சில வேலைப் பளுக் காரணமாக ஒரு வாரம் பதிவு எழுத முடியவில்லை. சில தினங்களுக்கு முன் பள்ளியில் எடுத்த பழையப் புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். என் நினைவுகள் கொஞ்சம் பின்னோக்கிச் சென்றன. நம்முடைய வாழ்க்கையில் நாம் தற்பொழுது இருக்கும் நிலைமைக்கு நம்மையும் / நம் சிந்தனையை உயர்த்திவிட்ட ஆசிரியர்களின் பங்கு எவ்வளவு மகத்தானது. பாடங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் உலகத்தையும், பொது அறிவையும் அவர்கள் கண்கள் மூலம் நாம் கண்டது தானே அதிகம். சிறு வயதில் நம்முடைய பெற்றோர்கள் அவர்களுடைய ஆசிரியர்களையும், வகுப்பில் நடந்த குறும்புத் தனங்களையும் பற்றிச் சொல்லும் போதெல்லாம் அவர்கள் மனதிலும், முகத்திலும் எவ்வளவும் சந்தோசம் வரும். அதைப் பார்ப்பத்ற்காகவே அடிக்கடி அந்த அந்த ஆசிரியர்கள் கதையை திரும்பச் சொல்லச் சொல்லிக் கேட்போம். உலகில் நடந்த எல்லா புரட்சிக்குப் பின்னும் ஒரு ஆசிரியர் நேரிடையாகவோ மறைமுகமாகவோ இருந்திருப்பார்கள். இன்று நிலைமையே வேறு. கல்வி வியாபரமாகி விட்டது. அதைப் பற்றி இன்னொரு பதிவில் விரிவாகப் பார்ப்போம். இந்த பதிவில் ஒரு ஆசிரியர், நான்கு மாணவர்கள் அவர்கள் செய்த புரட்சியைப் பற்றிப் பார்ப்போம்.
தி கிரேட் டிபேட்டர்ஸ்.
இந்த படம் ஒரு வரலாற்று நிகழ்ச்சி. ஒரு படிப்பினை. கருப்பர்கள் அமெரிக்காவில் அவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமைகளை எப்படி போராடிப் பெற்றார்கள் என்பதற்கு ஒரு சான்று. ஒரு ஆசிரியர் மாணவர்களுக்கு எப்படிப் பட்ட நம்பிக்கையை ஊட்ட வேண்டும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. ஆங்கிலத்தில் ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் இது ஒரு இன்ஸ்பிரேஷன்(Inspiration). ஒரு நல்ல படத்தைப் பார்த்த திருப்தி எனக்கு இருந்தது. உங்களுக்கும் கிடைக்கும். இந்த படத்தைப் பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் பேராசிரியர் மெல்வின்.பி.டால்சன்(டென்சல் வாஷிங்டன்) அமெரிக்காவில் டெக்ஸாஸ்(Texas) மாநிலத்தில் வைலி(Wiley) கல்லூரியில் 1935ம் ஆண்டு வாதாடும் குழுவிற்கு(Debate Team) பொறுப்பாசிரியராக பணியாற்றி வந்தார். வைலிக் கல்லூரி கருப்பர்கள்(African Americans) மட்டுமே படிக்கும் ஒரு கல்லூரி. அவர் எப்படி நான்கு மாணவர்களை தேர்ந்தெடுத்து வெள்ளைக்காரர்கள் மட்டுமே படிக்கும் ஹார்வேர்ட்(Harvard) பல்கலைக் கழகத்தில், அவர்களை வாதாட வைத்து கருப்பர்களுக்கும், மற்றவர்களுக்கும் சமயுரிமை பெறச் செய்தார் என்பதை உள்ளதை உள்ளபடியே சொன்ன படமாகும்.
