்கு ஒரு விருந்து கொடுத்தார்கள். அந்த விருந்தில் வான்கோழி முக்கிய உணவாகப் பரிமாறப்பட்டது. விருந்து முடிந்ததும் சில விளையாட்டுக்களையும் அமெரிக்கர்களுக்கு சொல்லிக் கொடுத்தார்கள். இதைத் தான் இன்றுவரை நன்றி தெரிவித்தல் நாளாக அமெரிக்கர்கள் கொண்டாடுகிறார்கள்.


அதிலிருந்து அமெரிக்கா வந்த காலனிக்காரர்கள் ஒவ்வருவருடமும் அறுவடை முடிந்ததும் நன்றி தெரிவிக்கும் நாளை விருந்துடன் கொண்டாட ஆரம்பித்தார்கள். அமெரிக்கா தனிநாடாக அறிவிக்கப் பட்டதும், காங்கிரஸ் கூட்டத்தில் ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து அதை நன்றி தெரிவித்தல் நாளாகவும், விடுமுறை நாளாகவும் அறிவித்தார்கள். ஜார்ஜ் வாஷிங்டன் நவம்பர் 26ம் தேதியை தேங்ஸ்கிவ்விங் டே என்று திட்டவட்டமாக அறிவித்தார். 1863ம் ஆண்டு ஆப்ரகாம் லிங்கன் நவம்பர் நாலாவது வியாழக் கிழமையை தேங்ஸ்கிவ்விங் டே என்று மாற்றினார். அதிலிருந்து நவம்பர் நாலாவது வியாழக் கிழமையை இன்றுவரை அமெரிக்கர்கள் பின்பற்றி வருகிறார்கள்.

வழக்கம்

நன்றி தெரிவித்தல் நாளை அதே கலாச்சாரத்துடன் பழமை மாறாமல் ஒவ்வருவருடமும் வழக்கமாக கொண்டாடி வருகிறார்கள்.பெற்றோரை விட்டு வெகு தூரத்தில் இருப்பவர்கள், உறவினரைப் பிரிந்தவர்கள் எல்லோரும் அந்த குடும்பத்தில் மூத்தவர் வீட்டில் அன்று கூடுவார்கள்.அன்று ஒருவருக்கொருவர் பரிசுகளைப் பரிமாறிக் கொள்வர். ஏழைகள் மற்றும் வீடு இல்லாதவர்களை தொண்டு நிறுவனங்கள் உணவு, உடை கொடுத்து பரிசுப் பொருட்களையும் கொடுத்து அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பது வழக்கம்.

விருந்து

வியாழன் அன்று இரவு நன்றி தெரிவித்தல் நாள் விருந்து நடைபெறும். அன்று முக்கிய உணவாக வான்கோழி(Turkey), மக்காச்சோளம்(Corn), பூசணிக்காய் மற்றும் கிரேன்பெர்ரி(Cranberry) வகைப் பழங்கள் இருக்கும். வான்கோழியில் சில மசாலாக்களை வைத்து அடுப்பில் நீண்ட நேரம் அதை வறுத்து சுடச்சுட பரிமாறப்படும். கிரேன்பெர்ரியில் சில நோய்களைத் தீர்க்கும் மருந்து இருப்பதால் அதை பழமாகவோ, ஜூஸாகவோ பரிமாறப்படும்.
மற்ற நாடுகளில்