ஒரு கருத்தரங்கில் நான் கேள்விப்பட்டது, ஒரு ஆராய்ச்சியில் மனிதனுக்கு வாழ்க்கையில் எத்தனை பயங்கள் உண்டு என்பதை ஒரு குழு பட்டியலிட்டது. அதில் முதன்மையானது மரண பயம். அடுத்து என்ன தெரியுமா? .... மேடைப் பேச்சு. மேடைப் பேச்சு அவ்வளவு சுலபமில்லை. அதற்கு தேவை பயிற்சி பயிற்சி பயிற்சி. இந்த படத்தில் மேடையில் பேசி வாதாடுவதற்கு டால்சன் தனது வகுப்பில் திறமையான நான்கு பேரைத் தேர்வு செய்கிறார். சில தலைப்புக்களை வகுப்பில் கொடுத்து(Spot Topics) பேச வைக்கிறார். அதில் யாரெல்லாம் சரியாகவும், உண்மையாகவும் பேசுகிறார்கள் என்று, கடுமையான தேர்வுக்குப் பின்னர் ஹென்றி(நெட் பார்க்கர்), சமந்தா(ஜுர்ணி ஸ்மாலட்), ஜேம்ஸ் ஜுனியர்(டென்சல் விட்டேகர்), ஹேமில்டன்(ஜெர்மைன் வில்லியம்ஸ்) ஆகியோரை தேர்வு செய்கிறார். இதில் மேடையில் பேச ஹென்றியையும், சமந்தாவையும், இவர்களுக்கு அளிக்கப்படும் தலைப்பில் வாதாடுவதற்கு பாயிண்டுகளை தேர்வுசெய்து கொடுப்பதற்கு ஜேம்ஸ் மற்றும் ஹேமில்டனை நியமிக்கிறார்.
டால்சன் : யார் உங்கள் நீதிபதி ?
மாணவர்கள் : கடவுள் தான் எங்கள் நீதிபதி.
டால்சன் : ஏன் கடவுள் உங்களுக்கு நீதிபதி?
மாணவர்கள் : அவர் தான் எங்கள் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறார். எங்கள் எதிராளி இல்லை.
டால்சன் : யார் உங்கள் எதிராளி ?
மாணவர்கள் : அப்படி ஒருத்தன் இல்லவே இல்லை.
டால்சன் : ஏன் இல்லை ?
மாணவர்கள் :ஏனென்றால் அப்படி ஒருத்தன் இருந்தால் அவன் உண்மைக்குப் புறம்பாகவும்,உண்மையை எதிர்த்துப் பேசுபவனாக இருப்பான்.
இது தான் டால்சன் மாணவர்களுக்கு தினமும் சொல்லிக் கொடுக்கும் மந்திரம். முதலில் மாணவர்களுக்கு அவர் தன்னம்பிக்கை தருகிறார். மாணவர்களை உருவாக்குவதோடு இல்லாமல் அங்குள்ள விவசாயிகளின் இடையே இருக்கும் நிறவெறியை போக்குவதற்காக இரவு நேரங்களில் ரகசிய கூட்டமும் போடுகிறார். நிறவெறியால் பாதிக்கப் பட்டோரை ஒன்று திரட்டுகிறார்.இதனால் கைது செய்யப் படுகிறார். அவரை விடுவிக்கக் கோரி விவசாயிகள் ஒன்றுகூடி காவல் நிலையம் முன் போராட்டம் நடத்துகிறார்கள்.ஜேம்ஸின் தந்தை டாக்டர் ஜேம்ஸ் ஃபார்மர் உதவியுடன், சிறையிலிருந்து வெளியே வருகிறார். இதனால் ஹேமில்டன் பெற்றோர்கள் டால்சனை ஒரு போராளி மற்றும் கம்யூனிஸ்ட் என்று கூறி அவரை நால்வர் குழுவிலிருந்து விலகச் சொல்கிறார்கள். ஹேமில்டனும் விலகுகிறார்.
முதலில் அருகில் உள்ள கல்லூரிகளிலும்,பொது இடங்களில் நடைபெறும் வாதங்களில் கலந்துக் கொண்டு தங்கள் திறமையை மேலும் வளர்த்துக் கொள்கிறார்கள். கருப்பர்களுக்கு எதிராக நிறவெறியை தூண்டும் விதத்தில் சில சம்பவங்கள் நடைபெறுகிறது. ஜேம்ஸ் தனது குடும்பத்துடன் காரில் ஒரு இடத்தைக் கடந்து செல்லும் பொழுது வெள்ளையர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள சிறுவர்கள் இவர்கள் வருவதைக் கண்டு ஒரு ஆட்டை அவர்கள் காரின் முன் விரட்டி அதை கொல்கின்றனர். அங்குள்ள வெள்ளைக்கார நிற வெறியர்கள் ஜேம்ஸ் வேண்டுமென்றே ஆட்டின் மேல் மோதியதாக கூறி துப்பாக்கியுடன் மிரட்டிப் பணம் பறிக்கிறார்கள். அந்த சம்பவம் ஜேம்ஸின் மனதை மிகவும் பாதிக்கிறது.