கிரேக்க, ரோம, எகிப்திய, எபிரேயக் கலாச்சாரங்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறுவடை விழா கொண்டாடியிருக்கின்றன.
  • கொரியாவில் அறுவடை விழா சூசாக் என்னும் பெயரில் கொண்டாடப்படுகிறது. செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கொண்டாடப்படும் இந்த விழா நன்றி விழாவாக கொரிய மக்களால் கொண்டாடப்படுகிறது.
  • ஜப்பானியர்கள் நவம்பர் மாதத்தில் டோரி-னோ-இச்சி என்னும் பெயரில் அறுவடை விழா கொண்டாடுகிறார்கள். இரவு முழுதும் ஆட்டம் பாட்டமாய் இந்த விழா குதூகலமூட்டுகிறது.
  • சைனாவில் மக்கள் ஆகஸ்ட் நிலா விழா கொண்டாடுகிறார்கள். இந்த விழாவின் முக்கிய உணவான மூன்கேக்குகளை மக்கள் பகிர்ந்து, பரிசளித்து மகிழ்கிறார்கள்.
  • வியட்நாமில் – தெட் திரங் து என்னும் பெயரில் எட்டாவது லூனார் மாதத்தின் பதினைந்தாம் நாளில் கொண்டாடப்படுகிறது. பெற்றோர் தங்கள் விவசாய காலம் முடிந்து குழந்தைகளுடன் ஆனந்தமாய் ஒன்றித்திருக்கும் விழாவாக இந்த விழா அமைந்து குழந்தைகளை மையப்படுத்துகிறது.
  • இஸ்ரேலில் எபிரேய மாதமான திஸ்ரியின் பதினைந்தாவது நாள் சுக்கோத் விழா கொண்டாடப்படுகிறது. அறுவடை விழாவான இது நன்றி தெரிவித்தல் விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. சுமார் மூவாயிரம் ஆண்டுகளாக யூதர்கள் இந்த அறுவடை விழாவைக் கொண்டாடி வருகிறார்கள். இந்த விழா இன்று கிறிஸ்தவர்களாலும் கொண்டாடப்படுகிறது.
  • ஆப்பிரிக்காவில் யாம் என்னும் பெயருடன் இந்த விழா நடைபெறுகிறது. இந்த விழா ஆப்பிரிக்காவில் சில பகுதிகளில் மூன்று நாட்கள் நடக்கிறது. இறந்து போன உறவினர்களை நினைவு கூரும் நிகழ்வுடன் ஆரம்பிக்கும் இந்த விழா நல்ல விளைச்சலைத் தந்த இறைவனுக்கு, இயற்கைக்கும் நன்றி செலுத்துகிறது. இரட்டையர்கள், மூவர் முதலானோர் இறைவனின் சிறப்புப் பரிசுகளாகக் கருதப்பட்டு இந்த விழாவில் பெருமைப்படுத்தப் படுவதுண்டு.
  • ஆஸ்திரேலியாவிலும் ஏப்ரல் மாத கடைசியில் திராட்சை அறுவடை விழாவும், ஜனவரி மாதத்தில் லாவண்டர் மலர் அறுவடை விழாவும், மார்ச் மாதத்தில் ஆப்பிள் அறுவடை விழாவும், டிசம்பர் – ஜனவரி காலத்தில் கோதுமை அறுவடை விழாவும் கொண்டாடப்படுவது பல இடங்களில் வழக்கத்தில் உள்ளது.
  • ஜெர்மனியில் அறுவடை விழா அக்டோ பர்விழா என்று அழைக்கப்படுகிறது. இந்த விழா திராட்சை அறுவடையின் கடைசியில் கொண்டாடப்படுகிறது. அக்டோ பர் மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமை இந்த விழா கொண்டாடப்படுகிறது. வண்ண மயமான பேரணிகளும், நடனங்களும் இந்த விழாவில் முக்கிய இடம் பிடிக்கின்றன.
  • இங்கிலாந்தில் அறுவடைவீடு என்னும் பெயரில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் மாதம் கொண்டாடப்படும் இந்த விழாவில் பழங்களையும், காய்கறிகளையும் இறைவனுக்குப் படைக்கும் விழாவாகவும், நன்றி செலுத்தும் விழாவாகவும் இது கொண்டாடப்படுகிறது. ஆலயங்களை எல்லாம் அலங்கரித்து மக்கள் அறுவடை செழிக்கவேண்டுமென்று இறைவனை வேண்டுகிறார்கள்.
  • மலேஷியாவில் ஜூன் மாதம் இரண்டாம் நாள் அறுவடை விழா கொண்டாடப்படுகிறது. அரிசி விளைச்சலுக்காக கடவுளுக்கு நன்றி செலுத்தும் விழாவாக இந்த விழா கொண்டாடப்படுகிறது. புதிய அரிவாள்களுடன் அறுவடை செய்து, வயல்வெளிகளில் கூடி இந்த விழாவை இவர்கள் கொண்டாடுகிறார்கள்.