மற்றொரு நாள் விவாத்தில் பங்கேற்க ஒரு ஊரை கடந்து செல்லும் பொழுது,ஒரு கருப்பரை வெள்ளைகாரர்கள் ஒரு மரத்தில் தூக்கிலிட்டு உயிரோடு எரிக்கும் காட்சியை டால்சனுடன் சேர்ந்து மூவரும் பார்த்து மணமுடைந்து போகிறார்கள்.
ஒரு நாள் இந்த மூவரின் திறமையைப் பார்த்து, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில், இவர்களுக்கு விவாதத்தில் பங்கேற்க அழைப்பு வருகிறது. எல்லோரும் தயாராகிறார்கள். ஹென்றியும், சமந்தாவும் மேடையில் பேசுவதாகவும், ஜேம்ஸ் அவர்களுக்கு பாயிண்டுகளை எடுத்துக் கொடுப்பதற்காகவும் டால்சன் அவர்களை தயார்படுத்தி, ரயில் நிலையத்தில் தான் அவர்களுடன் வரமுடியாது என்றும், தான் ஏற்கனவே கைதாகி ஜாமீனில் இருப்பதால், போலிஸ் அவரைக் கண்காணித்துக் கொண்டிருப்பதால் அவர் அந்த ஊரை விட்டு வெளியேற முடியாது என்றும் சொல்லி வர மறுத்துவிடுகிறார்.
மூவரும் ஹார்வர்ட் செல்கிறார்கள். தலைப்பு மேடையில் தான் கொடுக்கப்படும் என்றும், இந்த விவாதம் அமெரிக்கா முழுதும் வானொலியில் ஒலிபரப்படும் என்றும் அவர்களை வரவேற்றவன் சொல்கிறான். முதல் நாள் இரவு ஹென்றி தான் நாளைக்குப் பேசப் போவதில்லை எனவும், தனக்குப் பதிலாக ஜேம்ஸ் பேசட்டும் என்றும் கடைசி நேரத்தில் விலகிக் கொள்கிறான். எதற்காக ஹென்றி விலகினான்? ஜேம்ஸ் மற்றும் சமந்தா விவாதத்திற்கு சென்றார்களா? எந்த தலைப்பு அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது? எப்படி விவாதத்தில் வென்றார்கள் என்பதை டி.வீ.டியில் பார்த்துத் தெரிந்துக் கொள்ளுங்கள்.
சுவாரஸ்யங்கள்
- இந்த படத்தை டால்சனாக நடித்த ”டென்சல் வாஷிங்டனே” இயக்கி நடித்திருக்கிறார். இது இவருக்கு இரண்டாவது இயக்கம்(Direction). டென்சல் ஒரு தலைசிறந்த நடிகர். ஆஸ்கார் வாங்கியவர். உட்கார்ந்த இடத்தில் இருந்தே நடிக்க முடியும் என்பதை “தி போன் கலெக்டர்” என்ற த்ரில்லர் படத்தில் நிருபித்திருப்பார்.
- இந்த படத்தை தயாரித்தவர் “ஓப்ரா வின்ஃப்ரி”. இவர் அமெரிக்காவில் சின்னத் திரையில் பிரபலம். நீண்ட காலமாக ’டாக் ஷோ’ நடத்திக் கொண்டிருக்கிறார்.
- சிறந்த படத்திற்கான ”கோல்டன் க்ளோப்” விருது வாங்கியிருக்கிறது.
- ஹார்வர்டில் வென்ற பிறகு, வைலி கல்லூரி விவாதக் குழு(Debate Team) தொடர்ந்து 10 ஆண்டுகள் முதலிடத்தில் இருந்திருக்கிறது.
- இந்த படத்தின் க்ளைமாக்ஸ் எப்படி வாதிட்டார்கள் என்பதை தெரிந்துக் கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். முக்கியமாக காந்தியின் அஹிம்சையைப் பற்றி எப்படி விவாதிக்கிறார்கள் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
- இந்த படத்தின் முன்னோட்டம் மற்றும் நடித்தவர்களை பற்றித் தெரிந்து கொள்ள இங்கேசொடுக்கவும்.
கீழே உள்ள படத்தில் இருப்பவர்கள் தான் உண்மையான டிபேட்டர்ஸ். நிற்பவர்களில் நடுவில் இருப்பவர் தான் உண்மையான டால்சன்.
இந்த விமர்சனம் உங்களுக்குப் பிடித்திருந்தால் மறக்காமல் எனக்கு பின்னூட்டம் இடுங்கள். பிடிக்காவிட்டாலும் பின்னூட்டம் இடுங்கள்(திருத்திக்கொள்ள).உங்கள் நண்பர்களுக்கு இந்த பதிவைப் பற்றி தெரிவியுங்கள். மீண்டும் இது போல் ஒரு நல்ல படத்தின் விமர்சனதுடன் உங்களை சந்திக்கிறேன்.
15 comments:
கோபி,நல்லதொரு விளக்கமான விமர்சனம்.அந்த மந்திரத்தை நாங்களும் சொல்லிக்கொள்ளலாம்.
தன்னம்ப்பிகை தரும் மந்திரம்.
கோபபி உங்க அளவுக்கான ஆங்கில புலமை எனக்கு கிடையாது...நல்ல விமர்சனம்..
@ ஹேமா, கண்டிப்பாக தன்னம்பிக்கை தரும் என்பதில் ஐயமில்லை. நன்றி.
@ வருகைக்கு நன்றி. ஜாக்கிசேகர்.
ithu thamil eelath thesiyath thalaivarukkum pidiththa padam.
நன்றாக எழுதுகிறீர்கள். விமர்சனம் திரைப்படத்தை பார்த்த உணர்வை தருகிறது. நன்றி..
நல்ல விமர்சனம்...
@ வாங்க அனானிமஸ். இந்த படம் எல்லா தலைவர்களுக்கும் கண்டிப்பாக பிடிக்கும். வருகைக்கு நன்றி.
@ வாங்க முக்கோணம். வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
@ நன்றி மேனகா. எங்க கொஞ்ச நாளா ஆளையே கானோம்?
அருமை நண்பர் கோபிநாத் மிக அருமையான விமர்சனம், மீண்டும் பார்க்கத் தூண்டும் ஆவலை ஏற்படுத்துகிறது.
Good Movie
கோபி... இந்தமாதிரி படங்களை பார்த்து அதற்கு விமர்சனம் போடுறதுக்கே உங்களை பாராட்டனும்.
வாழ்த்துக்கள்.
@ வாங்க கார்த்திகேயன். கண்டிப்பாக இந்த படம் பாருங்கள். நன்றி.
@ வருகைக்கு நன்றி ஆஸ்கார்2000.
@ பிரதாப், எத்தனையோ படங்கள் பார்க்கிறோம். சில படங்கள் தான் மனசைப் பாதிக்கிறது. அந்த மாதிரி படங்களில் இதுவும் ஒன்று. நன்றி பிரதாப்.
Nalla oru vimarsanam..
ஆமாங்க கோபி, நம்ம பள்ளி நினைவுகளெல்லாம் இப்போ குழந்தைகளுக்குக் கிடைக்குறதில்ல.
படம் பார்க்கத் தூண்டும் நல்ல விமர்சனம் கோபி.
@ நன்றி அசோக்.
@ வாங்க விக்னேஷ்வரி. சரியா சொன்னீங்க. நன்றி.
படத்தின் உச்சக்கட்ட விவாதத்தைக் கேட்டது கண்ணில் நீரை வரவழைத்தது. நேற்றுகூட கருப்பர்கள் பெரும் சலுகைகளை பற்றி நம்மவர் ஒருவர் அங்கலாய்த்துக்கொள்ள அவரை கடிந்துகொண்டேன்.
கருப்பர்கள் மாதத்தை அனுசரித்து என் மகளுக்கு வரும் ஆண்டிலும் ஏதேனும் பாடம் வந்தால் இந்த விடயங்களை பாவித்துக்கொள்கிறோம்.
நல்ல படத்தை அறிமுகம் செய்ததற்கு நன்றி.
Post a Comment