எந்த ஒரு விழாவும் வெறும் அடையாளத்தை மட்டும் அணிந்து கொண்டு அதன் அர்த்தத்தை இழந்து விடுமெனில் பயனற்றதாகி விடுகிறது. விழாக்கள் அதன் அர்த்தங்களை அறிந்து கொள்ள அழைப்பு விடுக்கின்றன. மனிதனோடும், இயற்கையோடும், இறைவனோடும் கொண்டுள்ள உறவை உறுதிப்படுத்தவும், சீரமைக்கவும் இந்த விழாக்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன.


கருப்பு வெள்ளி - பிளாக் ஃபிரைடே நன்றி தெரிவித்தல் நாளுக்கு அடுத்த நாள் வருவது பிளாக் ஃபிரைடே. இந்த நாளுக்காக வருடம் முழுவதும் காத்திருப்பவர்கள் உண்டு. இன்றிலிருந்து ஆரம்பித்து கிறிஸ்துமஸுக்கு முந்தின நாள் வரை பரிசு வாங்கும் படலம் தொடரும். இந்தப் பரிசு வாங்கும் காலத்தில்தான் அமெரிக்க சில்லறை வியாபார சங்கிலித் தொடர் கடைகளும் வணிக நிறுவனங்களும் அந்த வருடத்திய லாபத்தில் நாற்பது சதவிகிதத்தைச் சம்பாதிக்கின்றனவாம். அந்த லாபத்தில் பதினைந்து சதவிகிதத்தை இந்த வெள்ளிக் கிழமையும் அதை அடுத்து வரும் சனி, ஞாயிற்றுக்கிழமையும் சம்பாதிக்கின்றனவாம். கருப்பு வெள்ளிக்கிழமை என்றால் சோகமான வெள்ளிக்கிழமை என்று அர்த்தமல்ல. நஷ்டம் ஏற்பட்டால் வியாபாரிகள் சிவப்பு எழுத்தில் அதைக் குறிப்பிடுவார்களாம். அதனால் லாபத்தைக் குறிப்பிட கருப்பு எழுத்தில் எழுதுவார்களாம். அதீத லாபம் கொடுக்கும் இந்த நாளை கருப்பு வெள்ளி என்கிறார்கள்.

வியாழக்கிழமை இரவிலிருந்தே வாடிக்கையாளர்கள் அந்தக் கடைக்கு முன்னால் வரிசையில் நிற்பார்கள். இந்த தினம் நவம்பர் மாதம் கடைசியில் வருமாதலால் ஓரளவிற்குக் குளிர் இருக்கும். நன்றி தெரிவிக்கும் பண்டிகையன்று உறவினர்களோடும் நண்பர்களோடும் பெரிய விருந்து உண்டு பிறகு அந்தக் குளிரில் வரிசையில் நின்று பரிசுப் பொருட்களை வாங்குவார்கள்.

5 comments:

ஹேமா said...

கோபி இங்கும் இப்படியான பூசனிக்காய் சோளன் எல்லாம் வச்சு என்னமோ எல்லாம் நடக்குது.
என்னான்னுதான் புரில.அநேகமாக நீங்க சொன்ன கொண்டாட்டமாத்தான் இருக்கும்.ஏப்ரல் கடைசி திங்கள்ன்னு நினைக்கிறேன்.வெங்காயப் பெருநாள்ன்னு கொண்டாடுவாங்க.அதைத்தான் நன்றி சொல்லும்நாள்ன்னும் சொல்லுவாங்க.உங்க நிறைவான விளக்கம் அருமை.நன்றியும் கூட.

Menaga Sathia said...

உங்களின் அருமையான விளக்கத்துக்கு நன்றி கோபி!! இப்போழுதுதான் நான் முழுமையாக இதப்பத்தி தெரிஞ்சுக்கிட்டேன்...

M.S.R. கோபிநாத் said...

@நன்றி ஹேமா.

@ நன்றி மேனகா. நானும் இதைப் பற்றி எழுதனும் என்று ஆரம்பித்த பிறகு தான் நிறைய தெரிந்து கொண்டேன்.

Unknown said...

good thanks
balu

M.S.R. கோபிநாத் said...

@ நன்றி பாலு